11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ் – மொழிப் பாடநூல்களின் அரசியல் [பகுதி 3] – மு.சிவகுருநாதன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கவிதையியல், கதையியல், அரங்கவியல், இலக்கணவியல், ஊடகவியல், கணித்தமிழியல் என்ற ஆறு பொருண்மைகள் கொண்டதாக 11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, இளம்பிறை, லிவிங் ஸ்மைல் வித்யா ஆகிய கவிஞர்கள் பல தமிழாசிரியர்களுக்கு அறிமுகம் ஆகாதவர்கள். இந்தப் பாடநூல்கள் வழி அந்த நல்ல காரியம் நடந்துள்ளது. சுகந்தி சுப்பிரமணியன், குட்டி ரேவதி, லீனா மணிமேகலை போன்ற பலர் விடுபட்டிருப்பது இதிலுள்ள அரசியலை நமக்குக் காட்டுவது. இதைப்போன்று ந.பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், இன்குலாப், ஞானக்கூத்தன் ஆகிய கவிஞர்களும் பள்ளிப்பாடநூலில் இடம்பெறுவது நல்லது.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், மணிக்கொடிக் காலம் ஆகிய நூல்கள் கவிதை பற்றிய நூல்கள் (பக். 14) அல்லவே! இவை கவிதை ஆய்வு நூல்கள் தானே! குழப்பத்தைப் போக்க அடைப்புக்குறிக்குள் குறிப்பிடலாம்.

சித்தர் மரபின் முக்கிய கண்ணி வைதீக மறுப்பு. வைதீக மறுப்பு என்பது வருண / சாதி, கடவுள், வேத மறுப்பாகும். அறிவு, ரசவாதம், மூச்சு, யோகம், மூடநம்பிக்கை எதிர்ப்பு என்றெல்லாம் சொல்கிறபோது வைதீகத்தை மறுத்த அவைதீக மரபின் தொடர்ச்சியாக நாம் சித்தர்களை அறிமுகம் செய்யவில்லையே, ஏன்?

“மிகநவீனமான புனைவு நடையைக் கொண்டவர் சுஜாதா”, (பக். 34), “சுஜாதாவின் பங்களிப்பு மிகுதி”, என ஒரு சிலரை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் போக்கு பாடநூலின் இயல்பாக இருக்கக்கூடாது.

ஐந்து தலைமுறைகளாக எழுத்தாளர்களை வகைப்படுத்தியும் ஆங்காங்கே சிலரைச் சொல்லிவிட்டு பலரை விடுவது நியாயமல்ல. கதைத்தேர்வில் கவனம் செலுத்தியிருக்கலாம். அயலக எழுத்துகளை இன்னும் சிறப்பாக அறிமுகம் செய்ய வாய்ப்பிருந்தும் வீணடிக்கப்பட்டுள்ளது. புதுவகை எழுத்துகளை இன்னும் சிறப்பாக அறிமுகம் செய்ய வேன்டியது அவசியம். இங்கொன்றும் அங்கொன்றுமாக சமரசம் செய்யும்விதமான தேர்வுகளும் சில சார்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இங்கொன்றும் அங்கொன்றுமாக பெயர்களை அள்ளித் தெளிக்கும் போக்கு சரியல்ல.

பாஸ்கரதாஸ் என்றும் எழுதும்போது சங்கரதாஸ் என்று எழுதுவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. (பக். 110)

அடுத்த வகுப்புகளில் நவீன அரங்கவியல் இடம்பெறும் என்று நம்புவோம். ஞாநி, முத்துசாமி, ராமானுஜம், ராமசாமி, வேலு சரவணன், ச.முருகபூபதி போன்ற பலர் அதில் இடம் பெற்றால் நல்லதுதான்.

பேச்சுக்கலை இன்று சீரழிவின் குறியீடாக உள்ளது. இந்த நிலைமைக்கு பட்டிமன்றங்களும் பள்ளி இலக்கிய மன்றங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இதை மாற்ற முயல்வது நலம். மீண்டும் அந்த சுழலுக்குள் சிக்காமல் காக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.

தமிழ்ச்சிற்றிதழ்களில் கலைமகள், சுபமங்களா ஆகியவற்றைச் சேர்த்திருக்க வேண்டியதில்லை. இடைநிலை இதழ்கள் என்னும் புதுப்பிரிவில் இன்று வெளிவந்துகொண்டிருக்கும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, அம்ருதா, கணையாழி, குமுதம் தீராந்தி, காக்கைச்சிறகினிலே, விகடன் தடம், பேசும் புதிய சக்தி, புதிய புத்தகம் பேசுது, உங்கள் நூலகம் போன்ற இதழ்களை அறிமுகம் செய்யவேண்டும். சிறுவர் இதழ்களை எந்த வகுப்பிலும் அறிமுகம் செய்யாமலிருப்பது சரியா? இது ஆசிரிய சமூகத்திற்கே தேவையான ஒன்று. சிற்றிதழ்களில் நிகழ் இதழ் குறிப்பிடப்படுகிறது. பெரும் தாக்கத்தை உண்டாக்கிய நிறப்பிரிகை இதழை மறைப்பது சரியல்ல. அரசியல், கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் நிறப்பிரிகை இதழின் வீச்சு அதிகம்.

இறுதியாக… புதிய பாடநூலை ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் எவ்வாறு கொண்டு செல்லப்போகிறோம்?

