வீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு அவளோடு பேசுவதைத் தவிர்த்து அமைதி காத்தார்கள்.
காலையில் தான் என்னிடமிருந்து விருப்பமாக வண்ண ஸ்கெட்ச்களை வாங்கியிருந்தாள் மது. அதை இப்போது வீட்டின் எல்லாத்திசைகளிலும் எரிந்து தன் கோபத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தாள். “இந்தா தூக்கி போடுமா” என்று சொல்லி அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். சில வினாடிகள் என் முகத்தை கவனித்து மீண்டும் எரிந்தாள். எல்லாவற்றையும் சேகரித்து மீண்டும் கொடுத்தேன், எரிந்தாள். இப்போது வண்ண ஸ்கெட்ச்களை தரையில் விழுந்துவிடாமல் நேராக நிறுத்தும் வேலையை ஆரம்பித்தேன். நிறுத்துவதும், அது கீழே விழுவதும், “அட” என உணர்ச்சிவசப்படுவதுமான என் விளையாட்டுக்குள் நான் அழைக்காமலே அவள் என்னோடு இணைந்து கொண்டாள். சில நிமிடங்களுக்குப்பின் மீண்டும் எரியும் வேலையை ஆரம்பித்தாள். ஆனால் முன்பு இருந்த இறுக்கமும் வேகமும் லேசாக கரைந்திருந்தது.
முதன்முதலாக பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த சைந்தவியிடம் அவள் அம்மா ஆர்வமாகக் கேட்டாள், “இன்னைக்கு பள்ளிகூடத்துல என்னமா செஞ்சிட்டு இருந்த?” சைந்தவியின் பதில், “சேர்ல ஒக்காந்து நீ வருவேன்னு பாத்துட்டு இருந்தேன்.” இன்னும் பள்ளி செல்லாத ஹிருதிக்கிடம் ஒருவர் கேட்டது , “நீ பெருசானா என்ன ஆவ ஹிருதிக்?”. “பெருசானாலும் நான் ஹிருதிக்தான் ஆவேன்” , இது பதில்.
குழந்தைகள் யாரையும் கரைக்கும் யாரோடும் கரைந்துகொள்ளும் இசையாகவும், தர்க்கங்களுக்குள் நிற்காத இயல்பு கொண்ட புதிரான கவிதையாகவும் இருக்கிறார்கள். நிறைய வரையறைகளை மனதிற்குள் நிரப்பிக்கொண்ட நமக்கு குழந்தைகளின் நெகிழ்வும் கதகதப்பும் கொண்ட மனஇயல்பை ஏற்றுக்கொள்வது கடினமாகவும் நிராகரிப்பது எளிதாகவும் இருக்கிறது. இது அப்படியே இருக்கும் நிலையிலேயே நமக்குக் குழந்தைகளை வடிவமைக்கவும் அவர்களது அகச்சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லவும் தோன்றுகிறது.
குழந்தைகள் புரிந்துகொள்ள எளிமையானவர்களா புதிரானவர்களா என்ற கேள்விக்கு இரண்டுமே பதிலாக இருக்கிறது அல்லது இரண்டுமே நிராகரிக்கும் படி இருக்கிறது. குழந்தைகள் நமக்கு இசைவானர்களாக மாறுவதுதென்பது நாம் குழந்தைகளுக்கு இணக்காம மாற எந்தளவு தயாராக இருக்கிறோம் என்பதோடு தொடர்புடையது. குழந்தைகளோடு பிணைந்துகொள்ளும் மனம் கிடைப்பது என்பது நாம் அவர்களது மனஅசைவுகளை இயல்பான மௌனத்தோடு கவனிப்பவர்களாவதில் இருக்கிறது. மற்ற எதுவும் இரண்டாம்பட்சமானதுதான்.
குழந்தைகளின் மனஅசைவுகள் நிறைந்த இந்த படைப்புகள் நமக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான ஒருவரை நிறம்பெறச் செய்யும். அப்படி நிறம்பெற்ற நண்பர்களால் இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. படைப்புகளை தொகுத்து மொழிபெயர்த்து புத்தகமாக்குவதில் பல மாதமாக பொறுமையாகத் துணையிருந்த கார்த்திகைப் பாண்டியனுக்கும் வலசை சிற்றிதழ் வழியாக குழந்தைகள் மீதான அழுத்தமான கவனத்தைக் கொடுத்த நேசமித்திரனுக்கும் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் விளக்கமாக யாருக்கும் தெரியாமல் தனது வீட்டின் சிறிய அறையில் அமர்ந்து கிறுக்கல் சித்திரங்களை வரைந்து கொண்டிருந்த தன்யாக்குட்டிக்கும் [தன்யஸ்ரீ] படைப்புகளை மொழிபெயர்த்துள்ள ராஜ சுந்தரராஜன், பாலகுமார் விஜயராமன், ராஜேஷ் சுப்ரமணியன், செல்மா பிரியதர்சன் கைநிறைய பிரியங்கள்.
நன்றி,
குட்டி ஆகாயம் நண்பர்கள்
























