முதல் பெண்கள் (புத்தக அறிமுகம்) – காயத்ரி விவேக்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சாதி, மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் கடந்து, எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படும் ஜீவன் ஒன்று உண்டென்றால் அது பெண்களே. இன்றும், பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் பெண்களையே காரணியாக சொல்லும் மனபோக்கு தான் இங்கு அதிகம் நிலவுகிறது. “நீ ஏன் இந்த நேரத்துக்கு அங்க போன? நீ ஏன் அந்த உடை அணிந்து இருந்த?” போன்ற கேள்விகள் பெண்களை நோக்கியே நீள்கிறது.வேலைக்கு சென்றாலும் சொல்லாவிட்டாலும், சமையல், துணி துவைப்பது, துப்புரவு, குழந்தை பராமரிப்பு  என வீட்டு வேலைகள் என அனைத்தும் பெண்களுக்கானது என்றே கருதப்படுகிறது. இதுவே நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைகளாக உள்ளது. இன்றைய நிலையே இப்படி எனும் போது கடந்த 100 ஆண்டுகளில் ஒரு பெண் ஒரு துறையில் வளர்ந்து முதன்மையாளராக மிளிர எத்தனை பாடுபட்டிருக்க வேண்டும். சிறுவயது திருமணம், விதவை கோலம், கல்வி மறுக்கப்பட்ட சூழல், சாதி சமய கட்டுபாட்டு இதை எல்லாம் கடந்து ஒரு துறையில் வளர்ந்து அதில் முதல் என்ற தடம் பதித்த வரலாறு தான் இந்த புத்தகம். இந்தப் புத்தகம் வெறும் முதல் பெண்கள் பற்றியது மட்டும் அல்ல நம் நாட்டின் பாலின வேறுபாடு எப்படி இருக்கிறது என்பதற்கான திறப்பும் கூட. மிக சிறந்த வரலாற்று ஆவணம் இந்நூல்.

ஒவ்வொரு பெண் பற்றியும் தகவல்களை மிகுந்த சிரத்தையுடன் தேடி அலைந்து அவர்களுடைய புகைப்படம் வரை கண்டுபிடித்து எழுதி இருக்கும் ஆசிரியரின் உழைப்பு மலைப்பை தருகிறது அந்த வகையில் இப்படி முதல் பெண்கள் பற்றிய ஆவணத்தை உருவாக்கி அவரும் ஒரு முதல் பெண்ணாக ஜொலிக்கிறார்.

மற்ற துறைகளை விட சினிமா துறையில் ஆண் ஆதிக்கம் சற்றே அதிகமானது. இதில் 70 வயதிலும் ஆண் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். ஆனால் பெண்களோ? கொஞ்ச காலத்திலே காணாமல் போகிறார்கள். கதாநாயகியாக ஜொலித்தவர்களுக்கே இந்த நிலை எனில் நகைச்சுவை நடிகைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அந்தத் துறையிலும் ஜொலித்த முதல் நகைச்சுவை நடிகைகள் அங்கமுத்து மற்றும் மதுரம். அவர்களை பற்றி படிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அதே ஆச்சரியத்தும் அவர்களின் நகைச்சுவை காட்சிகளை யூடியூப்பில் பார்த்து ரசித்தேன்.

மகளுக்கு indian forest service தான் கனவு, அவளுக்காக கதைகள் சொல்ல பெண் அதிகாரிகள் சார்ந்த வெற்றி கதைகளை தேடிக்கொண்டிருப்பேன். இந்தப் புத்தகத்தில் முதல்  IAS அதிகாரியான அன்னா ராஜம் பற்றி பற்றி வாசித்ததும், மகளிடம் அவரைப் பற்றியும் அவரது ஆளுமைப் பற்றியும் அறிமுகம் செய்தேன். அவளிடம் இந்தக் கதைகளை பகிரும் பொது அவளது  கண்களில் ஓர் நம்பிக்கை மிளிர்ந்ததை உணர முடிந்தது.

