இங்கிலாந்தில் தமிழ்க் கற்றல்: ஒரு பார்வை – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

மார்ச் 2026 முதல் வாரத்தில், லண்டன் வாழ் தமிழர்களிடையே ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) செய்தி வேகமாகப் பரவியது. “PETITION: Calling for a GCSE in Tamil” என்ற தலைப்பிலான அந்தச் செய்தி, லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) கேரி தாமஸ் அவர்களின் இணையதளப் பக்கத்திற்கு இட்டுச் சென்றது.

இங்கிலாந்தில் கணிசமான அளவில் தமிழர்கள் வாழ்ந்தபோதிலும், அவர்களது பிள்ளைகள் முறையான பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பயிலப் போதிய வாய்ப்புகள் இல்லை என்பதையும், தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் “Cambridge International iGCSE in Tamil” வழியாக மட்டுமே தமிழ் பயில இயலும் என்பதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டியது. எனவே, தமிழை முறையாக GCSE பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் இச்செய்தி பரவலாகப் பகிரப்பட்டது.

இந்தச் செய்தி எங்கள் நட்பு வட்டத்தில் GCSE vs iGCSE வேறுபாடுகள் குறித்தும், அதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு உள்ள தொடர்பு குறித்தும் தேடத் தூண்டியது. இங்கிலாந்தின் தற்போதைய கல்விச் சூழலில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் மற்றும் தேர்வுகள் குறித்துப் பலருக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அந்தச் சந்தேகங்களுக்கு விடை காண இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

GCSE & A Level – சிறு அறிமுகம்:

பிரித்தானியப் பள்ளிக் கல்வி என்பது ஒன்றாம் வகுப்பில் தொடங்கிப் பதிமூன்றாம் வகுப்பு வரை அமைகிறது. இதில் GCSE (General Certificate of Secondary Education) என்பது மாணவர்கள் தங்களது பதினொன்றாம் வகுப்பின் இறுதியில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பொதுத் தேர்வாகும். முன்பு இது O Level (Ordinary Level) என்று அழைக்கப்பட்டது (இப்போதும் இப்பெயர் புழக்கத்தில் உள்ளது). இதனைத் தமிழ்நாட்டின் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வோடு ஒப்பிடலாம்.

அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் பதிமூன்றாம் வகுப்பின் இறுதியில் எதிர்கொள்ளும் உயர்கல்விக்கான பொதுத் தேர்வை A Level (Advanced Level) என்பர். இதனைத் தமிழ்நாட்டில் நாம் எதிர்கொள்ளும் 12-ஆம் வகுப்பு (மேல்நிலை) பொதுத் தேர்வோடு ஒப்பிடலாம். பல்கலைக்கழக நுழைவிற்கு இந்த ‘A Level’ மதிப்பெண்களே அடிப்படையாக அமைகின்றன.

GCSE தேர்வில் – ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆகியவை கட்டாயப் பாடங்களாக உள்ளன. சமூக அறிவியல், கணினி, கலை & நாடகம், இரண்டாம் மொழி போன்ற பாடங்கள் விருப்பப் பாடங்களாக உள்ளன. இந்த தேர்வில், மாணவர்கள் ஐந்து முதல் பத்து பாடங்கள் வரை தேர்வு எழுதுகின்றனர்.

GCSE பாடப்பிரிவுகள் (GCSE Subjects):

கட்டாயப் பாடங்கள் (Core Subjects):

  1. ஆங்கிலம் (English Language & Literature): இவை இரண்டு தனித்தனி GCSE பாடங்களாகக் கருதப்படுகின்றன.
  2. கணிதம் (Maths): இது ஒரு GCSE பாடமாகும்.
  3. அறிவியல் (Combined Science / Triple Science): இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது தேர்வு முறையைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று GCSE பாடங்களுக்குச் சமமானதாகக் கருதப்படும்.

