நான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தையும் கண்ணன் ஐயாவிடம் காட்டுவது வழக்கம். சின்ன ஓவியமோ, பெரிய ஓவியமோ எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக எடுத்துச் சென்று ஐயாவிடம் காட்டிவிட வேண்டும் என்று விரும்புவேன். அதை வாங்கிப் பார்க்கும் ஐயாவின் கண்கள் மலர்ந்து விரிவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கும். “நல்லா வரைஞ்சிருக்கே. ரொம்ப புடிச்சிருக்குது. நல்ல பையன்டா நீ” என்று நிறுத்தி நிறுத்திச் சொன்னபடியே முதுகில் தட்டிக் கொடுப்பார் ஐயா.
அந்தத் தட்டுதலுக்கும் பாராட்டுக்கும் மனம் ஏங்காத நாளே இல்லை. எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த அக்காவுக்காக ஒவ்வொரு வாரமும் நான்தான் கடைக்குச் சென்று ராணியும் ஆனந்தவிகடனும் வாங்கி வந்து கொடுப்பேன். அவற்றில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும் படங்களும் இருக்கும். அக்கா படித்துமுடித்த பழைய புத்தகங்களை வாங்கிவந்து வைத்துக்கொண்டு, அதில் உள்ள படங்களை நேரம் போவது தெரியாமல் அலுப்பே இல்லாமல் பார்த்தபடி இருப்பேன்.
எனக்கு கோபுலுவின் படங்கள் மிகவும் பிடிக்கும். பார்த்து வரைவதற்கு அவற்றைத்தான் தேர்ந்தெடுப்பேன். சில சமயங்களில் கைக்குக் கிடைக்கும் சினிமா நோட்டீஸ்களில் அச்சாகியிருக்கும் படங்களையும் பார்த்து வரைவேன். ஒருமுறை இருமுனைகளிலும் தண்ணீர்ப்பானைகள் தொங்கிக்கொண்டிருக்கும் மூங்கில் கழியைத் தோளில் சுமந்தபடி நடந்துபோகும் ஒரு முதியவரின் ஓவியத்தைப் பார்த்தேன். பிடித்திருந்ததால் உடனே ஒரு தாளையெடுத்து வரைந்துவிட்டேன். மறுநாள் அதை ஐயாவிடம் காட்டினேன். ஐயா அந்த ஓவியத்தைப் பல கோணங்களில் திருப்பித்திருப்பிப் பார்த்தார். பார்த்தபடியே “ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என்று இரண்டுமூன்று முறை சொன்னார். பிறகு முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு “இந்தப் படத்தை நான் வச்சிக்கட்டுமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியில் பறப்பதுபோல இருந்தது. உடனே ”தாராளமா எடுத்துக்குங்க ஐயா” என்றேன். ”உனக்கு வேணாமா?” என்று ஐயத்தோடு மறுபடியும் கேட்டார் ஐயா. “நான் இன்னொன்னு வரைஞ்சிக்குவேன் ஐயா. நீங்க எடுத்துக்குங்க” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.
அன்று வகுப்பைவிட்டுப் புறப்படும்போது ஐயா ”உனக்கு நான் ஒரு பரிசு கொடுக்கப்போறேன்” என்று சொன்னார். நான் வியப்போடு ஐயாவையே நிமிர்ந்து பார்த்தேன். அவர் புன்னகைத்தவாறே “இங்க இல்ல. வர ஞாயித்துக்கெழம வீட்டுக்கு வா. அப்ப தரேன்” என்றார். ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ”என்ன தரப்போறீங்க ஐயா?” என்று அவரைத் தொடர்ந்து சென்று கேட்டேன். “வீட்டுக்கு வா, வந்து நீயே பாரு” என்று தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஞாயிறு வரும்வரை மனம் முழுதும் ஐயா கொடுக்கப்போகிற பரிசின் மீதே படிந்திருந்தது. இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என நூறுவிதமான விடைகளை நினைத்து நினைத்து அழித்தபடி பொழுதை ஓட்டினேன். ஞாயிறு காலையில் பத்துமணி வாக்கில் ஐயாவின் வீட்டுக்குச் சென்றேன். திண்ணையில் உட்கார்ந்து ஐயா செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்று “வணக்கம் ஐயா” என்றேன். ஐயா செய்தித்தாளிலிருந்து முகம் திருப்பி “நீயா, வா, வா” என்று வரவேற்றார். என்னையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். உள்ளே அவர் துணைவியாரும் பிள்ளைகளும் இருந்தார்கள். “நீ பார்த்தாயே, அந்தப் படத்தை வரைந்தவன் இவன்தான். பெரிய ஆள். என் மாணவன்” என்று அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு தட்டில் முறுக்குகளை வைத்து எடுத்துவந்து கொடுத்தார்.
முறுக்கு தின்றபடி நான் கூடத்தைச் சுற்றிப் பார்த்தேன். சுவரையொட்டி மரப்பலகைகளால் செய்யபட்ட தாங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் நூலகத்தில் இருப்பதுபோல வரிசையாக புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஒரு வீட்டில் அவ்வளவு புத்தகங்களைப் பார்ப்பது அதுதான் முதல் முறை. வாய்பிளந்தபடி நான் அதையே பார்த்தபடி இருந்தேன். இவ்வளவு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தால் எத்தனை நாளுக்குள் படித்துமுடிக்கலாம் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
“இவ்வளவும் நீங்க படித்த புத்தகங்களா ஐயா?” என்று மெதுவாக அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.
அவர் சிரித்தபடியே “ம்” என்று தலையாட்டினார்.
“நீங்க தினம்தினம் சொல்ற கதைகளெல்லாம் இதுல படிச்சதுதானா ஐயா?” என்று கேட்டேன்.
