திட்டங்களில் எல்லாம் பெரிய திட்டம் குழந்தைகளை நன்முறையில் உருவாக்கும் திட்டமே. இத்திட்டத்தை நிறைவேற்றும் சீரிய பணியில் குழந்தை இலக்கியத்திற்கு முக்கியமான ஒரு பங்கு உண்டு.
“ஓவ்வொரு நல்ல புத்தகத்தின் பின்னாலும் ஒரு நல்ல ஆசிரியர் மறைந்து நிற்கிறார்!” என்பார்கள். வகுப்பிலே ஆசிரியர் கூறும் அறிவுரையைக்காட்டிலும், வீட்டிலே பெற்றோர் கூறும் நல்லுரையைக்காட்டிலும், இப்படி மறைந்து நின்று பேசும் ஆசிரியரின் இனிய உரையையே குழந்தைகள் விரும்பி ஏற்கின்றனர். பள்ளிக்கூடங்களும், பள்ளி ஆசிரியர்களும் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆயினும் பாடநூல்களல்லாத பொது நூல்களை எவ்வளவு தூரம் குழந்தைகள் விரும்பிப் படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்கால அறிவு வளர்ச்சியும் ஒழுக்க வளர்ச்சியும் அமைகின்றன.
சிறிய வயதில் படிக்கும் பழக்கம் உடையவர்களே, பெரியவர்களான பிறகும் தொடர்ந்து புத்தகங்களைப் படித்து வருகிறார்கள்; சிறிய வயதில் பள்ளிப்புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களைப் படித்தே அறியாதவர்கள் பெரியவர்களானதும் புத்தகங்களைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. புத்தக உலகுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலை. இந்த நிலை மாறவேண்டின் சிறுவருக்கேற்ற சிறந்த நூல்கள் நம் நாட்டில் நிறைய வெளிவரவேண்டும்.
பெரியவர்களுக்கான தமிழ்ப் பத்திரிகையே 1831ஆம் ஆண்டில் தான் வெளிவந்ததாகத் தெரிகிறது. பெரியவர்களுக்கான பத்திரிகையை ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகளில், அதாவது 1840ஆம் ஆண்டில் குழந்தைப் பத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்கப் பெற்றது. “பாலதீபிகை” என்பதே அதன் பெயர், நாகர்கோயிலில் இருந்த கிறிஸ்தவப் பிரசார சபையார்தாம் அதை வெளியிட்டனர். மூன்று மாதத்திற்கு ஒரு மூறையாக வெளிவந்து கொண்டிருந்த அந்தப் பத்திரிகை சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. “பாலதீபிகை” வெளிவந்து கொண்டிருந்த போதே சிறுவருக்காக மற்றொரு பத்திரிகையும் உதயமாயிற்று.
“சிறுபிள்ளையின் நேசத்தோழன்” என்ற பெயருடன் அதைப் பாளையங்கோட்டைக் கிறிஸ்தவ சங்கத்தார் வெளியிட்டு வந்தார்கள். பிறகு “பாலியர்நேசன்” என்றொரு பத்திரிகை 1889-ல் வெளிவரலானது. அது நம் நாட்டிலிருந்து வெளிவரவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து தான் வெளிவந்தது, அதையும் கிறிஸ்தவர்களே நடத்தி வந்தார்கள். ஆனால், எக்காரணங்களாலோ அப்பத்திரிகைகள் நீடித்து நிற்கவில்லை. 1891-ல் மிண்டும் ஒரு புது முயற்சி நடைபெற்றது. சிறுவருக்காகத் தனிப்பத்திரிகை ஆரம்பிக்காமல், பெரியவர் பத்திரிகையிலே சிறுவர் பகுதி ஓன்றை ஆரம்பித்ததுதான் அந்தப் புது முயற்சி. “விவேக சிந்தாமணி” என்று ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார் ஸி. வி. சுவாமிநாதய்யர் என்னும் பெரியார். அந்தப் பத்திரிகையில் சிறுவருக்கேற்ற குட்டிக்கதைகள் பலவற்றை வெளியிட்டு வந்தார். விவேக சிந்தாமணியைப் போலவே “ஜன விநோதினி” என்ற பத்திரிகையும் அக்காலத்தில் சிறுவர் கதைகளை வெளியிட்டுவந்தது.
