வின்ட்ரஷ் தலைமுறை என்ற சொற்றொடர் இங்கிலாந்து வரலாற்றில் மிக முக்கியமானது. இலக்கியம், திரைப்படங்கள், அருங்காட்சியங்கள், நூலகங்கள், ஓவியங்கள், சிலைகள் என ஏதோ ஒரு வகையில் வின்ட்ரஷ் என்ற அடையாளத்தை இங்கிலாந்து நினைவுப்படுத்திகொண்டே இருக்கிறது.
இரண்டாம் உலக யுத்தத்திற்ப் பிறகான காலம் அது, இங்கிலாந்து தன்னை சீரமைத்துகொள்ள அடித்தட்டு மக்களின் உழைப்பைக் கோரியது. அதேநேரம் தனது காலனியாதிக்க நாடுகளில், முக்கியமாக கரீபியன் தீவுகளில் உள்ள ஜமாய்க்கா போன்ற நாடுகளில் பொருளாதார மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் அவுதியுற்றுக் கொண்டிருந்தது. அதனால், 1948இல் இங்கிலாந்து அரசு தனது காலனியாதிக்க நாடுகளிலிருந்த மக்களை, இங்கிலாந்தைச் சீரமைக்கும் வேலைகளுக்கு அழைத்தது. அம்மக்களுக்குக் குடியுரிமையும் வழங்கியது. “உங்கள் தாய்நாட்டிற்கு வாருங்கள், உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் நல்ல எதிர்க்காலம் உண்டு” என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறியது. கரீபியன் தீவியிலிருந்த ஆப்பிரிக்க இன மக்களை, சாலை போடுதல்-ஓட்டுநர்-பெயின்டர்-துப்புறவு போன்ற அடித்தட்டு வேலைகளைச் செய்ய அழைத்து வந்தது. இங்கிலாந்தின் ரயில்வே துறையும் மருத்துவத் துறையும் இவர்களது உழைப்பால் உருவானவை என்றால் அது மிகையல்ல.
அப்படி கரீபியன் தீவுகளிலிருந்து இங்கிலாந்திற்கு முதன் முதலாக மக்களை அழைத்து வந்த கப்பலின் பெயர்தான் வின்ட்ரஷ். அந்தக் கப்பலின் முதல் பயணத்தில் மட்டும் சுமார் 1000 மக்கள் புதிய வாய்ப்பினைத் தேடி இங்கிலாந்திற்கு வந்தனர். இப்படியாக 1948முதல் 1971வரை இங்கிலாந்திற்குப் புலம்பெருந்த மக்களையும் அவர்களது அடுத்தடுத்த தலைமுறைகளையும்தாம் வின்ட்ரஷ் தலைமுறை என்றழைக்கின்றனர். கரீபியன் தீவு என்பது பெரும் முதலாளிகளின் தோட்டங்களால் உருவான நாடு என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே கரீபியன் தீவுகளில் ஆப்பிரிக்க இன மக்களைப் போன்று புலம்பெயர்ந்த இந்தியர்களும் உண்டு, அதேபோல் சிங்கப்பூர், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மக்களுக்கும் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கரீபியன் தீவுகளிலிருந்து வந்த மக்களையே வின்ட்ரஷ் தலைமுறை என்கின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு வின்ட்ரஷ் 75 ஆண்டுகளை நிறைவு செய்ததை இங்கிலாந்து அரசு நினைவு கூறியது.
