தேம்ஸ் நதிக்கரையில் சேக்ஸ்பியரைச் சந்திக்கச் சென்றேன்

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

பொருளாதாரம், வசதிகள், கல்வி, வாழ்வியல், சுகாதாரம் போன்ற பல காரணங்களுக்காக மனிதர்கள் புலம்பெயர்ந்து செல்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் அந்த நிலத்துடன் நெருக்கம் கொள்ளத் தொடங்குவார்கள். ஆனால் இந்த நெருக்கம் வெறும் தேவைகளின் அடிப்படையில் உருவாகுவதில்லை. சில நேரங்களில் அந்த நிலத்தின் பண்பாடு, கலாச்சாரம், கலை மற்றும் இலக்கியம் மனித உள்ளத்தை மெதுவாகவும் ஆழமாகவும் கட்டிப்போடுகிறது.

இங்கிலாந்து மீது நான் கொண்ட காதலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் கலை–இலக்கிய பண்புகள். இங்கிலாந்திலும், மொத்த மேற்குலக சமூகத்திலும் கலை மற்றும் இலக்கிய மரபுகள் மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளன.

உதாரணமாக, ஒரு குழந்தையை அதன் பெற்றோர் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர் என்றால், குழந்தைக்கு தேவையான உணவு, மாற்று உடைகள் என்பதுடன், கடற்கரை சார்ந்த ஒரு படக்கதைப் புத்தகத்தையும் அவர்கள் எடுத்துச் செல்வதை நான் பல முறை கவனித்திருக்கிறேன். ஒரு குழந்தையின் உலகில், அவர்களுக்கான இலக்கியம் என்பது திட்டமிட்ட தருணங்களில் மட்டுமல்லாமல், எதேச்சையான அன்றாடச் சூழல்களில் இடம்பெறுகிறது என்பதையே இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு பெற்றோராகவும், தமிழ்ச் சிறார் எழுத்தாளராகவும், ஒரு குழந்தை நலச் செயற்பாட்டாளராகவும், முக்கியமாக கலையை அனுபவிக்கும் ரசிகராகவும் பார்வையாளராவும் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான நாடகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன, இயங்குகின்றன என்பதையே நான் இங்கு பகிர விரும்புகிறேன். அதற்கு முன்பாக, குழந்தை இலக்கியம், பள்ளிகள் மற்றும் நூலகங்கள் எவ்வாறு அதற்கான அடித்தளமாக செயல்படுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

பள்ளியும் நூலகமும்: வாசிப்பின் அடித்தளம்

தமிழ்நாட்டில், ஒரு குழந்தை தமது பள்ளிப் பாடங்களைத் தாண்டி வேறு புத்தகங்களை வாசிப்பது என்பது இன்னும் இயல்பான ஒன்றாக இல்லை. அத்தகைய வாசிப்பு பழக்கம் இல்லாத ஒரு குழந்தை இங்கிலாந்திற்கு வந்தால், சில மாதங்களிலேயே எந்தவித வற்புறுத்தலுமின்றி நல்ல வாசகராக மாறிவிடுகிறது. அதற்கான அடித்தளத்தை இங்குள்ள பள்ளிக்கூடங்களே அமைத்து தருகின்றன.

பள்ளிகளை அலங்கரிப்பவை குழந்தை இலக்கியமே. அறிவிப்பு பலகைகள், வெற்றிக் கோப்பைகள் காட்சிப்படுவதைக் காட்டிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு குட்டி நூலகமாக செயல்படுகிறது. எனது கணிப்பில், ஆரம்பப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு ஆண்டில் ஐம்பது புத்தகங்களை சந்திக்கிறது.

இங்கிலாந்தில், 87% மக்களுக்கு தங்கள் பகுதியில் பொது நூலகம் எங்குள்ளது தெரியும். நூலகத்தைப் பயன்படுத்தும் பெரியவர்களில் சுமார் 30% பேர் தங்கள் குழந்தைகளுடன் கூட பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் குழந்தை இலக்கியம் நேரடியாக குழந்தைகளின் உலகத்துடன் தொடர்பு கொள்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும், பெரியவர்கள் மூலமாகவே குழந்தை இலக்கியம் குழந்தைகளுக்கு சென்றடைகிறது என்பது வித்தியாசமாகும். பள்ளிகள், நூலகங்கள், மெட்ரோ ரயில் பயணிகள் வாசிப்பதை குழந்தைகள் காண்பதும் சமூக சூழல் வாசிப்பை இயல்பாகச் செய்கிறது.

