“இன்னும் லீவு இருக்கும்னு இருந்தேன் பள்ளிக்கொடம் திறந்திட்டாங்க தோழர் கடுப்பா இருக்கு “. பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு அடுத்த வகுப்பு போகும் ஒரு தோழரின் மகளின் குரல் இது . அந்த பெண்கூட விவரம் ஓரளவு அறிந்திக்கலாம் .தன் தோழிகளோடு மனதை தேற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று வந்துவிடமுடியும்.
ஆனால் , பால்மணம் மாறாத குழந்தைகள் என்ன செய்யும். தான் கொஞ்சி விளையாண்ட நாய்குட்டிகள் , பூனைக்குட்டிகள் , பொம்மைகள் எல்லாவற்றையும் விடவேண்டும். தான் ஓடிவிளையாண்ட தெருக்கள் , தான் ரசித்த பூஞ்செடிகள் எல்லாவற்றையும் விடவேண்டும். அம்மா காட்டிய நிலா , அம்மா கொடுத்த உற்சாகமான சொற்கள் எல்லாவற்றையும் இழக்கவேண்டும். ஏன், அம்மாவோடும் , மாமாவோடும் , அப்பாவோடும் அண்ணன் தம்பியோடும் செய்த சின்னஞ்சிறு சேட்டைகள் , குறும்புகள் எல்லாம் இனி குறைந்துவிடும்.
தன் உடம்போடு ஓட்டிகிடந்த அந்த குழந்தைகளை அப்படியே பிய்த்து புதிய ஓர் புதிய இடத்திலும் புதிய மனிதர்களிடத்திலும் ஒப்படைக்கவேண்டும். பள்ளியின் வளாகம் கண்டவுடன் வீரிட்டு அழுகிறார்கள் ; அம்மாவை கட்டிக்கொண்டு யாரிடமும் போக மறுக்கிறார்கள். தேம்பி தேம்பி அழும் அவர்களின் முகத்தைக்காண முடியாமல் ‘மனதை கட்டிக்கொண்டு ‘ முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறார்கள் பெற்றோர்கள் . ஐந்துவயது நிறைவடைந்த குழந்தைகளே இப்படி என்றால், மூன்றே வயது நிரம்பிய குழந்தைகளை நினைக்க மனம் பதைக்கிறது. பள்ளிச்சேர்க்கைக்கு ஐந்து வயது , நம்முடைய பள்ளிச்சூழல் , பெற்றோர்களின் சமூக புரிதல்பற்றி விவாதிக்கவேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் . இதுவாவது பரவாயில்லை. நர்சரி பள்ளிகள் வளாகங்கள் பக்கம்போனால் நிலைமையை ‘கண்கொண்டு பார்க்க’முடியவில்லை. தங்கள் வாழ்நாளில் குழந்தைகளும் பெற்றோரும் மகிழ்ந்திக்கவேண்டிய, மழலைமொழியோடு இரண்டற கலந்து, உணர்வாலும் குழந்தைகளோடு இருக்கவேண்டிய, அந்த தருணங்களை தெரிந்தே எதற்காக தொலைக்கிறார்களோ தெரியவில்லை . வேறு எதை அடையப்போகிறார்களோ அதுவும் தெரியவில்லை. எப்படியோ அல்லும் பகலும் அலைந்து ‘எல்லாவற்றிற்கும் ஒரு பாதுகாப்பான இடம்’ கிடைத்துவிட்டதாக எண்ணி அந்த வளாகத்தில் குழந்தைகளை விட்டுவிட்டு கண்ணீரோடு வெளியேறுகிறார்கள் பெற்றோர்கள்.
குழந்தைகளின் உலகத்தைவிட்டே வெளியேறுகிறார்கள் . ஏதோ ஓர் ஆசிரியரிடம் ‘அனைத்தையும் ஒப்படைக்கிறார்கள்’. ஓர் ஆசிரியர் அல்லது ஆசிரியை எத்தனை குழந்தைகளிடம் தாயாக நடந்துகொள்ள முடியும். அவர்களும் நம்மைப்போல சக மனிதர்கள்தானே . நாம் யாரும் சிந்திப்பதில்லை . தாயாக தந்தையாக நிறைவேற்றவேண்டிய பொறுப்பை ‘நிதியை கொடுப்பதின் வழியாக’ இன்னொருவரிடம் எதிர்பார்க்கிறோம் . இது முறைதானா ? இதுபோன்ற தருணங்களில்தான் குழந்தைகள் உலகை அவர்களின் உணர்வுகளைக்கொண்டு இயங்கும் அமைப்புகளை , செயல்பாட்டாளர்களை நாம் கொண்டாடவேண்டியிருக்கிறது. குழந்தைகள் உலகை மீட்டெடுக்கும் செயலை இனம் காண வேண்டியுள்ளது.
இங்கே காட்சிதரும் ‘பஞ்சுமிட்டாய் ‘ சிறுவர் இதழும் அப்படிப்பட்டதே. தாள் மட்டும் பளபளப்பாக இல்லை ; பிஞ்சுகளுக்கு பிடிக்கும் வண்ணத்திலும் எண்ணத்திலும் மிளிர்கிறது . அவர்களின் இயல்பைமீறி எந்தவித பாசாங்குமின்றி அவர்கள் எண்ணங்கள் வழியாகவே பஞ்சுமிட்டாய் இனிக்கிறது .கரடியும் தேனியும் ,மூன்றாங்கல், பேய் இருக்கா , உருளைக்கிழங்கு , கண்டுபிடியுங்கள் , குளத்தில் சத்தம் என எல்லா படைப்புகளும் எதோ ஒரு வகையில் ஈர்க்கிறது. புத்தகங்களின் பக்கங்களை திருப்பும் குழந்தைகள் ஏதோ ஓர் படைப்பின்வசம் மகிழ்வார்கள் அல்லது ஈர்க்கபடுவார்கள் என்பதை உறுதி செய்கிறது பஞ்சிமிட்டாய் . மொழியை ,பண்பாட்டை , சமூகத்தை அறியாமல் குழந்தைகளாக இருக்கும் அவர்களிடத்தில் புத்தகம் வழியாக , எழுத்தின் வழியாக நாம் மானுத்தை விதைக்க முயல்கிறோம் .படங்களும் கதைகளும் சக மனிதர்கள்மீது அன்பும் பரிவும் , அறிவின் தேடலும் தரவேண்டும். அத்தனை வடிவங்களிலும் மிளிரும் பஞ்சுமிட்டாய் குழுவினரை நாம் பாராட்டியே ஆகவேண்டும். வணிக ஊடகங்கள் , இதழ்கள் , போட்டி நிகழ்வுகள் போன்றவற்றிலிருந்து மீட்டு நமது குழந்தைகளை கொண்டாட , மகிழ்ந்திருக்க இந்த பஞ்சுமிட்டாய்களை வாங்கி சேர்ந்து ருசிப்போம் . குழுவினருக்கு வாழ்த்துக்கள் !