ஓரிகாமி எனும் ஜப்பானிய காகித மடிப்பு கலை ஓர் அறிமுகம் – தியாக சேகர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
முதலில் நாம் ஓரிகாமி என்ற வார்த்தையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம், ஓரிகாமி எனும் வார்த்தை தமிழ் ,இந்தி வார்த்தை அல்ல, இது ஒரு ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை, அதாவது ஓரி மற்றும் காமி என்ற இரண்டு வார்த்தைகளின், “ஓரி” என்றால் மடிப்பு, “காமி” என்றால் காகிதம். ஓரிகாமி கலையினை தமிழ் மொழியில் நாம், காகித மடிப்பு கலை என்று சொல்லலாம், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இந்த கலையினை ஓரிகாமி என்று ஜப்பானிய மொழியில் செல்வதற்கு காரணம் உண்டு.

இந்த கலை முதல் முதலில் தோன்றிய நாடு ஜப்பான், இங்கிருந்துதான் இந்த கலை உலகம் முழுவதற்கும் பரவியது எனவே ஓரிகாமி என்று ஜப்பானிய மொழியில் அனைத்து நாட்டினரும் அழைக்கின்றனர்.

ஓரிகாமி என்றால் என்ன?

காகிதங்களை பயன்படுத்தி நாம் பல்வேறு விதமான கலை பொருட்களை செய்யலாம். உதாரணமாக , காகிதம் வெட்டும் கலை, காகிதம் ஒட்டும் கலை, காகிதம் சுருட்டும் கலை, இப்படி  பல வகைகள் உள்ளன ,அவைகளில் ஓரிகாமி கலைக்கு என்று சில தனித்தண்மைகள் உண்டு.

ஒரு சதுரமான அல்லது செவ்வகமான காகிதத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், பசை கொண்டு ஒட்டாமல், கயிறு கொண்டு கட்டாமல் , அதாவது காகிதம், நமது கையால் மடிப்பது, கற்பனை திறன் மட்டுமே போதுமானது. வேறு எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. மடிப்பு மட்டுமே இங்கு நாம் கையாளவேண்டிய தொழில்நுட்பம். எனவே தான் இந்த கலையினை நாம் காகித மடிப்பு கலை என்று அழைக்கிறோம்.

இந்த ஓரிகாமி கலை மூலமாக நம்மை சுற்றி உள்ள உயிருள்ள, மற்றும் உயிரற்ற பொருட்களை நாம் உருவாக்க முடியும். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள், மலர்கள், மேசை, பெட்டி, வீட்டில் அலங்கார பொருட்கள் என பல ஆயிரக்கணக்கான உருவங்களை நாம் உருவாக்கலாம்.

ஓரிகாமியின் வரலாறு

இன்று உலகில் பல நாடுகளில் ஓரிகாமி சங்கம் , குழுக்கள் இயங்கி வருகிறது பல ஆயிரம் புத்தகங்கள் வெளிவந்துள்ளது. ஓரிகாமி பல நாடுகளில் பள்ளி பாடமாக உள்ளது. ஓரிகாமி கலைக்கு தேவையான மூலப்பொருள் காகிதம் என்பதால் காகிதம் கண்டுபிடித்ததற்கு பிறகே இதன் வரலாறு துவங்குகிறது என்பதை நாம் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.  சீனர்கள் தான் காகிதம் உருவாக்கும்  கலை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர் அங்கிருந்து ஐப்பான் நாட்டிற்கு தோராயமாக கிபி 6 ம் நூற்றாண்டில் புத்த துறவிகள் மூலமாக காகிதம் வந்துசேர்ந்திருக்கிறது. காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில் காகிதம் மிகவும் மதிப்பு மிக்க விலை உயர்ந்த பொருளாக இருந்திருக்கிறது, சாமானிய மக்களுக்கு எட்டாத ஒரு பொருளாகவே காகிதம் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் காகிதம் புத்த மடாலயங்கள், மற்றும் பெரும் வசதிபடைத்தவர்களின் , வீடுகளை விழாக்காலங்களில் அலங்கரிக்க மட்டுமே பயண்படுத்தியிருக்கிறார்கள்.

ஜப்பானிய புத்த துறவிகளிடமிருந்து தான் இந்த ஓரிகாமி கலை முதலில் தோன்றியதாக தெரிகிறது, உலகில் உள்ள பல ஓரிகாமி கலைஞர்களின் கருத்துக்களின் படி சமார் 2000 ஆண்டுகளை உள்ளடக்கியதாக ஓரிகாமி கலையின் வரலாறு உள்ளது. சீனர்கள் தான் முதலில் காகிதம் தயாரிப்பு தொழிநுட்பத்தை கண்டுபிடித்தவர்கள் எனவே , ஓரிகாமியின் பிறப்பிடமும் சீனாதான் என்ற விவாதம் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் உலகிலுள்ள பெரும்பாலான மூத்த ஓரிகாமி கலைஞர்கள் ஓரிகாமியின் பிறப்பிடம் ஜப்பான் என்று ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

