கணிதம் இயற்பியல் பொறியியல் வடிவமைப்பு துறையை சேர்ந்த ஓரிகாமியில் ஆராய்ச்சிகள் செய்து புது புது ஓரிகாமி வடிவங்களை உருவாக்குகிறார்கள், இதற்கு பல கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழகத்தில் பார்த்தால் ஓரிகாமி கலைஞர்கள் மிக அரிதாகவே இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் ஓரிகாமி கலை குறித்த புரிதலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,விருப்பம் உள்ளவர்கள் என அனைவரிடமும் இந்த ஓரிகாமி கலையின் பலன்களை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே எனது பயணத்தின் நோக்கம். எனது இந்த காகித பயணம், மாற்றத்தை விரும்பும் நண்பர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெறுகிறது. ஓரிகாமி கலை என்று இல்லை , விளையாட்டு, கலைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் நம் சமூகத்தில் இல்லை, அடிப்படை கணிதம், அறிவியல், மொழி பாடங்கள் தாண்டி கலைகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எந்த ஒரு சமூக மாற்றமும் தனிமனிதனால் சாத்தியமில்லை பலர் ஒன்றாக செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.
அறிவு , உணர்வு இரண்டையும் உணர்ந்தவரே நல்ல மனிதராக இருக்க முடியும் தொழில்நுட்ப வளர்ச்சி, கலைகளின் வளர்ச்சி இரண்டும் சீராக இருக்கும் சமூகமே ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும். நமது சங்க இலக்கியங்கள், திருக்குறள் என நமது முன்னோர்களின் பல ஆயிரக்கணக்கான அனுபவங்கள் பனை ஓலைகள் மூலமாகவே நமக்கு கைமாறியிருக்கிறது. நாம் நமது பழைய மரபு கலைகள் பலவற்றையும் இழந்துகொண்டிருக்கறோம், ஜப்பானிய ஓரிகாமி கலை போல. இங்கு நம் தமிழ் மரபு கலையான பனைஓலை பின்னல் கலை பல சிறப்புகளை உடையது, அவைகளை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும், இது சார்ந்து இயங்கும் மூத்த கலைஞர்களின் அனுபவ தொழில்நுட்பங்களை இளைஞர்களுக்கு கைமாற்றவேண்டும். பனை விசிறி, பனை படுக்கை விரிப்புகள், பொம்மைகள், பறவைகள், குழந்தைகள் விளையாடும் கிழுகிழுப்பைகள், பனை ஓலை ஓவியம், ஓலை பெட்டிகள் என பல வகை வீட்டு உபயோக பொருட்களை நம்முன்னோர்கள் பனை ஓலையில் செய்திருக்கிறார்கள். ஆலமரத்தின், இலைகள், வெற்றிலை, அரசமர இலைகள், மாமரத்தின் இலைகள், வேப்பிலை இவைகளை மேடை அலங்காரம் செய்ய பயண்படுத்தியிருக்கிறார்கள். அதே போல் தென்னைமரத்தின் ஓலைகள் மூலமாக நம்முன்னோர்கள் பல செய்திருக்கிறார்கள்.
இதெயெல்லாம் கவனிக்கும் போது நாம் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. கலைகள் வழியே நமது சூழலை மேன்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. ஆக நண்பர்களே ஒன்றுபடுவோம், நம் மரபு கலைகளை பாதுகாப்போம்.