ஓரிகாமி கலையும் அதன் பயன்பாடும் – தியாக சேகர் (ஓரிகாமி கலை குறித்த தொடர் – பகுதி 02)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கலை இலக்கியங்கள் ஏன் தேவை? : ஓரிகாமி கலையின் தேவை பயன்பாடு பற்றி பேசுவதற்கு முன் நாம் பொதுவாக அனைத்து கலைகளும் மனித சமூகத்திற்கு ஏன் தேவை , கலை இலக்கியங்கள் நம் வாழ்வில் என்ன செய்கின்றது என்று பார்க்கலாம் நண்பர்களே. உணவு ,உடை, இருப்பிடம், கல்வி,மருத்துவம் நமது அடிப்படை தேவையாக உள்ளது. பொருளாதார ரீதியாக  கீழ்நிலை, நடுநிலை, உயர் நிலை என்று பிரித்தால்; இந்த மூன்று கைவயில் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் வசதியுடன் அடிப்படை தேவைகளை சரி செய்துகொள்கிறார்கள்.

அரசியல், சட்டம் காவல்துறை, நீதித்துறை, சிறு தொழில், பெரும் தொழில் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் இதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்தப் பேரண்டத்தில் ஏற்ப்பட்ட பெருவெடிப்பிற்கு பிறகு  சூரிய குடும்பம் உருவாகி, சூரியனின் சிறு துண்டு நெருப்புக்கோளம்  பிரிந்து நிலம், கடல்,  காற்று உருவாகி,  ஒரு செல் உயிரில் துவங்கி தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்,மனிதன் என்று  பல லட்சம் ஆண்டுகள் இந்த இயற்கையின் பரிணாமத்தின் சாட்சியாக 2020ல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பொருளாதாரத்தில் உச்சத்தில் இருப்பவர்கள், நடுநிலையில் இருப்பவர்கள், அடிப்படை தேவைகளுக்காக அன்றாடம் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள் அனைவருமே எந்த வித  மன அழுத்தமும், கோபம், பதட்டம், வெறுமை, இல்லாமல் வாழ்கிறார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். வசதி உள்ளவர்கள், வசதி இல்லாதவர்கள், சிறுகுழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை, ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அனைவருக்குமே வாழ்வென்பது இன்பமும், துன்பமும் கலந்ததாகவே அமைகிறது. நாம் எவ்வளவு தான் அறிவித்திறனை பயன் படுத்தி, பொருளாதார, பாதுகாப்பான வாழ்வை, அமைத்துக்கொண்டாலும் எதிர்பாராத ஒரு விபத்து, நெருங்கிய உறவின் பிரிவு, நண்பர்களின் பிரிவு, இழப்பு, நம்பியவர்கள் நமக்கு செய்யும் துரோகம், உதாசீனம் இவைகளை  எந்தவித பாகுபாடின்றி அனைவரும் அனுபவிக்கும் விதமாகவே மனித வாழ்வு அமைந்துள்து.

இது போன்ற நேரங்களில் உண்டாகும் வெருமை, மனஅழுத்தம், ஆதங்கம், அழுகையிலிருந்து நம்மை காத்து கொள்ளவும் நம்மை நாமே மீட்டு மரு உருவாக்கிக்கொள்ளவும் இயல்பை பற்றிக் கொள்ளவும் இயற்கை இந்த மனித சமூகத்திற்கு கொடுத்த பரிசாக தான் நான் கலை இலக்கியங்களை பார்க்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தன்னை தானே கொஞ்சிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனது குடும்பத்தினருடன், உறவினர்களுடன்,நண்பர்கள் சுற்றத்தார்களுடன், கூடி குழாவி மகிழ்ந்து இனிமையான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளகலைகளும் இலக்கியங்களும் தேவைப்படுகிறது.

பெரும் தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், விவசாயிகள், மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் இவர் அனைவருமே வேறுபட்ட வேளைகளில் ஈடுபட்டாலுமே அனைவருமே மனிதர்கள் தான். அனைவருக்கும் மன கற்பனைகளும், தன்னை தானே கொஞ்சிகொள்கிற தேவையும் உள்ளது. ஒரு மெல்லிய இசையை கேட்பதாலோ,  நமக்கு பிடித்த புத்தகம் வாசிப்பதாலோ, ஒரு ஓவியத்தை இரசிப்பதாலோ, ஓரிகாமி காகித கொக்கை தன் கைகளால் செய்து இரசிப்பதாலோ அல்லது வேறு எந்த கலை வடிவத்தின் துணைக்கொண்டோ நம்மை நாம் அன்றாட வாழ்வை எளிமையான முறையில் தேற்றிக்கொள்ள முடியும்.

ஏதேனும் ஒரு கலையை ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான சமூக கட்டமைப்பிற்கு வழிவகுக்கும்.

நமது மன கட்டமைப்பு என்பது வயது சார்ந்து வித்தியாசப்படுகிறது. 60 வயதை கடந்தவர்களிடம் ஒரு பக்குவமான மன கட்டமைப்பை பார்க்க முடிகிறது, 30 வயதை கடந்தவர்களிடம் ஒரு பதட்டமான பரபரப்பான மனதை காண முடிகிறது. நான் இங்கு (இந்தக் கட்டுரையில்) முக்கியமாக பேச விரும்புவது 13 வயதிற்குள்  உள்ள சிறுவர்களை பற்றி. இந்த வயது சிறுவர்கள் இன்பத்தை மட்டுமே பார்த்து வளருபவர்கள். இந்த வயதில் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் விரும்பும் ஏதோ ஒரு கலையை கற்க நாம் வழிவகை செய்ய வேண்டும், அது சுதந்திரமாகவும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்காத வகையிலும் இருக்கவேண்டும். இதுவே மனரீதியாக அவர்கள் எந்த துறையில் வேலை செய்தாலும் அவர்கள் மன ஆரோக்கியமான ஒரு மனிதனாக வாழ வழி வகுக்கும். “இனி விதைகளே பேராயுதம்” அய்யா நம்மாழ்வார் சொன்ன வீரியமா சொல்.