விருப்பப் பாடங்கள் (Optional Subjects): (இவை ஒவ்வொன்றும் தனித்தனி GCSE பாடங்கள்)

  1. மனிதநேயப் பாடங்கள் (Humanities): வரலாறு (History) அல்லது புவியியல் (Geography).
  2. கலை மற்றும் தொழில்நுட்பப் பாடங்கள்: ஓவியம் (Art), இசை (Music), நாடகம் (Drama) மற்றும் பல.
  3. கணினி அறிவியல் (Computer Science).
  4. தொழிற்பயிற்சிப் பாடங்கள் (Vocational Courses).
  5. மொழிப் பாடங்கள் (Modern or Ancient Languages): இதில் பண்டைய மொழிகள் (Ancient Languages) என்பது லத்தீன் (Latin), கிரேக்கம் (Classical Greek), விவிலிய எபிரேயம் (Biblical Hebrew) போன்றவை. இவை தற்போது மக்கள் புழக்கத்தில் இல்லாத செம்மொழிகள். நவீன மொழிகள் (Modern Languages) என்பது பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் போன்றவை; இம்மொழிகளுக்கு முறையான பாடத்திட்டங்கள் உள்ளன.

இவை தவிர வங்காளம், உருது, அரபி, ஜப்பானிய மொழி குஜராத்தி ஆகிய மொழிகள், அந்தந்தப் பகுதி மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசுப் பள்ளிகளிலேயே GCSE பாடங்களாக வழங்கப்படுகின்றன. இவற்றை ‘சமூக மொழிகள்’ (Community Languages) என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேலே கூறப்பட்ட மொழிகள் அனைத்தும் இங்கிலாந்து அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழிகளாகும். ஆனால், இந்தப் பட்டியலில் தமிழ் மொழி இன்னும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி இங்கிலாந்தில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை அறிவதற்கு முன்பு, அந்நாட்டின் கல்விப் பாடத்திட்டம் (National Curriculum) மற்றும் தேர்வு முறைகள் குறித்துச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

பாடத்திட்டமும் தேர்வு முறைகளும்: இங்கிலாந்து கல்வி முறையில் OCR, AQA, EdExcel, Pearson, Eduqas எனப் பல்வேறு தேர்வு வாரியங்கள் (Exam Boards) உள்ளன. இவற்றை Ofqual (Office of Qualifications and Examinations Regulation) எனும் அரசு அமைப்பு மேற்பார்வையிடுகிறது. இங்கிலாந்து அரசின் கல்வித் துறை (Department for Education – DfE), மாணவர்களுக்கான தேசியப் பாடத்திட்டத்தை (National Curriculum) வடிவமைக்கிறது.

தமிழ்நாட்டில் நாம் காணும் சமச்சீர் கல்வி, மெட்ரிக், CBSE, ICSE போன்ற பாடத்திட்ட முறைகளோடு இவற்றை ஓரளவிற்கு ஒப்பிடலாம். இருப்பினும், ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், இங்கிலாந்தில் ஒவ்வொரு பள்ளியும் ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு எந்தத் தேர்வு வாரியத்தின் (Exam Board) பாடத்திட்டத்தைப் பின்பற்றுவது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் பெற்றுள்ளன.

இரண்டாம் மொழியாகத் தமிழ் மொழி:

OCR என்பது Oxford, Cambridge and RSA என்பதன் சுருக்கமாகும். ஆக்ஸ்போர்டு மற்றும் ஆர்.எஸ்.ஏ (Royal Society of Arts) அமைப்புகள் பள்ளித் தேர்வு வாரியப் பணிகளிலிருந்து விலகியபோது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவற்றினை ஒருங்கிணைத்து உருவாக்கிய ஒரு வலுவான தேர்வு வாரியமே OCR ஆகும்.

ஆங்கிலம், கணக்கு, அறிவியல் போன்ற வழக்கமான பாடங்களைக் கடந்து, இவர்கள் மொழிகளுக்கெனப் பிரத்யேகமாக “Asset Languages” எனும் ஒரு தனித்துவமான கல்வித் திட்டத்தை உருவாக்கினர். இது ஒரு குறிப்பிட்ட மொழியில் அடிப்படை அறிவைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல; மாறாக, இங்கிலாந்தில் உள்ள எவரும் ஒரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்ற நோக்கிலேயே உருவாக்கப்பட்டது.