வாசிப்பிலிருந்து நாடகத்திற்கு

இங்கிலாந்து பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பிலிருந்து குழந்தைகள் நாடகத்தில் பங்குபெற ஆரம்பிக்கின்றனர். இங்கு ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை; அதற்கு பதிலாக, ஒரு கல்வியாண்டில் ஒன்றிரண்டு முறை, இரண்டு அல்லது மூன்று வகுப்புகளை இணைத்து நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

நாடகக் கதைகள் குழந்தை இலக்கியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தொடக்கநிலைப் பள்ளியில் படக் கதைகளை வகுப்பில் வாசித்து, சிறிய காட்சிகளை கதையாடி விளக்கி, பின்னர் மெல்ல மெல்ல நாடக வடிவம் பெறுகின்றன. இதற்காக சுமார் மூன்று மாதங்கள் செலவிடப்படுகிறது, மேலும் இவை கணக்கும் ஆங்கிலம் வரலாறு எனப் பாடங்களுடன் இணைக்கப்படுகிறது.

நாடகத்திற்கு தேவையானவற்றை அவர்களே உருவாக்குகின்றனர். சமீபத்தில் நான் பார்த்த ஒரு பள்ளி நாட்கத்தில், பழைய அட்டைப் பெட்டிகளால் பெரிய மரம் ஒன்றை ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து வடிவமைத்தனர். நாடகத்தினைக் காண அக்குழந்தைகளின் பெற்றோர்கள் அழைக்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பில் மூன்று பிரிவுகள் இருந்தால், அனைத்து குழந்தைகளும் நாடகத்தில் கலந்து கொள்கின்றனர். சுமார் 30–40 குழந்தைகள் 20–30 நிமிட நாடகமாக அரங்கேற்றம் செய்கின்றனர்.

ஆரம்பப்பள்ளியில் தொடங்கிய நாடக பயணம் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தபோது, 300 பக்க நாவல் 1.30 மணி நேர நாடகமாக மாற்றப்படுகிறது. உதாரணமாக, Matilda (Roald Dahl) மற்றும் Christmas Carol (Charles Dickens) ஆகிய நாடகங்களை நான் பள்ளிகளில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

பள்ளிகளில் நான் கவனித்த சில புத்தகங்களும் நாடகங்களும்:

ஆரம்ப பள்ளி:

  1. Handa’s Surprise
  2. Jack and the Beanstalk
  3. Willy the Wimp- Anthony Browne

மேல்நிலை & உயர்நிலைப் பள்ளி:

  1. Matidla – Roald dahl
  2. Giant Peach – Roald dahl
  3. Mia and Fish – Satinder Chohan (சமகாலத்தில் அரங்கேறி வரும் நாடகம் – இந்திய நாடோடி கதை)
  4. Age is Revolting by Abi Zakarian
  5. Chrishtmas Carol – Charles Dicken

ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பில் நாடகம் கட்டாயப் பாடமாக உள்ளது; அதன் பிறகு அது விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்கப்படலாம். பாடத்திலுள்ள நாடகக் கல்வியை அவர்கள் அரங்கேற்றத்திலும் பயன்படுத்தும் வகையில் வழிநடத்தப்படுகின்றது. அதன் அடுத்த கட்டமாக, நேரடியாக நாடக அரங்கிற்கு குழந்தைகள் பார்க்க அழைக்கப்படுகின்றனர்.

 குழந்தைகளுக்கான நாடக அரங்குகள்

பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை நாடக அரங்குகள் / தியேட்டர்கள் உள்ளன. இலண்டன் மேற்கு பகுதியை “நாடக நிலம்” என்று அழைக்கின்றனர். 1952 ஆம் ஆண்டு அரங்கேறிய Dame Agatha Christie’s Mousetrap நாடகம் இன்னும் தொடர்ச்சியாக ஓடுகிறது. Musical Theatre வகையும் மிகவும் பிரபலமாக உள்ளது. Pantomime என்பது கிறிஸ்துமஸ் காலத்தில் அரங்கேறும் தேவதைக் கதைகள்; இதில் டேம் எனும் பெண் கதாபாத்திரத்தில் ஆண்கள் நடிக்கின்றனர்.

