பல்லுயிர் பேணும் கோயில் காடுகள் – ஆற்றல் பிரவீண் குமார்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கிராமத்து சாலைகளில் பயணம் செய்யும் போது அங்கு மலையடிவாரத்திலோ,ஆற்றங்கரையிலோ,ஏரிக்கரையிலோ பெரிய மீசையுடன் கையில் அரிவாளோடு பெரிய மண் குதிரை பொம்மைகளின் மேல் அமர்ந்துகொண்டு இருக்கும் சாமி சிலைகளை கவனித்திருப்போம். அந்தக் கோயில் காடுகளைப் பற்றி குழந்தைகளிடம் பேசியிருக்கீர்களா? கோயில் காடுகள் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? அதன் தற்போதைய நிலை என்ன ? குழந்தைகளுக்கு இக்காடுகள் பற்றின அறிமுகங்களை ஏன் தர வேண்டும் ? இதைப் பற்றின ஓர் எளிய அறிமுகம்…

இயற்கையைப் பாதுகாக்கும் மரபானது பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது. கோயில்காடுகள் அந்தந்த கிராமத்தில் கிராம காவல்காக்கும் தெய்வங்கள் வசிக்கவென்று மனிதர் தொடாமல் விடப்பட்டிருக்கும் பகுதி ஆகும். ஒரு உதாரணத்திற்க்கு சொல்கிறேன். ஒரு கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் பெரிய நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள்.அந்த நிலத்திற்கு பயிர் வளர தண்ணீர் கிணற்றிலோ,ஆற்றிலிருந்தோ வந்து விடுகிறது .சூரியன் மூலம் ஒளிச்சேர்கை நடக்கும்.இது மட்டும் போதுமா? பயிர் வளர்ந்து விடுமா? இல்லை,முக்கியமாக மகரந்த சேர்க்கை நடக்கணும் இல்லையா.அதற்கு தேனீக்களும்,வண்ணத்துப்பூச்சிகளும் வேண்டும் அல்லவா, அந்த பயிர்களை அழிக்கும் பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற பறவைகள் வேண்டுமே, எலிகளிடமிருந்து காப்பாற்ற பாம்புகள் வேண்டுமே,அந்த மிகப்பெரிய நிலத்தில் இந்த தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும், பறவைகளும், பாம்புகளும் எங்கிருந்து கிடைக்கும்.அதற்கு ஒரு சின்ன காடு போன்ற பகுதியை உருவாக்கினோம்,அதற்குப் பெயர்தான் இந்த கோயில் காடுகள். ஆம் வேளாண்மை நிலத்தில் பல்லுயிர்ச் சூழலை உருவாக்கும் கோயில் காடுகள். இந்த கோயில் காடுகள் என்பவை பெரும்பாலும் ஊருக்கு வெளியிலோ, வயல்களுக்கு மத்தியிலோ அமைந்த வனத்தீவுகள். இவைகளில் சிறுகோயிலோ அல்லது சிறுதெய்வ வழிபாட்டுக்குரிய மண் சிலைகளோ அல்லது தெய்வங்கள் பேரில் ஊன்றப்பட்ட ஆயுதங்களோ இருக்கும். அவைகளைச் சூழ்ந்து மனித நடமாட்டம் இல்லாத வனப்பெருக்கமும், அவ்வனப்பெருக்கத்துக்கு ஏற்ற சிற்றுயிர் வளமும் இருக்கும்.

ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் தங்கள் மூதாதையர்கள் தங்கள் கிராமத்தை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் அமைக்கப்பட்டிருக்கிறது. வேப்பமரம், நாகலிங்க மரம், வில்வமரம், அரச மரம், போன்ற மரங்கள் ஏராளாமான உதவிகளை மனிதனுக்கு செய்வதால் இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடவுளாக கருதப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலமாவது இந்த கோவில்காடுக்காக ஒதுக்கப்பட்டு அதில் அம்மன் சிலைகளும் அய்யனார்,மதுரைவீரன், முனீஸ்வரன் சிலைகளும் வைக்கப்பட்டு அங்கு மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் மற்ற விலங்குகள் சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கும்.. அம்மன், அய்யனார், மண்ணால் செய்யப்பட்ட குதிரை இல்லாத ஒரு கோவில்காட்டைப் பார்ப்பது கடினம்.

