ஈனி மீனி மைனி மோ – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

Eeny, meeny, miny, moe,

Catch a tiger by its toe.

If you want to let it go,

Eeny, meeny, miny, moe.

ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால் குழந்தைகள் உடனே பாடும் பாடலில் Inky Pinky Ponky போன்றே Eeny, meeny, miny, moe பாடலும் பிரபலமானது. இதுபோன்ற வாய்மொழிப் பாடல்களும் விளையாட்டுகளும் பெரியவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் இவை முறையான கற்கும் முறைகளோ ஆவணப்படுத்துதலோ ஏதுமில்லாமல் பல நூற்றாண்டுகளாக அந்தந்த காலங்களில் குழந்தைகளால் மட்டுமே கடத்தப்பட்டு வருகின்றன. தெருவில் குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால்-உலகின் பழமையான ஆடுகளத்தில் அவர்கள் விளையாடுகிறார்கள் என்று பொருள். அதுமட்டுமல்ல, உலகின் பழமையான சுவாரஸ்யமான விளையாட்டை – பல நூற்றாண்டுகளாக மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்த விளையாட்டை அவர்கள் ஆடுகிறார்கள் என்று பொருள். தெரு என்பது குழந்தைகளுக்கானது. அதில் தெரு விளையாட்டு என்பது மகிழ்ச்சியின் குறியீடு.

உலகெங்குமுள்ள குழந்தைகள் தெரு விளையாட்டுகளை, அதிலுள்ள பாடல்களை, சொலவடைகளை தங்களது மகிழ்ச்சியின் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். முறைபடுத்தப்பட்ட விளையாட்டுகள் வெற்றி-தோல்வி என போட்டிகளாகவும் சாதனைகளாகவும் மட்டுமே பெரியவர்களால் இயக்கிவைக்கப்படுகின்றன. ஆனால் தெரு விளையாட்டுகள் மகிழ்ச்சியின் ஆதாரமாகவும், மகிழ்ச்சியின் வழியே கற்றலின் அடித்தளமாகவும் அமையக்கூடுயவை. தொலைக்காட்சி, கைப்பேசி என ஒவ்வொரு காலத்திலும் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சூழல் உருவானபோதும் குழந்தைகளிடம் இதுபோன்ற விளையாட்டுகள் உயிருடன் இருப்பதைக் காணமுடிகிறது.

இதோ இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததுமே, இது நமது “ஒரு குடம் தண்ணீ ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்” விளையாட்டு என்று கணித்துவிடுவோம். இலண்டனில் இதனை “Orange and Lemons” என்று அழைக்கின்றனர். இதற்கெனத் தனியாகப் பாடல்களும் உள்ளன. மிகவும் பிரபலமான “London Bridge is falling down” பாடலும் இந்த விளையாட்டிற்குப் பயன்படுத்தலாம். “ரிங்கா-ரிங்கா-ரோசஸ்” விளையாட்டிற்கும் நீண்ட வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் முறையாக ஆவணப்படுத்தி நாட்டுப்புறவியல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஐயோனா & பீட்டர் ஒபே(Iona and Peter Opie) தம்பதியினர் குறித்து இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

சிறுவர் நாட்டுப்புறவியல் துறையில் “The Opies” என்ற சொல் மிக முக்கியமானது. பெரியவர்களிடமிருந்து சிறுவர்களுக்குக் கடத்தப்பட்ட விசயங்களைத் தாண்டி, சிறுவர் உலகில் சிறுவர்களே தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் விசயங்களையும் ஆவணப்படுத்தியதே ஒபே தம்பதியினரின் சிறப்பு. குழந்தைப்பருவத்தை அறிந்துகொள்ளும் துறைகளில் இவர்களது ஆவணப்படுத்துதல் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது அரசு சேவைகளில் ஈடுபட்டவர் ஐயோனா. அப்போது அவருக்கு இருபது வயதே ஆனது. பீட்டர் அப்போது எழுத்துத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒரு வாசகராய் கடிதத்தின் வழியே நட்பு தொடங்கி காதலாய் மலர்ந்தது. 1943ஆம் இருவருக்கும் திருமணமாகி இங்கிலாந்தில் தங்களது இல்லற வாழ்வைத் தொடங்கினர். வழக்கமான நடுத்தர மக்கள் வாழ்வை அவர்கள் தொடர்ந்தாலும், ஒரு பொன்வண்டு அவர்களது வாழ்வில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுகுறித்து ஐயோனா ஒரு நேர்காணலில் இவ்வாறு பகிர்கிறார்.