“ஐன விநோதினி” பத்திரிகையில் வெளிவந்த சிறுவர் கதைகளைச் சிறுசிறு புத்தகங்களாகச் சென்னைப் பள்ளிக்கூடப் புஸ்தகசங்கத்தார் வெளியிட்டு வந்தார்கள். “ஒரு ரூபாய் சொல்லிய தன் வரலாறு”, “சந்நியாசி கதை”, “நியாயாதிகாரியின் கதை” இப்படிப் பல கதைப் புத்தகங்கள் வெளிவந்தன. ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் ஒரு தம்படி!. வெறும் கதைகளோடு அவர்கள் நிற்கவில்லை. “நீராவியின் வல்லமையை முதலில் அறிந்த கதை”, “மரத்தின் பழம் ஏன் கீழே விழுகிறெது?”, வரி போடுவது ஏன்?” இந்த மாதிரிப் பெயர்களில் பல பொது அறிவுப் புத்தகங்களையும் வெளியிட்டு வந்திருக்கறார்கள். இவை மட்டுமா? ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ, ஹாம்லெட், வெனிஸ் வர்த்தசன் முதலிய நாடகக்கதைகளை யெல்லாம் சிறுவருக்கேற்ற முறையில் அப்போதே வெளியிட்டிருக்கிறார்கள். “தக்காணத்துப் பூர்வ கதைகள்” என்ற புத் தகம்கூட அப்போதுவெளிவந்ததுதான்!
விவேக சிந்தாமணி, ஜனவிநோதினி-முதலிய பத்திரிகைகளில் சிறுவர் பகுதிகளை வெளியிட்டது
போலவே, 1917ஆம் ஆண்டில். ஆரம்பமான “தமிழர் நேசன்” பத்திரிகையிலும் பாலர் பகுதி ஆரம்பமானது. அதன் ஆசிரியரான அ.மாதவய்யா குழந்தைகளுக்காக வாய்மொழியாக வழங்கிவந்த கதைகளையெல்லாம் தொடர்ந்து வெளியிட்டுவத்தார். அவரது முயற்சியால் “பால விநோதக்கதைகள்” என்னும் புத்தகம் வெளிவந்தது. 1932ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற “கலைமகள்” பத்திரிகையிலும் சிறுவர் பகுதி இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து “ஆனந்த விகடன்”, “கல்கி” போன்ற பெரியவர்களுக்கான பத்திரிகைகளிலும் குழத்தைகளுக்கென ஒரு பகுதி ஒதுக்கப்பெற்றது.
இந்த நூற்றாண்டில் சிறுவர் பத்திரிகை ஆரம்பிக்கும் முயற்சியில முதல்முதலாக ஈடுபட்டவர் காலஞ்சென்ற வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் தான் என்று தெரிகிறது. அவர் 1918ஆம் ஆண்டில் ஆரம்பித்த “பால விநோதினி” சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்து நல்ல முறையிலே வெளிவந்தது. ஆயினும், இக்காலத்தைப் போல அப்போது அதிகமாக அது விளம்பரமாகவில்லை. இந்த முயற்சிக்கு அடுத்தபடியாக 1924-ல் “பொக்கிஷபரணி” என்ற பெயரில் சிறுவர் பத்திரிகை ஒன்று ஆரம்பமானது. கிறிஸ்தியன் லிட்டரேச்சர் சொஸைட்டியார்தான் அதை ஆரம்பித்தனர். காலம் சென்ற பி.ஆர். ராஜசூடாமணி அவர்கள் இதன் ஆசிரியராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வந்தார். இப்போது இது “வித்யாதனம்”” என்ற பெயரில் பெங்களூரிலிருந்து வெளிவருகிறது.
