கதை கதையாம் காரணமாம் – புத்தக அறிமுகம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கதைகள்தான் காத்திருக்கின்றன – வெங்கட்

வீடு முழுக்க குழந்தைகளின் வார்த்தைகள் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். கதைகளும் அந்த வெளிச்சத்தைக்கூட்டிக் கொடுக்க குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும்.

ஒரு வீட்டை மாய உலகில் மிதக்க வைக்க, மனிதர்கள் மீதான புரிதலையும் பிரியங்களையும் அதிகப்படுத்த, குழந்தைகள் மனப்பிரச்சினைகள் இன்றி வளர்ந்துவர கதைகள் நம் வீட்டிற்கு அருகிலேயே காத்துக்கொண்டிருக்கின்றன. கதை சொல்லவும் கதை கேட்கவும் காத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்கிறார்களா? பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் அருகிலுள்ள குழந்தைகளுக்கு கதை சொல்வதை துவங்கச் சொல்லும், இதுவரை காணாமல் இருந்த புதையலை கண்டுகொள்ளச் சொல்லும் புத்தகம் *கதை கதையாம் காரணமாம்*. தனது கதை சொல்லல் அனுபவங்கள் வழியாக, எளிமையான கதை விளையாட்டுகள் வழியாக எல்லோரையும் கதைகளுக்குள் அழைத்துச் செல்கிறது சரவணனின் வார்த்தைகள்.

கதை சொல்லத் தனி நேரம் பிரிக்கவோ, அதைப் பாடத்திட்டம் போல் செயல்படுத்தவோ நினைக்காமல் நாம் குழந்தைகளோடு இயல்பாக இருக்கும் எந்த நிமிடத்தில் இருந்தும் நம்மால் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை பள்ளிக்கு நடத்து செல்வது, நண்பரின் வீட்டில் குழந்தைகளோடு அறிமுகமாவது, சுற்றி இருக்கும் பொருள்களை இணைத்துப் பேசுவது என எளிதாக விளையாட்டுத்தனத்தோடு புத்தகம் நம்மோடு பேசுகிறது. இது கதைகளைப் பற்றி மட்டும் உணர்த்தவில்லை, அதன் வழியே குழந்தைகள் நம்மைவிட்டு அந்நியப்பட்டுவிடாமல் இருப்பதையும் உணர்த்துகிறது.

தமிழில் நிறைய கதை புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் கதை சொல்லல் குறித்த புத்தகங்கள் மிக அரிது. கதை சொல்லும் கலைக்குப் ( முருகபூபதி) பிறகு கதை கதையாம் காரணமாம் தான் எனக்குக் கிடைத்திருக்கிறது. தமிழில் கதை நிகழ்வுகள் பொம்மலாட்டமாகவும், நாடகமாகவும், தோல்பாவைகூத்தாகவும் மேலும் பல புதுமையான வடிவங்களிலும் நிறைய நண்பர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகளும் அனுபவங்களும் கதை சொல்லிகளால் நேர்த்தியாக தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுவது குழந்தைகளின் வளமான பயணத்திற்கு நமது காலத்தில் அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

கதை கதையாம் காரணமாம் (பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி) – விழியன்

குழந்தைகளுக்கு கதைகளை ஏன் சொல்ல வேண்டும்? பெற்றோர்கள் கதை சொல்லும் போது குழந்தைகளுடன் உருவாகும் நெருக்கம் ஏன்? எப்படி தினசரி வாழ்வில் இருந்து கதையை துவங்கலாம்? பழைய கதைக்கு எப்படி புதிய பாய்ச்சல் கொடுக்கலாம்? பெற்றோர்களின் வாழ்வியல் நெறிகளை எப்படி குழந்தைகளுக்கு கதைகள் மூலம் கொடுக்கலாம்? சமகாலத்தில் குழந்தை கதைகள் சொல்வதில் முக்கியமான தமிழ் படைப்பாளிகள் யார்? எந்த வயது குழந்தைக்கு என்ன கதை சொல்ல வேண்டும். ஏன் அதில் கவனம் வேண்டும்? குழந்தைகளுக்கு கதை சொல்வதன் மூலம் கல்வி பயில்வதில் என்ன மாற்றம் வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றார் விஷ்ணுபுரம் சரவணன். அவள் விகடனில் தொடராக வந்த கட்டுரைத்தொகுப்பு தான் கதை கதையாம் காரணமாம்.

எளிமையான ஓவியங்கள் மூலம் புத்தகத்தினை மேலும் மெருகூட்டியுள்ளார் ஓவியர் TN ராஜன். கதைகள் குழந்தைகளை மகிழ்விப்பவை. கதைகள் வரலாறுகளை சொல்லிச்செல்லும். கதைகள் அவர்களின் கற்பனை உலகினை பெரிதாக்கும். கதைகள் கதைச்சொல்லிக்கும் கேட்பவருக்கும் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திவிடும். கதைகள் புதிய சமூகத்தை உருவாக்க வித்திடும். கதை சொல்லுங்கள் கதை சொல்லுங்கள் கதை சொல்லுங்கள்

விலை: ரூ 40
ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடு : வானம் பதிப்பகம்

Leave a comment