குழந்தைகளுக்கான புத்தகம் என்றதுமே நாம் முதலில் கவனிப்பது அதிலுள்ள ஓவியங்களைத்தான். அதிலும் பன்னிரெண்டு வயதிற்குக் கீழான குழந்தைகள் புத்தகம் என்றால், கட்டாயம் ஓவியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். கதைக்குத் துணையாக ஓவியங்கள் இருப்பது ஒரு வகைமை என்றால் ஓவியங்கள் வழியே கதைகளை சொல்லும் படக்கதை புத்தகங்கள் இன்னொரு வகைமை. ஓவியங்களைக் கொண்ட புத்தகங்களைப் பல வகையில் பிரிக்கலாம்,
- Books with Illustrations – ஓவியங்கள் ஒரு துணையாகவோ அல்லது அலங்கார நோக்கிலோ இடம் பெறுவது. ஓவியங்கள் இல்லாமலும் இந்தப் புத்தகங்களை வாசிக்க இயலும்.
- படக்கதைப் புத்தகங்கள்
- படப் புத்தகங்கள் – சொற்கள் அல்லது ஓவியங்கள், இரண்டில் ஏதேனும் ஒன்றை வைத்து புத்தகத்தைப் புரிந்துகொள்ள இயலும். (மாம்பழம் என்று எழுதுவது அல்லது மாம்பழ ஓவியம் கொண்டே புரிந்துகொள்வது)
- Pop-up books, Flip-Flop books, துணிப் புத்தகங்கள், Shaped books கெட்டி அட்டை புத்தகங்கள். (இவை 0-3 வயதினருக்கானது)
- எழுத்தைவிட சற்றுக் கூடுதலான தகவல்கள்/அழகியலுடன் ஓவியங்கள் அமைந்திருப்பது.
- ஓவியங்களே பிரதான அம்சமாக இருக்கும் புத்தகங்கள் – ஓவியங்களே கதைக்கான சூழலை உருவாக்கித் தரும். ஓவியங்கள் இல்லாமல் புத்தகத்தினை வாசித்துப் புரிந்துகொள்வது கடினம்.
- சொற்களற்ற புத்தகம் – சொற்களே இல்லாமல் ஓவியங்கள் வழியே கதை சொல்லும் புத்தகங்கள்
- எழுத்துகளை வெவ்வேறு வடிவங்களாகப் பயன்படுத்துதல் (Pictorial text , typography enriched)
- Comics, Manga Comics & Graphics Novels
Books with Illustrations ஏழு முதல் 12 வயதினருக்காவும், Comics, Manga Comics & Graphics Novels போன்றவை பெரும்பாலும் வளரிளம் பருவத்தினருக்காகவும் வெளியாகின்றன. ஆனால், படக்கதைப் புத்தகங்கள் 12 வயதினருக்கு கீழான குழந்தைகளுக்காகவே அதிகம் வருகின்றன. அதிலும் முக்கியமாக மூன்று முதல் ஏழு வயது குழந்தைகளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஏழு வயது என்பது எழுத்தறிவு பெறத் தொடங்குவதற்கான வயது. ஆக, எழுத்தறிவு மற்றும் வாசிப்பிற்கான நுழைவாயிலை அடைய உதவுவதே இந்தப் புத்தகங்களின் முக்கிய நோக்கமாகவும் இருக்கிறது.
படக்கதை புத்தகங்கள் என்பது ஓவியம் மற்றும் இலக்கியம் என இரண்டு கலைகளின் சங்கமம். இரண்டு கலை வடிவங்களின் பெரும் பங்களிப்பைச் செலுத்தி இன்றியமையாத இடத்தினைப் படக்கதைப் புத்தகங்கள் பிடித்துள்ளன என்கின்றனர் இலக்கிய விமர்சகர்கள். ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் வரை படக்கதைகளின் வரலாறு நீண்டாலும் அச்சு தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பிறகான காலத்தினை(1430க்கு பிறகான) கருத்தில் கொள்வதே சரியாக இருக்கும்.
1461இல் ஜெர்மானிய மொழியில் Ulrich Boner என்பவர் வெளியிட்ட Der Edelstein(The Jewel) என்ற நீதிக்கதை புத்தகம்தான் முதன்முதலாக படங்களுடன் வெளியான புத்தகம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். அதன்பிறகு 200 ஆண்டுகள் கழித்து 1658ஆம் ஆண்டு Comenius என்பவரால் Orbis Sensualium Rictus (The Visible World) என்ற புத்தகம் படங்களுடன் வெளியானது. இதுதான் குழந்தைகளை மனதில் கொண்டு வெளியான முதல் படக்கதைப் புத்தகம். இந்தக் காலத்திலே “chapbooks” என அறியப்படும் மலிவு விலை புத்தகங்களும் படங்களுடன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நமது தெருக்களில் எப்படிக் காய்கறிகள் விற்பார்களோ, அதேபோல பதினைந்தாம் நூற்றாண்டில் “pedlars” எனப்படும் சிறு வியாபாரிகள் இங்கிலாந்து தெருக்களில் இருந்துள்ளனர். இவர்கள், “chapbooks” எனப்படும் ஒரு பக்கம் மட்டுமே இருந்த படக்கதைகளைப் புத்தகம் போல மடித்து பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி சிறு தொகையினைப் பெற்றுக்கொள்வர். மக்களிடையே நன்கு அறியப்பட்ட நாடோடிக் கதைகளையே “chapbooks” புத்தகங்கள் ஓவியங்களுடன் அச்சிட்டன. இவை அடித்தட்டு மக்களை மனதில் கொண்டு மலிவு விலையில் உருவாக்கப்பட்ட புத்தகங்கள். ஆதலால், இதில் புதிய முயற்சிகள் எதுவும் பெரிதாக நடக்கவில்லை, அதேநேரம் இவ்வகைப் புத்தகங்கள் மூன்று நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்றிருந்தன.