1942ஆம் ஆண்டு திருச்சி ஜில்லாவில் உள்ள இராயவரம் என்ற ஊரில் “பாப்பா மலர்” என்ற பெயருடன் ஒரு பத்திரிகை தோன்றியது. பின்னர், பல குழந்தைப் பத்திரிகைகள் தோன்றுவதற்கு அது வழிகாட்டியாய் அமைந்தது. 1947-க்கும் 1958-க்கும் இடையே ஏறத்தாழ 40 குழந்தைப் பத்திரிகைகள் தோன்றின. தக்க ஆதரவின்மையால், “அம்புலிமாமா” “வித்யாதனம்” என்ற இரு பத்திரிகைகளைத் தவிர மற்றவையெல்லாம் மறைந்துவிட்டன. இன்று குழந்தைகளுக்காக வெளிவரும் பத்திரிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
குழந்தைகளுக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வங்கொண்ட எழுத்தாளர்கள் தற்போது 400-க்கு மேல் இருக்கிருறார்கள். 1972-ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? என்ற நூலில் 370 எழுத்தாளர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இவர்களில் பெண் எழுத்தாளர்கள் 15, கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களும் உண்டு, அவ்வப்போது எழுதிவரும் எழுதாளர்களும் உண்டு சில ஆண்டுகளாக எதுவுமே எழுதாத எழுத்தாளர்களும் உண்டு, குழந்தைப் பத்திரிகைகள் மிக்க குறைவாக இருப்பதால், எழுதத்துடிக்கும் இவர்களில் பலருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. நல்ல குழந்தை இலக்கியம் தோன்றுதற்கு இது பெரும் தடையாக உள்ளது. பத்திரிகைகள் பெருகினால்தான், பலரது மறைந்து கடக்கும் திறமை வெளிப்படவும், திறமையுள்ளோரை முழுமையாகப் பயன்படுத்திச் கொள்ளவும் முடியும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கான பலபுத்தகங்கள் மிகச் இறிய அளவிலே
கைகளிலும் பைகளிலும் அடங்கக்கூடிய அளவில் கவர்ச்சியின் றி வெளிவந்தன. அரையணா, ஓரணா அதிகமாகப் போனால் எட்டணா விலையில் வெற்றிலை பாக்குக் கடைகளில் விற்பனையாக வந்த அவற்றைப் புத்தகங்கள் எனக்கெளரவமாகக் கூற முடியாவிட்டாலும், அவை ஓர் உண்மையை உணர்த்தின. குழந்தைகள் தங்களுக்காகவே வெளிவந்த அப்புத்தகங்களைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கப் படித்து மகிழ்ந்தனர்.
கடந்த 25 ஆண்டுகளில், பாட நூல்களல்லாத சுமார் 1700 குழந்தை நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 40 சதவிகிதம் நூல்கள் படங்களுடனும் நேர்த்தியான அச்சு அமைப் புடனும் விளங்குகின்றன. மொத்த நூல்களில் சிறுகதை, நாவல், நாடக நூல்கள் 60 சத விகிதமும், கவிதை நூல்கள் 10 சதவிகிதமும், அறிவியல், வாழ்க்கை வரலாறு, பொழுதுபோக்கு, விளையாட்டு நூல்கள் 30 சதவிகிதமும் இருக்கலாம், குழந்தைகளுக்காகக் கதை எழுதவேண்டும், கவிதை எழுத வேண்டும், அறிவியல் நூல்களை ஆக்கவேண்டும், பிறமொழிகளிலுள்ள நல்ல நூல்களை மொழிபெயர்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் பல எழுத்தாளர்கள் முன் வந்தனர். பதிப்பாளர்களும் குழந்தை நூல்களை வெளியிடுவதில் அக்கறை காட்டினர். தென்மொழிப் புத்தக டிரஸ்ட், டில்லியிலுள்ள தேசியப் புத்தக டிரஸ்ட், குழந்தைகள் புத்தக டிரஸ்ட் போன்ற நிறுவனங்களும் பிறமொழிப் புத்தகங்களுடன் தமிழ்ப் புத்தகங்களையும் வெளியிட்டு வருகின்றன. வானொலி நிலையங்களும் அண்மையில் சென்னையில் தோன்றிய தொலைக்காட்சி நிலையமும் குழந்தை இலக்கியம் வளரப் பலவழிகளிலும் உதவி வருகின்றன. இந்திய அரசும், தமிழக அரசும், குழந்தை எழுத்தாளர் சங்கமும், குழந்தைகளுக்கு எழுதுவோருக்குப். போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி வருகின்றன. இவையாவும் மேன்மேலும் குழ்ந்தை இலக்கியம் உருவகி வருகின்றன என்பதில் ஐயமில்லை.