// ஒரு நாள் நானும் என் கணவரும் சோளக்கதிர் நிறைந்த சோலை வழியே நடந்து கொண்டிருந்தோம். அங்கு ஓர் அழகிய பொன்வண்டைப் பார்த்தோம். அந்த பொன்வண்டுதான் எங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டது என்று அன்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. பொன்வண்டைப் பார்த்த உடனே எங்களை அறியாமலே, அந்தப் பொன்வண்டைக் கையில் வைத்து இந்தப் பாடலைப் பாடினோம்.

“Ladybird, ladybird, fly away home, / Your house is on fire and your children all gone.”

அந்தப் பொன்வண்டு எங்களைப் பார்த்தது, எப்போதும்போல் அது பாடலைப் புரிந்ததுபோல் பறந்து சென்றது. நாங்கள் அதன் அதிசயத்தை நினைத்துப் புன்னகைத்தோம். இங்கிலாந்தில் சிறுவர்கள் விளையாடும் பாடல் இது. சிறுவயதில் பலமுறை பாடி மகிழ்ந்திருப்போமே தவிர ஒரு முறைகூட இந்தப் பாடல் குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பியதில்லை. இந்தப் பாடலின் பொருள் என்ன? இந்தப் பாடலை ஏன் பாடுகிறோம்? இந்தப் பாடலின் ஆசிரியர் யார்? போன்ற கேள்விகளே எங்களது வாழ்வை புதிய பாதையில் அழைத்துச் சென்றது.  //

ஆம்! இருவரும் இந்தப் பாடலின் வரலாற்றைத் தேடத் தொடங்கினர். அவர்களது தேடல் இந்தப் பாடலோடு நின்றுவிடவில்லை. மாறாக அவர்கள் சிறுவயதில் ரசித்து மகிழ்ந்த ஒவ்வொரு பாடலின் வரலாற்றையும் தேடிப் பிடித்தனர். 1946ஆம் ஆண்டு I Saw Esau: The Schoolchild’s Pocket Book. என்ற சிறுவர் பாடல் புத்தகத்தினை வெளியிட்டனர். பின்னர் 1950களில் சன்டே டைம்ஸ் தினசரி மூலம் மக்களிடமிருந்து கடித வடிவில் குழந்தைகளின் விளையாட்டுகள் குறித்தும், விளையாட்டுப் பாடல்கள் குறித்தும் தகவல்களைத் திரட்டினர். இதில் பல பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆர்வமாகப் பங்கேற்றுள்ளனர். இதுவே ஒபே தம்பதியினரை அடுத்தக் கட்டத்திற்கு தயார்படுத்தியுள்ளது.

குழந்தைகளிடமிருந்து நேரடியாகவே கதைகள், பாடல்கள், விளையாட்டு, சொலவடைகள் என அவர்களது உலகிலுள்ள அனைத்து விசயங்களையும் ஆவணப்படுத்தும் வேலையை அவர்கள் தொடங்கினர். அதுவும் நாடு முழுதும் இருந்து பெற வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாகவிருந்துள்ளது. ஐனோ இதில் களப்பணியைச் செய்துள்ளார். ஐனோ தங்களது சுற்றத்திலிருந்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் சென்று, குழந்தைகளை நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் விளையாடி, பிறகு அவர்களது குரல்களிலேயே அந்த விளையாட்டுகள் பற்றின குறிப்புகளை ஒலி வடிவில் பதிவு செய்துள்ளார். வாரம் ஐந்துநாட்கள் இவ்வாறு தொடர்ந்து பதிவு செய்த ஆவணத்திற்கு அவரது கணவர் பீட்டர் முறையான எழுத்துவடிவம் கொடுத்துள்ளார். அதேபோல் வாரயிறுதியில் சந்தைகளுக்குச் சென்று அங்குள்ள விளையாட்டுப் பொம்மைகள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் அட்டைகள் எனப் பலவற்றையும் சேகரித்துள்ளனர். இந்தத் தகவலின் சிறு பகுதியை ஆதாரமாய் கொண்டு The Lore and Language of Schoolchildren (1959) and followed by Children’s Games in Street and  Playground (1969) என இரண்டு புத்தகங்களை வெளியிட்டனர். 1982இல் பீட்டர் இயற்கை எய்திய பிறகு ஐயோனா தனியே இந்தப் பணியினைத் தொடர்ந்தார். The Singing Game (1985) , Children’s Games with Things (1997) ஆகிய புத்தகங்களை ஐயோனா அடுத்தடுத்து வெளியிட்டார். ஐயோனா 2017ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