‘OCR Asset Languages’ திட்டமானது, தமிழ் மொழியைக் கற்பதில் ஒரு தெளிவான படிநிலையை உருவாக்கியிருந்தது. இதில் Grade 1 முதல் Grade 12 வரை எனப் பல்வேறு நிலைகள் (Stages) இருந்தன. மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்பப் படிப்படியாக முன்னேறிச் செல்லும் வகையில் இதன் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

இதன் இறுதித் தேர்வுகள், இங்கிலாந்தின் கல்வித் தரமான GCSE மற்றும் A Level நிலைகளுக்கு இணையானதாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் கற்கும் சூழலுக்கு மிகவும் உகந்ததாக அமைந்தது. ஏற்கனவே தமிழ்ச் சங்கங்கள் தனித்தனியே வகுப்புகளை நடத்தி வந்த நிலையில், இந்தத் தேர்வு முறை அவர்களுக்கு ஒரு முறையான இலக்கை நோக்கி நகரச் செய்தது. அதன் விளைவாக இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பகுதிகளில்  ‘Saturday Schools’ எனப்படும் வார இறுதித் தமிழ்ப் பள்ளிகள் அதிகம் வரத் தொடங்கின.

இருப்பினும், 2012ஆம் ஆண்டு, இங்கிலாந்து அரசின் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் வணிக ரீதியான பல்வேறு காரணங்களால், ‘OCR Asset Languages’ பாடத்திட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge Assessment) தொடர முடியாமல் ரத்து செய்தது. இது தமிழ் உள்ளிட்ட பல சிறுபான்மை மொழிகளுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.

Cambridge International: இது பன்னாட்டு அளவில் பள்ளிக் கல்விக்கென தொடங்கப்பட்டது. இதற்கென உருவாக்கப்பட்ட பாடத் திட்டம்தான் iGCSE. GCSE என்பது இங்கிலாந்திலுள்ள பள்ளிகளுக்கானது, iGCSE என்பது  இங்கிலாந்து அல்லாது வெளிதேசங்களுக்காகவும் இங்கிலாந்திலுள்ள தனியார்ப் பள்ளிகளுக்காகவும் உருவாக்கப்பட்டது. கேம்பிரிஜ் முறையைப் பயன்படுத்தும் பல்வேறு பன்னாட்டு பள்ளிகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், இலங்கை போன்ற தேசங்களிலுள்ள தமிழ்ப் பிள்ளைகளை மனதில் கொண்டு  Cambridge International தமிழ் பாடத்தை உருவாக்கியது.

GCSE யுடன் நேரடியாகத் தொடர்புள்ள ‘OCR Asset Languages’ திட்டம் கைவிடப்பட்ட பிறகு, Cambridge International iGCSE பாடத்தைப் பின்பற்றும் நிலைக்கு இங்கிலாந்து தமிழ்ப் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றே கூற வேண்டும். ஆக, 2012க்குப் பிறகு இங்கிலாந்திலுள்ள தமிழ்ப் பிள்ளைகள் iGCSE முறையிலுள்ள Cambridge O Level Tamil (3226) மற்றும் Cambridge International A Level Tamil – (9689) தேர்வுகளையே எழுதுகின்றனர்.

