குழந்தைகளும் டப் கவிதையும் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

Who’s Who

I used to think nurses

Were women,

I used to think police

Were men,

I used to think poets

Were boring,

Until I became one of them.

– Benjamin Zenphaniah

“Author Read”, “Spoken-Word Poetry”  போன்ற மேடை நிகழ்வுகள் ஆங்கில இலக்கிய உலகில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அதாவது எழுத்தாளர்களே தங்களது புத்தகங்களிலிருந்து சிறு பகுதியை வாசகர்களுக்கு வாசித்துக்காட்டுவார்கள். இதில் டப் கவிதை(“Dub Poetry”) என்பது கறுப்பின படைப்பாளிகளால் ஒருங்கிணைக்கப்படும்  கவிதை வாசிப்பு நிகழ்வு. “Dub” – என்ற சொல் திரைப்படத் துறையில் பயன்படுத்தப்படும் “டப்பிங்” என்பதிலிருந்து வந்தது.

“a poem that has a built-in reggae rhythm; hence, when the poem is read without any reggae rhythm…one can distinctly hear the reggae rhythm coming out of the poem”

டப் கவிதை என்ற சொல்லாட்சி முதன்முதலாக 1979ஆம் ஆண்டு ஜமைக்காவைச் சேர்ந்த கவிஞர் ஓக்கு என்பவரால் பயன்படுத்தப்பட்டு அதன் பிறகு பரவலாகியுள்ளது. பாப் மார்லியின் ரிக்கே இசைப்பாடல்களின் வழித்தோன்றலே இந்த டப் கவிதைகள். ராக் இசையின் தாளத்தோடு கவிதைகளை மேடைகளில் வாசிப்பதே இதன் சிறப்பம்சம். இந்த டப் கவிதைகள் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த டப் கவிதைகளில் சிறார் இலக்கியத்தை இணைத்து அதனைச் சிறார்களுக்கு வழங்கியவர்களில் முக்கியமானவர் பெஞ்சமின் சென்ஃபானா(Benjamin Zephania). சிறார் நாவல், படக்கதைப் புத்தகம், இளையோர் கவிதைகள் எனச் சிறார் இலக்கியத்தின் பல்வேறு வகைமைகளில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. “Talking Turkey”, “Wicked World”, “Funcky Chicken” இவரது இளையோர் கவிதைகள். இக்கவிதைகள் மேடைகளில் அறிமுகப்படுத்திய பிறகே எழுத்துவடிவம் பெற்றுள்ளன.

இக்கவிதைகளிலுள்ள மொழியை “Creole English” என்கிறார்கள். தமிழில் எப்படி மெட்ராஸ் பாஷை அல்லது சென்னைத் தமிழ் என்று சொல்கிறோமோ, அதோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். “Creole English” என்பது ஆப்பிரிக்க-கரீபியன் மக்கள் பேசும் மொழி. அவர்களின் உச்சரிப்பும் வட்டார மொழி வழக்கும் வெள்ளையர்களின் ஆங்கிலத்திலிருந்து வேறுபடுகிறது. வாய்மொழியாய் சொல்லப்படும் கவிதைகள் எழுத்துவடிவம் பெறும்போது, பொதுவாக இலக்கண விதிகளுக்கு உட்பட்டே இருக்கும். ஆனால், பெஞ்சமினின் கவிதைகள் பேச்சு வழக்கில் இடம்பெற்ற அதே உச்சரிப்போடு(உதாரணமாக: This->dis, the->de, with->wid) எழுத்து வடிவிலும் இடம் பெற்றுள்ளன.  இம்மொழி குழந்தைகளுக்கு நெருக்கமாக இருப்பதாக இலக்கிய ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெஞ்சமின் சென்ஃபானா கவிதைகள் சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களையும், மானுடத்தையும், இனபாகுபாடுகளையும், வேகன் உணவு முறை குறித்துமே அதிகம் பேசுகின்றன. “Talking Turkey” புத்தகத்திலிருந்து எனக்குப் விருப்பமான சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.

