பஞ்சு மிட்டாய் இம்முறை கூடுதலான சுவையுடனே வந்திருக்கிறது. மகிழ்ச்சி.
இதில் இடம்பெற்ற ஓவியங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளால் வரையப்பட்டது என நம்புவது சற்று கடினம் தான். கிடைத்திருக்கும் குறைவான பக்கங்களில் அதிகமான உள்ளடக்கங்களைக் கொண்டதாக உள்ளது. அதிலும் அவைகள் பல கலைவடிவங்களை கொண்டதாக உள்ளது குழுவின் செயல்பாட்டிற்கு சான்று.
நம்மோடு மிக நெருக்கமாக உள்ள இலவம்பஞ்சு மரம் குறித்த அறிமுகத்தை எனது மகனுக்கு (பவ நந்தன்) அளிக்க பஞ்சு மரம் கதை உதவியாய் இருந்தது. சில கேள்விகளால் என்னோடு உரையாடவும் செய்தான். ஓட்டப் பந்தயம் பகுதி அறிவியலை சுவாராசியமாய் அறிமுகப்படுத்தியது. அவசியம் கருதி தொடர்ந்து ராஜ்சிவா அவர்களை பயன்படுத்த முயற்சியுங்களேன். எனினும் நந்தன் இப்பகுதியை அசிரத்தையாக கடந்து விட்டான். எண்களின் மீதுள்ள கோபமாகக் கூட இருக்கலாம்.
நந்தனுக்கு தமிழ் எழுத்துகளில் குழப்பங்கள் மிக அதிகம். ஆனால் அவன் பஞ்சு மிட்டாயில் எப்போதும் விரும்பி பார்க்கும் பகுதி புதிர் கட்டம் தான். சொற்களை கண்டறிந்து உதவ முன்வந்த என்னை அடக்கி விட்டு அவனாகவே பல சொற்களை கண்டறிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
எளிய ஓசை நயமுடைய பாடல்களைக் கேட்பதிலும், கனிவு நிறைந்த கதைகளை உருவாக்குவதிலும் உள்ள குழந்தைகளின் ரசனைகளை பெரியவர்கள் தான் சரியாக உணருவதில்லை என்ற எண்ணம் இதழை வாசிக்கும் போது வந்து போனது.
இப்படியான இதழ்களை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் போது அவர்களால் வெளிக்காட்ட முடியாததும், சூழலால் மறக்கடிக்கப்பட்டதுமான அவர்களின் குழந்தைத்தனம் மெல்ல முகிழ்ப்பதை காண முடிகிறது.
உங்களின் கதை பெட்டிகளின் வழியே எங்கள் குழந்தைகள் பெறுகிறார்கள் கண்களுக்குத் தெரியாத நட்பு வட்டங்களை.
நன்றி,
சம்பத் குமார்
குழந்தைகளுக்கு எது பிடிக்கும் எனத் தெரியவேண்டுமா உங்களுக்கு?
எந்த ஒரு பொருளை, நிறத்தை, வடிவத்தைப் பார்த்ததும் உங்களுக்குள் இருக்கிற குழந்தைமை “ஹை! ” சொல்லியபடி துள்ளிக் குதிக்கிறதோ அவையெல்லாம் குழந்தைகளுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
அந்த வகையில் சிறார் உலகில் ‘பஞ்சு மிட்டாய்’ இதழ் குழந்தைகளுக்கு மிகப்பிடிக்கும். அதிலும் இந்த ஏப்ரல் மாத காலாண்டு இதழின் அட்டைப்படம் அப்பப்பா…!
க்ரையான்ஸ் கொண்டு வண்ணமிடப்பட்ட அந்த யானை பொம்மையையும், கரடி பொம்மையையும் தடவும்போது க்ரையான்ஸ் மீது தடவுகிற அதே உணர்வு. புத்தகம் கையில் கிடைத்து வெகுநேரமாகியும் இன்னும் தடவிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியவில்லை. இதுவே இப்புத்தகத்தின் வெற்றி எனலாம்.
அட்டைப்படம் தொடங்கி பின்னட்டை வரை ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளால் குழந்தைகளுக்கானதாக உருவாகியிருக்கிறது.
இருப்பதை இருக்கிறபடியே வெளியிட்டிருப்பது இவ்விதழின் சிறப்பம்சம்.
ஆம். குழந்தைகளின் கிறுக்கல்கள் இங்கே கொண்டாடப்பட்டிருக்கிறது. அவர்களை ஓவியர்களாக, கதை சொல்லிகளாக, எழுத்தாளர்களாக அங்கீகரித்து அழகுபார்த்திருக்கிறது இவ்விதழ்.
உங்கள் வீட்டிலிருக்கிற, உங்களுக்குத் தெரிந்த, உங்களுக்கு மிகப்பிடித்த குழந்தைகளுக்கு ஏதாவது கொடுக்க விரும்பினால், அந்த ஏதாவதைத் தவிர்த்து பஞ்சு மிட்டாயைப் பரிசளிக்கலாம். அது , அவர்களது படைப்புலகிற்கான திறவுகோலாக நிச்சயம் இருக்கும்!
சமகால குழந்தைகள் இதழில் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு – பஞ்சுமிட்டாய்.
நன்றி,
ப்ரீத்தி
இதோ வந்துவிட்ட்டது பஞ்சுமிட்டாய் ஆறு….
சமீபகாலமாக சிறுவர் இலக்கியங்கள் பரவலாய்ப்.பேசப்பட்டு வருகின்றன.
சிறுவர் இலக்கியங்கள் என்ற பெயரில் மிக அபத்தமாக பல இதழ்கள் நூல்கள் வெளிவருவது மனதிற்கு வருத்தம் அளிப்பதாய் உள்ளது. சிறுவர் இலக்கிய விருதுகள் வேறு வழங்கப்படுகின்றன.. ஆனால் உண்மையில் அவைகள் சிறுவர்கள் குழந்தைகள் உலகை எட்டியாவது பார்க்கின்றனவா என்றால் அது கேள்விக்குறியே…குழந்தைகள் உலகம் அலாதியானது. அதில் நாம் குழந்தைகளின் முகமூடியை அணிந்தும் பெரியவர்களையே பிரதிபலிக்கிறோம். இதில் குழந்தை எழுத்தாளர் தோழர் உதயசங்கர், விழியன் போன்றோர் என் நம்பிக்கைக்குரியவர்களாக எப்போதும் மிளிர்கின்றனர்.
விழியனின் குயாங்கி டியாங்கி கதையே வகுப்பறையில் குழந்தைகளிடம் தேர்ந்த கதைசொல்லியாக என்னை ஏற்றுக்கொள்ள வைத்த கதை. சமீபத்தில் தோழியை அண்ணா நூலகத்தில் சந்தித்தேன். எங்கள் சந்திப்பில் குழந்தைகள் இதழ் குறித்த உரையாடலும்.
அவர் என் குழந்தையின் மிக விருப்பமான இதழ் பஞ்சுமிட்டாய் என மிக மகிழ்வாய் பகிர்ந்தார்.
நிதர்சனம்… ஏனெனில் பஞ்சுமிட்டாய் முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகில் பயணிக்கிறது.பெயர் வடிவமைப்பு தொடங்கி, கதை விளையாட்டு என… வடிவிலும் குழந்தைகளின் கைக்கு அடக்கமாய்… அவர்களின் கை வண்ணத்தில் ஓவியங்கள் உள்ளது உள்ளபடியே…
மீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டுகிறது பஞ்சுமிட்டாய்…
நன்றி,
சசிகலா