இங்கிலாந்தின் சிறுவர் நாடோடிக் கதைகள் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

Folklore (நாட்டுப்புறவியல்) என்பது – வாய்மொழிக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், கிண்டல் கேலி நகைச்சுவை சொலவடைகள் என வாய்மொழியாகப் பல தலைமுறைகள் கடந்து மக்கள் மத்தியில் இருந்துவரும் விசயங்களைக் குறிக்கும் சொல். Folk என்பது மக்களிடையே புகழ்பெற்ற பழமையான பொருட்களை அல்லது கதைகளைக் குறிக்கிறது. Lore என்பது ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள் அல்லது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. இரண்டையும் இணைத்து புதிய சொல்லை 1846ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் வில்லியம் தாம்ஸ் என்பவர் உருவாக்குகிறார். அதுவரை நாட்டுப்புறக் கதைகளை Folk என்றோ அல்லது popular antiquities என்றோதான் குறிப்பிட்டனர்.

தற்போது நாட்டுப்புறவியல் என்பது மிகப்பெரிய துறை. அதுவும் குறிப்பாக இலக்கியத்தில் அதன் வகைமைகள் ஏராளம். இதில் முக்கிய வகைமையாகக் குழந்தைகளுக்கான கதைகளை Fairy tales என்று அழைக்கிறோம். “இந்தக் கதைகளின் கருப்பொருள் குழந்தைகளுக்கானதா?” என்ற கேள்வி நம்மிடையே இருக்கும் போதிலும் அதிலுள்ள மாயாஜால சாகசங்களுக்காகவே அவை குழந்தைகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதை நாம் மறுக்க இயலாது.

Fairy tales என்றதுமே நம் மனதில் தோன்றும் கதைகளான சின்ட்ரெல்லா,  Snow beauty போன்ற கதைகள் முதன் முதலாக 1697ஆம் ஆண்டில் வெளியான Histoires ou contes du temps passé (Stories or Tales from Past Times) எனும் புத்தகத்தில்தான் இடம் பெற்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் பெர்ரால்ட் (Charles Perrault) என்பவர் தனது 65ஆம் வயதில், மக்கள் மத்தியிலிருந்த வாய்மொழிக் கதைகளைத் தொகுக்கும் பணியைத் தொடங்கினார். Little Red Riding Hood, Cinderella, Puss in Boots, Sleeping Beauty, Bluebeard, Little Thumbling ஆகிய எட்டுக் கதைகளைத் தொகுத்து, அதனை இலக்கிய தளத்திற்கு ஏற்றார்போல் மீள் உருவாக்கம் செய்தார். எட்டுக் கதைகள் கொண்டு இந்தப் புத்தகம் நாட்டுப்புறவியல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அவரை நவீன நாட்டுப்புறவியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். இந்தப் புத்தகம் “Tales of My Mother Goose” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது. அன்னை கூஸ்(Mother Goose) என்பவர் ஒரு புராண இதிகாச கதாபாத்திரம். அவர் கதை சொல்வதில் வல்லவர். அன்னை கூஸ் ஏற்கனவே மக்களிடையே அறியப்பட்ட கதாபாத்திரம் என்பதால் “Tales of My Mother Goose” புத்தகம் வெளியானபோது அது பெரும் வரவேற்பைப் பெற்றது.