இவர்களிலிருந்து 1966ஆம் ஆண்டு எழுத்தாளர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள், திரைபடக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என உதிரிகளாய் இருந்தவர்கள் பலரும் இணைந்து The Caribbean Artists Movement என்றொரு இயக்கத்தை ஆரம்பித்தனர். 1972வரை இந்த இயக்கத்தின் வழியே பலரும் கலை இலக்கியங்களில் முக்கியப் பங்காற்றினர். கலைகள் வழியே தங்களது கலாச்சார அடையாளங்களையும், கரீபியக் கதைகளையும், இலண்டன் வாழ்வியலில் சந்திக்கும் சிக்கல்களையும் தீவிரமாகப் பேசினர். இதுபோன்ற தொடர் செயற்பாடுகளினால் இங்கிலாந்தின் கலை-இலக்கியங்களில் தவிர்க்க முடியாத இடத்தினை வின்ட்ரஷ் தலைமுறையினர் பெற்றுள்ளனர் எனக் கருதுகிறேன். (புலம்பெயர்ந்த தமிழர்கள் இதுபோன்ற ஓர் இயக்கத்தை ஏனோ கட்டமைக்கத் தவறிவிட்டனர் என்றே தோன்றுகிறது.) அடுத்தடுத்த தலைமுறையினரும் கலை-இலக்கியங்களில் தங்களது சமகால இருப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அப்படிச் சிறார் இலக்கியத்தில் வின்ட்ரஷ் தலைமுறையினர் கதையினைச் சொல்லும் சிறார் நாவலான Benjamin Zephania எழுதிய “Windrush Child” குறித்து இனி பார்ப்போம்.
Benjamin Zephania எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஒரு கவிஞர், ராப் பாடகர், இசை அமைப்பாளர். மேலும் கவிதைகள் மற்றும் படைப்பூக்கப் பாடத்தின் பேராசிரியர். 1958இல் இங்கிலாந்தில் பிறந்த இவர், கடந்த டிசம்பரில் (2023) இயற்கை எய்தினார். இவரது மறைவை ஒட்டி இங்குள்ள நூலகங்கள் அவரது புத்தகங்களைத் தனியே காட்சிப்படுத்தி அஞ்சலி செலுத்தியது. இவர் கற்றல் குறைபாட்டால் 13வயதிலேயே பள்ளிக் கல்வியிலிருந்து விலகியவர். தனது நிறமும், தான் பேசும் மொழியும், தனது ஆங்கில உச்சரிப்பும் அதனால் எழுந்த கேலிகளுமே தன்னை கற்றல் குறைபாட்டிற்குத் தள்ளியது எனவும் எந்தச் சொற்கள் தனக்கு அச்சத்தை மூட்டி காயப்படுத்தினவோ அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி எழுத்தாளரானேன் என்கிறார். பெஞ்சமின் தன் வாழ்நாளில் 16 கெளரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளார். 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு இவருக்கு “Officer of the Order of the British Empire (OBE)” எனும் உயரிய விருதை அறிவித்தது. தனது வாழ்நாள் முழுவதும் “Empire” என்ற கருத்தியலை விமர்சித்தும் எதிர்த்தும் பேசி வருகிறேன், ஆதலால் இந்த விருதை நான் ஏற்கவில்லை என்று துணிச்சலாக அறிவித்தார். இப்படி, பெஞ்சமின் தனது படைப்புகளிலும் வாழ்விலும் பல தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தவர்.
“எனக்கு வரலாறு பிடிக்கும், ஏனென்றால் நாம்தான் வரலாறு, நம்மை போன்ற சாதாரண மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறோம்” என்ற அழகிய வரியுடன் ஜமைக்காவில் லெனர்ட் எனும் பத்து வயது சிறுவனிடமிருந்து நாவல் தொடங்குகிறது. பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் வரலாற்றுக்கும் பாட்டியின் கதைகளில் வரும் வரலாற்றுக்கும் ஏன் இத்தனை வேறுபாடு? ஏன் ராணி வாழ்க என்று பள்ளியில் பாட்டுப்பாட வேண்டும். நமக்கும் ராணிக்கும் என்ன சம்மந்தம்? எனக்கு தெரிந்த ஒரே ராணி என் அம்மாதான்! என்றெல்லாம் அவன் யோசிக்கும்போது, அவனது பாட்டி “ஜமைக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?” என்று கேட்கிறார். லெனர்ட் உடனே கொலம்பஸ் என்கிறான். உனக்கு ஒன்று தெரியுமா? அதற்கு முன்னரே நம் மூதாதையர் இங்கு வாழ்ந்து வந்தனர். அப்படியென்றால் நாம்தானே ஜமைக்காவைக் கண்டுபிடித்தோம். என்று எள்ளி நகையாடுகிறார்.
