அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சிறார் துப்பறியும் நாவல் – விஷ்ணுபுரம் சரவணன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அப்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஆள் வீட்டை விட்டு ஓடிவிடுவார். அப்படியே ஓரிரு மாதங்கள் சுற்றிவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார். அவரைக் காணோமே என்று யாரும் தேட மாட்டார்கள். நான்கூட ஒருமுறை வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடிவிட்டேன். ஆனால், அன்றைக்கு மாலையே திரும்பி வந்துவிட்டேன். என்னையும் யாரும் தேட வில்லை. இது சகஜமான ஒன்றுதான்” எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஒருமுறை மேடைப்பேச்சில் இதைச் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது

எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லும் காலம் என்பது அநேகமாக 1950-70 ஆண்டுகள் என நானாக வரையறுத்துக்கொண்டேன். ஏனெனில், அவர் பிறந்த வருடம் 1966 என்பதால்.

அந்தக் காலகட்டத்தில் துமிலன் எழுதிய ’சிஐடி சிறுவர்கள்’ நாவலை வாசித்தேன். ஓராண்டுக்கு முன் வாங்கி வைத்திருந்தேன். இப்போதுதான் படிக்க வாய்த்தது.

இந்த நாவலில் ஒரு சிறுவன் காணாமல் போய்விடுகிறான். அவன் தானாக வீட்டை விட்டு ஓடிவிட்டானாயாரேனும் கடத்தியிருக்கிறார்களாஎன்பதை நான்கு சிறுவர்கள் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள்.

இதுதான் கதை கரு. இப்போது இந்தக் கதையை எழுத நினைத்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். ஏனெனில், வீட்டில் ஒரு பையன் காணாமல் போனால் அலறி அடித்து தேடுவார்கள். ஆனால், இந்த நாவலில் அந்தச் சிறுவனின் அம்மா – அப்பா அழுகிறார்கள்; கவலைபடுகிறார்கள். ஆனால், காவல் துறையில் புகார் அளித்துத் தேடுவதில் பக்கத்து விட்டுக்காரரின் சொல்லும் சாதாரணமான காரணத்தைக் கேட்டு சுணக்கம் காட்டுகிறார்கள்.

அப்போதுதான் எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு இந்த இடத்தில் பொருந்துகிறது. ஏனெனில், அந்தப் பையன் தானாகவே வந்துவிடுவான் என்ற எண்ணம் நாவலின் பெற்றோருக்கு இருக்கிறது. நாவல் எழுதப்பட்டு முதல் பதிப்பு 1972 ஆம் ஆண்டு.

சரி, நாவல் குறித்து அறிமுகமாகச் சுருக்கமாகப் பார்க்கலாம். உமா, வேணு, குமார், கோபி எனும் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் நண்பர்கள். இவர்களுக்கு துப்பு துலக்கி ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது குறித்து ஆர்வம் வருகிறது.

யதேட்சையாக அப்போது இந்த நண்பர்களின் ஒருவனின் முகச்சாயலோடு ஒரு சிறுவன் அந்த ஊரில் காணாமல் போய்விடுகிறான். அவனைத் தேடும் பொறுப்பை இவர்களாகவே விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், எப்படி, என்ன செய்வது என்றெல்லாம் தெரியவில்லை. ஆயினும், அவர்களுக்குத் தெரிந்த விதத்தில் துப்பறியத் தொடங்குகிறார்கள்.

அந்த நண்பர்கள் குழுவுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு துப்பு மூலம், காணாமல் போன அந்தச் சிறுவனைத் தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுவன் கடத்தப்பட்டிருக்கான் என்று கண்டுபிடிக்கிறார்கள். அதைச் செய்தது யார் என்றும் கண்டறிந்து சிறுவனை மீட்கிறார்கள்.

கதை சுருக்கம் துப்பறியும் கதை என்பதைச் சொல்லியிருக்கும். ஆனால், கதையில் சாகசங்கள் ஏதும் நடப்பதில்லை. இயல்பு வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களே இடம்பெற்றிருக்கின்றன. அதுவே வாசிக்கையில் மிகுந்த சுவாரஸ்யத்தைத் தருகிறது. சாகசம் தெரிந்தவர்கள் எனில், அந்த புனைகுணத்தின் வழியே சிறுவனைக் கண்டுபிடித்து விடுவார்கள் என முன்முடிவுக்கு வந்துவிடுவோம். ஆனால், எல்லாச் சிறுவர்களும் இயல்பாகவே அந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் ஈர்க்கின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் துப்புகளிலிருந்து அவர்கள் ஒரு புதிரை விடுவிப்பதுபோல பல கோணங்களில் யோசிக்கிறார்கள். கிடைத்திருக்கும் ஒரு ’துப்பு’வைக் கொண்டு யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்அவர்களில் யாரை சந்தேகப்படுவது என்று கதையை நகர்த்தியிருப்பது அருமை.

