இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

ராஜா ராணி கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்தானே? ஆம் என்றால் ஒரு ஹை ஃபைவ் கொடுங்கள்.  என்னது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் வீர தீர சாகசங்கள் நிறைந்த ராஜா கதையைவிட 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் இம்சை அரசரனின் கதைதான் உங்களுக்கும் அதிகம் பிடிக்குமா? அப்படி என்றால் இன்னொரு ஹை ஃபைவ் கொடுங்கள்.

மாயக் கண்ணாடி, அண்டாமழை, சூரியனின் கோபம், சுண்டெலியின் சிரிப்பு ஆகிய நூல்களின் வரிசையில் இதோ இன்னொரு புத்தகத்தைத் தந்துள்ளார் நமது உதயசங்கர் தாத்தா (எழுத்தாளர் உதயசங்கர்).

தினம் ஒரு அதிசயத்தைக் காட்டச் செல்லி மக்களை இம்சிக்கும் அதிசய ராஜா, சொர்க்கத்தில் இடம் வாங்கி தருகிறேன் என்று ஊரை ஏமாற்றும் கூறும் டிமுக்கோ ராஜா, மாளிகைகளைக் கட்டித் தள்ளும் மாளிகை ராஜா, இம்போசிசன் எழுதிக் கொண்டிருக்கும் ராஜா, இங்கிட்டு அங்கிட்டு என குதித்துக் கொண்டிருக்கும் ராஜா என பல ராஜாக்களை நீங்கள் இந்தப் புத்தகத்தில் சந்திக்க போறீங்க. சந்திப்பது மட்டுமல்ல இவர்களின் முட்டாள்தனத்தால் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை ரசிப்பதோடு சிந்திக்கவும் போறீங்க.

இந்தக் கதைகளில் வரும் காட்சிகளை சுற்றத்தில் நீங்கள் நிஜ வாழ்வில்கூட ஏற்கனவே பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சிறிய அளவிலான அதிகாரம் கிடைக்கும் இடங்களில் கூட மனிதர்கள் பல நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதுண்டு. தங்களது அதிகாரத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் சக மனிதர்கள் மீது கொண்ட அன்பு மட்டுமே என்றைக்கும் இவ்வுலகை இயக்கி வருகிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அப்படி மறந்து போவதை மீண்டும் நினைவுப்படுத்திக் காட்டும் வேலைகளைதாம் கலைகளும் புத்தகங்களும் செய்கின்றன. அதுவும் நகைச்சுவையையும் நையாண்டியையும் இணைத்துத் தரும்போது அது சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுவிடுகிறது. அப்படி குழந்தைகளுக்கான கதைகளில் தொடர்ந்து இம்சை அரசர்களின் கதைகளை நமக்கு எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் வழங்கி வருகிறார். குட்டி வாசகர்களான உங்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் இந்தக் கதைகளை வாசித்துவிட்டு எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு உங்கள் வாழ்த்தைப் பகிருங்கள். கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.

அன்புடன்
பஞ்சு மிட்டாய் பிரபு

குறிப்பு: “அதிசயத்திலும் அதிசயம்-சிறார் கதைகள்(எழுத்தாளர்: உதயசங்கர்)” புத்தகத்தின் முன்னுரை

Leave a comment