பஞ்சு மிட்டாய் இணையதளம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பஞ்சு மிட்டாய் மூலம் சிறார்களுக்காக வெவ்வேறு துறையில் இயங்கும் பல நண்ப‌ர்களின் அறிமுகங்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. செயற்பாட்டாளர்கள், பதிப்பகங்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இதழியல் நண்பர்கள், சுற்று சூழல் நண்பர்கள், மருத்துவம் பற்றி பேசும் நண்பர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், நாடகக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், பறை இசைக் கலைஞர்கள், உணவு சார்ந்து பேசும் நண்பர்கள், கோமாளிகள், பாடகர்கள் என பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் இணையும் ஒரு புள்ளி தான் சிறார்களின் உலகம். அந்தச் சிறார் உலகினைப் பற்றி உரையாடல் நடத்தவும், அனைவரது அறிமுகங்களை பகிரவும், சிறார் இலக்கியம், சிறார் இதழியல், கல்வி, உளவியல், உணவு என‌ தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பேசவும் இந்த இணையதளம் துவங்கப்படுகிறது.

இது முழுக்க முழுக்க சிறார் உலகினைப் பற்றி பேசிடும் தளம். எந்தக் கருத்துக்கள் சிறந்தது, தவறானது என்பதனை முடிவெடுக்கும் நோக்கில் இல்லாமல் அனைத்தையும் பற்றிய‌ விவாதங்களுக்கு இடம் தரும் மேடையாக இந்தத் தளத்தினை அமைத்திடவே ஆசைப்படுகிறோம்.
அனைத்து நண்பர்களும் இணையதளத்திற்கு உங்களது சிறார் உலகினைப் பற்றின‌ பார்வைகளையும், புரிதல்களையும், அனுபவங்களையும், எதிர்கொள்ளும் சிக்கல்களையும், கேள்விகளையும் சுதந்திரமாக பகிரலாம்,விவாதிக்கலாம்.

கல்வி, குழந்தை வளர்ப்பு, உணவு, மருத்துவம், சிறார் இதழ்கள், இலக்கியம் என வெவ்வேறு தலைப்புகளில் உள்ள எந்த‌ ஒரு பதிவும் பகிரும் நோக்கத்துடனே அமையும். அதன் சார்ந்து முடிவெடுக்கும் கட‌மை வாச‌கருடையதே. வாசகரின் முடிவிற்கு இந்தத் தளம் எந்த வகையிலும் பொறுப்பெடுக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேப் போல் எந்தவித வியாபார நோக்கத்தில் இயங்கவும் நாங்கள் விரும்பவில்லை. நிகழ்வுகள், செயற்பாட்டாளர்கள், இதழ் , இலக்கியம் , பதிப்பகங்கள், புத்தக கடைகள் சார்ந்த அறிமுகங்கள் அனைத்துமே தகவல்கள் அனைவருக்கும் சேர வேண்டுமென்ற நோக்கத்திலே பகிரப்படுகிறது. இதழ் சந்தாக்கள் , நிகழ்வு கட்டணங்கள் மற்றும் விற்பனைகள் அனைத்தும் வாசகர்களின் சொந்த முடிவே. பஞ்சு மிட்டாய் இதழ்,நிகழ்வுகள்,புத்தகங்கள் தவிர மற்ற எந்தவித குழு/இதழ்/பதிப்பகங்கள்/நிகழ்வுகள்/விற்பனையங்களுக்கு பஞ்சு மிட்டாய் இணையதளமோ அல்லது பஞ்சு மிட்டாய் நண்பர்களோ பொறுப்பேற்க இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிகழ்வுகளில் துவங்கி, பின்னர் இதழ் வடிவம் பெற்று தற்போது குழந்தைகள் குறித்து பேசிடும் தளம் ஒன்று அமைத்திருக்கிறோம். இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளையும் அன்புகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தத் தளத்தின் படைப்புகள்,வடிவமைப்பு,உபயோகங்கள் குறித்த‌ உங்களது கருத்துக்களையும் எங்களுடன் பகிருங்கள். உங்களது மேலான ஆதரவை தந்து எங்களது இந்த முயற்சியை வெற்றி பெற செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி,
பஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு.

1 Comment

Leave a comment