புதிய பாடநூல்களில் எவ்வளவுதான் நல்ல அம்சங்கள் இருப்பினும் அவற்றை முறையான பயிற்சிகள் இல்லாமல் வகுப்பறைக்குள் கொண்டு செல்வது எளிதான காரியமல்ல. பாடங்கள் எழுதுதல், பயிற்சி எதுவாகினும் இங்கு அதிகாரப் படிநிலை வரிசை (hirerchy) ஒன்று பின்பற்றப்படும். இப்ப்போதும் அம்முறையே கடைப்பிடிக்கப்பட்டால் பலனிருக்காது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் – ஆசிரியப் பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரிப் பேராசிரியர்கள் – மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் என்கிற முறையில் பயிற்சி தந்தால் போதுமென்று எண்ணுவது தவறு. இம்முறை பாடநூல் உருவாக்கத்தில் கல்விப்புலப் பணியாளர்கள் அல்லாத படைப்பாளிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதைப்போல ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதிலும் மொழி. இலக்கியம், கவிதை, சிறுகதை, பாடநூல் பற்றிய புரிதலுள்ள படைப்பாளிகள், கல்வியாளர்கள், கல்விப்புலம் சாராத அறிஞர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். முந்தைய பல பயிற்சிகளில் உள்ளூர் வளங்கள் என்கிற போர்வையில் பட்டிமன்றப் பேச்சாளிகள் (வாய் வியாபாரிகள்), கல்லூரிப் பேராசிரியர்கள் ஆக்ரமித்துக்கொண்டதுதான் நடந்தது. மீண்டும் அதுபோன்று நடவாமல் இருக்க முறையான திட்டமிடல் அவசியம்.

“புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, கடைசி நேரத்தில் தொலைபேசியில் அழைத்தார்கள், வேறு ஆட்கள் இல்லாததால் சென்று வந்தோம், பயிற்சிக் கட்டகம் ஒன்றும் அளிக்கவில்லை, இதிலுள்ள செய்திகள் எங்களுக்கே புரியவில்லை”, என்றெல்லாம் பயிற்சிகள் பலவற்றில் கருத்தாளர்கள் கூறுவது வழக்கம். அது மாதிரி இதிலும் நடக்கக்கூடாது என்கிற தவிப்பில் பேசவேண்டியுள்ளது.

அன்றாடச் செய்தித்தாள்கள் கூட வாசிக்காத பெரும்பான்மை ஆசிரியச் சமூகம் வெறும் நோட்ஸ்களை நம்பிக் களத்தில் இறங்குவது தவிர்க்க முடியாது. பாடநூல் இறுதி வினாக்கள் தவிர்த்துப் புதிய சிந்தனையைத் தூண்டும் பிற வினாக்களும் இருக்கும் என்பது நோட்ஸ் வியாபாரிகள் காட்டில் பெருமழைதான்! பெரும்பாலான ஆசிரியர்கள் மத்தியில் கூடுதலான பாடப்பகுதிகள், சிந்தனைகள் இருப்பதற்கு எதிரான மனத்தடை உள்ளது. இவைகளை உரிய பயிற்சிகள் மூலமே களைய முடியும்.

100% தேர்ச்சி என்னும் கூண்டிலிருந்து ஆசிரியர்களை அவ்வளவு எளிதில் வெளியே கொண்டுவந்துவிட முடியாது. தேர்ச்சி தேவை என்பதையும் மறுக்க இயலாது. அதற்குத் தகுந்த வகையில் தேர்வு அமையவேண்டும். படிக்கும் மாணவர்கள் அனைவரையும் போட்டித்தேர்வுக்குத் தயார் செய்திட வேண்டிய அவசியமில்லை. +1,+2 வகுப்புகளில் உள்ளதைப்போல அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதை பத்தாம் வகுப்பிற்கும் நீட்டிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைவதற்கும் மீத்திறம் கொண்டவர்கள் உரிய போட்டித்தேர்வை எழுதும் தகுதி பெறுவதற்கும் கல்விச்சூழல் சாதகமாக அமைய வேண்டும். வழக்கம்போல திணிப்பு, ஆசிரியர்கள் மாணவர்கள் எவருக்கும் மனவுளைச்சலைத் தராத வகையில் தேர்வுகள் அமைவது அவசியம்.

கல்வியில் வணிகம் முற்றாக ஒழியவேண்டும். அதற்கு தனியார் சுயநிதிப்பள்ளிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இன்றி கல்விச்சிக்கல்கள் தீரப்போவதில்லை. இருப்பினும் புதிய பாடநூல் அமலாக்கம் வழியே ஒரு கோரிக்கை வைப்போம். தற்போது மெட்ரிக் பள்ளிகள் இல்லாத நிலையில், அரசுப் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் அப்பள்ளிகள் 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளில் இதர தனியார் பாடநூல்களை அளித்து இரட்டைச்சுமையளிக்கின்றன. இதற்கு முடிவு கட்டப்படவேண்டும். அதுவும் குறிப்பாக தொடக்கநிலைகளில் (1 – 5 வகுப்புகள்) அரசுப் பாடநூலுடன் இதர தனியார் பாடநூல்களும் இந்தி போன்றவையும் கற்பிக்காத தனியார் சுயநிதிப்பள்ளிகளே தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை. எங்காவது சில விதிவிலக்குகள் இருக்கலாம். அரசுப் பாடநூல்களை மட்டும் பயன்படுத்துதல், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பில் ஆண்டுமுழுவதும் அந்த வகுப்பிற்குரிய பாடங்களை மட்டும் சொல்லித்தருதல் போன்றவை கட்டாயமயமாக்கப்படல் வேண்டும். இல்லையென்றால் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தில் பொருளில்லை.

முந்தைய பதிவுகள் : பதிவு-2 பதிவு-1

Leave a comment