“அப்பா…..” என்று ராகத்துடன் அழைத்தாள் என் மகள். ராகத்திலே தெரிந்துவிட்டது அவளது வீட்டுப் பாடத்தில் ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது என்று. “அப்பா…Black Heritage Monthக்கு ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பற்றி போஸ்டர் ஒன்னு செய்யணும்” என்றாள். அதற்கென்ன “நம்ம ஒலாடா” பற்றி எழுதிடலாம் என்றேன். “அங்கதான்பா ஒரு சின்ன பிரச்சனை-கவிஞர்கள் அல்லது பெண் எழுத்தாளர்கள் பற்றிதான் போஸ்டர் செய்யணும்” என்றாள். சரி, தேடுவோம் என்றேன்.
இங்கிலாந்தில்(மேலும் சில நாடுகளிலும்) வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தை Black Heritage Month என்று கறுப்பின மக்களின் வாழ்வை போற்றுகின்றனர். அம்மாதம் முழுவதும் நூலகங்கள், கல்வி நிலையங்கள் எங்கும் கறுப்பின மக்களின் அடிமைத்தன வரலாற்றையும், அதற்கான போராட்டங்களையும், அவர்களது கலை-இலக்கிய பங்கு குறித்தும், சமகாலத்தில் எதிர்கொள்ளும் இன பாகுபாடுகள் குறித்தும் பேசுகின்றனர். மாணவர்களிடையே நிலவும் நிற வேறுபாடுகளைத் தகர்க்க இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். வரலாற்றில் நடந்த தவறுகளை வெளிப்படையாகப் பேசுவது மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அந்த தவறுகள் நடக்காமல் பாதுகாக்கும் முயற்சி என்று கூறலாம்.
Black Heritage Month – ஒரு எழுத்தாளர் குறித்து எழுத வேண்டும் என்று மகள் சொன்னதும் எனக்கு உற்சாகம்தான். கவிதைகள் குறித்தும் பெண் எழுத்தாளர்கள் குறித்தும் குறிப்பாகச் சிறார் இலக்கியத்தில் பங்களித்தவர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவே நான் இதைப் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் வழக்கமாகச் செல்லும் நூலகத்தில் “கறுப்பின எழுத்தாளர்கள்” குறித்து ஓர் அழகிய போஸ்டரை வைத்திருந்தார்கள். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை என இலக்கிய வகைமைகளையும் எழுத்தாளர்களையும் தொடர்புபடுத்தி ஒரு மேப் போல வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அதில் எனக்கு அறிமுகமாகியிருந்தவர்கள் மிகவும் குறைவே. மகளிடம் அந்தப் போஸ்டரைக் கொடுத்தேன். அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி. அப்படி அந்தப் பட்டியலிலிருந்து மகள் தேடிப்பிடித்த பெண் கவிஞர்தான் “Jackie Kay”. மகளுடன் இணைந்து ஜேக்கி கே குறித்தும், அவரது சில புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜேக்கி கே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர். நாவலாசிரியர் மற்றும் நாடகத்திற்குத் திரைக்கதை எழுதுபவர். “Creative Writing” துறையில் பேராசிரியராகவும் இருந்தவர். 1961இல் ஸ்காட்லாந்தின் தலைநகரமான எடின்பரோரில்(Edinburg) பிறந்தார். இவரது தாய் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வெள்ளையர், இவரது தந்தை நைஜீரியாவைச் சேர்ந்த கறுப்பினத்தவர். பல்வேறு காரணங்களால், ஜேக்கி கே பிறந்த சில நாட்களிலே ஜான் கே மற்றும் ஹீலன் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். வீட்டில் அவளுக்கு வளர்ப்பு பெற்றோரின் அன்பும் பாசமும் கிடைத்தாலும், வீட்டைக் கடந்த அவரது குழந்தைப் பருவம் கசப்பான அனுபவங்கள் நிறைந்தவை.
தனது எட்டு வயதில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து ஒரு நேர்காணலில் இவ்வாறு பகிர்ந்திருந்தார் ஜேக்கி கே,
“நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தினமும் என்னைச் சில சிறுவர்கள் மறித்து, என் வாயில் மண்ணைத் திணித்து உண்ணச் செய்வார்கள். மண் வீட்டிலிருந்துதானே நீயெல்லாம் வந்த, அப்போ அதைதான் நீ சாப்பிடணும்” என்று சொல்லிச் சிரிப்பார்கள். உண்மையில் இதனைச் சிறுவர்களின் தவறு என்று நான் சொல்லமாட்டேன். மாறாக இது முழுக்க முழுக்க பெரியவர்களின் தவறே. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்களையே சிறுவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இனவெறி என்பது இந்தச் சமூகத்தின் கட்டமைப்பிலே உள்ளது.” என்றார்.