GCSE vs OCR Asset Languages vs Cambridge International iGCSE:

  • GCSE (General Certificate of Secondary Education): இங்கிலாந்து அரசுப் பள்ளிகளில் நேரடியாகக் கற்பிக்கப்படும் மொழிகள் (உதாரணம்: பிரஞ்சு, ஜெர்மன்). இதில் இந்திய மொழிகளான பஞ்சாபி, வங்காளி மற்றும் குஜராத்தியும் அடங்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு, சிறுபான்மை மொழிகளை நீக்கும் சூழல் ஏற்பட்டபோது, பஞ்சாபி சமூகத்தினர் திரண்டு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக, பஞ்சாபி மொழி மீண்டும் GCSE பாடத்திட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
  • GCSE ‘OCR Asset Languages’: 2012-ஆம் ஆண்டு வரை இங்கிலாந்திலுள்ள தமிழ்ப் பிள்ளைகள் இம்முறையின் வழியாகவே தமிழ் பயின்று வந்தனர்.  இதில் Grade படிநிலைகள் உண்டு.
  • Cambridge International iGCSE: 2012-க்குப் பிறகு, இங்கிலாந்திலுள்ள தமிழ்ப் பிள்ளைகள் தன்னார்வத்துடன் இயங்கும் சனிக்கிழமைப் பள்ளிகள் (தமிழ்ச் சங்கங்கள் நடத்தும் வார இறுதிப் பள்ளிகள்) வழியாகத் தமிழைப் பயின்று வருகின்றனர். தற்போது அவர்கள் கேம்பிரிட்ஜ் சர்வதேசத் தேர்வு முறையை (iGCSE) நோக்கியே நகர்ந்துள்ளனர். முக்கியமாக, இது பள்ளி மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

கேம்பிரிட்ஜ் சர்வதேசத் தேர்வு வாரியத்தைப் பொறுத்தவரை, தமிழுக்கென O Level மற்றும் A Level ஆகிய தேர்வு நிலைகள் மட்டுமே உள்ளன. இதற்கென இங்கிலாந்து கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேகமான பாடத்திட்டமோ (Curriculum) அல்லது அதிகாரப்பூர்வப் பாடப்புத்தகங்களோ (Textbooks) கிடையாது. மாணவர்கள் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்டே தேர்வுக்குத் தயாராக வேண்டியுள்ளது. இது பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தேர்வு முறையே என்றாலும், முறையான பாடத்திட்டம் இல்லாதது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

முன்னர் நடைமுறையில் இருந்த ‘OCR Asset Languages’ தேர்வு முறையில் காணப்பட்ட ‘Grade’ படிநிலைகளை (Levels) மீண்டும் கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டதே The British Tamil Examination Board (BTEB) ஆகும். இது ஒரு சமூக அடிப்படையிலான தேர்வு வாரியம் (Community-based exam board) ஆகும். இவர்களும் தமிழ் மொழிக்கெனத் தனியாகத் தேர்வுகளை நடத்துகின்றனர்.

இருப்பினும், இந்தத் தேர்வு மதிப்பெண்கள் இங்கிலாந்துப் பல்கலைக்கழக நுழைவிற்கான (UCAS) அதிகாரப்பூர்வத் தகுதியாக இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாக, BTEB பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், அதனுடன் இணைந்து கேம்பிரிட்ஜ் சர்வதேசத் தேர்வினையும் (Cambridge International O Level/iGCSE) எழுதுகின்றனர்.

அதேவேளையில், லண்டன் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட இங்கிலாந்தின் பல்வேறு தமிழ்ப் பள்ளிகள், நேரடியாகவே Cambridge International iGCSE தேர்வு முறைக்கு ஏற்பத் தங்களது சொந்தப் பாடத்திட்டங்களை உருவாக்கிப் பயிற்றுவிக்கின்றன. கேம்பிரிட்ஜ் தேர்வு வாரியத்திடம் தமிழுக்கெனத் தனிப் பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில், இந்தப் பள்ளிகள் மாணவர்களின் நலன் கருதித் தாங்களாகவே பிரத்யேகப் பாடப்புத்தகங்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

iGCSE / Cambridge International O Level தமிழ் எவ்வாறு உதவுகிறது?

பள்ளியில் GCSE படிப்பை முடிக்கும்போது கணக்கிடப்படும் EBacc (English Baccalaureate) தரவரிசைக்குத் தமிழ் மொழி மதிப்பெண் பெரிதும் உதவுகிறது. ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் (வரலாறு/புவியியல்) ஆகியவற்றுடன் ஒரு இரண்டாவது மொழியையும் (Second Language) உள்ளடக்கியதே இந்த ‘EBacc’ தொகுப்பாகும்.

