தடை செய்யப்பட்ட சிறார் நாவல் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் “தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வாரம்” என்று அறியப்படுகிறது. 1982இல் அமெரிக்க நூலக சங்கத்தால் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. புத்தகங்களைத் தணிக்கை அல்லது தடை செய்த வரலாற்றுச் சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் வாசிப்பு சுதந்திரத்தைக் காப்பாற்றுவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம்.

“தடை செய்யப்பட்ட புத்தகம்”(Banned Books), “தடை செய்ய வற்புறுத்தப்படும் புத்தகம்”(Challenged Books) எனத் தணிக்கை சார்ந்து இரண்டு பிரிவுகளில் புத்தகப் பட்டியலை வெளியிட்டு தடைக்கான காரணங்கள் குறித்து விரிவாக உரையாடும் சூழலையும் இவர்கள் உருவாக்குகின்றனர்.

Banned Books Week at Barbican Library (London)

சிறார் இலக்கியத்திற்கும் – தடை செய்யப்பட்ட புத்தகங்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி நமக்குள் எழலாம். ஆனால், குழந்தைகளுக்கான புத்தகங்களே உலகளவில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளன. 1970-80களில் அமெரிக்கப் பள்ளிகளில் அதிகளவில் புத்தகங்கள் முறையான காரணங்கள் ஏதுமின்றி தடை செய்யப்பட்டு வந்தன. இதனை முறைப்படுத்த அங்குள்ள நூலக சங்கம் பெரும் முயற்சி எடுத்தது. அதுவே இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் தொடக்கப்புள்ளி.

தகாத வார்த்தைகள், வன்முறையைத் தூண்டும் எழுத்துகள், இனவெறி, தற்கொலைகள் சார்ந்த எழுத்துகள், அதீத பாலியல் உணர்வு சார்ந்த எழுத்துகள், போதைப் பொருட்கள் பற்றிய குறிப்புகள் உடைய எழுத்துகள் எனத் தணிக்கை செய்வதற்கான நியாயமான காரணங்களை நேரடியாகக் கூறினாலும் மறைமுகமாகப் பழமைவாத சிந்தனைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளதையே வரலாறு நமக்கு எடுத்துகாட்டுகிறது. அறிவியல் கூறும் உண்மைகளைத் தடை செய்வது, நிற-இன-மொழி-பாலினம் சமத்துவத்திற்கு எதிரான கருத்தியல்கள், ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உயர்வானவர்கள் மற்றவர்கள் கீழானவர்கள் எனும் பாசிச சிந்தனைகளைப் போதிப்பது போன்ற பல்வேறு சிக்கல்களுக்குத் துணை நின்றதைக் காண முடிகிறது. அப்படி இங்கிலாந்தில் வெளியாகி தென்னாப்பிரிக்காவில் தடைசெய்யப்பட்ட Beverley Naidoo அவர்கள் எழுதிய Journey to Jo’burg: A South African Story என்ற புத்தகத்தைப் பற்றிதான் இனி பார்க்கயிருக்கிறோம்.

Beverley
Author Beverley

பெவ்ரெலி(Beverley Naidoo) ஒரு தென்னாப்பிரிக்க வெள்ளையர். இவரது மூதாதையர்கள் இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள். வெள்ளையர் என்பதாலே அனைத்துவிதமான முதல் தரமான உரிமைகளையும் பெற்று வந்தனர். தென்னாப்பிரிக்கா வெள்ளையரின் இனவெறி(apartheid) கொடுமைகளால் தவித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் பெவ்ரெலியும் பிறந்து வளர்ந்தார். “வெள்ளையரே உயர்ந்தவர்கள்” என்ற எண்ணத்துடனே பெவ்ரெலி வளர்க்கப்பட்டிருந்தார். தனது பள்ளி வயது வரை வெள்ளையர் அல்லாத (ஆப்பிரிக்கர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஆசிய மக்கள்) மக்கள் மீதான அடக்குமுறை குறித்து  பெரிதாகச் சிந்தித்ததில்லை என்றே குறிப்பிடுகிறார்.

