குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்! – புத்தக அறிமுகம்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நல்ல பெற்றோரா நீங்கள்…? “எதற்காக சம்பாதிக்கிறோம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? எல்லாம் உங்களுக்காகத்தானே?” – பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் பலர் பேசும் வார்த்தைகள் இவை. சரிதான்! ஆனால் நவீன யுகத்தில் இது மட்டும் போதுமா? குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான செயலா? சர்வ சாதாரணமாக பத்து பிள்ளைகளைப் பெற்று அவற்றை வளர்த்து ஆளாக்கிய தாத்தா- பாட்டி காலம் அல்ல இது. ஒற்றைப் பிள்ளைக்கே மூச்சு முட்டிப் போகிறது. பெற்றுவிட்டால் மட்டும் போதாது. குழந்தைகளுக்கு உரு கொடுத்து முழு மனிதராக்கும் வரை பெற்றோர்கள் தெரிந்தும், புரிந்தும் கொள்ள வேண்டியவற்றின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கிறது. அதையெல்லாம் எப்படி பெறுவது, ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள்; அவற்றில் எதை கேட்பது? – இந்த குழப்பம் நிறைய பெற்றோருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் இனி கவலை இல்லை. காம்கேர் புவனேஸ்வரி எழுதிய ‘ குழந்தைகள் உலகத்திற்குள் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற ஒரு நூல் போதும்.

புத்தகத்தில் சின்னச்சின்னதாக இருக்கும் ஒவ்வோர் அத்தியாயத்தைப் படித்து முடித்தவுடன் மனசே ஒரு பலத்த கைத்தட்டல் கொடுக்கிறது. எந்த இடத்திலும் போலி இல்லை; புனைவு இல்லை. ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி என்பது போல நடைமுறைக்குச் சாத்தியமில்லாத எதையும் இந்த நூல் பேசவில்லை. நம்முடைய வீட்டில், நமக்கு ரொம்பவும் உரிமையான ஒருவர் உட்கார்ந்து பேசுவது போல மிகக்கடினமான தகவல்களைக் கூட எளிதிலும் எளிதாக பகிர்ந்து கொள்கிறது.
“அப்பான்னா அப்பாதான்” என்ற தலைப்பில் தொடங்கி, சமீபத்திய வெள்ள பாதிப்பின் போது இளைஞர்களின் தன்னெழுச்சியான மீட்புப் பணி பற்றி பேசும் “பொங்கி எழுந்த மனித நேயம்” வரை 40 தலைப்புகளும் நல் முத்துகள். 85 புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கும் புவனேஸ்வரியின் எழுத்து கிரீடத்தில் இந்தப் புத்தகம் கோஹினூர் வைரம் என்றால் மிகையல்ல. அந்தளவுக்கு குழந்தைகள் உலகத்தை அங்குலம், அங்குலமாக அலசி ஆராய்ந்திருக்கிறார். இன்றைக்குப் பெரும் சிக்கலாகி கிடக்கும் குழந்தை வளர்ப்பைப் பற்றி நுணுக்கமான வழிகளைச் சொல்கிறார். நாம் மிகச் சாதாரணமாக நினைப்பவற்றை குழந்தைகள் உலகம் எப்படி கவனிக்கிறது என்பதை நூலாசிரியர் விவரிக்கும் இடங்களில் எல்லாம் பிரமிக்க வைக்கிறார். கூடவே ஒவ்வோர் இடத்திலும் நம்முடைய குழந்தையிடம் இதனைச் சரியாக கடைபிடிக்கிறோமா என்று சிந்திக்க வைக்கிறார்.

கத்தாமல், கதறாமல் குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து அவர்களை அற்புதமானவர்களாக வளர்த்தெடுக்கும் எளிதான சூத்திரங்களைத் தந்திருக்கிறார். பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் ‘ரோல் மாடலாக’ பெற்றோர் இருக்க முடியும் என்று பக்குவமாக சொல்லியிருக்கிறார். எதைவிடுத்து, எதைச்சொல்ல… அத்தனையும் அருமையிலும் அருமை. மொத்தத்தில் பெற்றோர் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பாடப்புத்தகம் இது. என்ன செய்ய…கல்லூரிகளில் இதையெல்லாம் பாடமாக வைக்காமல், இன்னும் ‘கிளார்க்’ வேலைக்காக மெக்காலே போட்டுத்தந்த பாடத்திட்டத்திலேயே பயணிக்கிறோமே என்ற கோபம் தான் வருகிறது.