Royal Tea எனும் கவிதையில் இங்கிலாந்து ராணியின் பக்கிங்காம் அரண்மனையைச் சுற்றிப்பார்க்கச் சென்ற அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாகப் பகிர்ந்திருப்பார். அரண்மனையில் தான் கவனித்த மனிதர்கள், பொருட்கள் என ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வருவார். முடிவில் சுற்றிப்பார்க்க 85 பவுண்டு செலவானது என்றும், எங்கள் வீட்டிற்கு வாருங்கள் ராணி! எந்தச் செலவுமின்றி உங்களுக்குத் தேநீர் தருகிறேன் கூடவே அழகிய புகைப்படமும் எடுத்துத் தருகிறேன் என்று முடித்திருப்பார்.

Royal Tea

I went to Buckingham palace today

To see royal things old and new,

It cost me eight fifty but no need to worry

If you visit me you dont need any money

There’s no OBEs

but ther’s fresh tea

with honey

And I can take

photos of you.

இவர் தனது கவிதைகளில் சொற்களோடு, அதிலுள்ள எழுத்துரு, ஓவியம், புகைப்படம், வடிவமைப்பு என ஒவ்வொரு விசயத்தையும் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். அதற்கு மிகச் சரியான உதாரணம் According to my mood எனும் கவிதை. இதில் தனக்கு “கவிஞன் என்ற லைசன்ஸ்” உள்ளதாகவும் அதனால் கவிதையை தனது விருப்பப்படியே அமைப்பேன் என்றும் சொல்லியிருப்பார். அதில்  எழுத்துகள், ஆச்சரியக்குறி, முற்றுப்புள்ளி இவற்றை இலக்கண விதிகளுக்கு உட்படுத்தாமல் எழுதியிருப்பார். மிகவும் அழகான கவிதை அது.

The British என்ற இவரது கவிதையைவிட வேறு எந்த கவிதையும் இங்கிலாந்தை இவ்வளவு அழகாக வர்ணித்திருக்க முடியாது என்பேன். இங்கிலாந்து என்பது பல இனத்தினரும் சேர்ந்து வாழும் நாடு என்பதை ஒரு சமையல் குறிப்பாக எழுதியிருப்பார். அனைத்து மக்களையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு இறுதியாக இப்படி முடித்திருப்பார்.

As they mix and blend allow their languages to flourish

Binding them together with English.

Allow time to be cool.

Add some unity, understanding, and respect for the future,

Serve with justice

And enjoy.

Note: All the ingredients are equally important. Treating one ingredient better than another will leave a bitter unpleasant taste.

Warning: An unequal spread of justice will damage the people and cause pain. Give justice and equality to all.

இந்தக் கவிதை ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கவிதை. இவரது கவிதைகள் குறித்து மேலும் பேச வேண்டிய விசயங்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட மிகவும் சுவாரஸ்யமானது அவரது வாழ்வு. அதனைச் சுருக்கமாக உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

பெஞ்சமின் சென்ஃபானா சரியாகப் படிக்காததால் 13வயதில் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டவர். பள்ளியிலிருந்து விலக்கப்பட்டதால், தெருக்களில் திரிந்து அப்படியே மெல்ல மெல்லத் தீய பாதையில் சென்றுள்ளார். திருடுவது, கேங் சேர்வது போன்ற தவறான செயல்களால் சிறைக்குச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் துப்பாக்கியும் அவரிடம் வந்து சேர்கிறது. தான் ஏன் இத்தனை கெட்டவனாக மாறிப் போனேன் என்று அவர் மனம் வருந்துகிறார். இது தான் அல்ல என்ற எண்ணம் அவர் மனதை வாட்டுகிறது. இனி ஒருபோதும் தீய வழியில் செல்ல மாட்டேன், நல்லவற்றை மட்டுமே இனி செய்யப் போகிறேன் என்று முடிவெடுக்கிறார். தனக்கு எது பிடித்தமானது என்று சிந்திக்கிறார். சிறுவயது முதலே வார்த்தைகளைச் கவிதையாகச் சொல்வதில் அவர் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆகையால் கவிதைகளே இனி தன் பாதை என முடிவு செய்கிறார்.

