தாய்ப்பால் பச்சிளங் குழந்தையின் உரிமை

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகிலேயே மிக சிறந்த உணவு தாய்ப்பால். உலகிலேயே கலப்படம் செய்ய‌ முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். குழந்தைக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தி அளிக்கும் குணம் தாய்ப்ப்பாலுக்கு (சீம்பால்) உண்டு. குழந்தைக்கு தாய்ப்ப்பால் ஊட்டுவது மிகப்பெரிய இன்பம். மிகவும் பாதுகாப்பான உணவு தாய்ப்பால்தான். தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றும் கிருமிகளும் அதில் சேரவே முடியாது. இருமல், சளி, மார்பு நோய் போன்ற சில நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கக்கூடிய எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. குழந்தைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் தாய்ப்ப்பாலில் உண்டு. குழந்தைக்கு எளிதாக ஜீரணமாகும்.  வயிற்றுப்பிரச்சனை எதுவும் ஏற்படாது. தாய்ப்பாலினால் ஆஸ்துமா, எக்சிமா போன்ற ஒவ்வாமை நோய்கள் குழந்தைக்கு ஏற்படுவது குறைவு. மேலும் தாய்க்கும் சேய்க்கும் பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. குழந்தையின் மனநிலையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

இளங்குழந்தை உரிமை பேணும் நிறுவனம் குழந்தை பிறந்த உடன் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் 33.3 சதவிகித தாய்மார்கள் மட்டுமே முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கிறார்கள். பெரும்பாலான தாய்மார்கள் தங்களிடம் போதுமான அளவு தாய்ப்பால் இருப்பது இல்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். 6 மாதத்திற்குப்பின் தாய்ப்பாலுடன் நல்ல சத்துள்ள‌ இணை உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை தொடர்ந்து இரண்டு வயது வரையோ அல்லது அதற்கு மேலுமோ கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் போதுமான அளவிற்கு குழந்தைக்கு கிடைக்கிறது என்பதற்கான அறிகுறிகள்:

1. குழந்தை பிறந்த முதல் சில நாட்களில் குழந்தையின் எடை சுமார் 10% வரை குறைகிறது. குழந்தைகள் எடை முதல் இரண்டு வாரங்களுக்குள் பிறப்பு எடையை அடைகிறது. மாதத்திற்கு 500 கிராம் அல்லது அதற்கு மேலே எடை கூடுவது அல்லது வாரத்திற்கு 125 கிராம் எடை கூடுவது சரியான அளவில் எடை கூடுவதற்கான அறிகுறியாகும். இது குறித்து குழந்தைகள் வளர்ச்சி அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
2. ஒரு நாளைக்கு ஆறு முறையும் அதற்கு மேலேயும் குழந்தை பிறந்து நான்காம் நாளில் இருந்து சாதாரண நிறத்தில் சிறுநீர் கழிக்கும்.

தாய்ப்பால் குறைவு என்று தாய்மார்கள் கருதுவதற்கான காரணங்கள்:

1. மூத்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வேறு பால்கள் கொடுத்தது.
2. குடும்பத்தில் உள்ள மற்றும் வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது.
3. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது.
4. பிறந்த குழந்தை நோய்வாய்பட்டு உள் நோயாளியாக இருக்கும் போது தாய்ப்பால் இல்லாமல் பிற பால்கள் கொடுப்பது.
5. தாய்மார்கள் குடும்பம், அக்கம் பக்கத்தில் உள்ள மற்றும் குடும்ப நல ஊழியர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது.
6. குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருப்பது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைப்பதற்கான காரணங்கள் – பொதுவான காரணங்கள்:

I.தாய்ப்பால் காரணிகள்

1. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்காமல் ஒரு மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுப்பது.
2. ஒரு நாளைக்கு 8 முறைக்கும் குறைவாக தாய்ப்பால் கொடுப்பது.
3. இரவில் தாய்ப்பால் கொடுப்பதில்லை அல்லது இரண்டு முறைக்கும் குறைவாக கொடுப்பது.
4. ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கும் போது 5 நிமிடங்களுக்கு குறைவாக கொடுப்பது.
5. நேரத்தை கணக்கு செய்து காலை 8மணி, மதியம் 12 மணி, இரவு 8 என்று அட்டவணைப்படி தாய்ப்பால் கொடுப்பது.
6. தாயின் மார்பகம் குழந்தையின் வாயில் சரியாக பொருந்தாமல் இருத்தல்.
7. புட்டிப்பால், சூப்பான், உறிஞ்சான் ஆகியவைகளை உபயோகித்தல்.
8. தாய்ப்பாலுடன் தேவையில்லாமல் பிற உணவுகளை கொடுத்தல்.