1965இல் நெல்சன் மண்டேலாவின் போராட்டங்களும், அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களுமே தன்னை மாற்றத்திற்கு உட்படுத்தின என்கிறார். தனது கல்லூரி வாழ்வில் தனது அண்ணனுடன் இணைந்து ஆப்பிரிக்க(Non-whites) மக்களின் உரிமைக்கான அரசியல் போராட்டங்களில்(anti-apartheid movement) இடம்பெற்று சிறைக்கும் சென்றார். பின்னர் தன்னைப் பாதுக்காத்துக்கொள்ள தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார். இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஒருவரை திருமணம் செய்தார். அதனால்தான் நாயுடு என்ற பெயரை குடும்பப் பெயராக வைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஒருவர் வெள்ளையர் அல்லாதவரை திருமணம் செய்ய அனுமதியில்லை. அதனால், பெவ்ரெலிக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தென்னாப்பிரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருந்துகொண்டே தென்னாப்பிரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டினார். 1985இல் “Journey to Jo’burg” என்ற சிறார் புத்தகத்தை எழுதினார்.

15 அத்தியாயங்கள், 100 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் சிறுவர்களுக்கான ஒரு வரலாற்று நாவல். 13வயது சிறுமி நலேடியும் அவளுடைய 9வயது தம்பி டிரோவும்தான் கதையின் நாயகர்கள். இவர்களுக்கு ஒரு வயதில் தம்பி ஒருவனும் இருக்கிறான்.  தந்தையில்லாத குடும்பம். அம்மா ஜோஹென்பெர்க் நகரில் வெள்ளையர் வீட்டில் ஆயாம்மாவாக(Nanny) வேலை பார்க்கிறார். பாட்டிதான்  குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார். இவர்களது  கிராமத்திலிருந்து ஜோஹென்பெர்க் நகரம் 250கி.மி தொலைவு. ஆதலால், அம்மா மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவார். அதுவும் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே தங்குவார். இந்தச் சூழலில் கைக்குழந்தையான தம்பிக்குக் கடும் காய்ச்சல். பாட்டி தனக்குத் தெரிந்த கைவைத்தியமெல்லாம் செய்து பார்த்தும் ஜுரம் குறைந்தபாடில்லை. மருத்துவமனைக்குச் சென்றால்தான் குழந்தை உயிர் பிழைக்கும் என்ற நிலை. ஆனால், அவர்களிடம் மருத்துவமனை செல்லும் அளவிற்கு வசதியில்லை. அதனால், மறுநாள் அதிகாலையிலே கிராமத்திலிருந்து கிளம்பி ஜோஹன்ஸ்பெர்க் சென்று அம்மாவை கையோடு அழைத்துவருவதுதான் ஒரே வழி என்று எண்ணி ரகசியமாக ஊரைவிட்டுச் சிறுவர்கள் இருவரும் கிளம்புகின்றனர்.  ஜோஹன்ஸ்பெர்க் எவ்வளவு தூரம் என்பதெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. நலேடி மற்றும் டிரோவின்  சாகசப் பயணம்தான் நாவலின் கரு. அதன் வழியே, தென்னாப்பிரிக்காவின் இனவெறிக் கொடுமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதாலே இந்த நாவல் தடைசெய்யப்பட்டது. 1991இல் தென்னாபிர்க்கா சுதந்திரம் அடைந்தபோதுதான் தாய்மண்ணைத் தொட்டது.

செருப்பு கூட இல்லாமல் அணலும் வெப்பமும் நிறைந்த தார் சாலையில் நடப்பதாய் தொடங்குகிறது சிறுவர்களின் சாகசப் பயணம். கார்கள் லாரிகள் செல்லும்  நெடுஞ்சாலை வழியே சென்றால் ஜோஹன்ஸ்பெர்க்கை அடைந்திடலாம் என்ற கனவோடு அவர்கள் நடக்க ஆரம்பிக்கின்றனர். கொண்டு வந்த உணவும் நீரும் ஒரு வேளைக்கே போதாது, நடக்க ஆரம்பித்த சில மணி நேரத்திலே களைத்துவிடுகின்றனர். தென்னாப்பிரிக்காவில், 16வயதிற்கு மேலுள்ள வெள்ளையர் அல்லாதோர் அனைவரும் எப்போதும் கையில் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கவில்லை என்றால் சிறையில் அடைக்கப்படுவர். குழந்தைகள் பெரியோர் துணையோடு வெளியே செல்வதே நல்லது. அதனால், போலிஸ் கண்ணில் படாமல் செல்ல வேண்டும் என்ற நிலை வேறு. இந்தச் சூழலில் 250கிமி கடந்து, தெரியாத நகரத்தில் தனது அம்மாவை தேடிப்பிடித்து ஊருக்கு திரும்பி தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதே நாவலின் கதை.