லெனர்டுக்கும் பாட்டி மீது அளவுகடந்த அன்பும் பாசமும் உண்டு. ஒரு காட்சியில், “நீ வளர்ந்து என்ன ஆகப்போற?” என்ற கேள்விக்கு, “நான் வளர்ந்து என் பாட்டி போல் ஆகப்போறேன்” என்பான். லெனர்டின் வீடு சிறிய குடிசை என்றாலும் பறந்த வானமும், மாமரங்களும், வெட்ட வெளிகளும், நண்பர்களும் அவனுக்குப் பேரின்பத்தை அள்ளித்தந்தன. ஒரே ஒரு குறைதான், அவனது அப்பா அவன் குழந்தையாக இருந்தபோதே வின்டரஷ் எனும் கப்பலில் ஏறி இலண்டன் சென்றவர். அப்பா அருகில் இருந்தால் அவனது உலகம் முழுமை அடைந்துவிடும். அப்பா எப்பொழுது திரும்புவார் என்று அவன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தபோது, அவன் பாட்டியை விட்டு, சொந்த ஊரை விட்டு அம்மாவுடன் இடம் மாறும் சூழல் ஏற்படுகிறது. இலண்டன் சென்று அங்குள்ள வாழ்வியலுக்குள் பொருந்தி இங்கிலாந்தின் குடிமகனாக அவன் மாறுவதே நாவலின் கதை.
ஜமைக்கா தமிழ்நாடு போன்றே வெப்பமான ஒரு நிலம், ஆனால் இங்கிலாந்து குளிர்ப்பிரதேசம். வெப்ப்ப பகுதியிலிருந்து செல்பவர்களுக்குக் குளிர் என்பது பெரும் சிறை. அதுவும் பறவை போல் பறந்து திரிந்த லெனர்ட்டுக்குக் குளிரும், வெளுப்பு நிற வானமும், அடைந்துகிடக்கும் கால்களும், நண்பர்களற்ற ஊரும், நிறத்தால் தனிமைப்படுத்தும் பள்ளியும் அவனது பள்ளிப்பருவத்தையே முடக்குகின்றன. “இது எல்லாம் உன் நல்லதுக்குதான்” என்று பெற்றோர் சொல்லும் போதெல்லாம், “இதில் என்ன நல்லது இருக்கு? நான் இங்கு அடைந்துகிடப்பதுதான் நல்லதா? எனக்காக நீங்களும் கஷ்டப்பட்டு, நானும் கஷ்டப்பட்டு..எதுவுமே கிடைக்காமல் இந்த ஊரில் ஏன் இருக்க வேண்டும்?” என்பதே அவன் மனதை அழுத்தும் கேள்வி.
“நீ ஆப்பிரிக்காதானே? ஆப்பிரிக்க மொழியில் ஏதாச்சும் பேசேன்? உன் முடி சுருள் சுருளா ஏன் இருக்கு? உன் நிறம் ஏன் இப்படி இருக்கு” எனப் பள்ளியில் தன்னைக் காட்சிப்பொருளாக சக மாணவர்கள் பார்ப்பது பெரும் மன உளைச்சலைத் தருகிறது.
ஒரு வீடு என்பது ஒரு குடும்பத்திற்கானது என்கிற எண்ணமே நம் அனைவருக்கும் இருக்கும். அதுவும் குறிப்பாக நடுத்தர குடும்பத்தினர் வாழ்வின் அடிப்படை தேவை என்பது தனி வீடே. ஆனால், இங்கிலாந்தில் ஒரு வீட்டின் அறையே ஒரு குடும்பத்திற்கானதாக இருப்பதை இன்றும் காண முடியும். ஒரு வீட்டில் ஒரு கூடம், இரண்டு அறைகள் என்றால். அதனுள் மொத்தம் மூன்று தனி குடும்பங்கள் வாழ்வது என்பது மிகவும் இயல்பானது. இதனை “Sharing” என்று குறிப்பிடுகிறார்கள். அப்படித்தான் லெனர்டும் மற்ற புலம்பெயர்ந்தவர்கள் போலவே ஒரு சிறு அறையில் தனது உலகைச் சுருக்கிக் கொள்கிறான்.