தனது இருபது வயதில், ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு வந்து ஆங்கிலம் மற்றும் நாடகத்துறையில் பட்டம் பெற்றார். சிறுவயது முதலே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான “”The Adoption Papers” 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஒரு சிறுமி, அவளைப் பெற்ற தாய், அவளது வளர்ப்புத் தாய் என மூன்று நபர்களின் பார்வையில் நிற-இன-பாலின-தேசம் போன்ற தனிமனித அடையாளங்களைப் பல்வேறு கோணங்களில் பேசும் கவிதைத் தொகுப்பு. பெரியோர்களுக்கு எழுதியது போலவே ஜேக்கி கே இளையோர்களுக்கான கவிதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். The Frog who dreamed she was an Opera Singer, Red Cherry Red, Red dust road, Two’s company, Strawgirl, Twice Over(நாடகம்) ஆகிய படைப்புகளைச் சிறுவர்களுக்காக எழுதியுள்ளார்.
இவரது கவிதைகளில் சிறுமிகளே அதிகம் இருக்கின்றனர். குழந்தைமையின் வெகுளித்தனத்தையும் எதேச்சையான கேள்விகளையும் அவர்களது உலகிலுள்ள சிறுசிறு பொருட்களையும் கூட அழகிய கவிதையாக்கியுள்ளார். நானும் மகளும் மிகவும் ரசித்த ஒரு கவிதை அஸ்ட்ரோராட்(Astrorat). “மனுசன் எங்க போனாலும் இந்த எலிகளும் வந்திடுது..நல்ல வேளை நிலாவுக்குப் போனபோது இந்த எலி போகல” என்று யாரோ பேசுவதைக் கேட்ட எலி ஒன்று நிலவிற்குச் செல்வதாக எழுதியிருப்பார். பாடகராக ஆசைப்பட்ட தவளை, பூச்சி பல்லில் உள்ள ஓட்டை, சஹாரா பாலைவனத்தில் உள்ள குளம், பார்பி பொம்மை, நோயுற்றபோது இருந்த கட்டில் எனக் குழந்தைகளின் பார்வைக்கு மட்டுமே தெரியும் விசயங்கள் அனைத்துமே இவரது கவிதைகளில் காண முடியும்.
“Girl Footballer” – கவிதை, கால்பந்தாடும் ஒரு சிறுமியைக் கண் முன்னே கொண்டுவந்துவிடும். Dunane’s Fillings எனும் கவிதையில் பதிமூன்று சொத்தைப் பற்களை வைத்திருக்கும் சிறுமி ஒருத்தி மைதானத்தில் விளையாடாமல், தனது சொத்தை பற்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறாள்- அது மிகவும் நகைச்சுவயான கவிதை. Mr. & Mrs. Lilac – பக்கத்துவீட்டில் தவறுதலாகச் செல்லும் பந்துகள் மாயமாகும் கதையைப் பேசும் கவிதை. WordPerfect, Word of Lies கவிதைகளும் மிகவும் அழகானவை. இப்படி வாழ்வின் அழகிய தருணங்களைத் தேடித்தேடி கவிதைகளாக மாற்றியிருப்பார்.
இவரது கவிதைகள் அழகியலைப் பாடியது போலவே அவலங்களையும் பாடியிருக்கின்றன. அதுவும் குறிப்பாகக் கறுப்பு நிற பெண் குழந்தையின் பார்வையிலிருந்து பிரித்தானிய நாட்டின் வாழ்வியலை, 1970-1990 காலகட்டத்தை இவர் துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல, தத்தெடுக்கப்படும் குழந்தையின் மனநிலையிலிருந்து தனது அடையாளம் என்ன? தான் யார்? எனும் தேடலைக் கருபொருளாகக் கொண்ட கவிதைகளையும் அதிகமாகக் கவனிக்க முடியும். “Miss Always Believes Christopher” கவிதையில் வகுப்பறையில் உள்ள பாரபட்சத்தை அப்பட்டமாகப் பேசியிருப்பார்.
Miss always believes Christopher
Miss doesn’t believe anybody does but Christopher
He can do no wrong even when he does wrong
Her eyes are full of glitter for Christopher.
என்று ஆரம்பிக்கும் கவிதை…
Miss believes Christopher so much.
That I’ve started believing him too.
Christopher is my best friend and as such,
I wish Miss would believe me too.
தனிப்பட்ட முறையில் எனக்கு ஏனோ இந்தக் கவிதை மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. சிறுவயதில் நமது ஆசிரியர்களின் சிறு பாராட்டுகளுக்காக ஏதோ வகையில் ஏங்கி இருப்போம். அந்த நினைவுகளையெல்லாம் இந்தக் கவிதை மீட்டெடுத்துவிட்டது.
