கதை சொல்லும் ஆங்கிலப் பாட்டி – சாந்தீபனி

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கதை சொல்லும் பாட்டியை விரும்பாதவர்கள் யாரேனும் இருப்பார்களா? ஆங்கில சிறார் கதைகள் படிப்பவர்களில் அன்புக்குரிய ஒரு பாட்டி இருந்தார். அவர் பெயர் பியாட்ரிக்ஸ் போட்டர்(Beatrix Potter). பியாட்ரிக்ஸ் பாட்டியும் எல்லோரையும் போல ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தார் பிறகு உலகப் புகழ் பெற்ற சிறார் எழுத்தாளராக ஆனார். அது எப்படி?

பிரிட்டன், தெற்கு கென்சிங்டன் மாவட்டத்தில் இருந்தது ஒரு பணக்கார குடும்பம். அந்தக் குடும்பத்தில் 1866 ஜீலை 28ல் பியாட்ரிக்ஸ் போட்டர் பிறந்தார். அப்பாவும் அம்மாவும் பியாட்ரிக்ஸை பள்ளிக்கு அனுப்பவில்லை. அதற்கு பதிலாக ஆசிரியை ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து கற்பித்தார்கள். அன்றெல்லாம் பணக்காரக் குட்ம்பங்களில் பெண் குழந்தைகளுக்கு அப்படித்தான் படிப்பு ஆயிற்று. பியாட்ரிக்ஸுக்கு ஒரு கூட்டாளி கூட கிடைக்கவில்லை. தம்பி பெர்ட்ராமோ தூரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் தங்கிப் படிக்கிறான். அதனால் அவனது துணையும் பியாட்ரிக்ஸுக்குக் கிடைக்கவில்லை.

பாவம் பியாட்ரிக்ஸ், அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போய்விட்டால் பிறகு அவள் வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். ஆனால் கொஞ்சம் நாட்களுக்கும் வீட்டில் ஒரு நண்பர் கூட்டத்தை அவள் உருவாக்கிவிட்டாள். யார் அந்த நண்பர்கள்? அணில், பூனை, புறா, நாய் முதலிய பிராணிகளை பியாட்ரிக்ஸ் தன் நண்பர்களாக்கிவிட்டாள். அவற்றை கொஞ்சி மகிழந்து விளையாடி அவள் பொழுதைப் போக்கினாள். அந்த நண்பர்களில் அவளுக்கு இரண்டு பேரை மிகவும் பிடித்துவிட்டது. பெஞ்சமின், பீட்டர் ஆகிய இரண்டு முயல்கள்! தூரத்தில் எங்காவது பயணம் செல்லும்போது இந்த இரண்டு முயல் நண்பர்களையும் அவக் தன்னுடன் அழைத்துச் செல்வாள். பிறகு இந்த இரண்டு முயல்களும் பியாட்ரிக்ஸ் எழுதிய கதைகளில் முக்கிய கதாபாத்திரங்களிவிட்டன.

பியாட்ரிக்ஸின் அப்பாவுக்கு ஸ்காட்லாந்திலும் லேக்கிலும் வீடுகள் இருந்தன. இந்த இரண்டு இடங்களும் இயற்கை அழகு மிகுந்த இடங்கள். சிறுமி பியாட்ரிக்ஸ் இந்த இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வசித்தாள். அன்று அவள் கதைகள் எழுத ஆரம்பிக்கவில்லை. ஆனால் தன் அழகான வீட்டையும் சுற்றுப்புறங்களையும் அவள் மிகவும் ரசிப்பாள். கவனித்துப் பார்ப்பாள். அவற்றையெல்லாம் காகிதங்களில் வரைந்து வைப்பாள். தன் வீட்டைச் சுற்றிலுமுள்ள குன்று, நதி, ஆகாயம், பூக்கள், பறவைகள், ஆகியவற்றையெல்லாம் வரைந்தாள். இடையில் தன் அன்புக்குரிய பிராணிகளையும் வரைவாள்.

