ஓதாமல் ஒருநாளும் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 10)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தொடக்கப்பள்ளிப் பாடத்தில் “உலகநீதி” எங்களுக்குப் பாடமாக இருந்தது. அந்த நாட்களில் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்று தொடங்கும் பாடல் எங்களுக்கெல்லாம் உற்சாகமூட்டும் பாடல். கடகடவென்று ஒப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு அந்தப் பாடல் மனப்பாடமாக் இருந்தது. அந்த அளவுக்கு அவ்வரிகளோடு மனம் ஒன்றியதற்குக் ஒரே காரணம் எங்கள் கண்ணன் ஐயா.ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாட்கள் தொடர்ச்சியாக அவர் எங்களுக்கு இந்தப் பாடலைப் பாடவைத்து பயிற்சி கொடுத்தார்.  முதலில் எங்களில் யாருக்குமே அது புத்தகத்தில் இருக்கிற பாடல் என்றே தெரியாது. வகுப்புக்குள் வந்ததும் ஐயா எங்களைப் பார்த்து “இன்னைக்கு உங்களுக்கு புதுசா ஒரு பாட்டு கத்துக்குடுக்கட்டுமா?” என்றுதான் கேட்டார். நாங்களும் புதிதாக கற்றுக்கொள்ள இருக்கிற பாட்டுக்கு ஆசைப்பட்டு ஓ என்று சத்தமிட்டு சம்மதம் சொன்னோம்.

பாட்டின் முதல் நான்கு வரிகளைமட்டும் ஐயா முதலில் ராகத்தோடு தனியாகப் பாடிக் காட்டினார். அந்த ஓசை அமைப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்து அவர் ஒவ்வொரு வரியாகச் சொல்லச்சொல்ல நாங்கள் அதைத் திருப்பிச் சொன்னோம். மூன்று நான்கு முறைகளுக்குப் பிறகு நாங்களாகவே சொல்லத் தொடங்கினோம். தலையை இருபுறமும் மாறி மாறி அசைத்தபடி நாங்கள் பாட்டைப் பாடிய அந்தநாள் காட்சி இன்னும் என் மனத்துக்குள் பசுமையாக இருக்கிறது. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் கூட, அந்த வரிகளை அடிபிறழாமல் எங்களால் சொல்லிவிட முடியும். அந்த அளவுக்கு பாட்டு மனத்தில் பதிந்துவிட்டது.

ஒரு வாரம் இப்படியே கடந்தது. அடுத்த வாரத்தில் ஐயா எங்களிடம் “வாழ்க்கையில நீங்க எதை மறந்தாலும் இந்தப் பாட்டை மட்டும் மறக்கவே கூடாது. ஒவ்வொரு வரிக்கும் ஒரு நீதி இருக்குது. ஒவ்வொரு நீதிக்கும் ஒரு கதை இருக்குது” என்று சொல்லிவிட்டு ஒரு மாணவனிடம் “முதல் வரி என்ன, நீ சொல்லு” என்றார். அவன் உடனே கணீரென்ற குரலில் “ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்” என்று சொன்னான். மறுகணமே “இப்ப எல்லாரும் சேர்ந்து சொல்லுங்க” என்றார் ஐயா. வகுப்பிலிருந்த மாணவர்களும் மாணவிகளும் ஒரே குரலில் அந்த வரியை அவர் போதும் என்று சொல்லும் வரை மீண்டும் மீண்டும் சொன்னோம். “ஓதாமல்னு சொன்னா படிக்காமல்னு அர்த்தம். ஒருநாள் கூட படிக்காமல் இருக்கக்கூடாது. சாப்படறது, தண்ணீர் குடிக்கறது, மூச்சு விடறது மாதிரி ஒவ்வொரு நாளும் படிக்கணும். படிப்புங்கறது அவ்வளவு முக்கியம்”

