கடந்த சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி 2024) மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா? : தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடல். ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை வரலாற்று ஆசிரியருமான – மிச்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்களும் எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளருமான யமுனா ராஜேந்திரன் அவர்களும் விவாதித்தனர்.
இரண்டாவது அமர்வில் ஏற்பாடு செய்த நிகழ்வில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (நோக்கமும் அதன் பாதையும்) என்ற புத்தகம் வெளியானது. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியீடான இந்தப் புத்தகத்தைச் சங்கத்தின் பொருளாளர் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்கள் தொகுத்துள்ளார்.
புத்தகத்தின் முதல் பிரதியை எழுத்தாளரும், விமர்சகரும், ஆய்வாளருமான மு. நித்தியானந்தன் அவர்கள் வெளியிடச் சண்முக ஈஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை யமுனா ராஜேந்திரன் வெளியிட அதனை விம்பம் அமைப்பின் பொறுப்பாளர் ஓவியர் ராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார். வெளியீட்டைத் தொடர்ந்து நூல் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. கதைசொல்லி நவீன் கிருஷ்ணன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சங்கத்தின் தலைவர் உதயசங்கர் அவர்களும் செயலாளர் சாலை செல்வம் அவர்களும் காணொளி வழியே வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மு. நித்தியானந்தன் அவர்கள் நூல் குறித்த விரிவான அறிமுகத்தை வழங்கினார். நூல் குறித்து அவர் பேசுகையில்,
“அழ. வள்ளியப்பாவின் காலத்திலே சிறுவர்களுக்கான எழுத்தாளர்களின் பெயர்களையெல்லாம் தொகுத்து யார்? எவர்? என்ற புத்தகம் வெளியாகியிருக்கிறது என்ற செய்தி உண்மையில் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. சிறுவர் இலக்கியத்திற்கான மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார்கள் என்பதை இன்றைக்குக்கூட நாம் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு செயலாக இருக்கிறது. கிட்டத்தட்ட 75ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சிறுவர் இலக்கியத்தில் ஓர் புதிய அலை வீசுகிறது என்பதையே இந்தப் புத்தகம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிறுவர் இலக்கியம் என்பது சுமார் 180 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை இந்தப் புத்தகம் மிக விரிவாக ஆவணப்படுத்துகிறது.
ஒவ்வொரு கட்டுரையும் மிகமிக நுணுக்கத்துடனும், மிக நீண்ட அனுபவத்துடனும், தெளிவான புள்ளிவிபரங்களோடுனும் இடம் பெற்றுள்ளது. சிறுவர்களை பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம் எனக் கூறலாம்.
மேற்குலக ஆங்கில சிறார் இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ்நாட்டிலுள்ள சிறுவர் இலக்கியத்திலும் குழந்தைகள் உளவியல் சார்ந்த விவாதங்கள் அனைத்தும் நடந்துள்ளன. விமர்சன போக்கும் நிலவியுள்ளது என்பதையே இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. தங்களது சொந்த அனுபவத்திலிருந்து தமிழ்நாட்டு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் இதனைப் பேசியிருப்பது உண்மையில் ஆச்சரியம் தருகிறது. எது சிறுவர் இலக்கியம், அதில் என்ன இருக்க வேண்டும், சிறுவர் இலக்கியத்தின் வரையறை எது, அறம் போதிக்கும் படைப்புகள் சிறுவர் இலக்கியம் ஆகுமா? போன்ற விவாதங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நேரடியாக நடந்திருப்பது சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையையே காட்டுகிறது.