சார்லஸ் பெர்ரால்ட் அவர்களின் காலத்திலேயே பிரான்ஸ் நாட்டில் Madame d’Aulnoy என்ற பெண்மணி நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து “Contes de fées” என்ற தலைப்பில் 1698ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்தப் புத்தகம் “Tales of fairys” என்று அடுத்தாண்டே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது. இவர்தான் முதன் முதலில் Fairytale எனும் சொல்லைப் பயன்படுத்தியவர், அதுவும் Folklore என்ற சொல்லின் பயன்பாட்டிற்கு 100ஆண்டிற்கு முன்னரே Fairytale என்ற சொல் உருவாகியிருப்பது வியப்பைத் தருகிறது. இவர்களது புத்தகங்கள் மேற்குலக இலக்கியத்தில் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து ஜெர்மனியின் க்ரிம் சகோதரர்கள் அங்குள்ள நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டனர். இவர்களது தொகுப்புகள் Grimms’ Fairy Tales என்ற அழைக்கும் அளவிற்குப் பிரபலமானது. இவர்களது வழித்தோன்றலாக ஆண்டர்சன்(Hans Christian Andersen) அவர்கள் குழந்தைகளுக்காகக் கதைகளை மீட்டுருவாக்கம் செய்து நாட்டுபுறயியல் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தினார். சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் IBBY – International Board on Books for Young People என்ற தொண்டு நிறுவனம் சிறார் இலக்கிய எழுத்தாளர் மற்றும் ஓவியர்களுக்கு “The Hans Christian Andersen Award” என்ற விருதினை வருடந்தோறும் வழங்கி வருகிறது. இது சிறார் இலக்கியத்தின் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. சார்லஸ் பெர்ரால்ட், Madame d’Aulnoy, ஆண்டர்சன் வரிசையில் சிறுவர் நாட்டுபுறயியல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஐயோனா & பீட்டர் ஒபே(Iona and Peter Opie) தம்பதியினர். இவர்களது பங்களிப்பை பற்றி அடுத்து வரும் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

இலண்டனில், குழந்தைகள் கூடும் இடங்களான நூலகம், பள்ளி, கேளிக்கை பூங்கா, அருங்காட்சியகம் போன்ற இடங்களில் எல்லாம் நாட்டுப்புறக் கதைகளின் அடையாளங்களைச் சிலையாகவோ, சுவரொட்டிகளாகவோ அல்லது ஒப்பீட்டு வரிகளாகவோ காண முடியும். இந்த இடங்களில் நான் கவனித்த சில பிரபலமான நாட்டுப்புறக் கதைகளின் குறும் பட்டியலை இங்குப் பகிர்கிறேன்.

  1. Three Little pigs and wolf
  2. Goldilocks and the three bears
  3. The three billy goats Gruffs
  4. Little Red Riding Hood
  5. The ugly duckling
  6. Little Thumbling
  7. Jack the Giant Killer
  8. Puss in boots
  9. Jack and the beanstalk
  10. The tinder box
  11. The princess on the pea
  12. Snow white and seven dwarfs
  13. The Gingerbread man
  14. The Frog prince
  15. Hansel and Gretel
  16. Tom Thumb
  17. King arthur and the knights of the round table
  18. Robin hood

Three Little pigs and wolf கதையில் அம்மா பன்றி தனது பிள்ளைகளை அழைத்து, அவர்கள் தனித்தனியாகச் சென்று வேட்டையாடும் நரியிடமிருந்து பாதுகாக்கும் வீட்டினை கட்ட வேண்டும் என்கிறார். அந்த மூன்று பன்றிகளும் வீடு கட்டுகின்றன. முதலாம் பன்றி ஒரு நாளிலே குச்சிகளை வைத்து வீடு கட்டுகிறது. இரண்டாவது மண்ணை வைத்துக் கட்டுகிறது. மூன்றாவது பெரும் உழைப்பில் கற்களைக் கொண்டு கட்டுகிறது. எந்த வீடு நரியின் தாக்குதலிலிருந்து தப்பிக்கிறது என்பதே கதை. The three billy goats Gruffs என்ற கதையில் மூன்று ஆடுகள் – தங்களைத் தின்று ஏப்பம்விடக் காத்திருக்கும் பூதத்திடமிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பிக்கின்றன. Little Red Riding Hood கதையில் சிறுமி ஒருத்தி நரியின் தந்திரத்திலிருந்து தப்பிக்கிறாள். இவை அனைத்துமே நாம் ஏற்கனவே அறிந்திருந்த கதைவடிவம் என்றாலும் அதன் கதாபாத்திரங்கள் காலங்கள் கடந்தும் குழந்தைகள் மத்தியில் பிரபலமாய் இருக்கின்றன.