அவரது இளமைக் காலத்தில், பாப் மார்லி போன்றோர் மேடை நிகழ்வுகளில் மிகவும் பிரபலம். அதுபோன்று தானும் மேடை ஏற வேண்டும் என்ற உந்துதலில் சிறுசிறு நிகழ்வுகளில் மேடை ஏறி தனது மனதில் தோன்றியதை கவிதை போல் சொல்கிறார். அது மெல்ல மெல்ல அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால் தனது கவிதைகளை நண்பர் ஒருவரிடம் சொல்லி புத்தகமாக மாற்றுகிறார். அப்பொழுதும் கூட கவிதை, பேச்சு வழக்கில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அவரது கவிதைப் புத்தகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெறுகிறது. சில வாரங்களிலே இரண்டாம் பதிப்பும் காண்கிறது. அதன்பிறகே அவர் முதியோர் கல்வியில் இணைந்து முறையாக ஆங்கிலம் பயின்றுள்ளார். அப்பொழுதுதான் அவருக்கு கற்றல் குறைபாடு உள்ளதாக அங்குள்ள ஆசிரியர்கள் கூற, தனது குறைபாடு குறித்து அங்குதான் அவர் அறிந்துகொள்கிறார். பின்பு அதற்கான முறையான பயிற்சிகள் மேற்கொண்டு தனது குறைபாட்டினை கையாளும் வித்தையைக் கற்றுக்கொள்கிறார்.

“எனது குறைபாடுகள் என் சிந்தனைகளைத் தடுப்பதை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை” என்று அவர் ஒவ்வொரு இடத்திலும் சொல்வதைக் காண முடிகிறது.

1980களில் நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக ஒரு பாடலை வெளியிடுகிறார் பெஞ்சமின். அது சிறையிலுள்ள மண்டேலாவையும் சென்றடைகிறது. 1990களில் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வந்தபோது, “அந்த பிரித்தானியக் கவிஞனைச் சந்திக்க வேண்டும்” என்றாராம். அதன்பிறகு மண்டேலாவும் பெஞ்சமினும் சேர்ந்து தென்னாப்பிரிக்கக் குழந்தைகளுக்காகச் சில நலத்திட்டங்களை செயல்படுத்தினர்.

உண்மையில் சென்ஃபானாவின் வாழ்வின் ஒவ்வொரு தருணமுமே மிகவும் உற்சாகம் தரக்கூடியதாக நான் உணர்கிறேன். இனவெறி, ஏழ்மை, கற்றல் குறைபாடு, சிறை, என இத்தனை தடைகளிலிருந்து வெளியே வந்துள்ள மனிதன் அவன். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்குமே அவரது வாழ்வு முன்மாதிரியானது.

பெஞ்சமின் சென்ஃபானா தனது 65ஆம் வயதில் (டிசம்பர் 2023) இயற்கை எய்தினார். அவரது இறுதி மூச்சு வரை “நாம் அனைவரும் சமம்” என்ற கோட்பாட்டையே அவர் வலியுறுத்தி வந்தார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் வழியே இனி அவர் என்றும் நம்முடன் இணைந்திருப்பார். அவரது கவிதை வரிகளோடு நானும் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

My Love for you

Is oh so true,

Be good mankind, be good mankind,

And let us be as one people,

Be good mankind, be good.

Let’s live some more

Abandon war,

Be sage mankind, be sage mankind,

And let us live our dreams people,

Be sage mankind, be safe.

 

There is one race

The living race,

Spread love mankind, spread love mankind,

And lets be peace and love people

Spread love mankind, spread love

 

Don’t get me wrong,

My love is strong,

Be cool mankind, be cool mankind,

And let us live us one people,

Be cool mankind, be cool.

References:

  1. Benjamin Zephaniah’s dub poetry and its appeal to children: an ecocritical reading – Alanoud Abdulaziz Alghanem
  2. https://youtu.be/iHi6wIDaT1Y?si=IJOpmrrckWsvCJ3j
  3. https://youtu.be/v4AgPSjzXkw?si=cA-7Mju19DkvFyzm
  4. https://youtu.be/VtwmXjrMkAk?si=7tBLI0NcvP_t6VIL
  5. https://archive.org/details/talkingturkeys0000zeph

Leave a comment