ஓரிகாமியின் பயன்கள்:

ஓரிகாமி கலை நம் அன்றாட வாழ்வில் பல இடங்களில் பயன்பட்டுகொண்டிருக்கிறது, காகித அட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் காகித பெட்டிகள் நம் வீட்டில் பயன் படுத்தும் சிறிய தீப்பெட்டியில் துவங்கி  பொருட்களை பேக் செய்ய பயன்படும் பெரிய பெட்டிகள் அனைத்தும் ஓரிகாமி கலைவடிவமே. அஞ்சல் துறையில் பயன்படும் அஞ்சல் கவர், திருமண பத்திரிகைகள், வாழ்த்து அட்டைகள் இவைகளும் ஓரிகாமி கலைவடிவமே.  திருமண மேடை அலங்காரம், நட்சத்திர ஹோட்டல், பெரிய விழாக்கள்  நடக்கும் அறைகளை அலங்கரிக்க ஓரிகாமி கலை பயன்படுகிறது. ஒரு  பெரிய பொருளை சிறியதாக முறைப்படி மடித்து சுருக்கி, பின்னர் பெரியதாக விரிக்கும் அனைத்து பொருட்களிலும் ஓரிகாமி தொழில்நுட்பம் பயன்படுகிறது. உதாரணமாக: குடை, கார்களில் பயன்படுத்தும் பாதுகாப்பு பலூன், செயற்கைக்கோள் சுருக்கி விரிக்கும் தொழில் நுட்பம், மருத்துவ நுன்கருவிகள் செய்தல், உயிரியல்தொழில் நுட்பத்துறையில், செல் நுன்பொருட்களை உடைத்து ஆய்வு செய்யும் கருவிகளில் ஓரிகாமி  தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோபோட் கள் தயாரிப்பில் ஓரிகாமி முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவியல் கணித உருவங்களை விளையாட்டு முறையில் எளிமையாக கற்பிக்க ஓரிகாமி கலை பயன்படுகிறது. வானூர்திகள் தயாரிப்பு ஆராய்ச்சியில் ஓரிகாமி கலை முக்கிய பங்கு வகிக்கிறது

கல்வித்துறையில் ஓரிகாமியின் பயன்பாடு:

கல்வி உளவியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஓரிகாமி கலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மாணவர் ஓரிகாமி கலை பயிற்சி பெருவதன் மூலமாக அவர்களின் கவனிக்கும் திறன் மேம்படுகிறது, வடிவமைப்பு திறன் மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க ஊக்கமளிகிறது. புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த சிந்தனையை ஓரிகாமி மாணவர்களிடையே தூண்டிவிடுகிறது. அனைத்திற்கும் மேலாக மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கிறது. என்ன தான் கடைகளில் விலைஉயர்ந்த பொம்மைகள் வாங்கினாலும் , மாணவர்கள் அவர்கள் களைகளால் செய்து, அதன் முழுமையான வடிவத்தை கண்டு அவர்கள் அடையும் மகிழ்ச்சி மதிப்பு மிக்கது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத, உணர்தல் இன்பமாணது.

எந்த வயதினர் ஓரிகாமி கத்துக்களாம்?

கடந்த 13 ஆண்டுகளாக ஓரிகாமி கலை பயிற்ச்சிக்காக , மாநகரம், நகரம், குக்கிராமங்கள், மலை கிராமங்கள் என தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறேன், இந்தக் கலை பயிற்சி மூலமாக 3 வயது குழந்தை முதல் 75 வயது பாட்டி வரை உறவாடியிருக்கிறேன் அவர்களின் அன்பில் மகிழ்ந்திருக்கிறேன், கல்லூரி பேராசிரியர்கள், பொறியியல் வல்லுனர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், விவசாயிகள், மலைகிராமத்து பாட்டிக்கள், கல்வியல் பட்டதாரிகள், மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்லூரி மாணவர்களோடு, கிராமத்து இளைஞர்கள், முதியோர் இல்லங்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், என்ற அனைவருக்கும் இந்த கலையை நான் உள்வாங்கியதை அவர்களுக்கு கைமாற்றியிருக்கிறேன். எனது அனுபவத்தில் சொல்கிறேன், என் உயிரின் ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன் அனைவரும் காகிதத்தை கையில் வாங்கியவுடன் குழந்தையாக மாறி புன்னகைத்தார்கள், முகம் மலர்ந்தார்கள். வயது தடையல்ல, விருப்பம் மட்டுமே தேவை.

ஓரிகாமி காகித கொக்கு செய்ய பயிற்சி பெற்ற பல துறைகள் சார்ந்த மனிதர்கள் என்னோடு தாங்கள் அடைந்த மகிழ்ச்சியை, புழங்காகிதம் அடைந்து பகிர்ந்திருக்கிறார்கள் அதவே எனக்கும் புலங்காகிதம். கலைகள், இலக்கியங்களில் சுவை ருசித்து, இன்பமாக வாழ்வோம்!

நன்றி,
தியாக சேகர்
ஓரிகாமி கலைஞர்

Leave a comment