குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் கலையான Ventriloquism தமிழில் பிறிதிடக் குறள்பாங்கு அல்லது மாயக் குரல் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் மதத்தைப் பரப்ப உதவும் கருவியாக மத வாதிகளாலும், மந்திரவாதிகளாலும் பயன்படுத்தப் பட்டது. 18ஆம் நூற்றாண்டில் தான் மேடைகளில் மதங்களைக் கவரும் பொழுது போக்கு அம்சமாக இந்தக் கலை உருமாறியது. லத்தீன் மொழியில் Ventri என்றால் பேச்சு என்றும் பொருள் அதாவது வயிற்றிலிருந்து பேசுவது என்று பொருள். உதடுகளை அசைக்காமல் வயிற்றிலிருந்து சத்தத்தை எழுப்பிக் கொண்டே ஒரு கையால் பொம்மையை இயக்கம் போது பொம்மை பேசுவதாகவே பார்வையாளர்களைக் கருதச் செய்யும்.
1790களில் ஜோசப் ஆஸ்கின் லண்டனில் புகழ்பெற்ற வென்ட்றிலாகிசக் கலைஞராக விளங்கினார். 1830களில் பிரெட் ரஸ்ஸல் என்பவர் நவீன வென்ட்றிலாகிசத்தின் தந்தை என்றழைக்கப்பட்டார். கோஸ்டர் ஜோ என்ற தன் பொம்மையை மடிமீது வைத்துக் கொண்டு இவர் புரிந்த நகைச்சுவை உரையாடல்கள் அடுத்த தலைமுறை மேடைக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக விளங்கின. ஆர்தர் பிரின்ஸ் அவருடைய பொம்மை செய்லா ஜிம்முடன் நடத்திய மேடை நிகழ்ச்சிகள் அமெரிக்கர்களால் அதிக நிகழ்சிகள் அமெரிக்கர்களால் அதிக பணம் கொடுத்து நிகழ்த்தப்பட்டன. செனார் வென்செஸ் என்பவர் 1950களில் அமெரிக்காவில் புகழ் பெற்ற மாயக்குரல் கலைஞர்.
இந்தியாவில் Ventriloquism கலையை அறிமுகப் படுத்தியவர்கள் வொய்.கே.பாண்டே, எம்.எம்.ராய் ஆகியோர். வொய்.கே.பாண்டேவின் மகன் ராம்தாஸ் பாண்டேவும் அவரது மகன் சத்யஜித் பாண்டேவும் இக்கலையை தொலைக்காட்சிகள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றனர். ஆண்கள் மட்டுமே அதிகமாக இருந்த இத்துறையில் பெங்களூரில் வசிக்கும் இந்துஸ்ரீ, ஒரே நேரத்தில் மூன்று பொம்மைகளைப் பேசவைத்து பார்வையாளர்களை அசத்துகிறார்.
தமிழகத்தில் பாலச்சந்தர் அவர்களின் படத்தில், கமல் மூலம் அறிமுகமான இக்கலை வெங்கி மங்கி சாந்த குமார் , டாக்டர் கே.ராவ், மிமிக்ரி கலைஞர் சீனிவாஸ் ஆகியோர் மூலம் பிரபலமானது. வெங்கி மங்கி கலைஞரின் மகள் நிரஞ்ஜனாவும் தன் நிக்கி பொம்மையுடன் மாயக்குரல் கலைஞராக வளம் வருகிறார். இவர்களைத் தொடர்ந்து நானும் குழந்தைகளுக்கு கதை சொல்ல இக்கலையைப் பயன்படுத்தி வருகிறேன்.
பிற மொழிகளில் செய்யும் மாயக்குரல் கலையை விட தமிழில் எழுத்துக்களும் உச்சரிப்பும் அதிகமென்பதால் தமிழில் செய்வது சற்று கடினம். தான் பேசுவது, பொம்மை பேசுவது இரண்டையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டியிருப்பதால் மனதை ஒருமுகப் படுத்த தியானப் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் மிக அவசியம் இதற்காக படும் சிரமங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் கைதட்டல் கிடைக்கும் போது காணாமல் போய்விடும்.
குழந்தைகளை பெரிதும் ஈர்க்கும் இந்தக் கலையை ஆர்வமிருக்கும் பட்சத்தில் ஓவியம், பாட்டு, நடனம் கலைகள் போலவே இந்தக்கலையை அறிமுகம் செய்யலாம். கலைகளின் சிறப்பு அதன் படைப்பாற்றலிலே வெளிப்படும். அந்த வகையில் இந்தக் கலை ஓர் ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் என்று ஆசிரியராக, எழுத்தாளராக & வெண்ட்ரிலோகுயிஸ்ம் கலைஞராக பெரிதும் நம்புகிறேன்.