தமிழ்ப் படைப்புலகில் ஒரு புதிய வெளிச்சம் கீற்றாகத் தோற்றம் தந்துள்ளது. குழந்தை இலக்கியங் களின் பால் எழுத்தாளர்கள் பலரும் ஆர்வத்துடன் கவனம் செலுத்தத்தொடங்கி உள்ளனர். பாவண்ணன், கமலவேலன், உதயசங்கர், சுகுமாரன், ஆர்.வி.பதி, யூமா வாசுகி, அ.குமரேசன் போன்ற மூத்த எழுத்தாளர்களும், விழியன், கொ.மா.கோ.இளங்கோ, ஆதி வள்ளியப்பன், விஷ்ணுபுரம் சரவணன் உள்ளிட்ட இளம் படைப்பாளிகளும், ரமணி, ரமணா போன்ற குழந்தைகளும் மிகவும் உற்சாகமாகக் குழந்தை இலக்கியப் படைப்புகளையும், அவை குறித்த உரையாடல் களையும் முன்னெடுக்கத் தொடங்கி உள்ளனர். ஓர் ஆண்டு முழுவதும் எத்தனை சிறார் நூல்கள் வெளியாகின, அவற்றை எழுதிய ஆசிரியர்கள் யார், அவற்றின் வகைமைகள் எவை, வெளியிட்ட பதிப்பகங்கள் எவை என்பன போன்ற தகவல்களைத் தொகுத்து ஆவணமாக்க வேண்டியது மிகவும் அவசியமாகவும், அவசரமாகவும் செய்யப்பட வேண்டிய கடமை. முன்பெல்லாம் (1960-களில்) தமிழ்நாடு அரசு, ‘குழந்தை இலக்கிய நூற்றொகை’ என்ற தலைப்பில் இவ்வாறான தகவல் திரட்டுகளை வெளியிட்டு வந்துள்ளது. நீண்ட காலமாக அந்த மாதிரி எவ்வித முயற்சியும் நடைபெறவே இல்லை. இப்போது, இந்த ஆண்டு முதல் மீண்டும் அந்த முயற்சியை பஞ்சு மிட்டாய் முன்னெடுக்கிறது. கீழ்க்காணும் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு உரிய பதில்களை அனுப்புமாறு, எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பகத்தார், விற்பனை யாளர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்…
– கமலாலயன்
