இந்நூல் தமிழ்நாட்டுச் சிறுவர் இலக்கிய வரலாற்றை மட்டுமே பேசுகிறது. ஆனால் இலங்கையில் மட்டும் 175 எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியத்திற்குப் பங்களித்துள்ளனர். அவர்களது கதைக் களஞ்சியம் தனியே இருக்கிறது. சிறுவர் இலக்கிய வரலாறு குறித்து மூன்று புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் சிறுவர் நாடகங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. ஐரோப்பாவில் குழந்தைப் பாடல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்ந்த இடத்தில் இரண்டாவது மொழியான தமிழைக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வது குறித்தெல்லாம் நாம் பேச வேண்டும். நாம் அனைத்தையும் உள்ளடக்கிப் பேச வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களின் சிறுவர் இலக்கியம் பங்களிப்பும் இடம் பெற்றால், புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு குறித்தும் பேசி இருந்தால் அது இன்னும் பெரிய பார்வைக்கு வழிவகுக்கும். அது தமிழ்ச் சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் செழுமையைச் சேர்க்கும்.
உண்மையில் பஞ்சுமிட்டாய் பிரபுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் கதை சொல்லி நான் பார்த்திருக்கிறேன், அவர் பஞ்சு மிட்டாய் என்ற இணையத்தை நடத்துகிறார், ஓங்கில் கூட்டம் என்ற பதிப்பகத்தை நடத்துகிறார். பிரபு அவர்கள் சிறுவர் இலக்கியத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்குச் சிறுவர் இலக்கியத்தை யாரும் கவனிப்பதில்லை, பல்கலைக்கழகங்கள் நாவல் சிறுகதை கவிதை என இலக்கியம் பற்றிப் படிக்க பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆனால், அவைகூட சிறுவர் இலக்கியம் குறித்து அறிந்துகொள்வதில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தைக் கொண்டு 10முனைவர் பட்டமாவது (Phd) தாராளமாகச் செய்யலாம். அந்த அளவிற்குச் சிறுவர் இலக்கியம் குறித்து மிக விரிவாக இந்நூல் பேசி இருக்கிறது. இது பெரும் முயற்சி. ஒவ்வொரு பக்கத்திலும் பிரபுவின் உழைப்பு தெரிகிறது. நமது அருகே இருந்து இப்பணியை அவர் செய்து வருகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விசயம். “ என்று அவர் கூறினார்.
அடுத்துப் பேசிய அஞ்சனா அவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் வாசிப்பு குறித்தும், அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும், நூலகங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல் குறித்தும் பேசினார். பாலின சமத்துவம் மற்றும் பாலியல் சார்ந்த புரிதல் குறித்து தமிழில் வெளியாகியுள்ள புத்தகங்கள் குறித்து அறிந்துகொள்ள இந்நூல் உதவியது என மேலும் அவர் விரிவாகப் பேசினார்.
நூலின் ஆசிரியர் பஞ்சு மிட்டாய் பிரபு, தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வளர்ச்சி குறித்து சிறிய அறிமுகத்துடன் நன்றியுரையை வழங்கினார்.
நிகழ்வின் ஒருங்கிணைந்த நவீன் அவர்களும் அயல்நாட்டில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு மொழியை எடுத்துச் செல்வது குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
எழுத்தாளர்கள் பத்மநாபன், யமுனா ராஜேந்திரன், மஜிதா, புஷ்பராஜன், எம்.பெளசர், பூங்கோதை, பாரதி, நவஜோதி, சொர்ணவேல் ஈஸ்வரன், சபேசன், கோகுல ரூபன் என 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புலம்பெயர்ந்த இடத்தில் தொடர்ந்து இதுபோன்ற கலை இலக்கிய செயற்பாடுகளை நடத்தி வரும் விம்பம் கலை அமைப்பு ராஜா அவர்களுக்கும் சமூக இயல் ஒருங்கிணைப்பாளர் பெளசர் அவர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் சிறுவர் இலக்கியத்தின் ஆவணமாக விளங்கும் இந்நூலை வெளியிட்டுச் சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் சங்கம் சார்பில் எங்கள் அன்பினைப் பகிர்கிறோம். புத்தகம் குறித்து விரிவான அறிமுகத்தை வழங்கிய மு.நித்தியானந்தன் அவர்களுக்கும், அஞ்சனா அவர்களுக்கும், நவீன் அவர்களுக்கும் நன்றியைப் பகிர்கின்றோம்.