1789ஆம் ஆண்டு ஓவியரும் கவிஞருமான வில்லியம் ஃபளேக்(William Blake) என்பவர், புதிய முயற்சியாக எழுத்துகளையும் ஓவியங்களையும் இணைத்து Songs of Innocence எனும் சிறுவர்களுக்கான பாடல் புத்தகத்தினை வெளியிட்டார். ஒவ்வொரு பாடலையும் அதற்கான ஓவியங்களுடன் இணைத்து அவரே கைப்பட எழுதியும் இருந்தார். ஆங்கிலச் சிறார் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாக இந்தப் புத்தகம் கருதப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் அச்சுத் தொழில்நுட்பம் மர வேலைப்பாடின் துணையோடு நடந்தது. தாமஸ் பெவிக்(Thomas Bewick) ஒரு நுண் மர வேலைப்பாடு செய்யும் கலைஞர். ஓவியங்களை அச்சில் துள்ளியமாக ஏற்ற மிக நுணுக்கமான மர வேலைபாடுகளைச் செய்தார். 1797ஆம் ஆண்டில் வெளியான A History of British Birds என்ற புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஓவியங்களை இணைத்துப் புத்தகத் துறையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தினார். “Tail-pieces” என்று இந்த ஓவியங்கள் அழைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஈசாப் கதைகளுக்கு ஓவியங்கள் வரைவதிலே செலவிட்டார். அவர் நோயுற்றிருந்த காலத்தில்கூட, தான் நோயிலிருந்து மீண்டு வந்தால் முதல் வேலையாக வீட்டு சன்னல் அருகே அமர்ந்து ஈசாப் கதைகளுக்கு ஓவியங்கள் வரையும் பணியைச் செய்வேன் என்று கடிதம் எழுதினார். உலகளவில் சிறார் இலக்கியத்தின் முதல் புத்தகமாகக் கருதப்படும் ஈசாப் கதைகளுக்கு ஓவியங்கள் வரைவதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்தார்.
1830களில் Lithography எனப்படும் வண்ணங்களை அச்சிட உதவும் தொழில்நுட்பம் அறிமுகமானது. அதன் பிறகு சிறார் இலக்கியத்திற்கு, முக்கியமாகப் படக்கதைகளுக்குப் புதிய கதவுகள் திறந்தன. ஜெர்மனியில் Heinrich Hoffmann என்பவர் Der Struwwelpeter (Funny Stories and Droll Pictures) மிகவும் கண்கவரும் விதமாகப் படக்கதைகளை வெளியிட்டார். இங்கிலாந்திலும் அதேபோல் Edward Lear என்பவர் A Book of Nonsense என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தின் வழியே படக்கதைகள் புதிய பரிணாமத்தை எட்டின.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளே நவீனப் படக்கதைகளின் தொடக்கக் காலம் என்கின்றனர். 1846-1886இல் வாழ்ந்த ராண்டால்ஃப் (Randolph Caldecott) என்பவர்தான் சிறார் படக்கதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். தனது 26ஆம் வயதில் லண்டனில் முழுநேர ஓவியராகப் பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரையத் தொடங்கினார். வெறும் 39 வயதுவரை மட்டுமே வாழ்ந்த இவர், மொத்தம் 16 படக்கதைப் புத்தகங்களை உருவாக்கினார். இவரது படைப்புகள் குறித்து,
“Caldecott’s work heralds the beginning of the modern picture book. He devised an ingenious juxtaposition of picture and word, a counterpoint that never happened before. Words are left out – but the picture says it. Pictures are left out – but the word says it. In short, it is the invention of the picture book.”
என்கிறார் அமெரிக்காவின் சிறந்த படக்கதை எழுத்தாளரான Maurice Bernard Sendak. அமெரிக்க நூலகச் சங்கம் 1938ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் “Randolph Caldecott Medal” என்கிற விருதை சிறந்த படக்கதைப் புத்தகங்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய படக்கதைகளின் வரலாறு இருபதாம் நூற்றாண்டில் நவீனப் படக்கதைகளாக உருமாறியதைப் பார்த்தோம். இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய வளர்ச்சிகளை அது கண்டவண்ணமே இருந்துள்ளது. அச்சுத் தொழில்நுட்பம், ஓவியங்களின் புதுமை, ஓவியங்களோடு-புகைப்படங்கள் இணைப்பது போன்ற புதிய யுக்திகளைப் பயன்படுத்தினர். இதே காலத்தில், குழந்தைமை மீது குவிந்த புதிய கவனமும் உலக யுத்தங்களால் கிடைத்த அனுபவப் பாடங்களும் சிறார் இலக்கியத்தில் புதிய கதைக்களங்களையும் கொண்டுவந்தன.
படக்கதையின் ஆரம்பகாலம் முதல் இன்று வரை இங்கிலாந்து, ஐரோப்பியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கான படக்கதைப் புத்தகங்களில் ஓவியர்களின் பங்கு இன்றியமையாதவை. ஓவியம்-எழுத்து என இரண்டிலும் திறன்மிக்கவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். ஒரு காலத்தில், ஹம்போல்ட் போன்ற அறிவியலாளர்கள் ஓவியர்களாகவும் எப்படி அறிவியல் துறையில் பெரும் பங்காற்றினார்களோ அதற்கு இணையாக இன்றுவரையிலும் சிறார் இலக்கியத்தில் ஓவியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
References:
Children’s Literature – Lucy Pearson
Children’s Picturebooks, The Art of Visual Storytelling by Martin Salisbury, Morag Styles
https://www.randolphcaldecott.org.uk/
http://www.bewicksociety.org/