இந்த இரண்டாவது மொழித் தகுதிக்குத் தமிழ் மொழித் தேர்வான Cambridge O Level Tamil (3226) மதிப்பெண்களைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்தச் சராசரி மதிப்பெண் (Average Point Score – APS) உயர்கிறது. இது கல்லூரிகளில் (Sixth Forms – 12 மற்றும் 13-ஆம் வகுப்புகள்) மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்கப் பெரும் உதவியாக அமைகிறது.

Cambridge International A-Level தமிழ் எவ்வாறு உதவுகிறது?

இங்கிலாந்தில் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்க (Undergraduate Degree), ஒரு மாணவர் 12 மற்றும் 13-ஆம் வகுப்புகளில் (Key Stage 5) பொதுவாக மூன்று அல்லது நான்கு A-Level பாடங்களில் தேர்வெழுத வேண்டும். தான் உயர்கல்வியில் பயிலப்போகும் துறைக்கு ஏற்ப (உதாரணமாக: பொறியியல் என்றால் கணக்கு, இயற்பியல், வேதியியல் , மருத்துவம் என்றால் இயற்பியல், உயிரியியல், வேதியியல்) இந்தப் பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இங்கு தமிழ் மொழிப் பாடம் மாணவர்களுக்குப் பின்வரும் நன்மையைத் தருகிறது:

UCAS புள்ளிகள் (UCAS Tariff Points): ஏ-லெவல் தமிழில் பெறும் மதிப்பெண்கள் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கான UCAS புள்ளிகளாகக் கணக்கிடப்படுகின்றன. ஒரு மாணவர் தனது முதன்மைப் பாடங்களில் சற்றே குறைந்த மதிப்பெண் பெற்றாலும், தமிழ் மொழியில் பெறும் உயர் மதிப்பெண் அவரது ஒட்டுமொத்த UCAS புள்ளிகளை உயர்த்தி, விரும்பிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க உதவும்.

நான்காவது பாடமாகத் தமிழ் (Fourth A-Level): பல மாணவர்கள் மூன்று கடினமான அறிவியல் அல்லது கணிதப் பாடங்களுடன், நான்காவது பாடமாகத் தமிழைத் தேர்வு செய்கின்றனர். உதாரணமாக: மருத்துவப் பல்கலைக்கழகங்கள் பொதுவாக மிக அதிகப்படியான மதிப்பெண்களை (உதாரணத்திற்கு 3 பாடங்களிலும் AAA) எதிர்பார்க்கும். ஒரு மாணவர் தனது முக்கியப் பாடங்களான வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியலில் (Biology) ஒருவேளை சற்றே குறைவான மதிப்பெண் பெற்றால், அவர் நான்காவதாக எடுத்திருக்கும் ஏ-லெவல் தமிழ் (A-Level Tamil) பாடத்தின் மதிப்பெண், அவரது ஒட்டுமொத்தப் புள்ளிகளைச் சமன் செய்ய உதவும்.

ஏ-லெவல் தமிழ் (A-Level Tamil) மதிப்பெண்களை ஏற்றுக்கொள்வது என்பது முற்றிலும் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் (Universities) தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. சில பல்கலைக்கழகங்கள், ஒரு மாணவர் தனது தாய்மொழியிலேயே (Native Language) தேர்வு எழுதுவதைச் சில கட்டுப்பாடுகளுடன் அணுகலாம். எனவே, மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன்பே தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தின் ‘Admissions Policy’ அல்லது சேர்க்கை விதிமுறைகளை (Entry Requirements) இணையதளத்தில் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

ஆக, தமிழ் மொழி கற்றல் என்பது இங்கிலாந்துப் பள்ளிகளில் நேரடியாக இடம்பெறாத போதும், பல்கலைக்கழகப் பிரவேசத்தில் ஒரு துணை சக்தியாக விளங்குகிறது என்று சொல்லலாம். ஆனால், இந்த விதிமுறைகள் எதிர்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

