வீட்டுக் கல்வி பற்றி தொடர் பதிவுகள் என்று அறிவித்ததிலிருந்தே முகப்புத்தகங்கள், வாட்ஸ் ஆப் குழுவில் பல் வேறு விவாதங்கள் கிளம்பியது. எழுத துவங்குவதற்கு முன்பே விவாதங்கள் கிளம்பி இருப்பது எழுதுவதற்காக மிகப் பெரிய உற்சாகதத்தையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முதலில் எங்கள் கதை சொல்லிகள் குழுவில் விவாதங்கள் ஆரம்பித்தது. அந்தக் குழு மிக ஆழமான சமூக அக்கறை உள்ள மனிதர்களின் குழு. எதிலும் அடுத்த தலைமுறை நோக்கி பயணிக்கும் குழு. முன்பு கதை, தமிழ் என்று மட்டும் செயல்பட்டு இப்பொழது குழந்தை வளர்ப்பு, பெற்றோர்கள் என்று அடுத்த தளம் நோக்கி அக்கறையுடன் பயணிக்கிறது. அங்கு ஒரு கருத்து விவாதிக்கப்பட்டால் அதிக ஆழத்துடன் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு.
அதேப் போல் சமீபத்தில்(செப். 2018) நடந்த நீயா நானா நிகழ்வு வீட்டுக் கல்வி பற்றி பேசியது. ஆரம்பத்தில் அவர்களின் சமூக அக்கறை எனக்கு மகிழ்வு அளித்தது. ஆனால் நிகழ்வு பள்ளிக் கல்வியை ஆதரப்பதற்காகவே எடுக்கப்பட்டதாக இருந்தது. வீட்டுக் கல்வி மோசம் என்று எடுத்துக்கொண்டு வீட்டுக் கல்வி பற்றி விவரம் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு தராமல் ஏதோ ஏதோ கருத்துக்கு எதிராய் நிகழ்வை கொண்டு சென்றது மனதில் தவறாய் பட்டது.
அந்த நிகழ்வை பார்த்த பின்னர் வீட்டுக் கல்வி பற்றி முடிவெடுக்க காத்திருக்கும் நண்பர்கள் கைவிடும் முடிவை எடுப்பதற்கே தள்ளப்படுவார்கள் என்பது எனது கருத்து. யார் யாரையோ அமர வைத்து நிரப்பி இன்னும் நீர்க்க செய்தார்கள். மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகளுக்கு ஹோம் ஸ்கூலிங் செய்கிறேன் என்றார்கள்.அவர்களுக்கு பள்ளியே அதிகம் தேவைப்படாத வயதில் என்ன விதமாக அவர்கள் தன் கருத்தை தெரிவிக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை, நீயா நானா நிகழ்வு “வீட்டுக்கல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது..அதற்கான இடம் நம் சமூகத்தில் இல்லை” என்று மூட்டைக்கட்டி வைத்தது போல இருந்தது.
நீயா நானா நிகழ்வு அனுபவங்களும், எங்களது வாட்ஸ் ஆப் குழுவில், முகப்புத்தகத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தையும் தொகுத்து அதற்கான விடையை தேடுவதே இந்தத் தொடர் பதிவுகள். என்னிடம் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு மட்டும் தற்பொழுது வீட்டுக் கல்வி குறித்து ஓர் அறிமுகம் தரும் நோக்கத்துடன் பதில் தருகிறேன்.
பள்ளிக் கல்வியை வீட்டுக்கு மாற்றிவிட முடியுமா? இது முதல் கேள்வி..
கண்டிப்பாக முடியாது. அது வேறு, இது வேறு. அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உண்டு. இங்கு இல்லை.
வீட்டுக் கல்வி என்பது இப்போது புதிதாய் தோன்றியதா ?
இங்கு பல மாற்றுப்பள்ளிகளை கவனித்து உள்ளேன். இதான் கல்வி என்று 150 ஆண்டுகளுக்கு முன் வரையறுத்து வைத்தார்கள். அப்பொழுது தொழிற் புரட்சி நடந்த நேரம். சுதந்திரமாய் கிராமத்தில் இருந்தவர்களை, குடியில் வாழ்ந்தவர்களை தந்திரமாய் சுரங்கம், தேயிலை , கரும்பு தோட்டம் வேலை என்று ஒரு வசதியற்ற குடியிருப்பு நோக்கி குழந்தைகளை நகர்த்தினர். வெள்ளையர்களின் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டுக்கல்வியில் பயின்றனர். இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளும் அப்படியே.
ஆனால் நமக்கு ஆரம்ப காலத்தில் புத்த, ஜைன மத பள்ளிகள் இருந்தன. அங்கு சம நிலை கல்வி இருந்தது. பின்பு வர்ணாசிரம ஆதிக்கம் ஆரம்பித்த பொழுது ..பிராமணர்களுக்கு வேதம் பயிலும் வாய்ப்பும், சத்ரியர்களுக்கு போர் பயிற்சியும், வைசியர்களுக்கு வியாபாரமும் கற்பிக்கப்பட்டன.. மற்ற இனத்தவர் குடும்ப தொழில்களை கற்றுக்கொண்டனர். இதில் எல்லா வித சம கல்வி அரச பரம்பரைக்கு மட்டுமே கிடைத்தது. நமக்கு நாலாந்தா பல்கலைகழகம் பள்ளிக்கல்விக்கு அடுத்த நிலையை அப்பொழுதே அடைந்ததே அறியலாம்.
