QR Code இன்னுமொரு சடங்கு – கலகலவகுப்பறை சிவா

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

QR code – மாநிலமெங்கும் கல்வித்துறையில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தை. அதிகாரிகள் பெருமிதமாகவும் ஆசிரியர்கள் குழப்பமாகவும் உச்சரிக்கின்றனர் என்பது முரண். புதிய பாடப்புத்தகங்கள் வெளியானபின் அதுவரை இருந்த எதிபார்ப்புகள் அனைத்தும் மாறத்தொடங்கின. QR தொழில்நுட்பம் குறித்துப் பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின.
ஆசிரியர்கள் கைகளில் ஆன்டிராய்டு செல்பேசிகள். பல்வேறு செயலிகள் மூலம் QR இணைப்புகளில் தரவிறக்கம் செய்தனர். பாடம் சார்ந்த கூடுதல் தகவலாகக் கிடைத்த காணொளிகள் அவசரக் கோலத்தில் தயாரானவை. சில இணைப்புகள் கிடைக்கவில்லை. இது ஆசிரியர்களில் குழப்பத்தை மேலும் அதிகரித்தது.
வகுப்பறையில் எத்த‌னை முறை QR மூலம் படங்கள் காட்டப்பட்டன? கணக்கிடப்படும் என்பது முக்கியமான வதந்தி. அதை உண்மையாக்குவது போலச் சில அதிகாரிகள் QR பயன்பாட்டுக்கு ஒரு பதிவேட்டை ஆசிரியர்கள் பராமரிக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினர். ஆசிரியர்களுக்கான பயிற்சியில் தெளிவான விளக்கங்கள் கிடைக்கும் என்று பலர் காத்திருந்தனர். பயிற்சிகள் இன்னும் வெறுப்பை அதிகரிப்பதாகவே அமைந்தன. இரண்டுநாள் பயிற்சியில் அதிகாரிகள், கருத்தாளர்கள் QR பயன்பாட்டை அதிகமாக வலியுறுத்தினர். புத்தகங்களில் பாடங்கள் அதிகமாக இருக்கின்றன. குறைந்த கால அளவில் எப்படி நடத்த முடியும்? என்ற கேள்விக்கான விடை பயிற்சியில் கிடைக்கவில்லை.

QR இணைப்புகளை வகுப்பறையில் கண்டிப்பாகக் காட்டவேண்டும். நாங்கள் பள்ளிக்கு வரும்போது உங்களிடம் கேட்கமாட்டோம். வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிட‌ம் கேட்போம் என்று அதிகாரிகள் சொன்னது மிரட்டலாகவே தோன்றியது. ஓர் இணைய இணைப்பின் முகவரியைத் தட்டச்சு செய்து செல்வதைவிட எளிதாகவும் நேரடியாகவும் அந்த இணைப்பிற்குச் செல்லவே QR தொழில் நுட்பம். பாடநூலில் பல்வேறு இடங்களில் இந்தக் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. பாடநூலை மின்நூலாகப் பெற, மதிப்பீடுகள், படம் சார்ந்த காணொளிகள் ஆகியவை QR எனும் விரைவுக் குறியீட்டால் கிடைக்கின்றன.

இது இல்லாமல் செயல்பாடுகளில் கூடுதல் தகவல்களுக்கான உரலிகள்(URL) கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவ்வளவு நீளமான உரலியை யாரால் பிழையின்றித் தட்டச்சு செய்ய முடியம்? முக்கியமாக இதை QR இணைப்பாகக் கொடுத்திருக்கலாம். பாடம் சார்ந்த பல்வேறு தகவலகைத் தேடித் தேடி குழந்தைகளிடம் சேர்க்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தேட இயலாதவர்களுக்கு குறைந்த பட்ச உதவியாக QR இருக்கும் என்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் ஆசிரியர்கள் தெளிவடைந்திருப்பார்கள். பள்ளிக்கல்விச் செயலர் அவ்வாறுதான் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால், பயிற்சியில் ஒலித்த குரல்கள் QR தொழில்நுட்பத்தை மிரட்டல் ஆயுதமாகக் காட்டின.

பணியை எளிமையாக உதவ வேண்டிய தொழில்நுட்பம் கூடுதல் சுமை என்று ஆகியிருக்கிறது. இது இன்னுமொரு சடங்காகவே வகுப்பறைகளில் நிகழும். பாவம் குழந்தைகள். அவர்களின் பயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Leave a comment