இங்கிலாந்தின் நாட்டுப்புறக் கதைகளில் கட்டைவிரல் டாம், அரசர் ஆர்தர், ராபின் ஹுட் போன்ற கதாபாத்திரங்கள் மிக முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளன. அரசர் ஆர்தர் என்பவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசனாகக் கருதப்படுகிறார். அவர் நல்லாட்சி புரிந்தவராகவும் கதைகளில் சித்தரிக்கப்படுகிறார். இவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்ற வாதமும் உண்டு. ராபின் ஹூட் பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருப்போம். மக்களின் நலனுக்காகத் திருட்டு-கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுபவன். இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் நல்லவன் என்று போற்றப்படுபவன். “நீ என்ன பெரிய ராபின் ஹூட்டா” என்ற வசனத்தை நாம் திரைப்படங்களில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த அளவிற்கு உலகளவில் புகழ்பெற்ற கதாபாத்திரமிது. கட்டைவிரல் டாம் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். கட்டைவிரல் அளவேயுள்ள அவனின் சாகசங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கின்றன. கட்டை விரல் டாமின் கதையைச் சுருக்கமாக இனி பார்ப்போம்.

அரசர் ஆர்தர் ஆட்சியில் மக்கள் அனைவரும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர். மக்கள் உண்மையிலே நலமாக உள்ளனரா என்பதை அறிய மெர்லின் என்ற தேவதை மனித உருவில் ஒரு விவசாயியின் வீட்டிற்குச் செல்கிறது. விவசாயியும் அவரது மனைவியும் மெர்லினை அன்புடன் வரவேற்று பாலும் உணவும் வழங்குகின்றனர்.

வீட்டில் அனைத்தும் ஒழுங்காக இருந்தாலும் ஏதோ ஒரு சோகம் நிலவுவதாக மெர்லின் உணர்கிறது. அரசரின் ஆட்சியில் ஏதாவது குறை உள்ளதா என்று விசாரிக்கிறது. அரசரின் ஆட்சியில் குறையேதுமில்லை ஆனால் தங்களுக்குக் குழந்தை இல்லாததை நினைத்தே வருந்துகிறோம் என்கின்றனர். ஒரு குழந்தை-கட்டை விரல் அளவிற்கு இருந்தால் கூட எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர். விரைவில் உங்கள் குறை தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று ஆசி வழங்கிவிட்டு மெர்லின் விடைபெறுகிறது. மெர்லின், தேவதைகளின் ராணியிடம் இந்த விசயத்தைச் சொல்கிறது. தேவதைகளின் ராணி தேவதைகளை விவசாயியின் வீட்டிற்கு அனுப்பி அவர்களுக்குக் கட்டை விரல் அளவில் ஒரு குழந்தையை வழங்குகிறது.

The Tale of Tom Thumb | Fairy Tales | Bedtime Storiesடாம் சிறுவனாக வளர்ந்தாலும் அவன் கட்டை விரல் அளவிலேயே இருந்தான். ஒருமுறை அவனது அம்மா கேக் தயாரிக்க மாவு பிசைகிறார். மாவு பிசைவதை வேடிக்கை பார்க்கப் பாத்திரத்தின் மீது ஏறி நின்ற டாம் அதில் வழுக்கி உள்ளே விழுந்துவிடுகிறான். டாமை அவனது அம்மா  கவனிக்கவில்லை. மாவை அவன் தலை மீது கொட்டி, சுடு நீரை ஊற்றும்போது. அதிலிருந்து தப்பிப்பது டாமிற்கு பெரும் பாடாய்ப் போகிறது. இன்னொரு முறை, டாமின் அம்மா மாட்டு கொட்டகைக்குப் பால் கரக்கச் செல்லும்போது டாமையும் அழைத்துச் செல்கிறார். டாம் அருகிலிருந்த மரக் கிளையில் ஒய்யாரமாக நின்றுகொண்டிருக்கிறான். அப்போது அந்தப் பசு மாடு கிளையின் இலையோடு டாமையும் சேர்த்து வாயில் மெல்ல ஆரம்பிக்கிறது. டாமின் அம்மா மாட்டின் வாயைத் திறக்க வைக்க ஏதேதோ செய்து, இறுதியாகத் தொண்டையிலிருந்த டாம் உருளுவதால் அது அவனை வெளியே துப்பிவிடுகிறது.