நாவல் எழுதப்பட்ட சுமார் 50 ஆண்டுகள் கடந்தும், இப்போது படிக்கையில் அதன் நடை நமக்கு அந்நியமாகத் தோன்ற வில்லை. ஓரிரு சொற்கள் தற்போது பயன்பாட்டுக்கு இல்லாதவையாக இருந்தன. மற்றபடி, ரொம்ப இலகுவாக சிறார் படிக்கும் விதமாக எழுதப்பட்டிருப்பது வியப்பாக இருந்தது. எழுத்தாளரின் மொழியாளுமை குறித்த மதிப்பு பெருகியது.

துமிலன் எழுதிய இந்த நாவல் ரொம்பவே சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது படிக்கும்போதும்கூட விறுவிறுப்பாகச் செல்கிறது. சிறுவனைக் கண்டுபிடிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாமே என்றெல்லாம் படிக்கும்போது தோன்றவில்லை. இக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரே தொழில்நுட்பக் கருவி டெலிபோன் மட்டுமே. ஆனாலும் எந்த இடத்திலும் அலுப்புத் தட்ட வில்லை.

பூவண்ணன் எழுதிய குழந்தை இலக்கிய வரலாறு நூலில், தமிழில் சிறார் நாவல் என்பதே இதழ்களில் எழுதப்பட்ட தொடர்கதைகளின் தொகுப்பிலிருந்துதான் தொடங்குகிறது எனச் சொல்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்வாணன் போன்ற துப்பறியும் கதைகள் பெருகி விட்டிருந்தது. இந்த சிஐடி சிறுவர்கள் நாவலும் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்திருக்கும் என்றே தெரிகிறது.

இந்த நாவல் சுவாரஸ்யமான கதையாக வாசிப்பு சுவாரஸ்யம் தருகிறது என்பதைக் கடந்து, ரேவதியின் ’கொடிகாட்ட வந்தவன்’ போல நாவலைப் போக மிக முக்கியமான பிரதியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், ’கொடிகாட்ட வந்தவன்’ மிக முக்கியமான சமுக பிரச்னையைக் குறித்து எழுதப்பட்டது. அதன் தீவிரம் இன்றைக்கும் இருப்பதால் அந்நாவல் முக்கியமாகிறது. இது சுவையான வாசிப்பை மட்டுமே தரக்கூடியதுதான்.

கதை நடக்கும் இடம் சென்னைதான். அதுவும் மயிலாப்பூர் எனும் இப்போது மாநகரத்தின் முக்கிய இடமாகவும் சுற்றிலும் கட்டடங்களாகவும் மாறிவிட்ட இடம். ஆனால், கதையில் கிராமத்தைச் சொல்வதுபோலவே குறிப்பிடப்படுவது அப்போதைய சூழலை நாம் யூகிக்க வைக்கச் செய்கிறது.

இந்நாவலாசிரியர் துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. ஆனந்த விகடன், தினமணி கதிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். தமிழில் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களின் பட்டியலில் துமிலனின் பெயரையும் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அறிவியல் கதைகளையும், நாகஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையைப் பற்றிய நூல் என நிறைய எழுதியிருக்கிறார்.

டிகே. ராமச்சந்திரன், கே..தங்கவேலு உள்ளிட்டோர் நடித்த ’போன மச்சான் திரும்பி வந்தான்’ எனும் படம் 1954 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. அதன் கதை துமிலன் எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் படம் குறித்து ராண்டர்கை எழுதிய விமர்சனத்தில் துமிலன் எழுதிய புனர்ஜென்மம் எனும் கதையை மையமாக இயக்கப்பட்ட திரைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

துமிலன்’ எனும் புனைப்பெயருக்கு என்ன காரணம் என எங்கும் குறிப்பில்லை.

இந்த நாவலை இப்போது திரும்பவும் அச்சிட்டு சிறார்க்குப் படிக்கக் கொடுத்தால் அதே சுவாராஸ்யத்துடன் படிப்பார்களா? என்று கேள்வி எழுப்பினால்நாவல் எழுதப்பட்டிருக்கு மொழி நடை இப்போதைய சிறார் படிக்கும் விதத்தில் நேர்த்தியாகவும் சரளமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதே சுவாரஸ்யத்துடன் படிப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஏனெனில், முன்பே சொன்னதுபோல தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் கதை தொடங்கியதுமே பல சந்தேகங்கள் குழந்தைகளுக்கு எழும். அடுத்து அப்போது குழந்தை வளர்ப்பு விதம், பெற்றோரின் மனநிலை இவை குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும். அப்போது இந்த நாவலின் நம்பகத் தன்மை குறையலாம்.

எனவே, மறுபதிப்பில் இது வெளிவந்தால் வாசிக்கும் சிறார் இந்தக் கதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று யோசித்துப் படிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

சிஐடி சகோதரர்கள் நாவல் முதல் பதிப்பு 1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளிவந்திருக்கிறது. இதன் இரண்டாம் பதிப்பை 13 ஆண்டுகள் கழித்து 1985ஆம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அட்டை மூன்று வண்ணங்களிலும் உள்ளே ஓவியங்கள் இருவண்ணங்களிலும் வெளியிட்டிருக்கிறார்கள். ஓவியங்கள் ஆர்.எஸ்.மணி வரைந்திருக்கிறார்.

Leave a comment