பிடித்த பாடம் என்று ஒன்று இருந்தால், பிடிக்காத பாடம் என்றும் ஒன்று இருக்கும்தானே. அப்படி எனது பள்ளி நாட்களில் பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறுதான். வரலாறு பாடத்திலுள்ள வருடங்களும், வாயில் நுழையாத பெயர்களும் என்னை அதிகம் அச்சமூட்டின. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், நான் என் அம்மாவிடம் “அப்பாடா! இனிமேல் வரலாற்றை படிக்க தேவையில்லை. எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று கூறி மகிழ்ந்தேன்.
ஆனால் நான் வளர்ந்து இலக்கிய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததும், வரலாற்றைவிட சுவாரஸ்யமானது வேறொன்றுமில்லை என்ற உண்மையைக் கண்டறிந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை வரலாறும் நானும் இணைபிரியா நண்பர்களாகிவிட்டோம். அதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? இன்று நம் வாழ்வில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது ஒரு புதிர் போல் வரலாற்றில் புதைந்துகிடக்கிறது. வரலாற்றைத் தேடித் தேடி வாசிப்பது மூலம் புதிருக்கான விடையை நாம் கண்டடைய முடியும்.
வரலாற்றைச் சுவராஸ்யமாகச் சொல்லும் புத்தகம்தான் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…(பெரிய சாதனைகள், குட்டிக் கதைகள்” புத்தகம். பெயருக்குத் தகுந்தாற்போலவே இவை குட்டிக் கதைகள்தான் என்றாலும், அது சொல்லும் வரலாறு அனைத்துமே மிகவும் முக்கியமானவே. யாநிலா எனும் 12 வயது சிறுமியும் அவளது அப்பாவும் உரையாடும் வகையாக இந்தப் புத்தகம் அமைந்திருப்பது இதன் தனித்துவம். உங்களைப் போல் யாநிலாவும் அவளது அப்பாவிடம் ஏன், எப்படி, எதற்கு என்று கேள்விகள் கேட்டு அவரைத் திக்கு முக்காட வைக்கிறாள். அவளது அப்பாவும் எடக்கு முடக்காகக் கேட்கப்படும் கேள்விகளைச் சமாளித்து, ஒவ்வொரு கேள்விக்கும் கதையாக பதில் சொல்கிறார்.
இந்தப் புத்தகத்தில் மொத்தம் இருபது சூப்பர் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் கதைகள் உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஹிரோஷிமா, ஆப்பிரிக்கா, ஈராக், இத்தாலி போன்ற பல நாடுகளின் கதைகள் இவை. இந்த சூப்பர் ஹீரோ-ஹீரோயின்கள் ஏதோ பூச்சி கடித்தோ அல்லது விபத்து நடந்தோ அதன் வழியே அதீத சக்திகள் பெற்றவர்கள் அல்ல. மாறாக இவர்கள் நம்மைப் போல மிகவும் சாதாரண மனிதர்கள். தங்களுக்குப் பிடித்தத் துறையில் தனித்துவமாகப் பணியாற்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சரியான முடிவை எடுத்ததால் சூப்பர் ஹீரோ- ஹீரோயின்களாக மாறியவர்கள். அப்படி இவர்களது வாழ்வில் நடந்த கதைதான் என்ன? வாருங்கள்! புத்தகத்தை வாசித்துத் தெரிந்துகொள்வோம்.
இதிலுள்ள ஒவ்வொரு கதையையும் நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். உங்களுக்கு வரலாறு பிடித்தமான பாடம் என்றால் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் உங்களுக்கு வரலாறு இன்னும் அதிகமாகப் பிடிக்கும். உங்களுக்கு வரலாறு வேப்பங்காய் போல் கசக்கும் என்றால், இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் நீங்களும் என்னைப் போலவே, “வரலாற்றைவிட சுவாரஸ்யமானது வேறில்லை” என்று கட்டாயம் சொல்வீர்கள்.
இந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சிந்தன் அவர்களுக்கும், சிந்தன் அவர்களைக் கேள்விகள் கேட்டு திக்கு முக்காட வைத்த யாநிலாவிற்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். நீங்களும் வாசித்துவிட்டு, உங்கள் மனதில் தோன்றிய கருத்துகளை, கேள்விகளைப் பகிருங்கள்.
நன்றி,
பஞ்சு மிட்டாய் பிரபு
குறிப்பு: “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…(பெரிய சாதனைகள், குட்டிக் கதைகள்” புத்தகத்தின் முன்னுரை