லெனார்டு மற்றும் அவனது பெற்றோர் பார்வையிலிருந்து காட்சிப்படுத்தப்படும் இங்கிலாந்துதான் நிதர்சனமானது. இதுவரை இங்கிலாந்து குறித்து நாம் திரைப்படங்களிலும் இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் பார்த்தது அறிந்தது அனைத்துமே மிகைப்படுத்துதலே. இங்கு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியல் வேறுவிதமாக அமைந்திருக்கிறது. இது வெறும் கருப்பின மக்களுக்கு மட்டுமே நடப்பவை அல்ல. நிறத்தால் வேறுபட்ட அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்சனை. “மாநிறம் என்பதால் என்னை கூலி என்றே சக மாணவர்கள் அழைத்தனர்” என்று ஒரு இந்திய வம்சாவளி எழுத்தாளர் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பதிவுசெய்தார். “மாநிறம் என்பதால் எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு கருத்தரங்கில் கூறியதை நான் நேரடியாகக் கேட்டேன். இதுபோன்ற நிறம்-நிலம் சார்ந்து புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கத்திலுமே பேசுகிறது. நாவலின் ஆசிரியர், தங்களது மக்களின் பிரச்சனைகளை மட்டும் பேசுபவராகத் தன்னை ஒரு போதும் அடையாளப்படுத்தவில்லை என்பது எனக்கு மிக முக்கிய அம்சமாகத் தோன்றியது. ஜெமேய்கா நிலம் குறித்து பேசுகையில் அங்கிருந்த இந்தியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். அதே போல, இங்கிலாந்து போன்று பல்வேறு இன மக்கள் வாழ்வும் நாடுகளில், ஒவ்வொரு இன மக்களும் தங்களது ஆதிக்கத்தை மற்ற இன மக்கள் மீது செலுத்தவே நினைக்கின்றனர் என்பதையும் தவறாது குறிப்பிடுகின்றார். இங்கு இனம் என்பது சொந்த நாடு, நிறம், மொழி, மதம், என அனைத்து வகையான பாகுபாடுகளையும் உள்ளடக்கியதே.
லெனர்ட்டின் தந்தை ஓட்டுனராகத் தனது வாழ்நாள் முழுதும் இருக்கிறார். ஆனால், அவர் கறுப்பர் என்பதால் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார். சில கடைகளுக்குள் நுழைய வெள்ளையர் அல்லாதோருக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது கறுப்பர் என்பதால் உடல்ரீதியான தாக்குதலுக்குத் தந்தை உள்ளாகிறார். லெனர்டுக்கும் அந்த நிலை ஏற்படும்போது மாரடைப்பில் இறக்கிறார். தங்களுக்கு ஏன் இந்த நிலை, தங்களுக்கு யாருமேயில்லை என்றெல்லாம் லெனர்ட் உடைந்து போகிறான். தந்தையின் இறுதி சடங்கில் கூடிய கூட்டமும் அப்பொழுது தனது தந்தை பற்றி அவரது நண்பர்கள் பேசியதும் மட்டுமே லெனர்டுக்கு மன ஆறுதலைத் தருகிறது. அதன்பிறகு லெனர்டும் தந்தைக்காக முதல்முறையாக ஒரு கவிதை எழுதி வாசிக்கிறான்.
லெனர்ட் வளர்ந்து பெயின்டராகப் பணிபுரிகிறான், அவனுக்குத் திருமணமாகி குழந்தை பிறக்கிறது. அப்பொழுதுதான் அவன் தனது தந்தையின் மனநிலையை உணர்கிறான். தனது தந்தை தனது நல் வாழ்விற்காகவே புலம்பெயர்ந்து இத்தனை சிரமங்களையும் எதிர்கொண்டார் என்பதை உணர்கிறான். நாவல் இந்த இடத்தோடு முடிகிறது என்ற எதிர்பார்ப்புடனே வாசித்தேன். ஆனால், நாவல் முடிவில் வேறொரு நிகழ்வை முதன்மைப்படுத்தி சற்றும் எதிர்பாராத அரசியல் களத்திற்கு இழுத்துச் சென்றது.