இக்காடுகளின் உள்ளே வெகு அரிதாகவே மனிதர்கள் செல்வதால் இங்கு இயற்கையான ஒரு வனத்தொகுப்பு பல்லாண்டுகளாக பேணப்படுகிறது. இதனால் வேளாண்மை என்ற பெயரால் இயற்கைச்சூழலும், பாரம்பரிய தாவரங்களும், சிற்றுயிர் வளமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
மேலும் இக்காடுகள் வயல்களுக்கு நடுவில் இருப்பதால் பறவைகள்/ பாம்புகள் போன்றவை தங்கி உணவுச்சங்கிலியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன. இவ்வகையில் இவை விவசாயத்துக்கு நேரடியாக உதவுகின்றன. இவைகளைப் பற்றிய சமூகப் புரிதலும் தெய்வ வழிபாடும் இவ்வனத்தொகுதிகள் காப்பாற்றப்பட்டு வந்ததன் பின்னணியில் இருக்கின்றன.

இவ்வகைக்கோயில்கள் காவிரி மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அங்கு வேளாண்மை மிக அதிக அளவில் நடைபெற்றது. இப்பகுதிகளில் இயற்கையின் பன்முகத்தன்மையை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முயற்சியாகவே இதை நாம் பார்க்க வேண்டும் .

கோயில் காடுகளால் ஏற்படும் நன்மைகள்:

  • கோயில் காடுகளால் மழை வளம் அதிகரிக்கும்.
  • கோயில் காடுகளால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மரம், செடி, கொடிகளின் கிளைகள், இலைகள் உதிர்ந்து, மக்குவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. மேலும், பல்வகை விலங்குகள், பறவைகளுக்கு தங்குமிடமாக கோயில் காடுகள் விளங்குவதுடன், அவற்றுக்குத் தேவையான உணவும் இங்கேயே கிடைக்கிறது. கோயில் காடுகளில் பறவைகள், விலங்குகள் மூலம் விதைப் பரவல் அதிகரிப்பதால், இயற்கையிலேயே தாவரங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கிறது.
  • பல்வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களின் இருப்பிடமாகவும் கோயில் காடுகள் திகழ்கின்றன. இந்தத் தாவரங்கள் காற்றிலுள்ள மாசுக்களின் அளவை வெகுவாகக் குறைத்து, மக்கள் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவை அதிகளவில் வெளியிடுகின்றன. இதன்மூலம் கிராமங்களில் நீர், நிலம், காற்று, பல்லுயிர் வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
  • இந்தக் காடுகள் காடுவளத்தை பாதுகாக்கவும்,பல்லுயிர் உணவுச் சங்கிலியை தொடர்ந்து முன் எடுத்துச்செல்லும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்தியாவை பொருத்தமட்டில் வனப்பகுதியில் 14,000-க்கும் மேற் பட்ட இவ்வகை ‘கோயில் காடுகள்’ பரவிக் காணப்படுகின்றன. நாட் டிலேயே அதிகப்படியாக இமாச் சலப் பிரதேசத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும், அதற்கு அடுத்தப்படியாக கேரளத் தில் 2,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும், தமிழகத் தில் 550 கோயில் காடுகளும், காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. முதலில் கடவுளின் பெயரால் பாதுகாக்கப் பட்ட இந்த வனப்பகுதிகளில் வேட்டைக் கும்பல், மரம் வெட்டும் கும்பல் நுழைய அச்சமடைந்ததால் ஆரம்பகாலத்தில் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல் போன்றவை தடுக்கப்பட்டன. அதனால், இந்தக் காடுகள் இன்றளவும் மருத்துவத் தாவரங்களின் களஞ்சியமாகவும், பழமரங்கள், தேன் மற்றும் அங்கு வாழும் வன உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இருந்தன.

இந்நிலையில் நாகரிக வளர்ச்சியால் முன்னோர் வழிபட்ட இக் கோயில் காடுகள் அழிந்து வருகின்றன. அவற்றால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும், அந்த வனப்பகுதிகளில் காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் அழியும்தருவாயில் உள்ளதாக உயிரியல் துறை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.இதற்கு காரணங்கள் பல என்றாலும் முக்கியமானவை, வேளாண்சமூகம் தொழிற் சமூகமாக மாற்றமடைவதே ஆகும். இதனால் மரபுசார்ந்த இயற்கைத்தெய்வங்கள் வாழ்கையில் இருந்து அந்நியமாதல் நடைபெறுகிறது. வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாகவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களாகவும், புறநகர்களாகவும் மாற்றமடையும் நேரத்தில் இக்காடுகள் காணாமல் போகின்றன. இது பலநூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல்லுயிரியத்தை அழிவுக்கு நகர்த்துகிறது.

அடுத்துவரும் தலைமுறையாவது இந்தக் கோயில் காடுகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்…

Leave a comment