துவக்க காலத்தில் குழந்தைகளுக்கு எழுதுவதில் சிலர் அலட்சியமாக கருதி வந்தனர்; கேலியும் கிண்டலும் கூடச் செய்தனர். இந்த நிலை தமிழகத்தில் மட்டுமன்று உலக முழுவதுமே இருத்து வந்திருக்கிறது. ஆனால், அந்நிலை இன்று அடியோடு மாறிவிட்டது. பெரியவர்களுக்காக எழுதி புகழ் பெற்ற பாரதியாரும் கவிமணியும், பாரதிதாசனும், இ.ஜ.ர.வும், ராஜாஜியும் குழந்தைகளுக்கு ஆர்வமோடு எழுதமுன்வந்தது, குழந்தை இலக்கயத்திற்குப் பெரிதும் ஆக்கம் தந்தது. தமிழில் குழந்தை இலக்கியம் படைக்கும் முயற்சியில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலுள்ள கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஈடுபட்டு வந்தனர்; தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஈழநாட்டில் ௧. சோமசுந்தரப் புலவர் போன்றோர் 40 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகள் விரும்பும் பல பாடல்களை இயற்றி யுள்ளனர் என்பது 1935-ஆம் ஆண்டு வெளிவந்த “பிள்ளைப்பாட்டு” என்ற தொகுப்பு நூலிலிருந்து தெரிகிறது.
கே.எஸ்- அருணந்திஎன்னும் கல்வித்துறை அலுவலர் பதிப்பித்த இந்நூலில் 12 கவிஞர்கள் பாடிய 74 பாடல்கள் உள்ளன. இலங்கையிலுள்ள மட்டக்களப்பிலிருந்து 1965ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பு நூல் வந்தது. திமிலை மகாலிங்கம் பதிப்பித்த “கனியமுது” என்னும் இத்தொகுதியில் 41 கவிஞர்களின் குழந்தைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கவிதை தொகுப்பு நூல் வெளியிடும் முயற்சி தமிழகத்திலும் அவ்வபோது நடந்துள்ளது கவிமணி அவரது நண்பர்களான கே.என் எஸ்.முத்துசுவாமி, பண்டிட் எஸ். முத்துசுவாமி, டி.லெட்சுமணபிள்ளை ஆகிய நால்வரும் எழுதிய 15 பாடல்கள் சிறுபாமாலை என்னும் பெயரில் சிறுநூலாகத் திருவனத்தபுரடத்திலிருந்து வெளிகவந்திருக்கிறது, இந்தாலில் அச்சிட்ட ஆண்டு குறிப்பிட்ப்படவில்லையாயினும் இது முன்குறிபிட்ட பிள்ளை பாட்டு நூலுக்கு முன்பு வெளிவந்ததாகவே தோன்றுகிறது. 1941-ல். புதுகோட்டையிலிருந்து நீலகண்டனைப் பதிப்பாசிரியராய்க் கொண்டு மூன்று சிறுவர் பாடல் தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. இந்நூல்களைப் தற்போது எங்குமே காணமுடியவில்லை நூல்களின் பெயர்களும் பதிப்பாசிரியருக்கே நினைவில்லை!
1970-ஆம் ஆண்டு பூவண்ணன் தொகுத்து,சென்னை வானொலி சிறுவர் சங்கப்பேரவை வெளியிட்ட “முத்துக்குவியல்” நூலில் 63 கவிஞர்களின் 130 பாடல்களைச் காணலாம். சென்னை வானொலியில் குழந்தைகளுக்காக எழுதும் கவிஞர்களைப்பற்றிக் கூறி அவர்களது பாடல்களையும் தொடர்ந்து பல வாரங்கள் ஒலி பரப்பி வந்தார் பூவண்ணன். பின்னர், சிறுவா் இலக்கயச் செல்வர்கள் என்ற பெயரில் இப் பாடல்களை அவற்றை இயற்றிய கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புடன் வெளியிட்டுள்ளார். இதன் பிறகு 1977ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறுவருக்காக 60 கவிஞர்கள் இயற்றிய கதைப் பாடல்களை, “சிறுவர் கதைப் பாடல்கள்” என்னும் நூலாக வெளியிட்டது.
புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த “பாலர்மலர்” இதழில் இடம் பெற்ற சில கதைகளைத் தொகுத்து 1946ஆம் ஆண்டு “பாலர் கதைகள்” என்ற பெயரிலும், பிறகு “நிமிஷக்கதைகள்” என்ற பெயரிலும் வெளியிட்டார், சிறுவருக்காகப் பல நல்ல நூல்களை வெளியிட்ட வெ. சுப, நடேசன் அதன் பிறகு சில கதைத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இத் தொகுப்பு நூல்கள், குழந்தை இலக்கியம் எவ்வெவ்வகையில் வளர்ச்சி பெற்று வருகின்றது என்பதைப் பல கோணங்களிலிருந்து நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.