கலையை உணர்தல் – விஜயகுமார்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வாழ்வியல் அறங்களை மிகு நேர்த்தியாக தன்னகத்தே உள்ளடக்கியது கலையாகும். அதிநுட்ப ரசனையுணர்வின் அழகியல் கூறுகளை உள்ளுணர்ந்து வெளிப்படுத்துதலே நாடகக்கலையை அணுகுதலில் பெரும்பாண்மையாகும். நாடகத்தை அக வெளிப்பாடுகள் உணர்த்தும் நிலை அழகானதாகும். அதனை அறிதல்,உணர்தல்,பழகுதல்,வெளிப்படுத்துதல் ஆகிய நிலைகளில் காண வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வோம். நாடகக்கலையைப் புரிதல் என்பது சற்று ஆராய்ந்து அனுபவித்தலாகும். அதனுடைய அடக்கமான வெளிப்பாடுகள் யாவும் தெளிந்த நீரோடையைப் போல இயங்கிக்கொண்டேயிருக்கும். ஆனால், உள்செயல்பாடுகள் அனைத்தும் மொத்த உலகின் செயல்பாடுகளையும் தன்னகத்தே தூய்மைப்படுத்தும் அதி உன்னதப் பணியைச் செய்து கொண்டேயிருக்கும் மிக எளிமையாகவும், தன்னடக்கத்தோடும்.

கலையை அறிதல் : காட்சி வடிவ வெளிப்பாடுகளில் ‘நாடகக் கலை’ முதன்மையானது. ஏனெனில்,மனித மனங்களின் உள்ளுணர்வுகளின் வழி தோன்றும் அனைத்தையும் உடல்உறுப்புகளின் வழியாக அசைவாக்கி அதனை எளிதானதாகவும், குறியீடுகளாலும் கருத்துச் செறிவுடையதாய் வெளிப்படுத்துகையில் அது நடிப்பாகி நாடகமாகிறது. நாடகக்கலையை அறிதலென்பது நாடகம் என்ன செய்யும்? என்பதிலிருந்து தொடங்குகிறது அதனைப் பற்றி அறிய நாடகமானது நிகழ்த்துக்கலை வடிவங்களின் கலையாயுதம் ஆகும். நாடகத்தினை முன்முடிவோடு அணுகுதல் கூடாது. அதாவது,நாடகம் என்றால் இப்படியிருக்கும்,அப்படித்தானே இருக்கும் என்ற முன்முடிவுடன் அணுகுதல் தவறாகும். நாடகமானது பலவிதமான அழகியல் தன்மைகளை உடையதாகும். அதனை எளிமையும்,பொறுமையும்,அடக்கத்துடனும் அறிந்து ஏற்றுக்கொள்ளல் அடிப்படைத் தகுதியாகும். நாடக நிகழ்வுகளையும்,மரபு சார்ந்த நாட்டுப்புற ஆட்டங்களையும்,பண்பாட்டுச் சடங்குகள் வழி கண்டு நாடகத்தினை அறிதல் முதன்மையாகிறது.

கலையை உணர்தல் : நாடகத்தை அறிதலிலிருந்து உணர்தல் நிலை குறிப்பான நிலையாகும். நாடகக்கலையானது அதன் வெளிப்பாட்டினை உணர்தலேயாகும். உணர்ச்சிகளுக்கு நாடகக்கலையில் பெரிதொரு இடமில்லை. நாடக நிகழ்வுகளின் மூலம் ஒவ்வொரு கதாப்பாத்திர உடல்கள் அனைத்தும் அதன் தன்மைக்கேற்ப வெளிப்படுத்தும் அசைவுகள் எத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறது என்பதை உள்வாங்கிப் பின் உணர்தல் வேண்டும். பலவிதமான அங்க அசைவுகளின் பொருண்மைக் கூட்டு நடிப்பென வெளிப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு இயக்குநரும் வெவ்வேறு விதமான நாடகப்பாணிகளில் வெளிப்படுத்துவர். நாடகப்பிரதிகளுக்குள்ளிருக்கும் முறைமைகள் ஒன்றாகவும்,நாடக நிகழ்த்துகைகள் மூலம் வெளிப்படும் முறைமைகள் கையாளப்பட்டிருக்கும் முறை வேறொன்றாக இருக்கும். ஆனால்,மூலக்கருத்துகள் சிதைக்கப்படாமல் இருந்து,குறியீடுகளாலும்,உடல்மொழியாலும் நிகழ்த்தப்படும். அதனை நன்கு பார்த்து உள்வாங்கி உணர்ந்து அனுபவித்தலே சிறப்பு. நடிப்பென்பது உணரப்பட்டு வெளிப்படுத்துவது. நாடகமும் உணரப்பட்டு,உணரவைக்கப்படும் கலையாகும்.

