“கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். வேலை வாய்ப்பைப் பெறுவது மட்டுமே கல்வியல்லவே! மொழியாளுமை மிக்க படைப்பாளிகள் இந்த மொழியை வாழ்விக்கின்றனர். அதைப்போலவே போலந்து வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய தமிழறிஞர்கள் அனைவரும் எழுத்தாளர்களாகள் என்பதை தெரிவிக்கலாம்.
இந்திரா பார்த்தசாரதி, தி.சு.நடராசன் ஆகிய இருவர் மட்டுமல்ல; தமிழவன், கி.நாச்சிமுத்து, அ.ராமசாமி போன்றோரையும் குறிப்பிடலாமே! கி.நாச்சிமுத்து ஆலோசனைக் குழுவில் இருந்தபடியால் தவிர்ப்போ? பிறரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.
மொழி, இயற்கை / வேளாண்மை / சுற்றுச்சூழல், பண்பாடு, அறிவியல் / தொழில்நுட்பம், கல்வி, நாகரிகம் / தொழில் / வணிகம், கலை / அழகியல் / புதுமைகள், நாடு / சமூகம் / அரசு / நிருவாகம், அறம் / தத்துவம் / சிந்தனை, மனிதம் / ஆளுமை ஆகிய 10 பொருண்மைகளில் 11 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடம் நம்முன் விரிகிறது. இதற்கு முன்னர் இல்லாத தன்மை; பாராட்டியே ஆகவேண்டும்.
முதல்பாடமான இந்திரனின் ‘பேச்சுமொழியும் கவிதைமொழியும்’ மரபுத் தமிழாசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது. “புதுக்கவிதை மனப்பாடப்பகுதியா?” என்ற அடுத்த அதிர்ச்சி சு.வில்வரத்தினத்தின் ‘யுகத்தின் பாடல்’. அந்தப்பகுதியில் இடம்பெற்றுள்ள படமே நமக்கு அதிர்ச்சியளிப்பது. தமிழன்னை என்று கற்பிதம் செய்யப்பட்ட படம் இங்கு ஏன்? ‘கடவுள் வாழ்த்தை’ விரட்டியடித்தப் பெருமிதத்தில் இருக்கும்போது இவ்வாறு பேரிடி தரலாமா? சு.வில்வரத்தினம் எழுதிய பல்லாண்டு வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது? என்று சிறுவினாவும் கேட்டாகிவிட்டது. இதற்கு கடவுள் வாழ்த்தே வைத்திருக்கலாம்?
“திருவள்ளுவர் பற்றிய அறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு ஊரெங்கும் சிலைகள், படங்கள் வைப்பது பற்றி மாணவர்களுக்கு எத்தகைய புரிதல்கள் உண்டாகும்? வேணுகோபால் சர்மாவின் ஓவியம் திருவள்ளுவராக மாறிய கதையையாவது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’ முன்னுரை, பிரபஞ்சனின் ‘பிம்பம்’ சிறுகதை, ஆத்மநாம், பிரமிள் கவிதை, இன்குலாப் கவிதைகள், நர்த்தகி நட்ராஜ் செவ்வி, ஜெயமோகனின் யானை டாக்டர், ஆ.பாலகிருஷ்ணனின் மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு, சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் என ஒரு புதிய அனுபவம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் கிடைக்கும்.
பிரான்சு என்றெல்லாம் பெயர்ச்சொற்களை எழுதவேண்டிய அவசியம் குறித்து சிந்திக்க வேண்டும். அதுவும் பல இடங்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்திவிட்டு சிற்சில இடங்களில் மட்டும் இவ்வகைத் தீண்டாமையை ஏன் பின்பற்ற வேண்டும்? இராசேந்திரன் (இந்திரன்) ராசேந்திரன் (மீரா), சங்கரதாசு சுவாமிகள் டி.கே.எஸ். சகோதரர்கள் (பக். 193) இராமேசுவரம், இரசவாதம், சோதி என்றெல்லாம் எழுதுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.
இரசாயன உரம், இரசாயன பூச்சிக்கொல்லி என்றும் வேதியுரம், வேதிப் பூச்சிக்கொல்லி என்று மாறிமாறிப் பயன்படுத்திவிட்டு, மொழிக்கு முதலில் வராது என்று இரசூல் கம்சதோவ், இரயில், இரசிகமணி என்றெல்லாம் எழுதுவது நன்றாகவா இருக்கிறது. தொடரி அல்லது தொடர்வண்டி என்று எழுதிவிட்டுப் போங்களேன்! வேட(ஷ)ம் (பக். 215) என்று அடைப்புக்குறிக்குள் தரும்போது, கிரந்தம் குறித்த கவலை எங்கே போனது?