The Tale of Tom Thumb | Fairy Tales | Bedtime Storiesஒருமுறை அப்பாவுடன் வைக்கோல் ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டியில் போகிறான். அப்போது வண்டியிலிருந்து ஒரு பள்ளத்தில் விழுந்துவிடுகிறான். அவனை காகம் ஒன்று தூக்கிக்கொண்டு போகிறது. ஒரு கோட்டையின் அருகிலிருக்கும் ஆற்றில் போட்டுவிடுகிறது. ஆற்றிலிருக்கும் மீன் ஒன்று அவனை விழுங்குகிறது. மீனவர் ஒருவர் மீனைப் பிடித்து அரசருக்குப் பரிசளிக்கிறார். சமையல்காரர் மீனை வெட்டும்போது டாம் பத்திரமாக வெளியே வந்துவிடுகிறான். மீனுக்குள் இருந்த கட்டைவிரல் டாம் பற்றி அரசருக்குச் செய்தி செல்கிறது. பின்னர் அரசருக்கு, அரசிக்கு ஏன் அரசவைக்கே செல்லப் பிள்ளையாக மாறிப் போகிறான் டாம்.

பின்னர் அவன் ஒரு சாகசப் பயணம் செல்கிறான். எலி, பூனை, புறா, பட்டாம்பூச்சி, சிலந்திப் பூச்சி போன்ற பல ஆபத்துகளைச் சந்திக்கிறான் எனக் கதை விரிகிறது. இறுதியாக விசச் சிலந்திப்பூச்சியுடனான சண்டையில் அவன் இறப்பதாகக் கதை முடிகிறது.

The Original Tomஇதன் முதல் அச்சு வடிவம் 1621ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.  இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், கட்டைவிரல் டாம் கதை மிகவும் பழமையான கதை என்று அதன் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 1730களில் நாடக வடிவில் அரங்கேறி குழந்தைகளின் மனதைக் கொள்ளை அடித்தது. அதனைத் தொடர்ந்து Tommy Thumb’s Song Book(1744), Tommy Thumb’s Little Story book (1760), Tom Thumb’s Folio for Little Giants(1767) எனக் கட்டைவிரல் டாம் கதை பல வடிவங்களில் வெளியாகி சிறார் இலக்கியத்திலும் முக்கியமாக Fairy tales வகைமையில்  இன்றியமையாத இடத்தினைப் பெற்றது.

கட்டை விரல் டாம் என்ற கதாபாத்திரம் – இங்கிலாந்தில் மட்டுமல்ல பிரான்ஸ், ஜப்பான், டென்மார்க் எனப் பல நாடுகளில் உள்ள நாட்டுப்புறக் கதைகளில் பிரபலமானது. தமிழில் கூட “பெருவிரல் குள்ளன்” என்ற கதையினை எழுத்தாளர் கி.ரா அவர்கள் தனது “சிறுவர் நாட்டுப்புறக் கதைகள்” என்ற புத்தகத்தில் வழங்கியிருப்பார். நம்மூர் கட்டைவிரல் குள்ளனும் இங்கிலாந்தின் கட்டைவிரல் டாமும் ஒரே ஆளாய் கூட இருக்கலாம்.

நாட்டுப்புறக் கதைகள்  வலசைப் பறவைகள் போல உலகெங்கும் சுற்றித் திரிகின்றன. எல்லைகள் கடந்து வெவ்வேறு நிலங்களில் அவை தன் எச்சங்களை விட்டுச் செல்கின்றன. அந்த எச்சங்கள்  உயிர்போல் எழுகின்றன. மெல்ல மெல்ல வளர்ந்து மொழியின் ஆணி வேராய் மாறுகின்றன. அவையே காலங்கள் கடந்து நம் அடையாளமாய் உருப்பெறுகின்றன.

Leave a comment