II.தாயின் மனநிலை

1. நம்பிக்கை இன்மை
2. கவலை
3. மனஉளைச்சல்
4. தாய்ப்பால் கொடுக்க விருப்பமின்மை
5. அசதி

அசாதாரணமான காரணங்கள்:

I.தாயின் உடல்நிலை

1. தட்டையான அல்லது தலைகீழான மார்பு காம்புகள்
2. பருத்த மார்பகங்கள்
3. மார்பு காம்பில் புண்
4. ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள்
5. மது அருந்துவது
6. புகைப்பிடிப்பது
7. அதிக அளவில் காபி / தேனீர் குடிப்பது
8. கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது
9. கர்ப்பம்
10. மார்பக அறுவை சிகிச்சை

II.குழந்தையின் உடல்நிலை

1. உடல்நிலை சரியில்லாது இருத்தல்
2. எடை குறைவான குழந்தைகள்
3. ஒரே பிரசவத்தில் பிறந்த ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்
4. சரியான காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகள்

தாய்ப்பால் போதுமான அளவு இருந்தும், இல்லை என்று நம்பும் தாய்மார்களுக்கான தீர்வு :

I.நம்பிக்கை ஊட்டுவதற்கான வழிமுறைகள்

1. தாய்மார்களின் நிலையை புரிந்து கொள்ளுதல்
2. தாய்மார்களுடைய தாய்ப்பால் குறித்த குறைகளை பொறுமையுடன் கேட்டு அறிந்து கொள்ளுதல்
3. தாய்மார்களிடம் உரையாடும் போது உங்களிடம் போதுமான அளவு தாய்ப்பால் உள்ளதா? என்று கேட்க கூடாது.
4. சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்கிறார்களா என்று திறமையுடன் கேட்டறிதல்.
5. தாய்மார்களை நன்கு பரிசோதனை செய்தல்.

II.நம்பிக்கை அளித்து ஆதரவு கொடுத்தல்

1. தாய்மார்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
2. தாய்ப்பால் கொடுப்பதற்காக பாராட்டுதல்
3. சரியான முறையில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விளக்கமளித்தல்
4. எடை மற்றும் வளர்ச்சி குறித்த விவரங்களை வளர்ச்சி அட்டவணை மூலம் காண்பித்தல்
5. தாய்மார்கல் புரிந்து கொள்ள கூடிய வகையில் சாதாரண பேச்சு வழக்கு மொழியில் விளக்குதல்
6. உத்தரவாக கூறக்கூடாது.

தாய்ப்பால் குறித்து ஆலோசனைகள்:

1.குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் தங்களுடைய மார்பகங்களில் கிடைக்கும் என உறுதியளித்தல்.
2. தாய்ப்பால் குறித்த நம்பிக்கையை புதுப்பித்தல்.
3. சரியான நிலையில் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மேம்படுத்துதல்.
4. ஒரு நாளைக்கு 8 முறையும் இரவில் குறைந்தது 2 முறையும் தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்தல்.
5. ஒவ்வொரு மார்பகத்திலும் குறைந்தது 5 நிமிடங்கள் அதிக பட்சமாக 30 நிமிடங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
6. ஒரு மார்பகத்தில் முழுவதும் தாய்ப்பால் குடித்த பின்னரே அடுத்த மார்பகத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு முன்பால் (ForeMilk) மற்றும் பின் பால் (Hindmilk) கிடைக்கும். குழந்தைக்கு ஏற்கனவே தாய்ப்பால் கொடுக்கப்படாமல் இருந்தாலும் இணை உணவு கொடுக்கப்பட்டிருந்தாலும் அவைகளை படிப்படியாக குறைத்து தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்தல்.
7. புட்டி பால் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
8. அழும் குழந்தைகளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று முன்னகையிலும் தோளிலும் குழந்தையை கிடத்தி வயிற்றில் அழுத்தம் கொடுக்குமாறு செய்ய வேண்டும். வயிற்று வலிக்கான மருந்து கொடுத்தும் அழுகையை நிறுத்துவது குறித்து ஆலோசனை கொடுக்கலாம்.
9. தாய்ப்பாலின் மேன்மை குறித்தும் புட்டி பாலின் தீமைகள் குறித்தும் விளக்குதல்.
10. குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது மறு பரிசோதனை செய்து குழந்தையின் எடையை கவனித்து நம்பிக்கை ஊட்டுதல்.
11. நிறைமாதக் குழந்தைக்கு அழும் பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பீச்சி எடுக்கப்பட்ட தாய்ப்பாலை தாய்ப்பால் சப்புவதில் திறமை குறைந்த எடைகுறைவான குழந்தைகள் மற்றும் உடல் நலிந்த குழந்தைகளுக்கு அட்டவணைப்படி கொடுப்பது.

