ஓரிகாமி (Origami) எனும் ஜப்பானிய காகித மடிப்புக்கலை – தியாக சேகர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஓரிகாமி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரும்பாலானோர் சிறு புன்னகை சிந்துவது இயல்பு. ஏனெனில் நமக்கு இந்த வார்த்தை கொஞ்சம் புதிது தான். ஓரிகாமி எனும் இந்தக் கலை ஜப்பானியர்களின் பாரம்பரிய காகிதக்கலை. இந்தக் கலையின் பிறப்பிடமும் ஜப்பான் தான். ஓரி என்றால் மடித்தல், காமி என்றால் காகிதம்.

ஓரி மற்றும் காமி என்ற இந்த இரண்டு வார்த்தைகள் சேர்ந்தே ஓரிகாமி என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழ் மொழியில் நாம் காகித மடிப்புக்கலை என்று அழைக்கிறோம். இன்று இந்த ஓரிகாமி கலை ஜப்பான் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ளது.

ஓரிகாமியின் சிறப்பு : காகிதங்களை கொண்டு செய்கின்ற கைவினைப்பொருட்கள் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் ஓரிகாமி எனும் காகித மடிப்புக்கலை தனிச் சிறப்புடையது. ஒரு சதுரமான காகிதத்தை கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், பசை கொண்டு ஒட்டாமல், நூல் கொண்டு கட்டாமல்  மடிப்பை மட்டுமே பயன்படுத்தி பல்வேறு விதமான உருவங்களை(விலங்குகள், பறவைகள், பூக்கள், வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்கள், கணித முப்பரிமாண உருவங்கள்) உருவாக்கும் கலையே ஓரிகாமியின்  தனிச் சிறப்பு. இந்த ஓரிகாமி கலையில் ஜப்பானியர்கள் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உருவங்களை மடித்து உருவாக்கியுள்ளார்கள்.

கற்றல் மேம்பாட்டில் ஓரிகாமியின் பங்கு : காகித மடிப்புக்கலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளவியல், கணிதம், இயற்பியல், பொருட்கள் வடிவமைப்பு ஆகிய அனைத்து அறிவியலும் ஒரு சதுரமான காகிதத்தை மடித்து உருவமாக மாற்றும் இந்த ஓரிகாமி கலையினுள் அடங்கியுள்ளது.

ஓரிகாமியும் கணிதமும் : நாம் செய்கின்ற கப்பல், ராக்கெட், கொக்கு, பெட்டி அகிய அனைத்து ஓரிகாமி உருவங்களும் வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்படுகின்றன, ஓரிகாமி மூலமாக மாணவர்களுக்கு கணித உருவங்களை எளிமையாகவும் விளையாட்டாகவும் விளக்க முடியும்.

புதியன கண்டுபிடிக்கும் அறிவைத் தூண்டும் ஓரிகாமி : ஒரு சதுரமான காகிதத்தை 5-10 மடிப்புகள் மடித்து பறவைகளாக,விலங்குகளாக, மாற்றும் போது மாணவர்கள் மனதில் புதிய கற்பனைகளைத் தூண்டுகிறது,நம்மாலும் ஒரு உருவத்தை உருவாக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இது அத்தோடு நிற்காமல் அவர்களே பல புதிய உருவங்களை உருவாக்கத் தூண்டுகோலாக அமைகிறது. மாணவர்களின் சுய அறிவு வளர்ச்சிக்கு ஓரிகாமி முக்கிய பங்கு வகிக்கிறது.

மனதை ஒருநிலைப்படுத்தும் ஓரிகாமி : ஒரு சதுரமான காகிதத்தை 15-20 மடிப்புகள் நன்கு கவனித்து மடிக்கும் போதுதான் நாம் ஒரு விலங்கு, அல்லது ஒரு பறவையின் உருவத்தை   உருவாக்க முடியும் .இந்த கலையின் மூலமாக மாணவர்களின் மனம் அவர்களை அறியாமலே விளையாட்டாகவே மன ஒருங்கிணைப்பிற்கு செல்லும். மேலும் இந்தக் காகித மடிப்புக்கலை மாணவர்களின் உற்றுநோக்கும் திறன் வளர துணை செய்கிறது.

மாணவர்களிடையே குழு மனப்பான்மையை வளர்க்கும் ஓரிகாமி : இந்த ஓரிகாமி கலையானது 15-20நபர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, கருத்துக்களை மாறிமாறி ஆனந்தமாக விளையாட்டாக கற்கும் கலை எனவே மாணவர்களிடையே இயல்பாகவே குழு மனப்பான்மை வளர்கிறது. விட்டுக்கொடுக்கும் பண்பையும், நட்புறவையும் மாணவர்களிடையே வளர்க்கிறது.

தமிழகத்தில் ஓரிகாமி : ஐரோப்பா, அமெரிக்கா , சீனா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் இதன் மதிப்பை உணர்ந்தது பள்ளி மாணவர்களுக்கு பாடமாகவே வைத்துள்ளார்கள். விண்வெளித்துறை, மருத்துவத்துறை மற்றும் பொருட்கள் வடிவமைப்புத்துறைகளில் ஓரிகாமி தொழில்நுட்பம் தேவையான ஒன்றாக உள்ளது.
ஒரு பெரிய பொருளை மடித்து சிறியதாக சுருக்கி அதை மீண்டும் பழைய நிலைக்கு விரிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் ஓரிகாமியோடு தொடர்புடையது.

அனைத்து விதமான காகிதப் பெட்டிகள் தயாரிப்புகள் சிறிய தீப்பெட்டி முதல் பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் வரை அனைத்தும் ஓரிகாமி கலையினை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டிலிருந்து நம்நாட்டிற்கு வந்த ஓரிகாமி கலையானது 20-30 மாதிரிகள் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும், மேலும் இது கணித்த்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலை என்பது பலருக்கும் தெரியாத நிலைதான் தமிழகத்தில் உள்ளது .பொருட்கள் வடிவமைப்பு துறையில் ஓரிகாமி ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. இந்த துறை எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கக்கூடிய துறை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே கலைகள் சார்ந்த கல்வியில் நாம் இன்னும் போதிய வளர்ச்சி விழிப்புணர்வு அடைய வேண்டும்.

திறமையான வெளிநாட்டு சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். புதிய பாதையை உருவாக்குவோம்! புது உலகம் அமைப்போம்!

ஓரிகாமி கலையானது பல்வேறு படிநிலைகள் உள்ளடக்கிய 4 மடிப்பில் துவங்கி, 400 மடிப்புகள் வரையில் உருவங்களை உருவாக்க முடியும். இந்த கலையினை கற்க வயது ஒரு பொருட்டல்ல. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அனைவரும் கற்கலாம். விருப்பம் மட்டுமே தேவை. பழைய செய்தித்தாள்கள், பழைய ஆங்கில வார, மாத இதழ்கள் இதுவே போதுமானது ஆரம்பத்தில். இந்த ஓரிகாமி கலைக்கென்று தனியாக காகிதங்கள் மேலைநாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. பெரியவர்களுக்கு உளவியல் ரீதியாக மன அழுத்தம் போக்க, ஓரிகாமி துணைபுரிகிறது. செயல்வழி கற்றலில் ஓரிகாமி முக்கியத்துவம் வாய்ந்தது.

Leave a comment