ஐயா சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுந்தர் ஒரு கையை உயர்த்தினான். பாடத்தில் சந்தேகம் இருப்பவர்கள் கையை உயர்த்தவேண்டும் என்று ஐயாதான் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். ஐயா அவனை எழுப்பி “என்னடா சந்தேகம்?” என்று விசாரித்தார். அவன் தயங்கியபடியே “லீவ் நாள்ல கூட படிக்கணுமா ஐயா? அதான் சந்தேகம்” என்றான் அவன். ஐயாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது. அவர் மெதுவாக சுந்தரைப் பார்த்து “லீவ் நாள்ல நீ சாப்புடுவியா இல்லயா?” என்று மெதுவாகக் கேட்டார். “சாப்புடுவேன் ஐயா. அன்னைக்குத்தான் ஐயா கறிக்கொழம்பு வைப்பாங்க” என்றான். “ஒவ்வொரு நாளும் சாப்பிடறமாதிரி ஒவ்வொரு நாளும் படிக்கணும். படிப்புக்கு ஓய்வே இல்லை” என்றார் ஐயா. சரி என்று தலையைசத்துவிட்டு உட்கார்ந்துகொண்டான் சுந்தர். திடீரென ஐயா எங்களைப் பார்த்து “நம் தேசத்துக்கு பிரதம மந்திரி யார் தெரியுமா?” என்று கேட்டார். நாங்கள் அனைவரும் “லால் பகதூர் சாஸ்திரி” என்று சொன்னோம்.

“ரொம்ப பெரிய படிப்பாளி அவர். அவர் எப்படி படிச்சார் தெரியுமா? அவருக்கு அப்பா இல்லை. சாஸ்திரிக்கு ஒரு வயது இருக்கும்போதே செத்துட்டாரு. அவுங்க அம்மாதான் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. தொடக்கத்துல அவுங்க ஊருலயே இருந்த சின்ன பள்ளிக்கூடத்துலயே படிச்சாரு. அதுக்கப்புறம் காசிங்கற ஊருல அவுங்க மாமா வீட்டுல தங்கி படிச்சாரு.” ஐயா ஒரு கணம் நிறுத்தி “காசிங்கறது வடநாட்டுல இருக்கிற ஒரு பெரிய ஊரு. பெரிய புண்ணியஸ்தலம்” என்றார்.
“அங்கதான் கங்கை நதி ஓடுது. சாஸ்திரி படிக்கிற பள்ளிக்கூடம் நதிக்கு அந்தப் பக்கமா இருந்தது. எல்லாப் புள்ளைங்களும் படகுல ஏறி நதியைக் கடந்துபோய் மறுபக்கத்துல இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போய்டுவாங்க. ஆனால் படகுல போவணும்ன்னா பணம் வேணும். சாஸ்திரிக்கு பணம் கொடுக்க யாருமே இல்ல. அதனால படகுல ஏறி அவரால போகமுடியலை. அதனால சாஸ்திரி மனம் தளர்ந்துபோய் உட்காரலை.

கங்கைக்கரை ஓரமாவே நடந்துபோய், எந்த இடத்துல அகலம் கொறாச்சலா இருக்குதோ, அந்த இடத்துல புத்தக மூட்டையையும் துணிமணிங்களயும் தூக்கி தலைமேல வச்சிகிட்டு ஆத்துல மெதுவா எறங்கி நடந்துபோய் மறுகரையில ஏறிடுவாரு. வரும்போதும் ஆத்துல எறங்கி நடந்துவந்துடுவாரு. ஒருநாள் இல்ல, ரெண்டுநாள் இல்ல, அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சி முடிக்கறவரைக்கும் வருஷக்கணக்கா அப்படித்தான் கஷ்டப்பட்டு படிச்சார்.

அதுக்கப்புறம் காலேஜ்ல சேர்ந்து படிச்சி பட்டம் வாங்கினார்.” ஐயா சொல்லச்சொல்ல நாங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். எங்கள் கண்ணெதிரிலேயே கங்கைநதி ஓடுவதுபோல இருந்தது. ஐயா தொடர்ந்து ”சாஸ்திரிங்கறது அவர் வாங்கன பட்டத்துடைய பேரு. அதுக்கப்புறம் தேசத்துகாக அவர் பாடுபட்டார். சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டார். நேருவுக்குப் பிறகு நம் நாட்டுக்கு பிரதமரா இருக்கறாரு. படிப்புங்கறது ஒரு மனிதனுக்கு கெளரவம் தரக்கூடிய அடையாளம். அது பரம்பரை சொத்துமாதிரி தானா வராது.

ஒவ்வொருவரும் தானாதான் தேடி அடையணும். அதனாலதான் ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்னு பெரியவங்க சொல்றாங்க. புரியுதா?” என்றார். ஒவ்வொரு வரிக்கும் ஒரு கதையைச் சொல்லித்தான் எங்களுக்குப் புரிய வைத்தார் ஐயா. அவர் எங்களிடம் ஆசிரியர் போலவே நடந்துகொள்ளவில்லை. எங்களுடைய பெரியப்பா சித்தப்பா மாதிரிதான் எங்களுடன் பழகி பாடம் நடத்தினார்.

Leave a comment