எங்கள் அப்பா ஒரு தையல் தொழிலாளி. சந்தடி மிக்க கடைத்தெருவில் அவர் கடை வைத்திருந்தார். மாலையில் நான் பள்ளிக்கூடம் விட்டதும் எங்கள் அப்பாவின் கடை வழியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். கடைக்குள் அடியெடுத்து வைத்ததுமே முதலில் அறைமூலையில் வைக்கப்பட்டிருக்கும் குடத்திலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து அருந்துவேன். குளிர்ந்த நீரை அருந்தியதுமே உடல் புத்துணர்ச்சியடையும்.
அப்பா எனக்கு ஐந்து காசு தருவார். கடைத்தெருச் சந்திப்பில் இருக்கும் பட்டாணிக்கடையில் அந்த ஐந்து காசுக்கு பட்டாணியோ அல்லது பொட்டுக்கடலையோ வாங்கி கால்சட்டைப்பையில் நிரப்பிக்கொள்வேன். பிறகு நிதானமாக ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டபடி வீட்டுக்கு நடந்து செல்வேன். இது தினசரிப்பழக்கம். அந்தப் பட்டாணிக்கடையில் வார, மாத இதழ்கள் விற்பனைக்காக கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். நான் அவற்றின் அட்டைப்படங்களை மட்டும் வேகமாக வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவேன். ஒருநாள் அந்த இதழ்களின் வரிசையில் அணில் என்னும் பெயரைப் பார்த்தேன். அந்தப் பெயரும் அட்டையில் தீட்டப்பட்டிருந்த ஓவியமும் வித்தியாசமாக இருந்தது. ஒரு சாயலில் அம்புலிமாமா புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஓர் ஓவியத்தைப்போல அந்தப் படம் தெரிந்தது. நான் அதையே ஆவலோடு பார்த்தபடி நீண்ட நேரம் நின்றுவிட்டேன்.
“என்னடா, அணில் வேணுமா? சின்ன புள்ளைங்க படிக்கிற புத்தகம்தான். பதினஞ்சி பைசா, வச்சிருக்கியா?” என்று கேட்டார் கடையில் இருந்த அண்ணன். நான் வேகமாக உதட்டைப் பிதுக்கி
தலையசைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்தேன். ஒவ்வொரு கடலையையும் வாயில் போடும்போதெல்லாம் அணில் அட்டைப்படமே மனத்தில் எழுந்தது. இரவெல்லாம் கூட அந்த நினைவிலேயே இருந்தேன். கட்டுகட்டாக அணில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் அறையில் தனிமையில் உட்கார்ந்து படிப்பதுபோல கனவு கண்டேன்.
மறுநாள் மாலை ஐந்து பைசாவோடு பட்டாணிக்கடையில் நின்றபோது தன்னிச்சையாக என் பார்வை அணில் புத்தகத்தின் பக்கம் திரும்பியது. அந்த அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் பதினைந்து பைசா என்பது மலைப்பூட்டும் அளவுக்கு எனக்குப் பெரிய தொகையாகத் தெரிந்தது. சட்டென எழுந்த யோசனையின் விளைவாக, வழக்கம்போல பட்டாணி வாங்குவதற்காக நீட்டிய கையை மடக்கிக்கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன்.
கடைக்காரர் சற்றே பதற்றமுற்று என்னைப் பார்த்து “என்ன தம்பி, என்ன, ஏன் போற?” என்று கேட்டார். நான் அவசரமாக அவரைத் திரும்பிப் பார்த்து புன்னகையோடு “ஒன்னுமில்லண்ணே, அப்பறம் வரேன்” என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன். பட்டாணி வாங்குவதற்காக கொடுக்கப்படும் ஐந்து பைசாவை மூன்றுநாள் தொடர்ச்சியாக சேமித்துவைத்தால் அணில் பத்திரிகையை வாங்கிவிடலாம் என்பதுதான் புதிதாகத் தோன்றிய யோசனை. மூன்றாவது நாள் பதினைந்து பைசாவைக் கொடுத்து பட்டாணிக்கடைக்காரரிடமிருந்து அணில் பத்திரிகையை வாங்கினேன். அவர் அக்கணத்திலேயே என் யோசனையைப் புரிந்துகொண்டார். “இதுக்காகத்தான் பட்டாணி வேணாம்னு அன்னிக்கு ஓடிட்டியா?. சரியான கிறுக்கன்டா நீ?” என்று புன்னகைத்தார்.
அணில் இதழை கையில் பிடித்ததுமே மனம் விண்ணிலேறிப் பறப்பதுபோல இருந்தது. சொந்தமாக பணம் கொடுத்து நான் வாங்கிய முதல் இதழ். எனக்கே எனக்கென வாங்கிய இதழ். எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நான் இதைப் புரட்டிப் படிக்கலாம். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் படிப்பதற்கு கடன் கொடுக்கலாம். இது என் இதழ். அந்தச் சுதந்திரத்தை நினைக்கநினைக்க மகிழ்ச்சியாக இருந்தது.