ஏ.ஆர்.இரஹ்மான் என்று எழுதுவது பெரும் வன்முறை. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது. அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திடுவது குறித்த அரசாணை உண்டு. திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்கும். அதைப்போல அரசு ஏதேனும் திட்டத்தை அறிவிக்கலாம். தமிழில் பெயரிடச்சொல்லி சட்டம் இயற்ற இயலாது. ஒருவருக்கு கிரந்த எழுத்தைப் பயன்படுத்திவிட்டு, மற்றவருக்கு பயன்படுத்த மறுப்பது பாரபட்சமல்லவா! மொழிக்கு முதலில் வராது என்று பெயரை மாற்றுவது அறிவுடைமையாகாது. குறைந்தபட்சம் அவர்கள் பயன்படுத்தும் எழுத்துகளில் பெயரை எழுதும் பண்பாடு வேண்டும், அல்லது இதை எல்லோருக்கும் பொதுவாக ஆக்கவேண்டும். செயலலிதா, இசுடாலின் என்ற எழுத முன்வராதபோது பிற பெயர்களை மட்டும் மாற்றி எழுதும் சுதந்திரம் எப்படி வந்தது?
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பெயர்களில் கிரந்த எழுத்து இருக்கிறது. ஆனால் மொழிக்கு முதல் பிரச்சினை என்று பார்க்கப்படுகிறது. சங்கரதாசு சுவாமிகளுக்கு உள்ள ‘கிரந்த’ச் சிக்கல் ஏன் மேலேயுள்ள பெயர்களுக்கு இல்லை? ஹெச்.ஜி.ரசூல், இரசூல் கம்சதோவ் என்று எழுதுவதன் அபத்தம் நமக்கு விளங்கவில்லை. பாடநூல் எழுதுவது பலரது கூட்டுச் செயல்பாடு. இருப்பினும் அவற்றை தொகுத்தும்போது அவற்றில் முடிந்த அளவிற்கு ஓர்மை இருப்பது நலம் பயக்கும். இந்த முரண்பாடுகளைச் சுட்டுவதை கிரந்த ஆதரவு என்று மிக எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடாது.
நாவல் என்று சொல்வதில் ஏன் அச்சம்? புதினம், குறும்புதினம் (குறுநாவல் என்று சொல்வார்களாம்!) என்றே பண்டிதப் பெருமக்கள் உரைப்பர்! புதினம் என்ற சொல்லைக் கல்விப்புலத்திற்கு வெளியே கேட்கமுடியாது. அப்படியிருக்க நாவல் என்ற சொன்னால் தமிழ் கெட்டுவிடுமா? குறும்பு தினம் என்று பிரித்து எழுதாமல் விட்டால் சரி. இத்தகைய மொழியரசியல் வளர்ச்சிக்கு உதவாது.
‘இனிக்கும் இலக்கணம்’ இனிக்காமல் போவதன் புதிரென்ன? பயன்பாட்டு இலக்கணமாக எளிமையாக அமையவில்லை என்பதால்தானே!
உடன்பட்டும் மறுத்தும் பேசுக (பக். 74) நன்று. ஆனால் உண்டு, இல்லை என்று கட்சி கட்டுவதைவிட பன்முகப்பார்வைத் திறப்புகளை உருவாக்க முயல்வே அழகு. அறிவியல் முன்னேற்றம் வளர்ச்சியா? வீழ்ச்சியா? விவாதிக்க. (பக். 92) என்ற பட்டிமன்ற பாணி விவாதங்கள் வெற்றுப் பேச்சாகவே அமையும். எதில் வளர்ச்சி, எங்கு வீழ்ச்சி எனத் தேடல் விரிவடைந்து செல்வதே நல்லது; மாறாக மறுதலிப்பது ஏற்றதல்ல.
‘நிற்க அதற்குத் தக’, (பக். 75) அட்டவணை பாலின சமத்துவத்தை பேச வைக்குமா? வெறும் கட்டங்களைப் பூர்த்து செய்வதோடு நின்று விடுமா? இங்கு விவாத்திற்கான இடம் அளிக்கப்படும் என்று நம்ப முடியவில்லை. தலைப்பு கூட இருக்கின்ற அமைப்பை ஏற்க வலியுறுத்துவது போன்ற தொனி உள்ளது.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க (பக். 81) என்று தவத்தைச் சித்தரிப்பது பொருத்தமாக இல்லை.
நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) உளவியல் மொழியியலாளர் (பக். 89) என்று குறிப்பிடப்படுகிறது. psycholinguist என்பதற்கு உள மொழியியலாளர் என்று சொல்வதே பொருத்தமானது. Biochemist என்பதை உயிர் வேதியியலாளர் என்றுதான் சொல்கிறோம். உயிரியியல் வேதியியலாளர் என்று சொல்வதில்லையே! மேலும் நோம் சாம்ஸ்கி பல்துறை அறிஞர். ஒரு துறையில் குறுக்குவது சரியா?
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத் தயாரிப்பில் சுஜாதா பங்களிப்பு மிகுதி என்று குறிப்பிடப்படுகிறது. பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனம் உருவாக்கிய எந்திரத்தில் சுஜாதாவின் பங்கைத் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாமே!
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜகதீச சந்திரபோஸ் (பக். 94) எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றுகூட சொல்லக்கூடாதா? தொடர் புறக்கணிப்பிற்கு உள்ளாகும் விஞ்ஞானிகளை கூடுதலாக அறிமுகப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.