கலையப் பழகுதல் : கலையப்பழகுதல் நிலை மிகுந்த கவனத்திற்குரிய இடமாகும். சமூகம் சார்ந்த அனைத்து வெளிப்பாடுகளையும் கவனித்தல் வேண்டும். உலகின்அனைத்து உயிர்கள் தொடங்கி புல்,பூண்டு,மரம்,செடி,கொடி என சிற்றுயிர் தொடங்கி பேருயிர் வரை அனைத்தையும் ரசித்து அதனோடு பழகுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் முறையான நாடகப்பயிற்சிகள் தேவை. மேலும், நாடகக்கலை சார்ந்து இயங்கும் கலைஞர்களின் கலைப்பகிர்தல் நன்று. ஏனெனில், கலையைப் பழக்குதல் மட்டுமன்றி அக்கலைஞர்களின் அனுபவமே கலைப்பயிற்சியாக அமையும். ‘நாடகப்பயிற்சிப்பட்டறை’ களில் கலையைப்பழகுதல் கூடுதல் அனுபவத்தைத் தருவதாகத் தொடங்கும். நாளும்,பொழுதும் கலையைப் பழகுதலில் அழகாகிக் கொண்டே வரும். காணும் உயிர்களிடத்திலெல்லாம் அன்பும்,அறமும் பெருகி நல்லொலுக்க நிலை தொடரும்.

கலையை வெளிப்படுத்துதல் : கலையை வெளிப்படுத்துதல் நிலையானது ” கலையை நிகழ்த்துதல் ” ஆகும். மேற்கூறிய அறிதல், உணர்தல், பழகுதலிலிருந்து கிடைத்த மொத்த அனுபவத்தையும் அனுபவித்து வெளிப்படுத்தலாகும். கலையை வெளிப்படுத்துகையில் பதட்டத்தோடு நிகழ்த்துதல் கூடாது. பதட்டமானது கலை நிகழ்த்துதலின் போது என்ன செய்கிறோம் என்பதை உணர முடியாமல் உணர்ச்சிகளோடு இணைந்து வெற்று அசைவாய் மாறி மிகு நடிப்பாய் பொருந்தா நிலை வெளிப்பாடாய் முடியும். அந்தளவிற்குப் பதட்டமானது நம்மைக் கொண்டு செல்ல வைத்துவிடும். அதனைச் சரியாக நிகழ்த்த உதவுவது அடிவயிற்றுப் பயத்தை உணர்ந்து அப்பயத்தை மெல்ல மெல்ல விடுவிக்கையில் “தெளிவு” மற்றும் “பொறுமை” என்கிற நிலை நமக்குக் கிடைக்கும். அதனைக் கையாண்டு அசைக்கையில் நம்முடைய மனதானது முதலில் அழகாகும் இடத்தை உணரலாம். அந்த அழகு நிலை மனதிலிருந்து வெளிப்படும் அசைவுகள் மிகு நேர்த்தியாக மாறி சிறந்த வெளிப்பாடுகளாய் நடிப்பானது வெளிப்படும். அந்நிலையில் உணரப்பட்ட நடிப்புநிலைக் கூறுகளனைத்தும் ஒருங்கிணைந்து பார்வையாளர்களின் மனங்களுக்குள் சென்று சரியானச் சிந்தனைத் தூண்டலுக்கு உட்படுத்தும்,உட்படுத்த வேண்டும். அச்சிந்தனைத் தூண்டலே நாடகக்கலையை உணர்தலும்,அதனைக் காணும் பார்வையாளர் மனத்தைத் தொடர் நிகழ்த்துகைக்கு வரவைத்துப் பண்பாட்டுச் சூழலுக்குள் தக்கவைப்பதுமாகும்.

நன்றி,
கு.விஜயகுமார்,
நாடகச் செயற்பாட்டாளர்
உதிரி நாடக நிலம்,
தஞ்சாவூர்.

புகைப்படங்கள்: விஜயகுமார் முகப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. புகைப்பட கலைஞர்களுக்கு நன்றிகள் பல.

Leave a comment