சாலை ஓரமாக நடந்தபடியே இதழை வேகவேகமாகப் புரட்டிப் பார்த்தேன். முதல் பக்கத்தில் ஒரு வேலின் படம். அதற்கு நடுவில் ஒரு பழத்தைக் கொறித்தபடி இருக்கும் அணிலின் படம். அதற்குப் பிறகு கதைகளும் படங்களுமாக எல்லாப் பக்கங்களும் நிறைந்திருந்தன.
வீட்டுக்கு வருவதற்குள் ஒரு கதையை முழுமையாகப் படித்துவிட்டேன். மகிழ்ச்சியில் பித்துப் பிடித்துவிட்ட மாதிரி இருந்தது. அன்று இரவு சாப்பிட்ட பிறகு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து இதழை முழுமையாகப் படித்த பிறகே உறங்குவதற்குச் சென்றேன். மாதத்துக்கு இருமுறை அணில் வெளியானது. சில நாள் பழக்கத்திலேயே, அணில் எந்த நாளில் கடைக்கு வரும் என்கிற கணக்கெல்லாம் எனக்கு அத்துபடியாகிவிட்டது. கடையில் அது இறங்கியதுமே வாங்கிவிடுவதற்கு வசதியாக பட்டாணியை நிறுத்தி சில்லறைகளைச் சேமிக்கத் தொடங்கிவிடுவேன். அணில் இதழில் ஏராளமான மாயாஜாலக்கதைகள் வெளிவந்தன.
மூன்று தலை மனிதன், மீன் உடலோடு தண்ணீரில் வாழும் பெண், பறக்கும் சிறுவன், தவளையாக மாறும் மனிதன், பேசும் முயல் என பல விசித்திரங்களின் கலவையாக அணில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். விறுவிறுப்பான நடையின் காரணமாக, புத்தகத்தை கையில் எடுத்ததுமே படித்துவிடலாம். நாளடைவில், அணிலும் அம்புலிமாமாவும் எனக்கு இருவிழிகளாக மாறிவிட்டன.
அணில் இதழில் ஒருபக்கக் கதை, சித்திரக்கதை, தொடர்கதை என எல்லா வகைமைகளிலும் கதைகள் வெளிவந்தன. எல்லாவற்றைவிடவும் முக்கியமானது அணில் அண்ணா என்பவர் எழுதிவந்த கதை. அம்புலிமாமா கதையில் காணப்படும் விக்கிரமாதித்தன் போல, அணில் அண்ணா எழுதும் கதையிலும் ஒருவன் உண்டு. அவன் பெயர் வீரப்பிரதாபன். மாவீரன். அவனை வெல்ல மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் என மூன்று உலகங்களிலும் கிடையாது. வெல்லமுடியாத வீரனாக அவன் மூன்று உலகங்களிலும் வலம்வந்து அனைவரையும் அடக்கி ஆட்சி செய்தான். வீரப்பிரதாபனுக்கு மரணமும் கிடையாது. ஒருமுறை விண்ணுலகத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த தேவர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து அமுதத்தை வாங்கி அருந்திவிட்டதால் அவனுக்கு இறவா வரம் கிடைத்துவிடுகிறது. ஒவ்வொரு இதழிலும் வீரப்பிரதாபனைப்பற்றி புதுப்புது செய்திகளைத் தெரிவிப்பதாக அந்தக் கதை நீண்டுகொண்டே போகும். அடுத்ததாக வீரப்பிரதாபன் செய்யவிருக்கிற செயல் என்ன என்று அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டுவதாக, ஒவ்வொரு பகுதியும் முடிவடையும். ஓர் இதழைப் படித்து முடித்ததுமே அடுத்த இதழ் எப்போது வரும் என மனம் ஏங்கத் தொடங்கிவிடும். வீரப்பிரதாபனைப்போலவே அவனுடன் நடமாடும் மாயாஜாலக்குள்ளன் பாத்திரத்தையும் மறக்கமுடியாது. அவன் பேச்சு, செயல் எல்லாமே நகைச்சுவையாக இருக்கும். வீரப்பிரதாபன் ஏறி வரும் குதிரையிலேயே அவனும் இருப்பான். ஆனால் குதிரையின் காதுக்குள் ஒளிந்திருப்பான். அந்த அளவுக்கு சிறிதாக கூழாங்கல் அளவுகே அவன் உருவம் இருக்கும். வீரப்பிரதாபனும் மாயாஜாலக்குள்ளனும் நிகழ்த்தும் ஒவ்வொரு உரையாடலும் படிக்கப்படிக்க நகைச்சுவையாக இருக்கும்.
அணில் வெளியிட்ட கதைகளும் ஓவியங்களும் வசீகரமானவை. விடுமுறை நாட்களில் அணில் ஓவியங்களைப் பார்த்து வரைந்து பார்ப்பது எனக்குள் படிந்துபோன பழக்கம். சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்றமாதிரி விறுவிறுப்பான வகையில் பலவிதமான சம்பவங்களை இணைத்து கதைசொல்வதில் அணில் அண்ணா பெரிய திறமைசாலி. அவற்றைப் படிக்கும்போதெல்லாம் நாமும் அப்படி கதைசொல்ல வேண்டும் என்ற ஆசை தானாகவே பிறக்கும்.