இந்த நாடக அரங்குகளில், Disney போன்ற பெரிய நிறுவனங்களும் பங்கேற்று உலகப் புகழ்பெற்ற நாடகங்கள வழங்குகின்றன. உதாரணமாக: The Lion King Musical, Roald Dahl’s Matilda, Back to the Future, Nutcracker, Hercules, Oliver, My Neighbour Totoro, Mamma Mia, Snow Man, Elf, Wicked, Harry Potter, Jack and the Beanstalk, Christmas Carol, Cinderella போன்ற நாடகங்கள் 10 வயதுக்கு மேலான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக அரங்கேறுகின்றன. இவை பெரும்பாலும் திரைப்படம் போன்று 2–3 மணி நேரம் நீளமுடையவை.

சிறு குழந்தைகளுக்காக (3–9 வயது) Paddington, Elmer, Bluey, Stick Man, Gruffalo, Dog Man, Peppa Pig போன்ற கதைகளும் அரங்கேறுகின்றன. இவை பெரும்பாலும் 1–2 மணி நேரம் நீளமுடையவை.

Shakespeare’s Globe மற்றும் Pinocchio அனுபவம்

Shakespeare இல்லாமல் இங்கிலாந்தின் நாடக வரலாறு முழுமையாக இருக்காது. 16–17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர், காலத்திற்கே உரிய கதைகளையும் மனித வாழ்க்கையின் பல அம்சங்களையும் மேடையில் வெளிப்படுத்தி, நாடகக் கலைக்கு புதிய உயரங்களைத் தந்தார்.

Shakespeare நினைவாக அமைக்கப்பட்ட Shakespeare’s Globe, தேம்ஸ் நதியோரத்தில் roofless (open-air) theatre வடிவில் இயங்குகிறது. இங்கு Shakespeare-ன் நாடகங்களுக்கு புதிய வடிவம் கொடுக்கப்படுவதோடு, குழந்தைகளுக்கான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

நான் சென்ற வாரம் Shakespeare’s Globe அரங்கில் நடந்த Pinocchio Musical Performance-ஐப் பார்த்தேன். குடும்பத்துடன் அனுபவிக்கக்கூடிய இந்த நாடகத்தில், மரப் பொம்மையான Pinocchio மனிதர்களைப் போல பேசவும் நடக்கவும் முடியும். பொய் கூறினால் அதன் மூக்கு பெரிதாக வளருவது முக்கிய அம்சமாகும். Puppet கலையில் காட்சிகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன. சில கட்டங்களில், பொம்மையை இயக்குபவர்கள் பார்வையிலிருந்து மறைந்து, puppet உயிருடன் தோன்றும் அதிசயம் நிகழ்த்தப்பட்டது.

நாடகத்தின் போக்கில், அன்பு, பாசம், வெகுளித்தனம், ஏமாற்றம், சூழ்ச்சி, சோகம், துரோகம், பிரிவு, வலி போன்ற உணர்ச்சிகள் குழந்தையின் மனதில் நெருக்கமின்றி கடத்தப்பட்டன. குழந்தைகள் Pinocchio சூழ்ச்சியில் ஏமாற்றப்படும்போது “No… No… Don’t do this Pinocchio” என கூச்சலிட்டது எனது மனதில் நிறைந்த அனுபவமாகவே உள்ளது.

அனிமேசன், ஏஐ போன்ற தொழில்நுட்பம் – திரையில் சாகசங்கள் அனைத்தையும் செய்யக்கூடிய இந்தக் காலத்திலும், முழுக்க முழுக்க மனிதர்கள் நேரடியாகப் பாடி, ஆடி, இசை அமைத்து, puppet-க்கு உயிர் கொடுத்து நடிப்பது பிரமிப்பாக இருந்தது. ஒரு காட்சியில், Pinocchio கடலில் விழும்போது மீன்கள் கலைப்பூர்வமாகக் காட்டப்பட்டன.

இந்த அனுபவம் தமிழ்நாட்டில் கிடைக்காத ஒன்றாகும். இங்கிலாந்தில் வாழும் நம் மக்கள் இன்னும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் அரங்கின் டிக்கெட் விலைகளாகும். அதிக விலை என்றாலும் கலைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் அதில் பங்குபெறுவதும் இங்கு உள்ளது.