அதேபோல், ஒரு மாணவர் தமிழுக்கான சர்வதேசத் தேர்வை எழுத சுமார் 150 பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ₹15,000) வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. அதுமட்டுமல்லாது, வார இறுதி நாட்களில் இதற்காகத் தனியே நேரத்தை ஒதுக்கி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும் உழைப்பைச் செலுத்துகின்றனர். பள்ளி நடத்துவதற்கான இட வாடகை மற்றும் இதரச் செலவுகளைத் தமிழ்ச் சங்கங்கள் நன்கொடைகள் மற்றும் பள்ளிக் கட்டணங்கள் வழியாகவே ஈடு செய்கின்றன. ஒரு தமிழ்ச் சங்கத்தின் செயல்பாட்டில் பெரும்பான்மையான நேரம், குழந்தைகளை இத்தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதிலேயே செலவாகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழ் மொழி – இங்கிலாந்து பள்ளிக் கல்வியின் வாசலில் மட்டுமே நிற்கிறது என்ற நிலையே தற்போது உள்ளது எனலாம். இதுவே முறையான பள்ளிப் பாடத்திட்டத்தில் (GCSE) சேர்க்கப்பட்டால், அது தமிழுக்கும், இங்கிலாந்து தேசத்திற்குத் தமிழ் மக்கள் ஆற்றி வரும் சேவைகளுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும். அதுமட்டுமல்லாது, இது ஒரு பெரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுடன், காலத்திற்கேற்ப தமிழ் மொழி கற்பித்தல் முறையில் பல்வேறு நவீனப் பாய்ச்சல்களையும் உருவாக்கும்.

References:

  1. https://gareththomas.org.uk/petition-calling-for-a-gcse-in-tamil/
  2. https://www.gov.uk/government/news/community-languages-saved-to-ensure-diverse-curriculum-continues
  3. https://www.cambridgeinternational.org/
  4. www.bbc.co.uk
  5. https://rsremotetutoring.co.uk/gcse/ks3-ks4-curriculum/
  6. https://www.gov.uk/government/publications/english-baccalaureate-ebacc/english-baccalaureate-ebacc
  7. https://www.cambridgeassessment.org.uk/insights/why-we-cant-go-on-like-this-language-qualifications-in-the-uk/
  8. https://www.tes.com/magazine/archive/exclusive-ocr-exam-board-drops-modern-foreign-language-gcses-and-levels
  9. https://bteb.org.uk/
  10. https://ldpedagogy.york.ac.uk/resources
  11. https://www.tes.com/magazine/archive/exclusive-ocr-exam-board-drops-modern-foreign-language-gcses-and-levels
  12. https://ncle.ucl.ac.uk/focus-on-home-heritage-and-community-languages/
  13. https://www.crawleytamil.co.uk/

வேறு சிலக் குறிப்புகள்:

  1. தமிழ் மொழிக் கற்பித்தலைப் போலவே, தமிழ்க் கலைகளுக்கான கற்றல் குறித்தும் தனித்துவமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இங்கிலாந்தில் பியானோ போன்ற இசைக் கருவிகளைக் கற்பதற்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், நம் தமிழ் நிலம் சார்ந்த கலைகளுக்கும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே இங்கிலாந்தில் பரதம், மிருதங்கம் போன்ற இசை சார்ந்த வகுப்புகள் பெரும் அளவில் நடைபெற்று வருகின்றன.
  2. இக்கட்டுரை முழுமுழுக்க ஒரு தனிநபரின் தேடலால் தொகுக்கப்பட்டதாகும். இதில் ஏதேனும் பிழைகள் இருந்தாலோ அல்லது தகவல்கள் விடுபட்டிருந்தாலோ, அவற்றை மின்னஞ்சல் வாயிலாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  3. இந்தக் கட்டுரை நண்பர்கள் பலருடன் உரையாடியும் உள்ளேன், அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

பஞ்சு மிட்டாய் பிரபு

Leave a comment