“கறுப்பு ஆயா”(Black Ann) கவிதையில் கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்மணி தனது கடனை அடைத்துத் தன் பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க நினைத்திடத் துடிக்கும் ஒரு தாயின் குரலைப் பிரதிபலித்திருப்பார். “No Speaks” எனும் கவிதையில் மூன்று வருடங்களுக்கு முன்பு பேசுவதை நிறுத்திக் கொண்ட குழந்தையின் மனதை எழுதியிருப்பார்.
I am the child who stopped who stopped talking
Three years ago. There was heave snow.
It was a blow to my family, I know.
They call me. No-speaks.
It has been one hundred and fifty-six weeks
Since I came to my decision about speech.
I clocked it was a waste of time,
To talk in plain speech or rhyme.
So, I watch the telling hands chime.
பேசாமல் இருப்பதால் நான் தற்போது நன்றாக இருக்கிறேன் என்று ஒவ்வொன்றாக சொல்லி வரும் அந்தக் கவிதையை இப்படி முடித்திருப்பார் ஜேக்கி கே.
“I am a closed book. A sealed letter.
A shut letter-box
I despise the blether, the chatterbox.
Life is much better
But every sound is an electric shock.
Leaves are shy when they first
Fall from trees”
“Stressed out” கவிதையில் மன அழுத்ததிலுள்ள சிறுமி பேசுகிறாள். பள்ளியில் நடக்கும் நிறவெறி தாக்குதலால் தூக்கமின்றி, அவள் நட்புகொள்ள யாருமின்றி தனிமையில் அவதியுறுகிறாள். யாரிடமாவது தனது நிலையைச் சொல்லி அழ வேண்டும்போல் அவளுக்கு இருக்கிறது என்று செல்கிறது அந்தக் கவிதை.
I am totally stressed out.
I cant sleep at night.
I shake when I hear them shout
He has his nerve pills; she has her alocohol.
Me? I have nothing at all.
There is no one to talk to
I have this strange singing in my head.
At night, alone in bed,
The stress is in my sheets
Clinging to my nightdress,
Climbing in through the windows.
There are tests tomorrow;
Bullies posted in the playground.
Many things to remmber.
I told my mother I said,
I am totally stressed out.
She said, “Don’t be silly
Children don’t get stressed.
“Like Hell they don’t”, I said
And she sent my room for swearing…
So now here I am,
Stuck in my stupid bedroom.
Locked up, stressed out, all alone.
I swear to bring my stress levels down.
Life Sucks. என்று சிறுமி சொல்வதாகக் கவிதை முடிகிறது. குழந்தைகளின் அக உலகையும், அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தையும், ஆறுதல் தரும் கரங்களுக்காக ஏங்கும் அவர்களது உள்ளத்தையும் காட்சிப்படுத்துகிறது இந்தக் கவிதை. குழந்தைகளின் குரலுக்கு செவி தர மறுக்கும் பெரியவர்களின் உலகத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இக்கவிதைக்கு எந்தக் காலத்திலும் நம்மால் பதில் தர இயலாது என்றே நினைக்கிறேன்.
ஜாக்கி ஜே ஆங்கில இலக்கிய உலகில் மிகவும் முக்கியமானவர். ஆங்கிலத்தில், பெரியவர்களுக்காக எழுதுபவர்கள், சிறுவர்களுக்காக எழுதுவதையும் தங்களது எழுத்துப் பணியின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். பெரியவர்களுக்கு எழுதுவதால், சிறுவர்களுக்கு எழுதும்போது எந்த ஆசான் மனநிலையையும் அவர்கள் கொள்வதில்லை. தமிழில் அப்படியான ஒரு சூழல் இல்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில் ஜாக்கி ஜே பெரியவர்களுக்காக எழுதியது போலவே குழந்தைகளுக்காகவும் மிக முக்கியமான படைப்புகளை வழங்கியிருக்கிறார். அவரது இலக்கிய சேவையைப் பாராட்டி, கடந்த 2020ஆம் ஆண்டிற்கான “CBE Award” எனும் விருதை இங்கிலாந்து அரசு வழங்கியது. அதேபோல் ஸ்காட்லாந்து அரசு இவரை 2016-2021க்கான தேசியக் கவிஞராக அறிவித்தது.
சரி! ஜேக்கி கே விருது பட்டியலை விடச் சுவாரஸ்யமான விசயம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். ஜேக்கி கே பற்றி மகள் தயாரித்த போஸ்டருக்குப் பள்ளியில் பரிசு கிடைத்தது. 😊
நன்றி.
References:
- Jackie Kay Books (pdf): https://archive.org/search?query=creator%3A%22Kay%2C+Jackie%22
- https://www.theguardian.com/books/2020/may/22/scottish-national-poet-jackie-kay-talks-about-racism-she-endured-as-a-child
- https://www.scottishpoetrylibrary.org.uk/poet/jackie-kay/
- https://www.poemhunter.com/jackie-kay/poems/
- https://poetryarchive.org/poet/jackie-kay/
- https://en.wikipedia.org/wiki/Jackie_Kay