தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

புதிய நம்பிக்கை தந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு

திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது உரையில், சங்கம் உருவானது குறித்தும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டது குறித்தும் விரிவாகப் பேசினார். சங்கத்தின் அடுத்தடுத்த வேலைத் திட்டங்கள் குறித்தும் குறிப்பிட்டார். மாநில பொதுச் செயலாளர் சாலை செல்வம் அவர்கள் சந்திப்பை நெறிப்படுத்தினார்.

இணையவழியில் சங்கம் நடத்திய கருத்தரங்கத்தின் உரைகளைத் தொகுத்து, நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும் (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு) எனும் நூல் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தச் சிறப்பு நூலை எஸ்.ஆர்.வி பள்ளியின் தலைமை செயல் அதிகாரி திரு. துளசிதாசன் அவர்கள் வெளியிட அருட்தந்தை சகேஷ் சந்தியா அவர்கள் பெற்றுக் கொண்டார் . குழந்தைகள் சார்ந்து இயங்கும் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் பள்ளிக்கு வந்ததைப் பெருமையாக நினைப்பதாகவும், பல்வேறு படைப்பாக்க முயற்சிகளுக்குத் தங்கள் பள்ளி உறுதுணையாக இருப்பதையும் தெரிவித்து நல்லதொரு வாழ்த்துரையை வழங்கினார் துளசிதாசன்.

நிகழ்வில் நடந்த கருத்தரங்கத்தில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சமகால சிறார்கள் இலக்கியத்தின் சிறப்பான படைப்புகள் குறித்தும், அது செல்ல வேண்டிய திசை குறித்தும் விரிவாகப் பேசினார். அடுத்துப் பேசிய பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் அதனைச் செம்மையாக்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார். எழுத்தாளர் விழியன் அவர்கள் கிளைகள் செயல்படும் விதம் குறித்த வழிகாட்டலை முன்வைத்தார்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த உறுப்பினர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து விரிவாக கூறினர். நிறைவாக, சங்கத்தின் முதல் மாநிலக் குழு தேர்வுசெய்யப்பட்டது. சிறார் இலக்கியம் தொடர்பான முன்னெடுப்புகளை இன்னும் வலிமையாக கொண்டு செல்ல இந்தச் சந்திப்பு உதவும் என்று மாநிலப் பொதுசெயலாளர் சாலை செல்வம் தெரிவித்தார்.

நிகழ்வில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கமலாலயன், யெஸ்.பாலபாரதி, கார்த்திகா கவின்குமார், மணிகண்டன், வெற்றிச்செழியன், இனியன், கலகல வகுப்பறை சிவா, அறிவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a comment