லெனர்ட் தனது மகளை ஜமைக்காவிற்கு சென்று தனது பாட்டியைச் சந்திக்க வைக்கத் திட்டமிடுகிறான். அதற்காக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கிறான். லெனர்ட் இங்கிலாந்திற்கு வந்த போது, சிறுவர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சட்டமிருந்தது. அதனால் லெனர்ட் பாஸ்போர்ட் இல்லாமல் அவனது அம்மாவுடனே இங்கிலாந்திருந்திற்கு வந்திருந்தான். தற்போது ஜெமேய்கா செல்ல அவன் ஆசைப்பட்ட போது, அவனக்கு பேர் அதிர்ச்சியே காத்திருந்தது. அவனைக் கைது செய்து நாடுகடத்த அதிகாரிகள் அவனது வீட்டுக்கதவை தட்டுகின்றனர். ஆம்! பத்து வயதிலிருந்து இங்கிலாந்தில் வாழ்ந்து, கல்வி பெற்று, வேலையும் பார்த்து, வீட்டு வரி, வருமான வரி, மருத்துவத்திற்கான வரி என வருமானத்தின் பெரும் பகுதையை அரசுக்கு வழங்கியும்கூட லெனர்ட் இங்கிலாந்தின் பிரஜை இல்லை என்றது இங்கிலாந்து அரசு. ஒன்றும் புரியாமல் லெனர்ட் தனியே நிற்கும் போது ஓர் உதவிக்கரம் நீள்வதாக நாவல் முடிகிறது.
2018இல் இங்கிலாந்து அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட “Windrush Scandal”ஐ இந்த நாவல் பேசுகிறது என்பதெல்லாம் இதன் பிறகே நான் அறிந்து கொண்டேன். எனக்கு பேரதர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு நான் அதுகுறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றையும் (Sitting in Limbo) பார்த்தபோதுதான் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 2010இல் அரசு திட்டமிட்டு வின்ட்ரஷ் ஆவணங்களையெல்லாம் அழித்துவிட்டு, அவர்களின் சந்ததியினரில் உள்ள சுலபமான இரைகளைத் தேடி வேட்டையாடியுள்ளது. இந்தச் செய்தி வெளியான பிறகு இங்கிலாந்து அரசியலில் பெரும் சர்ச்சை எழுந்து, அந்த ஆட்சியில் உள்ள மந்திரிகள் விலகினர் என்பது நம்பிக்கை தரும் செய்தி என்றாலும் 2018இல் திட்டமிட்டு ஒரு இனவெறித் தாக்குதலை அரசே நடத்தியுள்ளது என்பது பல நாட்கள் என் தூக்கத்தைக் கெடுத்தது. அப்பாவி மக்களை வேட்டையாடத் துணிந்தது எது? என்ற கேள்வியைத்தான் என்னுள் இந்நாவல் எழுப்புகிறது.
இங்கிலாந்தை உருவாக்கியவன் நான். நான் இந்த தேசத்தின் குடிமகன். நான் இம்மண்ணைச் சேர்ந்தவன். இது என் நிலம். நான் மனிதனாய் நடத்தப்பட வேண்டியவன். I deserve better. என்று வரிகளோடு நாவல் முடிகிறது…நாவல் முடிந்தும் லெனர்டின் வார்த்தைகள் என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
ஆம்! We deserve better.
References:
- https://benjaminzephaniah.com/
- https://www.bbc.co.uk/news/uk-43782241
- https://www.rmg.co.uk/whats-on/national-maritime-museum/windrush-day
- https://windrushfoundation.com/windrush-70/
- https://en.wikipedia.org/wiki/The_Caribbean_Artists_Movement
- https://archive.org/search?query=Benjamin+Zephaniah (Available e-Books for free)
- https://www.bbc.co.uk/news/topics/c9vwmzw7n7lt (Windrush scandal BBC articles )
- Sitting in Limbo : Short Movie about Windrush Scandal (Trailer: https://www.youtube.com/watch?v=1brHDPtSgZo)