காலங்கள் சென்றன, வளர்ந்து பெரிய பெண்ணான பியாட்ரிக்ஸ் 1893ல் ஒரு கதை எழுதினார். கதையின் பெயர் என்ன தெரியுமா? “பீட்டர் முயலின் கதை” அவர் இந்தக் கதையை எழுதியது, ஏதேனும் பத்திரிகைக்கு அனுப்புவதற்காக அல்ல. அப்புறம் எதற்கு எழுதினார்? பியாட்ரிக்ஸை பார்த்துக்கொண்ட பழைய ஆயாவுக்கு ஒரு நோயாளி மகன் இருந்தான். அவன் படித்து ரசிப்பதற்காகத்தான் தன் குழந்தைப் பருவ வளர்ப்புப் பிராணியான பீட்டர் முயலைப் பற்றி ஒரு கதை எழுதினார். இந்தக் கதைக்கான அழகான படங்களையும் அவரே வரைந்தார்.

1902ல் பீட்டர் முயலின் கதை புத்தகமாக வெளிவந்தது. வெளிவந்த சிறிது காலத்திலேயே இந்தப் புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றது! பீட்டர் முயல் கதாபாத்திரமும் எல்லோருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. பிறகு பியாட்ரிக்ஸ், பீட்டர் முயலை முக்கியமாக கதாப்பாத்திரமாக வைத்து இன்னும் நிறைய கதைகள் எழுதினார். பீட்டர் முயலின் கதைகள் மட்டும் 35 மொழிகளில் எவ்வளவு பிரதிகள் விற்றன தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் 15 கோடிக்கு அதிகமான பிரதிகள் விற்றிருக்கின்றன.

காலம் செல்லச் செல்ல பியாட்ரிக்ஸ் பாட்டியாகிவிட்டார். சாவ்ரே கிராமத்தில் உள்ள ஹில்டாப் ஹெளஸ்தான் இந்தப் பாட்டிக்குப் பிடித்த வீடு. இந்த வீட்டில் இருந்துதான் புகழ் பெற்ற பலகதைகள் எழுதினார். “இளம் பூனை டாம்” , எலி சாமுவேல் ஜெமீமா வாத்து (Tom Kitten,Samuel whiskers,Kemimaa puddle – duck) ஆகிய கதாப்பாத்திரங்களும் தான் உருவானது இந்த வீட்டில் தான். பியாட்ரிக்ஸ் பாட்டி வரைந்த பெரும்பாலான படங்களில் இந்த வீடும் அதன் சுற்றுப்புறங்களும்தான் இடம் பெற்றிருந்தன, தன் நாற்பது ஏழாம் வயதில் எனும் வழக்கறிஞரைத் திருமணம் செய்த பிறகு தான் அவர் இந்த வீட்டுக்கு வசிக்க வந்தார், பிறகு நீண்ட காலம் இங்கே வாழ்ந்தார்.

1944 டிசம்பர் 22ல் சாவ்ரே கிராமத்தில் இருந்த கேஸ்டல் காட்டேஜ் எனும் தன் மாளிகையில் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு, தன் சொத்துக்களையெல்லாம் நேசனல் டிரஸ்ட் எனும் நிறுவத்தக்குக் கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். நேசனல் டிரஸ்டுக்கு அவர் என்னென்ன கொடுத்தார்? 4000 ஏக்கர் நிலம் அவர் எழுதிய புத்தகங்களுக்கும் கிடைக்கும் லட்சக் கணக்கான ரூபாய், விவசாயத் தோட்டங்கள், சிறு வீடுகள் இப்படிப் பல! அட பியாட்ரிக்ஸ் பாட்டி பெரிய வள்ளல் தான் அல்லவா!

பியாட்ரிக்ஸ் பாட்டியைப் பற்றி தெர்ந்துக்கொள்ள வேண்டும் ஆர்வமுள்ளவர்களுக்காக நேசனல் டிரஸ்ட் ஒரு அருங்காட்சியகம் அமைத்திருக்கிறது, அவர் எழுதிய கதைகள், அவர் வரைந்த ஓவியங்கள், பல்வேறு காலக்கட்டத்தில் எடுத்த புகைப்படங்கள், பெற்ற விருதுகள், அவரது பொருட்கள் ஆகியவை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

இவரது வாழ்க்கை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது Miss potter எனும் பெயரில் 2006ல் திரைக்கு வந்தது.

நன்றி : வண்ணநதி ஜூன் 2018ம் மாத‌ இதழ்

Leave a comment