வானியல் என்றதும் நமக்கு நினைவிற்கு வருபவர் ரமணன் அவர்கள் தான் ஆனால் இந்திய வானியல் மையத்திற்கு பெரும் பங்காற்றிய “அன்னா மானி” பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்தத் துறையிலும் பெண்கள் உண்டு என்பதை உணர முடிந்தது. 8 வயதில் பிறந்த நாள் பரிசாக தந்தை குடுத்த வைர தோடு வேண்டாம் என்று நிராகரித்து அதற்கு பதிலாக புத்தகம் வாங்கியவர், இவர் வரைந்து உருவாக்கிய வானியல் கருவிகள் தான் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவின் “weather women” இவரை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கேப்டன் லஷ்மி பற்றி முன்னரே அறிந்திருக்கிறேன், ஆனால் அவரது அம்மா “அம்மு” பற்றி இந்த புத்தகத்தில் தான் அறிந்துக் கொண்டேன். அவர் தான் இந்திய சாரண சாரணியர் இயக்கத்தின் முதல் பெண் தலைவர்.

தமிழகத்தின் முதல் இஸ்லாமியப் பெண் சட்டமன்ற உறுப்பினர் “கதீஜா யாகூப் ஹாசன்” பற்றி படிக்கும் போது ஒரு ஆச்சரியமான தகவல். அவரது கணவர் யாகூப் ஹாசன் சிறையில் சீனிவாசன் என்பவரை ஒரு சச்சரவில் மற்ற கைதிகளிடமிருந்து காப்பாற்றி இருக்கிறார். பின் இருவரும் நட்புடன் இருந்திருக்கின்றனர், அந்த நட்பின்  மரியாதையாக தன் வழி தோன்றல்கள் அனைவருக்கும் ஹாசன் என்ற அடைமொழயுடன் பெயர் வைத்து இருக்கிறார். அவர்கள் தான் கமல்ஹாசன், சாருஹாசன். ஆஹா! என்ன ஒரு நட்பு.

இன்று, அவள் விகடன், femina என்று பல்வேறு பெண்கள் பத்திரிக்கை வந்த போதும் 100 ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்காக இந்தியன் ladies magazine நடத்திய முதல் பெண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் தென்னிந்தியாவில் முதல் பெண் பட்டதாரி கமலா சத்தியநாதன் பற்றி படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் கல்யாணி என்பவர் படிப்பை முடித்து கணவருடன் செல்ல வேண்டிய நிர்பந்தம். மருத்துவ பணி மேற்கொள்ளாமல் வரலாற்றில் மறைந்து விட்டார் என அறியம் போது பெண்களுக்கு மட்டுமே இப்படியான சோகங்கள் நடக்கும் என அறிந்துக் கொள்ள முடியும். கூடவே படித்த சக்குபாய் என்ற கால்நடை மருத்துவர் செய்த சாதனைகள் கல்யாணி விட்டு சென்ற இடத்தை நிரப்பி இருக்கிறது . இன்றும் கால்நடை மேல் படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு இவர் பெயரிலேயே தங்க பதக்கம் வழங்கப்படுமளவு அவர் கால் நடை துறைக்கு பல அரிய செயல்கள் செய்திக்கிறார்.

முதல் தலித் பெண் அமைச்சர் சத்யவாணியின் ஆளுமை நம்மை நிச்சயம் பிரமிப்படைய செய்யும். அண்ணாவிற்கு பிறகு திராவிட கட்சியின் தலைவராக கருணாநிதியை முன் மொழிந்தவர் சத்யவாணி, அவரே பின்னாளில் சட்ட மன்றத்திலேயே கலைஞரை நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்த்து கேள்வி கேட்ட வீரத்தை கண்டு ஆச்சரியப் படாமல் இருக்க இயலாது.

சித்தி ஜூனைதா பேகம் என்பவர் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர். உலகம் முழுதும் அவரது கதைகள், நாவல்கள் போற்றப்பட்டப் போதும் அவரது சொந்த மண்ணில் நாகூரில் எண்ணற்ற கேலிகள் சந்தித்திருக்கிறார். அவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம், கலப்பு மணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பு போன்ற புரட்சி கருத்துகளுடன் காதலா கடமையா என்ற  நாவலை எழுதிருக்கிறார்.

ஆர்.எஸ்.சுப்புலட்சுமி, மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பெண் பட்டதாரி மற்றும் முதல் கைம்பெண் பட்டதாரி. லிட்டில் விடோ என்று அறியப்பட்டவர். கல்வி கற்று அதன் மூலம் அவரையும் மீட்டு அதே கல்வியின் பாதையில் பல ஆயிரம் பெண்களை மீட்டெடுத்தவர். கைம்பெண்களுக்கு அடைக்கலம் தரும் சாரதா இல்லத்தை நிறுவியவரும் இவரே. சாரதா வித்யாலயா , லேடி வில்லிண்டன் பள்ளி போன்றவை உருவாக காரணமாக இருந்தவர்.

மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினி ஒரு திருடனுக்கு சிறு உதவி செய்து பெரிய தொழில் அதிபர் ஆக காரணமாக இருப்பார் அது வெறும் கதை அல்ல அப்படி ஒரு பிச்சைக்காரனை தொழில் அதிபர் ஆக்கியது தாரா. இவர் தான் இந்தியாவின் முதல் பெண் மேயர். கருணை உள்ளம் கொண்டவர் சென்னை மாநகராட்சியில் முதலில் சத்துணவு திட்டம் கொண்டு வந்தவர்.

12 வயதில் ஆந்திரா மாநிலத்தில் காந்தியின் மொழிபெயர்ப்பாளர் ஆக பிரச்சார போர்வாள் ஆக திகழ்ந்த துர்காபாய் தேஷ்முக் தான் மந்திய சமூக நல வாரியத்தை தோற்றுவித்து  அதன் முதல் தலைவரராகவும் இருந்தார். ஆந்திரா மகிளா சபா உருவாக்கியவர் இவரே.

100 வயதில் கூட, வருடத்தில் 6 மாதம் நீச்சல் பயிற்சி செய்துக் கொண்டு இருந்தார் மருத்துவர் பத்மாவதி. இன்றும், 102 வயதிலும் நோயாளிகளுக்கு சிகச்சை அளித்து கொண்டு இருக்கிறார் இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் மருத்துவர். இந்தியாவில் cardiology பிரிவுக்கு என்று பட்டமேற்படிப்பு M.D உருவாக காரணமாக இருந்தவர். இவர் தொடங்கிய ஆல் இந்தியா ஹார்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு மிக குறைந்த கட்டணத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து வருகிறது, ஆசியாவிலேயே முதல் முறையாக இதய நோய் சிகிச்சைக்கென தொடங்கப்பட்ட தனி அமைப்பும் இதுவே.

புகழ் பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனரேட்டர்கள் வடிவமைத்தவர் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா. இளம் விதவையாக இருந்த போதும் தன் மன வலிமையால் போராடி நாட்டின் முதல் பொறியாளராக உருவானவர். 1964 நியூயார்க் பெண் பொறியாளர்கள் மாநாட்டில் பேசிய லலிதா, “பெண்கள் படிப்புடன் நின்றுவிடாமல் பணியிலும் தங்கள் முத்திரை பதிக்க வேண்டும்” என்று உரையாற்றினார். அதைப் படித்ததும் மனதில் ஒரு குற்ற உணர்வே மேலிட்டது, காரணம் நானும் பொறியியல் படித்தவள் என்பது தான்.

விஞ்ஞானி என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது அப்துல் கலாம் அல்லது ராமன் அவர்களே அங்கும் நமக்கு எந்த பெண்களும் நினைவில் வருவது இல்லை ஆனால் நம் நாட்டில் முதல் பத்மஸ்ரீ விருது வாங்கிய பெண் விஞ்ஞானி ஜானகி அம்மாள் அவர் தான் இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் மற்றும் அமெரிக்காவில் தாவரவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்.

மொத்தம் 43 பெண்கள் அவர்களுடைய சமூக பங்களிப்பு அவர்களுடைய ஆளுமைகளை படிக்க படிக்க எண்ணற்ற ஆச்சரியங்கள் ஏற்படுகிறது. இதில் பல கட்டுரைகளில் ஒரு ஒற்றுமை காணமுடிந்தது. அது பல ஆளுமைகள் காந்திய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு களத்திற்கு வந்தவர்கள். அனைவரும் தங்களை முன்னேற்றத்தை விட சமூகத்தின் முன்னேற்றம் முக்கியமாக எண்ணி பாடுபட்டு இருக்கிறார்கள். இது வெறும் கட்டுரை நூல் அல்ல இது ஒரு ஆவணம் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு ஆவணமாக நான் கருதுகிறேன்.

இவ்வளவு பெரிய உழைப்பை கொட்டி மிக சிறந்த ஆவண நூல் எழுதிய எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கு என் நன்றிகள்.

Leave a comment