இருந்தாலும் இந்த நூலின் முதலிரண்டு அத்தியாயங்களைப் படிக்கத் தொடங்கியவுடன் தேர்வுக்குச் செல்லும் மாணவனின் மனநிலை எனக்கு ஏற்பட்டது. ‘என் குழந்தையிடம் நான் எப்படி நடந்து கொள்கிறேன்?’ என்ற கேள்வியும் கூடவே பதற்றமும் தொற்றிக்கொண்டது. மொத்தமாக படித்து முடிக்கும் போது ஒரு தந்தையாக எனக்குள் நிறைய மகிழ்ச்சி. நூலில் சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை என் பிள்ளைக்குத் தந்து கொண்டிருக்கும் நெகிழ்ச்சி. புதிதாக சிலவற்றைக் கற்றுக்கொண்ட நிறைவு. குழந்தை வளர்ப்பில் 100 / 100 வாங்கிட வேண்டும் என்கிற எண்ணம். இவை அனைத்தும் கலவையாக எனக்குள் எழுந்தது. பிள்ளைகளை வளர்ப்பதில் நீங்கள் எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், உங்களுக்கு நீங்களே ஒரு தேர்வு வைத்துக்கொள்ள நினைத்தால், நல்ல பெற்றோராக இருக்க விரும்பினால் ‘ குழந்தைகள் உலகத்திற்குள் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு’ நூலைக் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

நல்வாழ்த்துகளுடன்,
கோமல் அன்பரசன்

‘ஒரு விளக்கால் 1000 விளக்குகளை ஏற்றலாம்’ என்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப இந்தப் புத்தகம் பலரது அறிவுக் கண்களை திறக்கவல்லது.

இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், குழந்தைகள் முன் அப்பாவும், அம்மாவும் சமம் என்ற நோக்கில் பரஸ்பரம் மரியாதையுடன் பேசிக்கொள்ளும் ஒரு இளம் தம்பதியைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஒரு கவிதை வரியை நினைவு கூர்ந்தது. ‘நானும் நீயும் ஒன்றானோம். அந்த ஒன்று யார்?’  என்ற ஈகோ சார்ந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் மண்டையில் தட்டி குழந்தைகள் கோணத்தில் யோசியுங்கள் என்று சொல்லி இருப்பது மாறுபட்ட எழுத்தோட்டம்.

ஒரு வீட்டில் கணவன், மனைவி, குழந்தைகள் என மூன்று பிரிவினருக்கும் பொருத்தமான புத்தகம் இது. வெளியில் நாம் பெரிய பதவியில் நல்ல புகழோடு இருப்பதாக நினைத்து மிகப்பெரிய கர்வத்தில் இருப்போம். ஆனால் வீட்டுக்குள் நாம் ஒன்றுமே இல்லை என்று எண்ணும் அளவுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கும். அந்த சின்னச் சின்ன விஷயங்களை நாசூக்காக குழந்தைகள் கோணத்தில் அசால்ட்டாகச் சொல்லிக்கொண்டே போகிறார் ஆசிரியர் காம்கேர் புவனேஸ்வரி.

குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு, அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை வெகு எளிமையாக சொல்லிக்கொண்டே போவதும்  தனிச் சிறப்பாகும்.

ஆசிரியரின் எழுத்து எல்லோருக்கும் புரியும்படி எளிமையாகவும், சின்ன சின்ன வாசகங்களுடன் படிக்கப் படிக்க அடுத்தடுத்தப் பக்கங்களை திருப்ப வேண்டும் என்ற உத்வேகத்துடன் ‘அட இப்படியும் யோசிக்கலாமே’ என்ற மனநிலைக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இந்தப் புத்தகத்தை இளம் பெற்றோர்களுக்கு, மாணவ மாணவிகளுக்கு, கவுன்சிலிங் செய்பவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என அனைத்துதரப்பினருக்கும் பரிசாகக் கொடுக்கும் அளவுக்கு கருத்துச் செரிவுடன் அமைந்துள்ளது. பள்ளிகளில் பாடதிட்டமாக வைப்பதற்கு ஏற்றப் புத்தகம்.

– மானா பாஸ்கரன், தி.இந்து

புத்தகம் : குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட், ஆசிரியர் : காம்கேர் கே.புவனேஸ்வரி , வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் , விலை : ரூ.110/-

Leave a comment