தடுப்பு முறைகள்:

1. வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் கருவுற்றிருக்கும்போதே தாய்ப்பால் குறித்த ஆலோசனைகள் மற்றும் மார்பகங்கள் பரிசோதனை.
2. குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3. குழந்தை தாய்ப்பால் குடிக்க இயலாத சமயத்தில் கையினாலோ அல்லது மின்சார மார்பக பம்பு-களினாலோ தாய்ப்பாலை வெளியேற்றி குழந்தைக்கு கொடுப்பது.
4. தாயும் குழந்தையும் எப்போதும் சேர்த்து இருக்க செய்வது
5. இருவரையும் எந்த காரணத்தை கொண்டும் பிரிக்க கூடாது.
6. 3,7,14,28 நாட்களில் பரிசோதனை செய்து எடை மற்றும் உணவு முறைகள் குறித்து மதிப்பீடு செய்தல்.
7. தாய்மார்களை தாய்ப்பால் கொடுக்குமாறு ஊக்கப்படுத்துதல்
8. தாய்மார்கஷீமீ தங்களுடைய குழந்தைக்கு உடல்நலக் குறைவு இருப்பின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து உதவி செய்தல்.

தாய்ப்பால் குறைவாக உள்ளது என மருத்துவர்களால் கண்டறியப்பட்ட தாய்மார்களுக்கான வழிமுறைகள்:

1. தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது.
2. குழந்தை வாய் நிறைய மார்பகத்தை பொருத்தி தாய்ப்பால் சரியான முறையில் கொடுக்க ஊக்குவிப்பது.
3. குறைந்தது ஒரு நாளைக்கு 8 முறையாவது தாய்ப்பால் கொடுப்பது இரவில் குறைந்தது இரண்டு முறையாவது கொடுப்பது.
4. மின்னணு எடை பார்க்கும் கருவி கொண்டு அடிக்கடி குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பது.
5. பீச்சி எடுக்கப்பட்ட தாய்ப்பால் ஊட்டுவது.
6. குழந்தை தாய்ப்பால் குடித்து முடித்த பிறகு இறுதியாக மார்பில் உள்ள பாலை பீச்சி எடுத்துக் கொடுப்பது.
7. பீச்சி எடுத்த பாலுடன் தாய்ப்பாலுக்கு கூடுதலாக செறிவூட்டும் சத்து மாவுகளை கலந்து கொடுப்பது.
8. எண்ணை மசாஜ் கொடுப்பது.
9. கங்காரு பராமரிப்பு.
10. தாய்ப்பால் கூடுவதற்கு உரிய சத்து மாத்திரைகள் கொடுப்பது.
11. வளர்ச்சி சரியாக இல்லை எனில் மாற்றுப்பால் தருவது.

பொது நலன் கருதி வெளியிடுவோர்:
தமிழ்நாடு இளங் குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு.
http://www.foryouchild.org/

பஞ்சு மிட்டாய் இணையத்தின் குறிப்பு: மருத்துவம் சார்ந்த பதிவுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலே பதிகிறோம். இந்தக் கருத்துக்களில் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களது மருத்துவர்களிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

Leave a comment