”ஆமாம்” என்றபடி மறுபடியும் தலையசைத்துக்கொண்டார் ஐயா.
தாங்கியின் ஓர் அடுக்கிலிருந்து ஐயா ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து “பிரிச்சி பாரு” என்றார். பல புத்தகங்களை ஒன்றாகத் தைத்து பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் அது. நான் முதல் பக்கத்தைப் புரட்டினேன். புத்தகத்தின் பெயர் கண்ணன். “அந்தக் காலத்துல நம்ம பிள்ளைகளுக்காக வாங்கிக் கொடுத்தது” என்றார் ஐயா. நான் வேகவேகமாக பக்கங்களைப் புரட்டினேன். நிறைய படங்கள். சின்னச்சின்ன கதைகள். துணுக்குச்செய்திகள். பாடல்கள். பார்க்கப்பார்க்க பரவசமாக இருந்தது. அம்புலிமாமாவும் அணிலும் கொடுத்த ஆச்சரியங்களைவிட கண்ணன் அதிக ஆச்சரியத்தை ஊட்டியது. அடுக்கிலிருந்து இன்னும் சில பைண்டிங் புத்தகங்களை எடுத்து என்னருகில் வைத்தார். “இதையெல்லாம் கூட பாரு. எல்லாமேசிறுவர்களுக்காக வந்த பத்திரிகைகள்” என்றார். எல்லாவற்றையும் ஐயா எனக்குக் கொடுத்துவிட மாட்டாரா என்று ஒருகணம் ஏக்கம் எழுந்து தொண்டையை அடைத்தது. ஒவ்வொரு புத்தகத்தையும் பிரித்து பெயரைப் படித்தேன். டமாரம், மிட்டாய், கரும்பு, பாலர் மலர், தம்பி, கோமாளி என ஒவ்வொரு பெயரும் புதுமையாக இருந்தது.
டமாரம் என்னும் பெயர் புதுமையாகவும் விசித்திரமாகவும் இருந்தது. படிக்கும்போதே சிரிப்பு வந்தது. ”என்ன ஐயா, ஒரு பத்திரிகைக்கு டமாரம்னு கூடவா பேரு வைப்பாங்க?” என்று கேட்டேன். ”சின்ன பிள்ளைகள் பேச்சுவழக்குல இருக்கக்கூடிய ஒரு சொல்தானே அது? இப்படி ஒரு பேரப் பார்த்ததும் சட்டுனு ஒரு ஈர்ப்பு வருது இல்லையா? அதுக்காகத்தான் அப்படி ஒரு பேரு” என்று புன்னகைத்தார் ஐயா.
ஒவ்வொரு இதழும் வண்ணவண்ண அட்டைகளோடும் நல்ல நல்ல படங்களும் கண்ணைக் கவரும் விதத்தில் எடுப்பாக இருந்தது. அவற்றையெல்லாம் நான் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன். எதிர்காலத்தில் ஐயாவைப்போலவே புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு நாமும் பைண்டிங் செய்து பாதுகாக்கவேண்டும் என்று அப்போது மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். பரிசு தரப்போவதாக ஐயா சொன்னது திடீரென நினைவுக்கு வர ஒருவேளை இவ்வளவு புத்தகங்களையும் எனக்குக் கொடுப்பதற்காகத்தான் அழைத்திருப்பாரோ என நினைத்தபோது மகிழ்ச்சிவெள்லம் கரைபுரண்டோடியது. ஆனால் அக்கணமே எனக்கு அது பேராசை என்று தோன்றியது. அதனால், அந்த நினைப்பை உடனே கலைத்துவிட்டேன். கை புத்தகத்தைப் புரட்டியபடி இருக்க, கண் ஒவ்வொரு பக்கத்தையும் மேலோட்டமாகப் பார்த்தபடி இருக்க, மனம் மட்டும் என்ன பரிசு என்ன பரிசு என்று கற்பனையில் பறந்தபடி இருந்தது. வண்ணப்பென்சில்கள், பேனா, படம் போடும் நோட்டு, பென்சில் பெட்டி, தேர்வெழுதும் அட்டை, புத்தகப்பை, திருக்குறள் என ஒவ்வொரு சித்திரமாக நெஞ்சில் எழுவதும் கலைந்து விலகுவதுமாக இருந்தது.
மேசையின் இழுப்பறையைத் திறந்து ஐயா இரண்டு சிறு புத்தகங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். இரண்டுமே பழைய கண்ணன் இதழ்கள். ”பைண்டிங் செய்யும்போது சேர்க்க முடியாம விடுபட்டுப்போன புத்தகங்கள். இதுல நல்ல நல்ல கதைகள் இருக்குது. நீயே வச்சிக்கோ. இதுதான் நான் கொடுக்கறதா சொன்ன பரிசு” என்றார் ஐயா. பைண்டிங் புத்தகங்களை வைத்துவிட்டு, அவற்றை வாங்கி திருப்பித்திருப்பிப் பார்த்தேன். புத்தக அடுக்குகளை ஒருமுறை நான் ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொண்டதுபோல ஐயா என்னை நெருங்கி தோளில் தட்டி “லீவ் நாள்ல எப்ப வேணும்ன்னாலும் நீ வீட்டுக்கு வரலாம். உனக்கு புடிச்ச புத்தகத்தை எடுத்து படிச்சிட்டு போவலாம்” என்று சொன்னார். அந்த அளவுக்கு அவர் சொன்னதே புதையல் எடுக்க வழி சொன்னதுபோல இருந்தது. “சரி ஐயா” என்று தலையாட்டியபடி விடைபெற்றுக்கொண்டு புத்தகங்களோடு வெளியே வந்தேன்.