இங்கிலாந்தில் தமிழ்ச் சமூகத்தில் நாடகத்தின் சாத்தியங்கள்: இங்கிலாந்தைப் பொறுத்தவரை, எண்ணற்ற தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இலண்டன் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி போன்ற பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள், குழந்தைகளுக்கான தமிழ்க் கல்வியை தொடர்ந்து வழங்கி வருகின்றன. மேலும், தமிழ் மொழி இங்கிலாந்து கல்வி முறையில் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுப் பாடமாக இருப்பதால், பெரும்பாலான தமிழ் அமைப்புகளும் அந்த இலக்கை நோக்கியே தங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த அணுகுமுறை ஒருவகையில் ஆக்கப்பூர்வமானதாக இருந்தாலும், மறுபுறம் தமிழ் மொழியை ஒரு வகுப்பறைப் பாடமாக மட்டுமே பார்க்கும் மனப்பாங்கையும் உருவாக்குகிறது. ஆங்கிலத்தில் 300 பக்க நாவலை நாடகமாக மாற்றும் திறன் கொண்ட அதே குழந்தைகள், தமிழ்ச் சூழலில் அதுபோன்ற எந்தவொரு சோதனை முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

தமிழ்ச் சூழலும் இங்கிலாந்தின் வாழ்வியலும் ஒன்றோடொன்று கலக்காமல், இரண்டு தனித்தனி உலகங்களாகவே இயங்குகின்றன என்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழ்ச் சூழல் என்றாலே பெரும்பாலும் சினிமா சார்ந்த விஷயங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. இல்லையெனில், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன.

ஆனால், இங்கிலாந்து பள்ளிகளில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நாடகக் கலை, மேடை அனுபவம், கதையை மறுவடிவமைக்கும் திறன் போன்றவை தமிழ்ச் சூழலில் பிரதிபலிக்கப்படுவதில்லை. பள்ளிகளில் நாடகமாக உயிர் பெறும் இலக்கியங்கள், தமிழ்ச் சமூக நிகழ்வுகளில் இடம் பெறாதது ஒரு முக்கியமான வெற்றிடமாகவே தோன்றுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் குழந்தை நாடகத்தின் எதிர்காலம்:

இந்த வெற்றிடத்தை நான் இங்கிலாந்தில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலாகப் பார்க்கவில்லை; மாறாக, அது நம் மொத்த தமிழ்ச் சமூகத்திடமே ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு சிக்கலாகவே எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் நடைபெறும் நாடக முயற்சிகளை நாம் சற்று உற்றுநோக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அங்கும் பெரும்பாலும் பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் அல்லது பீர்பால் கதைகளே மீண்டும் மீண்டும் நாடகமாக்கப்படுகின்றன. அது தமிழ் மொழி நாடகமாக இருந்தாலும் சரி, ஆங்கில மொழி நாடகமாக இருந்தாலும் சரி—கதைத் தேர்வில் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்வதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில புதிய முயற்சிகள் தென்படுகின்றன என்றாலும், ஒரு கட்டமைக்கப்பட்ட பெரிய மாற்றம் எங்கும் நடைபெறவில்லை என்றே உணர்கிறேன்.

இதற்கான முக்கிய காரணமாக நான் கருதுவது, ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் வாசிப்பு பழக்கத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிகக் குறைவாக இருப்பதே. ஏனெனில், நாடகம் என்பது தனித்த ஒரு கலைவடிவம் அல்ல; அது இலக்கியம், வாசிப்பு பழக்கம், பள்ளி போன்ற கல்வி அமைப்புகள், நூலகங்கள் ஆகிய அனைத்துடனும் நெருக்கமாகப் பிணைந்த ஒன்றாகவே இயங்குகிறது. நம்மிடையே, நாடகம் என்பது வெறும் வசனங்களை மனனம் செய்து மேடையில் உச்சரிப்பதற்கான ஒரு செயற்பாடு என்ற தவறான புரிதல் நிலவுகிறது.

திருக்குறள், ஆத்திச்சூடி போன்ற ஆழமான இலக்கியங்களைக் கூட நாம் சிந்தனைக்கும் உரையாடலுக்கும் வழிவகுக்கும் படைப்புகளாகப் பார்க்காமல், வெறும் மனனப் பொருள்களாக மட்டுமே அணுகும் பழக்கம் நம்மிடையே வேரூன்றியுள்ளது. வாசிப்பு, சிந்தனை, மறுவடிவமைப்பு ஆகிய மூன்றும் இல்லாத சூழலில், நாடகம் எப்படி ஒரு உயிர்ப்புள்ள கலைவடிவமாக மாறும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லாத இச்சூழலிலும், குழந்தைகளுக்கான நாடகம் என்ற தளத்தில் சில முக்கியமான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது மட்டுமே என் மனதிற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

புகழ்பெற்ற நாடகக் கலைஞரும் பேராசிரியருமான வேலு சரவணன், பல்லாண்டுகளாக குழந்தைகளுக்கான நாடகத்தில் முன்னோடியாக இருந்து வருகிறார். கோமாளி வேடமிட்டு அவர் குழந்தைகள் மத்தியில் நின்றால், அந்த அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர், பால புரஸ்கர் விருதைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரைச் சேர்ந்த உதிரி நாடக நிலம் விஜயகுமார், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளுக்கான நாடகத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தஞ்சை, சென்னை, பெங்களூர், கேரளம் உள்ளிட்ட பல இடங்களில் இவரது நாடகங்கள் அரங்கேறி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகள் நாடகம் குறித்து விரிவாக உரையாடியும் செயல்பட்டும் வரும் இவரது படைப்புகள், கேரள நாடக உலகின் விருதுகளையும் பெற்றுள்ளன.

