தாய்ப்பாலூட்டுவது தாயின் கடமை! சேயின் உரிமை!!

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இணை உணவுகளுடன் தாய்ப்பால்  ஊட்டுவதாகும். தாய்ப்பால் எல்லா சத்துக்களும் உடைய ஒரு முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் நோயை எதிர்க்கக் கூடிய சக்தி உள்ளதால் குழந்தையை எந்த நோயும் நெருங்காது. தாய்ப்பாலில் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் அறிவுள்ள குழந்தைகளாக விளங்குகிறது.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பது எப்போது?

குழந்தை பிறந்தவுடன் ஈரத் துணியால் துடைத்துவிட்டு தாயிடம் கொடுக்க வேண்டும். தாய் குழந்தையை உடலோடு சேர்த்து அணைத்து பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் தரமுடியாத சூழ்நிலையில் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தையை குளிப்பாட்டக்கூடாது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பாட்ட வேண்டும். [அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கும் பட்சத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று நடந்துக் கொள்ள வேண்டும்.]

ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்பால் கொடுக்க வேண்டும்?

குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும், பால் சப்புவதற்கு ஆவலாக இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கிவிடும். அதன்பின் பால் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

குழந்தை பிறந்தவுடன் குளுக்கோஸ், தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவற்றைக் கொடுக்கலாமா?

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால் ‘‘சீம்பால்’’ என்று கூறுகிறோம். இது மஞ்சள் நிறத்தில், கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது. முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைக்குப் போதுமானதாகும். குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்பதால் குழந்தைக்கு தொற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. மேலும் குழந்தைக்கு பசி அடங்கி பால் சப்ப மறுத்துவிடும். இதனால் தாய்க்கு மார்பில் பால் கட்டி பிரச்சனைகள் ஏற்பட்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. ஆகவே பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

அறுவைசிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது?

அறுவை சிகிச்சை அறையிலிருந்து வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நிலையிலேயே செவிலியர் / உறவினர்கள் குழந்தையை மார்போடு அணைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும். அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். வேறு எந்தவித உணவும் கொடுக்கக் கூடாது.

குழந்தைக்கு தண்ணீர்/கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?

குழந்தை பிறந்து 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந்தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் என்று ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். ஆகவே கிரைப் வாட்டர் கொடுப்பதால் எந்தவித பயனும் கிடையாது. மேலும் அது கொடுப்பதால் பாக்டீரியா தொற்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

குழந்தைக்குத் தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தரவேண்டும்?

குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தரவேண்டும். இரவில் குறைந்தது 2 முறையாவது தரவேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் குறைவான முறைகளும் சில குழந்தைகள் 15 முதல் 20 முறைகளும் ஒரு நாளைக்கு பால் குடிக்கும்.

குழந்தை தேவையான அளவு தாய்ப்பால் குடிக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

ஒரு நாளில் குழந்தைக்கு குறைந்தது 8 முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை குறைந்தது ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை மாதா மாதம் குறைந்தது 500 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குறைமாத குழந்தை / எடை குறைவான குழந்தைக்குக் கூட 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதா ?

ஆம். குறைமாத குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும்-.

தாய் நோய்வாய்பட்டிருக்கும் போது மற்றும் மருந்துகள் சாப்பிடும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

இச்சமயங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன செய்வது ?

தாய்ப்பால் போதவில்லை என்பது பேதமையே. முதலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரிபார்க்க வேண்டும். சரியான அளவில் (மாதம் 500 கிராம்) குழந்தைக்கு எடைகூடி உள்ளதா என சரிபார்க்க வேண்டும். குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும். (வேறு எந்த உணவோ / தண்ணீரோ கொடுக்காத நிலையில்) தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கவில்லை எனில் கீழ்கண்டவற்றை சரிபார்க்க.

1). குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?

2). பகல் / இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா ?

3). புட்டிப்பால் / நிப்பிள் உபயோகிக்கப்படுகிறதா?

4). வேறுபாலோ / உணவோ கொடுக்கப்படுகிறதா ?

5)-. குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை மற்றும் மார்போடு அணைக்கும் நிலை உள்ளதா?

மேற்கூறியவற்றில் பிரச்சினை இருந்தால் அதை நிவர்த்தி செய்யவேண்டும். தாய்க்கு ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். தாய்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு என்ன செய்வது?

குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு பால் சுரக்கும். ஆகவே குழந்தையை அதிக அளவு சப்பவைத்தால் அதிக அளவு சுரக்கும். மேலும் தாய் நம்பிக்கையுடன் கொடுத்தால் தாய்ப்பால் கட்டாயம் தேவையான அளவு சுரக்கும்.

குழந்தை பால் போதாமல் அழுது கொண்டே இருக்கிறதே?

குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்லை. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது. ஆகவே நாம் ஏற்கனவே கூறியபடி தாய்ப்பால் போதுமானதாக கிடைக்கிறதா என சரிபார்க்கவும். தாயிடம் குழந்தை எடை தேவையான அளவு கூடியிருப்பதை கூறி தாய்ப்பால் தேவையான அளவு கிடைப்பதை சொல்லி நம்பிக்கை ஊட்டவும். குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு குழந்தையை தாலாட்டவும். தோளில் போட்டு தட்டி கொடுக்கவும். வயிற்றில் சிறிதாக அழுத்தவும், உடை மாற்றவும். மற்றும் இடத்தை மாற்றி பார்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் வயிற்றுவலிக்கு மருந்து கொடுக்கலாம்.

புட்டிப்பால் கொடுக்கலாமா?

கட்டாயம் கொடுக்கக்கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்திவிடும். குழந்தை சப்பாத நிலையில் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக குறைந்து நின்றுவிடும். மேலும் புட்டிப்பால் கொடுப்பதால் கிருமி தொற்று / பேதி / நிமோனியா ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே புட்டிப்பால் வேண்டவே வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாலாடையோ / கரண்டியோ உபயோகிக்கலாம்.

குறிப்பு:

 உலகத் தாய்ப்பால் வாரம் 2018 ஆகஸ்ட் 1-7 தேதிகளில் பல நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் முழுமையான தாய்ப்பாலூட்டுவதில் தாய்மார்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதற்கு குடும்பம், சமுதாயம், அரசு ஆகியோர் ஆதரவு மற்றும் உதவிகள் அளிக்க வேண்டும். உலகத்தாய்ப்பால் வாரத்தையொட்டி வளர் இளம்பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு அவசியம். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தாய்ப்பால் வாரம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழில் பிரசுரங்கள் / இணைய பதிவுகள் வெளியிட்டு வருகிறோம்.

முனைவர் க. சண்முகவேலாயுதம்,
மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு இளங் குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு.
http://www.foryouchild.org/

பஞ்சு மிட்டாய் இணையத்தின் குறிப்பு: மருத்துவம் சார்ந்த பதிவுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலே பதிகிறோம். இந்தக் கருத்துக்களில் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களது மருத்துவர்களிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

Leave a comment