கதைப் பெட்டி

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

ஜனவரி 2018ல் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பஞ்சுமிட்டாய், குட்டி ஆகாயம் மற்றும் இயல் வாகை நண்பர்கள் சேர்ந்து இயல் வாகை புத்தக‌ அரங்கில் “கதைப் பெட்டி” ஒன்றினை வைத்து, அதில் சிறார்கள் தங்களது விருப்பம் போல் கதைகளையோ, ஓவியங்களையோ பெட்டியில் சேர்க்கலாம் என்று அறிவித்திருந்தோம்.அந்த இடத்திலே எழுதுவதற்கு தேவையான சூழலையும் உருவாக்கி வைத்திருந்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட அதிகமான படைப்புகள் கிடைத்தது. இரண்டு பெட்டிகளை நிறைத்து எங்களை மகிழ்ச்சியுற செய்துவிட்டனர். அப்படி கிடைத்த படைப்புகள் தான் பஞ்சு மிட்டாய் 6ம் இதழை அலங்கரித்தது. தற்பொழுது “கதைப் பெட்டி” வெவ்வேறு ஊர்களில் ஆர்வமுள்ள நண்பர்களின் உதவியுடன் இயங்க திட்டமிட்டுள்ளது.

பள்ளிகள், சிறார் நிகழ்வுகள் என சிறார்கள் கூடும் இடங்களில் சிறார் இதழ்களான குட்டி ஆகாயம் மற்றும் பஞ்சுமிட்டாய் சார்பாக “கதைப் பெட்டி” வைக்கப்படும். அதில் சிறார்கள் தங்களது படைப்புகளை சேர்க்கலாம். சிறார்களின் படைப்புகள் முழுக்க முழுக்க சிறார்களின் சொந்த படைப்புகளாக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு எழுத தெரியாத பட்சத்தில் பெரியோர்கள் சிறார்களிடம் கதைகள் கேட்டு எழுதலாம், மற்றபடி வேறு எந்தவித தலையீட்டையும் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமே எங்களிடம் இருக்கிறது.

எங்களுடன் சேர்ந்து இயங்க ஆர்வமுள்ள‌ நண்பர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படும் உதவிகள்.

  • கதைப் பெட்டி ஒன்றை தயாரித்து சிறார்கள் கூடும் இடத்தினில் குறிப்பாக அவர்களது கண் பார்வையில் இருக்கும்படி வைக்க வேண்டும்.[கதைப் பெட்டியை சிறார்களுடன் சேர்ந்துக் கூட வடிவமைக்கலாம், அதன் புகைப்படங்களையும் எங்களுடன் பகிரலாம்]
  • சிறார்களுக்கு கதைப் பெட்டி பற்றி அறிமுகம் செய்ய வேண்டும். கதைப்பெட்டியின் படைப்புகள் அனைத்தும் நேரடியாக பஞ்சு மிட்டாய் மற்றும் குட்டி ஆகாயம் குழுவினருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கலாம்.
  • எந்தவித இடையூறுமில்லாமல் சிறார்கள் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும்.
  • பெரியோர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ( சிறார்களின் கற்பனை திறனை வளர்ப்பது மட்டுமே இதன் நோக்கம்)
  • சேர்ந்த படைப்புகளை எங்களுக்கு தொடர்ந்து அனுப்பிடல் வேண்டும்.
  • கதை,பாடல்,கவிதை,கட்டுரை,ஓவியங்கள்,புதிர்கள் என படைப்புகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். (ஆனால் தமிழில் இருக்க வேண்டும்)
  • இப்படி பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் படைப்புகள் சிறார் இதழ்களில் தொடர்ந்து இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு…

பிரபு – 9731736363
வெங்கட் – 9843472092
மின்னஞ்சல் : editor.panchumittai@gmail.com

Leave a comment