ஐந்து எட்டு வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு இந்த வருடம் வேண்டாம் என்று முடிவு செய்தாலும் எந்த வருடமாவது வந்து விடுமோ என்ற நினைப்பு இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
கேரளா அனுபவம் இதோ: எல்லோருக்கும் வகுப்புயர்வு என்று முடிவு செய்வதற்கு முன்பு குட்டிப் பொதுத்தேர்வுகள் நடந்திருந்தன. ஒவ்வொரு வகுப்புக்கும் இந்தக் குட்டிப் பொதுத்தேர்வு நடக்கும். ஏன் குட்டி என்ற அடைமொழியைச் சேர்த்தேன் என்றால்… கீழே படியுங்கள். பொதுத்தேர்வின் எல்லா அவலங்களும் வகுப்புவாரியாக நடந்த தேர்வுகளுக்கும் நடந்துள்ளன. பொதுத்தேர்வு வந்தால் இந்த அவலங்கள் பெரிய அளவில் மாநில அளவில் நடக்கப் போகின்றன. அவ்வளவுதான்.
ஆசிரியர் சங்கங்கள் வினாத்தாள்கள் தயாரிக்கும். அந்த வினாத்தாளை பள்ளிக்கூடங்கள் வாங்க வேண்டும். தேர்வு நடத்த வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் நிதிப்பற்றாக்குறையை அடியோடு நீக்கி, பணம் கொழிக்கச் செய்யும் அருமையான வழியாக இருந்தது. ஆசிரியர் சங்கங்களில் வினாத்தாள் தயாரிக்கவென்றே ஒரு குழு இருக்கும். அவர்களுக்கு சங்கத்தில் தனி மரியாதை இருக்கும் (சில காலம் நானும் அந்த வேலைக்குப் போயிருக்கிறேன்.)
வருடத்தில் மூன்றுமுறை – பணம் கொட்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆசிரியச் சங்கங்களுக்கு இடையே வினாத்தாள் தயாரிப்பில் போட்டி நடக்கும். தங்கள் புத்திசாலித்தனத்தை, கைவரிசையைக் காட்டும் களமாக வினாத்தாள் தயாரிப்பு மாறிப்போனது. வேறொன்று அடுத்த வாரம் தேர்வு என்றால் இந்த வாரம் அவசர அசவரமாக வினாத்தாள் தயாரித்து, அதில் பல தவறுகளோடு, (கருத்துப் பிழையும் அச்சுப்பிழையும்) குழந்தைகளுக்குக் கொடுத்து… என பல குளறுபடிகள் நடந்தன.
எல்லாவற்றையும் விட வினாத்தாள் தயாரிக்கவென்று ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் குழு வகுப்புக்குப் போகாமல் பல நாட்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவார்கள். அவர்களுடைய வகுப்பில் பாடம் நடக்கவில்லை. யாரும் கேட்கவும் முடியாது. சரி அப்படியே ஒன்று கூடினாலும் எப்படி வினாத்தாள் தயாரித்தார்கள் தெரியுமா? முந்தைய ஐந்து வருட வினாத்தாள்களைப் பார்த்து அதிலிருக்கும் வினாக்களைக் கலந்துகட்டி புதுவினாத்தாள் உருவாக்கி விடுவார்கள்.
இது தயாரிப்பு அமர்க்களம் என்றால் நடைமுறைப்படுத்தும்போது மேலும் பல சுவையான நிகழ்வுகள் நடக்கும். பல சுவையான செயல்பாடுகள் பாடப்புத்தகத்தில் இருந்தாலும் அவையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் முடிவு செய்கிறார். காரணம் அவை தேர்வுக்கு வாரா. படம் வரைந்து குறிப்பு எழுதுங்கள். பாடலைப் பல மெட்டில் பாடிப்பழகுங்கள். நாடகமாக நடித்துப் பாருங்கள், இக்கருத்தோடு தொடர்புடைய வேறு கதைகளை வாசியுங்கள்… போன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிடுவதோடு, தேர்வுக்கு எந்தெந்த வினாக்கள் வருமோ அவைபோன்ற வினாக்களை மட்டும் எழுதிப் போடுவார்கள். அதுவும் ஒருமுறை எழுதினால் போதாது. பலமுறை எழுதிப் பழக வேண்டும். அதுவும் கட்டுரை எழுதித் தந்து அதைப் பலமுறை எழுதிப் பழகி தேர்வுக்குச் சென்றால் நாம் எழுதிப் பார்க்காத கட்டுரை வரும். எழுபது எண்பதுகளில் படித்தவர்களுக்கு இந்த அனுபவம் நிறைய இருக்கும்.
நினைவாற்றலை மட்டும் பரிசோதிக்கும் தேர்வாக அது குறுகிவிடும். பிற திறமைகளை எழுத்துத் தேர்வின் மூலம் மதிப்பிட முடியாது. ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மையை உருவாக்கும். இடைநிற்றல் அதிகரிக்கும். கற்றலைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்கும். குழந்தைகளிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணர முடியாது. புரியாமல் படிப்பதை ஊக்குவிக்கும். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கும் எதுவும் தெரியவதில்லை…. கோனார் உரை போன்ற தனியார் கைடுகளின் விற்பனையை ஊக்கப்படுத்தும். பெற்றோர்களுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டி நிலவும். எல்லாவற்றையும்விட முக்கியமாகக் குழந்தைகளின் குழந்தமையை அடியோடி பறித்துவிடும். இதையெல்லாம் சொல்லித்தான் நிரந்தர தொடர் மதிப்பீடு வேண்டும் என்று முடிவு செய்து சிசிஇ என்ற முறையைக் கொண்டு வந்தார்கள்.
இப்போது கேள்வி ஒன்று மட்டுந்தான்.
முன்பு இருந்த சில பழக்கங்களை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யும்போது, முன்பு அதே பழக்கத்தை வேண்டாம் என்று கூறுவதற்கு எடுத்தியம்பிய காரணங்களைச் சரி செய்திருக்க வேண்டும் அல்லவா… அவற்றைச் சரிசெய்து விட்ட பின்பு, அல்லது மேற்கூறிய குளறுபடிகள் எல்லாம் நடக்காமலிருக்க இன்ன இன்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று மக்களுக்குச் சொன்ன பின்பு பொதுத்தேர்வு கொண்டுவருவதைப் பற்றி யோசிக்கலாம்.
ஓ… பி. வி. யும் பி, கெ. வி. யும் என்னவென்று சொல்லவில்லையா… இவற்றுள் ஒன்றை மட்டும் நான் சொல்கிறேன். அடுத்ததை நீங்கள் கண்டுபிடியுங்கள்.
ஆசிரியர் பத்து கேள்வி பதில் எழுதிப் போட்டுவிட்டு அவற்றுள் சிலவற்றை மட்டும் முக்கியம் என்று காட்டுவார். அந்த முக்கியமான கேள்விக்குப் பக்கத்தில் நாங்கள் எழுதும் குறிப்புதான் பி. வி. நாங்களும் சரியாக பி. வி வினாக்களை மட்டும் பிட்டாக மாற்றி தேர்வுக்குச் செல்வோம். அதாவது பி. வி. என்றால் பரீக்ஷைக்கு வரும் என்று பொருள். அப்படியானால் பி, கெ. வி.?
ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore
