சிவப்பு யானை நாடக நிறுவனம் மூலம் சந்திரமோகன் அவர்கள் குழந்தைகளுக்கான நாடகங்களைத் தயாரித்து வருகிறார். அதேபோல், குழந்தைகளுக்கான கோமாளி வேடங்களில் ஈடுபடும் வேல்முருகன், கதை சொல்லி சதீஸ், அன்பரசி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இந்தத் தளத்தில் நம்பிக்கையூட்டும் பணிகளை செய்து வருகின்றனர்.

தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் எழிலரசன், பள்ளி–கல்லூரி ஆசிரியராக அவர் ஒருங்கிணைத்த நாடக அனுபவங்களை “அசலூர் வைரஸ்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி நாடகங்கள் புத்தக வடிவம் பெறுவது, மிகவும் முக்கியமான பணியாக நான் கருதுகிறேன்.

இவை அனைத்தும் தனிநபராக நான் கவனித்த முயற்சிகள் மட்டுமே. எனது பார்வைக்கு எட்டாத இதுபோன்ற பல முயற்சிகள் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

ஆனால், இவை அனைத்திலும் ஒரு பொதுவான ஒற்றுமை காணப்படுகிறது. இம்முயற்சிகள் அனைத்தும் வாசிப்பும், மொழி மற்றும் கலை மீது தீராத காதலும் கொண்ட தனிநபர்களால் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன. இவை ஒரு system ஆக குழந்தைகளை சென்றடைவதில்லை; தனிநபர்களின் தீரா முயற்சியாலேயே தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றன.

இதற்கு மாறாக, இங்கிலாந்தில் நாடகம் என்பது ஒரு தனிநபர் முயற்சி அல்ல; அது ஒரு முழுமையான கட்டமைப்பாக (system) செயல்படுகிறது. பள்ளியில், நூலகத்தில், கல்லூரிகளில், வெளி நாடக அரங்குகளில் என வளர்ந்து நிற்கும் இந்த அமைப்பே, நாடகம் உட்பட பல்வேறு கலைகளின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறது. இந்தக் கட்டமைப்பு நம் தமிழ்ச் சமூகத்தில் இல்லாததே, எனது பார்வையில் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் “பொன்னியின் செல்வம்” திரைப்படம் வெளியானதும் அதன் புத்தக விற்பனை குறைந்தது. ஆனால் இங்கு, ஒரு 24 பக்க குழந்தைகளுக்கான படக்கதை—புத்தகமாகவும், அனிமேஷனாகவும், நாடகமாகவும், திரைப்படமாகவும்—ஒரே நேரத்தில் வெற்றிப் பெறுகிறது.

அதனால்தான் நான் கூறுகிறேன்: மேற்குலகைப் பொறுத்தவரை நாடகம், இசை, இலக்கியம் போன்ற கலைச் செயற்பாடுகள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை வாழ்வியலின் ஒரு அங்கமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

May be an image of ‎text that says "‎தமிழ் நாடகம் அரங்கியல்-அழகியல்-அரசிய அழகியல் அரங்கியல் அரசியல் முனைவர் கய்னம்பு முனை பதிப்பாசிரியர்கள் முனைவர் முலை சா.கிருத்திகா ப.ஜெயராஜ சா.மு.ஜெய்னம்பு சா.மு. முனைவர் ன முனை வர் சீ.மகேசுவரி வர முனைவர் வர் முனைவர் மு ق‎"‎

குறிப்பு: தஞ்சை தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் தமிழ் நாடகம் அரங்கில் -அழகியல் -அரசியல் பன்னாட்டுக் கருத்தரங்கில் இடம்பெற்ற உரைகள் புத்தகமாகவும் வெளியானது. அதில் இங்கிலாந்து சிறார் நாடகம் குறித்து நான் எழுதிய கட்டுரை.

நன்றி,

பஞ்சு மிட்டாய் பிரபு

Leave a comment