ஒரு வகுப்பறையைக் கடக்கும்போது ஆசிரியர் திட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. எத்தனை நாள்டா சொல்றது? நோட்டுக்கு அட்டை போட முடியலியா! எவ்வளவு செலவு பண்ற! அட்டைபோட்டா என்ன? அவ்வளவு திமிரு!
இதைக் கேட்டதும் மனதுள் பல்வேறு எண்ணங்களும் கேள்விகளும் எழுந்தன.
புத்தகம், குறிப்பேடுகளுக்கு ஏன் அட்டை போடவேண்டும்?
பள்ளி திறந்தபின் பாடநூல், குறிப்பேடுகளுக்கு அட்டை போடுதல் முக்கியமான வேலை. நான் படித்தகாலத்தில் பழுப்பு நிற அட்டைதான் போடவேண்டும் என்ற கட்டாயம் அதிகம் இல்லை. கட்டுரை, செய்முறைப்பயிற்சி என்று சிலவற்றிற்கு மட்டுமே அது அத்தியாவசியம். செய்தித்தாள், மாதங்காட்டி என்று பல்வேறு தாட்களைப் பலரும் பயன்படுத்துவோம். அதிலும் வண்ணச் செய்தித்தாள் அட்டைக்குத் தனி மவுசு.
ஏழாம் வகுப்பில் விடுதிவாழ்க்கை தொடங்கியது. அப்போதுதான் அடர்காவி நிற அட்டையை எப்படிப்போடுவது என்று அப்பா சொல்லிக்கொடுத்தார்.
அட்டைத்தாளின் சிறு பகுதியைக்கூட கிழித்துத் தனியே எடுத்துவிடாமல் கணகச்சிதமாய் அவர் சொல்லிக்கொடுத்தபடியே இன்றும் அட்டை போடுகிறேன்.
விலையில்லா பாடக்குறிப்பேடுகளை மாணவர்களுக்கு இப்போது அரசே வழங்குகிறது. அதற்கு முன்பு பல்வேறு கடைகளில் குறிப்பேடுகளை வாங்குவோம். பார்வைக்கு ஒழுங்கு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் காவி அட்டைபோடும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். அதுவும் பல்வேறு வகையான காவிகளாக இருக்கும்.
இப்போது ஒரே வடிவமைப்பில் பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படுகின்றன. அட்டை போடுவதால் அவற்றின் வடிவமைப்பு மறைக்கப்படுகிறது. காவியின் பல்வேறு வகைகள், நெகிழிப்பூச்சூடன், நெகிழியாலான காவி, நெகிழி வெள்ளை என்று எளிதில் அணியும் வகைகளும் வந்துவிட்டன. இந்த நெகிழி அட்டைகளும் ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் குப்பைக்குப் போகின்றன.
ஒழுங்கை ஒழுங்கின்மையாக ஆக்குவதாகவே அட்டை போடுதல் ஆகிவிட்டது.
ஏன் அட்டை போடவேண்டும்? இன்றைய தேவை என்ன? என்ற கேள்விகளை எழுப்பாமல் பள்ளிக்குள் நிகழும் பல்வேறு சடங்குகளில் ஒன்றாக அட்டை போடுதலும் ஆகிவிட்டது. தேவையில்லாத செலவும் சூழல் சீர்கேடும் ஏற்படுகிறது. கல்வி சுமையாகிக்கொண்டே போகும் இக்காலத்தில் கல்வி உபகரணங்களின் சுமையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.