கோகுலம் சொல்லும் செய்தி – காம்கேர் கே.புவனேஸ்வரி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான்.

1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையை பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் முதல் கதை. அப்போது என் வயது 12. அப்போது கோகுலத்தின் விலை ரூபாய் 2. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இந்தக் கதைதான் என் கற்பனைத்திறனுக்கும், என் கிரியேட்டிவிடிக்கும் அடித்தளம்போட்டு என் திறமை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

அந்தக் கதை வெளியான பிருந்தாவனக் கதையரங்கம் பகுதியையும், சிறுவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எழுத்தாளர் எண்ணையும் (4633), கதைக்கு நான் வைத்த தலைப்பை மாற்றாமல் அப்படியே பிரசுரம் செய்த எடிட்டர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களையும், பொருத்தமான ஓவியம் வரைந்த ஓவியர் ஆழி அவர்களையும் மறக்க முடியுமா?

என் திறமை ‘எழுத்து’ என் கடமை ‘எழுதுவது’ என்பதை உணர்ந்து அதையே திடமாகப் பிடித்து, இன்றுவரை விடாமல் தொடர்ந்து எழுதி வருவதும், படிப்பு, தொழில், வேலை இவற்றுக்கு ஏற்ப டிஸைனிங், கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஆவணப்படங்கள் என எழுத்தின் அடுத்தடுத்தக் கட்ட வளர்ச்சியிலும் என் படைப்பாற்றலை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக பயணிக்க தன்னம்பிக்கையையும், நம்பிக்கையையும் விதைத்தது கோகுலமே. சுருங்கச் சொன்னால் பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தது கோகுலம் பத்திரிகை அங்கீகரித்த என் படைப்பே!

சிறுவர் பத்திரிகைகள் எதிர்காலம்

இன்று எல்லாமே சுருக்கென சுருங்கச் சொன்னால் மட்டுமே குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் சென்றைடகிறது. பக்கம் பக்கமாய் எழுதப்படும் கட்டுரைகளைவிட நருக்கென நான்கு வரியில் சொல்லும் வாட்ஸ் அப் கருத்துக்களும், ஃபேஸ்புக், டிவிட்டர் செய்திகளும் அதிகம் ரீச் ஆகின்றன.

அந்த வகையில் ‘பஞ்சு மிட்டாய்’ போன்ற வண்ணமயமான கையடக்க பத்திரிகைகள் மட்டுமே குழந்தைகளை கவருகின்றன. அதுவும் குழந்தைகளின் கிறுக்கல்களால் ஆன படங்கள், எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இயல்பான நடையில் குழந்தைகளோடு குழந்தைகளாய் உட்கார்ந்து பேசுவதைப் போல கதைகளும் செய்திகளும் அமைந்துள்ளது இவ்வகை பத்திரிகைகளின் சிறப்பு.

கோகுலம் – சிறுவர் பத்திரிகைகளுக்கு எல்லாம் முன்னோடி. இதே காலகட்டத்தில் ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற பத்திரிகைகளும் வந்துகொண்டிருந்தன. கோகுலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனாலும் பள்ளி மாணவ மாணவிகளை அதிக அளவில் சென்றடையாமல் போனதற்கு அவை இன்றைய குழந்தைகளின் மன நிலையோடு ஒட்டிய விசயங்களை கையாளவில்லையோ என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. Old is Gold தான். ஆனாலும் இன்றைய சூழலோடு இயல்பாய் நகர்தல் முக்கியம். இல்லையென்றால் பொருந்தாமல் ஒதுங்க வேண்டியிருக்கும் அல்லது ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்ற மிகப் பெரிய அறிவுறுத்தலை கோகுலம் நமக்கெல்லாம் சொல்லிச் சென்றுள்ளது.

கோகுலம் – வெறும் கதை, கட்டுரை, படங்கள் மற்றும் போட்டிகள் என பத்திரிகைகள் வாயிலாக மட்டுமே குழந்தைகளோடு தொடர்பில் பெரும்பாலும் இருந்து வந்துள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. நேரடியாக குழந்தைகளோடு குழந்தைகளாய் கோகுலம் அவர்கள் கைகளில் தவழும் வகையில் நிகழ்ச்சிகள், கதையரங்கம், உரையாடல்கள் நிகழ்வுகள் மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாய் சிறுவர்களுக்கு நேரடியான செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தால் இன்னும் பல காலம் கோகுலம், இப்போதுள்ள மற்றும் இனிவரும் சிறார் பத்திரிகைகளுக்கு என்றுமே முன்னோடியாக இருந்திருக்கும்.

கல்கி குழுமத்தில் மிகப் பெரிய பேனரில் வெளிவந்துகொண்டிருந்த கோகுலம் நிறுத்தப்படுவதால் இளைஞர்களால் நடத்திவரும் சிறுவர் பத்திரிகைகளுக்கு பின்னடைவு உண்டாகுமோ என்ற பயம் உண்டாகிறது. ஆனால் இன்றைய இளைஞர்கள் குழந்தைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். பொதுவாக ‘அம்மா தோசை மாதிரி, அப்பா தோசைக் கல் மாதிரி’, ‘அம்மாவின் அன்பு வெளியில் தெரியும், அப்பாவின் பாசம் வெளியே தெரியாது; என்றெல்லாம் சொல்லி சொல்லி குழந்தைகளை அப்பாக்களிடம் இருந்து தள்ளி வைத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டன. அப்பா அம்மா மட்டுமில்லாமல் பள்ளி ஆசிரியர்களும் இன்றைய குழந்தைளுக்கு தங்கள் அன்பை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் சூழல் வந்துள்ளது. அப்படி இருக்கும் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே அவர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

அந்த நுணுக்கத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள் தாங்கள் நடத்தும் சிறார் பத்திரிகைகளை காகிதம் மூலம் மட்டுமே குழந்தைகளை அணுகாமல் கதை சொல்லல் நிகழ்ச்சி, உரையாடல்கள், நம் இந்திய கலாச்சாரம் பாதிக்காத அளவுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாய் குழந்தைகளை அணுகுகிறார்கள். இதனால் கோகுலம் பத்திரிகை நிறுத்தப்படுவதால் அவர்கள் மனதளவில் தளர்ச்சியடைய வேண்டாம். அவர்கள் பத்திரிகையை கையாண்ட விதமே வேறு. இன்றைய இளைஞர்கள் பத்திரிகைகளை கையாளும் விதமே வேறு. பத்திரிகை மூலம் காகிதங்கள் வாயிலாகவும், நேரடி நிகழ்ச்சிகள் மூலமாகவும், இணையம் வழியாகவும், வாட்ஸ் அப் கதைகள் மூலமாகவும் குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்கள்.

இனி வரும் காலத்திலும், சிறார் பத்திரிகைகளுக்கு குழந்தைகளின் ஆதரவு பெருகுமே தவிர குறையவே குறையாது என்பது தொழில்நுட்பத்துறையில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மட்டுமில்லாமல் அனிமேஷன், ஆவணப்படங்கள் மூலம் குழந்தைகளுக்காகவும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் என் மனதில் தோன்றும் ஆழமான கருத்து.
உற்சாகமாக உத்வேகத்துடன் செயல்படுங்கள்… வெற்றி நிச்சயம்… வாழ்த்துகள்!

Leave a comment