அப்துல் கலாம் (அக்னி சிறகுகள்) (பக். 112) நூல் பள்ளி வளாகங்களில் அதிக புழங்கிய நூலாக இருக்கும். அறிவியல் சார்ந்த பாடத்தில் அவை சார்ந்த நூல்கள் இடம்பெறுவதே இயல்பு. அப்துல் கலாமை எங்கும் நிறைக்கவேண்டும் என்கிற ஆவலைக் குறைப்பது நாட்டுக்கு நல்லது!
தரங்கம்பாடியில் முதலில் தமிழ் நூலை அச்சடித்தவர் சீகன் பால்கு என்பதைச் சொல்ல மறந்தது / மறைத்தது ஏனோ? (பக். 117)
2010 –ல் நடைமுறைக்கு வந்த கட்டாய இலவசக் கல்விக்கு முன்னோடியாக மும்பை மாகாண சட்டமன்றத்தில் 1911 கோகலே கொண்டுவந்த மசோதா குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் குறிப்பிடவில்லை. (பக். 118)
புதுக்கவிதையை நயம் பாரட்ட முடியாதா என்ன? என்கிற நமது ஆதங்கம் இறுதியில்தான் பூர்த்தியாகிறது. ஹெச்.ஜி.ரசூல் (பக். 264) கவிதை ஒன்று நயம் பாராட்டலில் உள்ளது.
கலைச்சொற்களைத் தரப்படுத்தவேண்டும் (பக். 191) என்று இலக்கணம் வகுத்துவிட்டு Disaster என்பதை பேரழிவு (பக். 196) மொழியாக்கம் செய்யப்படுகிறது. பேரிடர் என்பதே பொதுவானப் பயன்பாட்டில் உள்ளது. சமணர் படுக்கை, சமணர் படுகை (பக். 196) ஆகியுள்ளது.
‘மொழியை ஆள்வோம்’ மயிலை சீனி.வேங்கடசாமி (பக். 217) நகராட்சிப் பள்ளி ஆசிரியர் என்பதை இடைநிலை ஆசிரியர் என்று குறிப்பிடுவது சரி.
Debate (விவாதம்) என்பதற்கு பட்டிமன்றம் என்ற சொல் எந்த அளவிற்குப் பொருத்தமானது? செங்கை மருத்துவக் கல்லூரி செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரியாதல் நலம்.
பிறமொழி இதிகாசங்கள் போரினை முதன்மைப்படுத்திப் பேசும். ஆனால் தமிழ்க்காப்பியங்கள் போருக்கு முதன்மைக் கொடுக்கவில்லை. (பக். 231) பொதுவாக மன்னனைப் பாடுவதே காப்பிய இயல்பு. ஆனால் சிலம்பதிகாரம் கோவலன் – கண்ணகி என்னும் சாமான்ய குடிமக்களைப் பாடியது, மணிமேகலையின் பவுத்தச் சார்பு ஆகிய போரினை முதன்மைப் படுத்தாமைக்கு காரணங்கள். இதை யார் சொல்லிக் கொடுப்பது?
“அறமும், தத்துவமும் எக்காலத்திற்கும் பொருந்தும் – விவாதிக்க”, (பக். 232) என்ற செயல்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தத்துவம் பல கிளைகள் கொண்டது. அதில் அறமும் ஒன்றெனக் கொள்ளலாம். ‘அறமும் தத்துவமும்’ என்பது பொருத்தமாக இல்லை.
நர்த்தகி நட்ராஜ் செவ்வி பாட இறுதியில் திருநங்கைகள் பிரியா பாபு, லிவிங் ஸ்மைல் வித்யா, ரோஸ் போன்ற தமிழகத் திருநங்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கலாமா?
பல இடங்களில் வடமொழி சமஸ்கிருதம் மட்டுமே என்பதான தொனி நிறைந்துள்ளது. பாலி, பிராகிருதம் ஆகியவற்றை மறைக்கலாமா?
“போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியாக விளங்கிய”, (பக். 116) குருகுலக்கல்வியின் பெருமை பேசப்படுகிறது. குருகுலக்கல்வி எத்தகைய வாழ்வியலைக் கட்டமைத்தது? அது யாருக்கான கல்வி? இன்றைய கல்வியுடன் அதன் தொடர்பு என்ன? மெக்காலேக் கல்வியை தூற்றுபவர்கள் குருகுலக்கல்வியை உயர்த்திப் பிடிப்பது வழக்கம். பாடநூல் குருகுலக்கல்வியை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. தேவையிருப்பின் அதற்கான காரணங்களைப் பட்டியலிட ஏன் தயக்கம்?
தொடரும்…
முந்தைய பதிவு : https://www.panchumittai.com/2018/07/26/new_books_tamil_1/

























1 Comment
This article gives me a different perspective of, “why to learn a language properly” . The deep love and knowledge in the language will help to build many literature – The measure of Languages’ strength. Thanks na