காலனி ஆதிக்கம் வந்துதான் கல்வி முறைமையானது. பள்ளிகள் திறக்கப்பட்டன. அனைவருக்கும் சமமான கல்வி தேவை என்ற எண்ணம் வந்தது. பள்ளிகளில் ஏழை, பணக்காரன், இனம் எந்த விதத்திலும் பாகு பாடு இருக்க கூடாது என்றுதான் சீருடை திட்டம் வந்தது. எத்தனை எத்தனை இடர்பாடுகள். இன்னும் நாட்டில் மாணவர்கள் தோராயமாகா 80% சொச்சமும், மாணவிகள் 60% சொச்சமுமே பள்ளிக்கு செல்கிறார்கள்.
இன்னும் கால் வாசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முயற்சி கூட முடிக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது சூழலில் வீட்டுக் கல்வி எல்லாம் தேவையா?
ஒரு நாள் ஒரு பள்ளியை தாண்டி போய்க்கொண்டு இருந்தேன். பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து குழுவாக மாணவர்கள். கரை புரண்டு ஓடிய உற்சாகம். புத்தகங்களை வீசி எறிந்தனர். உச்சபட்சமாக ஒரு மாணவன் சில் புத்தகங்களை எடுத்து கொளுத்தி வீசி எறிந்தான். அதை சுற்றி நின்ற மாணவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஒவ்வொரு மாணவனும் பன்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் விரக்தியில் அந்த புத்தகங்களை தூக்கி வீசுவதையும், கிழிப்பதையும் கவனிக்கலாம்.
பால்வாடி (Pre KG) முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை மொத்தம் பதினைந்து வருடங்கள். ஒருவரது வாழ்வில் மிக முக்கியமான பதினைந்து வருடங்கள் பள்ளியில் கழிக்கிறார்கள். அந்தப்பள்ளி கற்றலையும், வாசிப்பையும் நேசிக்க அல்லவா கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக கல்வி மேல் வெறுப்பை அல்லவா கற்றுக்கொடுத்து உள்ளது.
என்னை பொருத்தவரை கற்றல் என்பது ஒரு கலை. அதை மட்டும் மாணவர்களுக்கு கற்று கொடுத்தால் போதும். அவர்கள் அழகாக எதையும் கற்றுக்கொள்ளும் திறன் மிக்கவர்கள்.
கற்றலை கற்றுக்கொடுக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்பேன். கற்பித்தலை செய்யும் பள்ளிகள் வெறுப்பை உண்டாக்குகிறது. Drop out விகிதங்கள் நம் கண்ணுக்கு தெரியாமல் நடந்துக்கொண்டிருக்கிறது. பள்ளி என்றால் கடும் வெறுப்பில் உள்ள மாணவர்களுக்கு பள்ளி கல்வி முறை என்ன மாற்றை கையில் வைத்துள்ளது? தனி திறமை வாய்ந்த மாணவர்களுக்கு அந்த அந்த தேர்வுகள் என்ற முறையிலிருந்து எத்தனை பள்ளிகள் விலக்கு தருகிறார்கள்?
பெங்களுரில் பொருளாதரத்தில் மிக பின் தங்கிய எந்த குடிசைபகுதிக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஒவ்வொரு குழந்தையும் நான்கு முதல் எட்டு மொழி பேசும். எந்தப் பள்ளி ஐந்து மொழியில் சரளமாக பேச கற்றுத்தருகிறது. எநதப் பள்ளியில் ஐந்து வயது குழந்தைக்கு ஐந்து மொழி கற்றுத்தர முடியும்?
இப்படி பள்ளிக் கல்வி குறித்தும் பல கேள்விகள் என்னிடமும் இருக்கிறது…இந்தச் சூழலில் தான் வீட்டுக் கல்வி என்றால் என்ன? என்ற கேள்வியும் என் முன்னே வருகிறது.
ஒரு அம்மாவாக சில வருடங்களை மகனுக்கு வீட்டுக்கல்வி கற்பித்த அனுபவத்தின் துணைக்கொண்டு இந்த அனைத்து கேள்விகளுக்குமே இந்தப் பயணத்தில் (பஞ்சு மிட்டாய் இணையத்தில் வரும் தொடர் பதிவுகள் மூலம்) நானும் உங்களோடு விடை தேட போகிறேன்.
நிறைய கேள்விகளை கொண்டு வாருங்கள். இணைந்து விடை தேடுவோம் .விவாதிப்போம்..மேம்படுத்துவோம்.

























1 Comment
வீட்டு கல்வியை எப்படி செயல்படுத்துவது
எனக்கு அதில் உடன்பாடு உண்டு
என் பையனுக்கு இதை நடைமுறைபடுத்த ஆவல்