நவீன  உலக ஓரிகாமியின் தந்தை – அகிரா யூசிசவா

அகிரா யூசிசவா
அகிரா யூசிசவா

ஓரிகாமி கலையை முதலில் யார் கண்டுபிடித்தார் என்ற வரலாற்று செய்தி இல்லை, தாய் வழியே மகனுக்கு என்ற வழி வழியாக வந்த ஒரு மரபுக்கலையாகவே ஓரிகாமி கலை உள்ளது. வாய்வழியாக ஒருவரிடம் கேட்டு மற்றவருக்கு இந்த கலை பல ஆண்டுகளாக பரவியிருந்தது. கிட்டத்தட்ட 20 ம் நூற்றாண்டு வரை ஓரிகாமி கலைக்கு என்ற ஒரு அமைப்பு, அறிவியல் ரீதியாக முறைப்படுத்தப்பட்ட எந்த ஒரு திட்ட வடிவம் இல்லாத சூழல் தான் இருந்திருக்கிறது. 1911 ம் ஆண்டிற்கு பிறகு ஓரிகாமி உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவுகிறது ஏனெனில் இந்த ஆண்டு தான்  நவீன  உலக ஓரிகாமியின் தந்தை என்று அழைக்கப்படும் அகிரா யூசிசவா பிறந்த ஆண்டு. இவரை உலகின் தலைசிறந்த ஓரிகாமி கலைஞர்கள் கொண்டாடுகின்றனர்.

ஓரிகாமி கலைக்கு இயற்கை கொடுத்த பரிசு அகிரா யூசிசவா என்று இவரை போற்றுகிறார்கள். ஜப்பான் அரசு அந்த நாட்டின் உயரிய விருதை இவருக்கு அளித்து பாராட்டியுள்ளது. 2012 ம் ஆண்டில் Google நிறுவனம் தனது Google என்ற எழுத்துக்களை ஓரிகாமி வடிவில் வடிவமைத்து இவருக்கு மறியாதை செய்தது. அகிரா யூசிசவா தன் வாழ்நாள் முழுவதையும் ஓரிகாமி கலை வளர்ச்சிக்காகவே வாழ்ந்தார். 1911 ம் ஆண்டு பிறந்த இவர் 2005 ம் ஆண்டில் இயற்கயோடு கலந்தார்.

தனது குழந்தை பருவத்தில் 4 வயதில் மடிக்க துவங்கியவர் தன் வாழ்நாள் முழுவதும் 94 வருடங்கள் ஓரிகாமி கலைக்காகவே வாழ்ந்திருக்கிறார். மிகவும் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர், எல்லோருக்கும் உள்ளது போல பல்வேறு சோதனைகளை கடந்திருக்கிறார், பல வேலைகள் செய்திருக்கிறார் , அப்படி என்ன இவர் ஓரிகாமி கலைக்கு செய்தார் என்ற கேள்வி தோன்றும். ஆம் உலகம் முழுவதும் இன்று நாம் காணும் ஓரிகாமி புத்தகங்களில் உள்ள ஓரிகாமி டயகரம்,என்ற கோட்டு மொழியை உருவாக்கினார், அனைவரும் எளிதில் விளங்கிகொள்ள ஓரிகாமி கலைக்கென்று சிறப்பு குறியீடுகளை உருவாக்கினார். ஓரிகாமயில் (wet folding) தண்ணீர் நனைத்து மடிக்கும் புதிய ஓரிகாமி முறையை கண்டுபிடித்தார். இந்த கலை உலகம் முழுவதும் பரவ பல புத்தகங்கள் எழுதியுள்ளார். உலகின் பலநாடுகளில் கருத்தரங்கங்கள் நடத்தியுள்ளார் இதற்காக இரவு பகலாக தன் வாழ்நாள் முழுவதும் இயங்கியிருக்கிறார். எனவே இவரை நாம் நவீன ஓரிகாமியின் தந்தை என்று அழைக்கிறோம்.

ராபர்ட் லங்க (Robert J.Lang)
ராபர்ட் லங்க (Robert J.Lang)

இன்று ஓரிகாமி உலகம் முழுவதும் பரவியிருக்கிறது,  இன்றைய உலகில் சமகாலத்தில் ஓரிகாமியின் பிதாமகனாக விளங்குபவர் அமேரிக்காவை சேர்ந்த ராபர்ட் லங்க (Robert J.Lang) இவர் ஒரு சதுர காகிதத்தில் 500 – 1000 மடிப்புகள் வரை மடித்து மனித உருவங்கள், கரப்பான் பூச்சிகள், என மிக நேர்த்தியாக செய்யக்கூடிய கலைஞர்  ஒரு வெட்டு , பசை இல்லாமல் ஒரே நாளில் செய்யக்கூடியவர் இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இன்று உலகில் பல நாடுகளில் ஓரிகாமி சங்கம் , குழுக்கள் இயங்கி வருகிறது பல ஆயிரம் புத்தகங்கள் வெளிவந்துள்ளது, ஓரிகாமி பல நாடுகளில் பள்ளி பாடமாக உள்ளது. இவற்றைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்ததடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

நன்றி,
தியாக சேகர்
ஓரிகாமி கலைஞர்

2 Comments

  • EDEN SCIENCE CLUB It is for science resources says:

    அற்புதமான கட்டுரை. ஓரி காமி காகித கலை மட்டுமல்ல, குழந்தைகளின் ஐம்புலன் ஒருங்கிணை செயல்பாட்டிற்கு, பெரிதும் உதவுவதால் தான் பள்ளிகளில் பாடநூல்களின் இடையே செயல்பாடாக கொடுத்துள்ளனர். இது கற்பனையை வளர்க்க உதவும் கலை.

    • ரமேஷ் says:

      அற்புதமான கலை பற்றிய அருமையான ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு கட்டுரை தொடரட்டும் தொடர்வோம் நன்றி

Leave a comment