  1. சிறுவர் பாடல்கள்
  2. சிறுவர் விளையாட்டுகள்
  3. குழந்தைகளின் நம்பிகைகள்
  4. நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகள்
  5. விளையாட்டுப் பாடல்கள் – சொலவடைகள் – கேலி கிண்டல் பாடல்கள்
  6. விளையாட்டு பொம்மைகள்
  7. குழந்தைகளின் உணவு பொருட்கள் சேகரிப்பு
  8. விளம்பர போஸ்டர்கள்

  போன்ற குழந்தைகள் உலகிலுள்ள அனைத்து விசயங்களையும் ஆவணப்படுத்தியுள்ளனர். பாடப்புத்தகத்தில் இன்று இடம்பெறும் ஆங்கில ரைம்ஸ்களின் முழு வடிவத்தையும் இவர்களது புத்தகத்தில் காண முடியும். The Singing Game என்ற புத்தகத்தின் முன்னுரையில் குழந்தைகளின் உலகை மிகவும் அழகாகப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்கள்…

“இதுவரை விளையாட்டுகளை எப்படி விளையாட வேண்டும் என்ற வழிமுறைகளோ அல்லது குழந்தைகளை எப்படி விளையாட வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலோதான் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், குழந்தைகளின் விளையாட்டை அவர்களது மொழியில் அவர்களது இயல்பில் அப்படியே ஆவணப்படுத்தும் பணி எங்குமே நடக்கவில்லை.

இந்த ஆவணப்படுத்துதலில் உள்ள விளையாட்டுகள் அனைத்தும் பெரியவர்களால் முக்கியத்துவம் தராத விளையாட்டுகள். இந்த விளையாட்டிற்கு ஒரு பந்தோ, மட்டையோ ஏன் எந்தவித பொருட்களும் தேவையில்லை. இவற்றிற்கு தேவை ஒன்றே ஒன்றுதான். அது குழந்தைகள் மட்டும்தான்.

ஒரு அச்சிடப்பட்ட பக்கத்தால் – ஒரு குழந்தை தன்னிச்சையாகப் பாடும் பாடலின் உற்சாகத்தை முழுவதுமாகப் பதிவு செய்ய முடியாது. இருந்தும் தெரு விளையாட்டுகளையும், பாடல்களையும்   அவற்றின் தலைமுறை கடந்த உயிரோட்டத்திற்கு எங்களால் முடிந்த அளவு ஆதாரங்களைத் திரட்டி, குழந்தைகளின் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அதை விவரிக்க முயன்றோம்.

இந்த இருபது வருடப் பயணத்தில்- பலநூறு ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைச் சந்தித்திருக்கிறோம். ஆனால் இதுவரை ஒரு சுவாரஸ்யமான விளையாட்டைக்கூட அறிமுகம் செய்யாத ஒரு குழந்தையைச் சந்திக்கவில்லை” என்கின்றனர்.

இவர்களது சேமிப்புகள் அனைத்தும் தற்போது இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற நூலகத்தில் உள்ளன. எங்களது சேமிப்பிலிருந்து நாங்கள் இதுவரை பத்து சதவிகிதம்கூட பயன்படுத்தியிருக்க மாட்டோம் என்றே ஐயோனா தனது இறுதிகாலத்தில் குறிப்பிட்டார். குழந்தைகளின் உலகம் குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவர்களது ஒவ்வொரு புத்தகமுமே மிகப்பெரிய பொக்கிஷம்தான்.

அவர்களது புத்தகங்களின் முன்னுரைகளை வாசிக்கும்போது அவர்களது வாழ்வை, பெரும் பணியை, குழந்தைகள் உலகம் சார்ந்த அவர்களது  தேடலை, நாட்டுபுறவியல் துறையில் அவர்களாற்றிய பங்களிப்பைக் கண்டு உண்மையில் பிரமித்துப்போகிறேன்.

குறிப்புகள்:

https://www.opiearchive.org/about/iona_and_peter_opie_biography

https://archive.org/search?query=creator%3A%22Opie%2C+Iona+%22

https://www.theguardian.com/books/2017/oct/25/iona-opie-obituary

Leave a comment