இந்தச் சாகச பயணத்தில் சிறுவர்களுக்கு பலரும் உதவுகின்றனர். ஒவ்வொரு கட்டத்திலும் சிறுவர்களுக்கு உதவும் நல்லோர் வழியே, தென்னாப்பிரிக்காவில் நிலவிய வெள்ளையர் அல்லோதோர் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அம்மக்களின் அவல நிலையை மிகவும் தெளிவாக வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறார் ஆசிரியர். கட்டாய அடையாள அட்டை, கல்வி உரிமை மறுப்பு, நகரத்தில் தங்கும் உரிமை மறுப்பு, வீதியில் செல்ல தடை, அரசு போக்குவரத்தில் பாகுபாடு,  “ஆங்கிலம் படிக்க உரிமைக் கோரி நடந்த போராட்டம்” என தென்னாப்பிரிக்காவில் 1960-70களில் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாகத் தொட்டுச் செல்கிறது இந்நாவல்.

தம்பியின் உயிரைக் காப்பாற்றும் இந்தப் போராட்டமும்  அதற்கான சாகசப் பயணமும் நலேடிக்கு புதிய அனுபங்களை தருகிறது. அவள் சந்தித்த மனிதர்கள் வழியே தம் மக்களின் அவல நிலையே அவள் உணர்கிறாள். தம்பியின் உடல்நிலை சற்று தேரியதுமே, அம்மா மீண்டும் தன் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். அன்றிரவு அம்மா தன் பிள்ளைகளை அணைத்துகொண்டு தன்நிலையை நினைத்து, “இதுவரை சம்பாதித்தது அனைத்துமே மருத்துவமனைக்கு செலவாகிவிட்டது. மீண்டும் முதலிலிருந்து உழைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க புலம்புகிறாள். அன்றைய இரவு நலேடிக்கு உறக்கம் துளியும் வராது தவிக்கிறாள். ஏன் நாம் எவ்வளவு உழைத்தாலும் நல்வாழ்வை பெற முடியவில்லை, ஏன் மருத்துவர்களாக, செவிலியர்களாக வெள்ளையர்களே இருக்கின்றனர்? நமது கிரமாத்திலிருந்து ஏன் ஒருவரும் மருத்தவராக முடியவில்லை? ஏன் கறுப்பினத்தவர்களில் யாரும் பெரிய வேலைகளில் இல்லை? நம் நிலை எப்போது மாறும்?  போன்ற சிந்தனைகள் அவளை உறங்கவிடாது துளைக்கிறது. அப்போது திடீரென அவள் மனதில் ஒரு பெரும் வெளிச்சம் பிறக்கிறது. கல்வி ஒன்றே நமக்கான தீர்வு, அதற்கான உரிமையை முதலில் பெற வேண்டும். அதற்கு உரிமைப் போராட்டத்தில் தானும் பங்கு பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். அடுத்த சில நிமிடங்களில் அவள் கண்கள் நிம்மதியுடன் உறக்கத்தைத் தழுவுகிறது. அவளது கனவில், வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு மருத்துவராக நலேடி நிற்க – அவளது கிராமத்து மக்கள் அவளிடம் மருத்துவம் பார்க்க வருவதாக நாவல் முடிகிறது.

பெவ்ரெலி வெள்ளையர் என்பதால், நாவலில் வருவது போலவே வெள்ளையர்களின் குழந்தைகளின் வளர்க்கும் ஆப்பிரிக்க அன்னை அவர்கள் வீட்டில் நிரந்தரமாக இருந்தார். பெவ்ரெலி தனக்கு இரண்டு அம்மாக்கள் இருந்ததாகவே முன்னுரையில் குறிப்பிடுகிறார். “என் ம்மாவிற்கு ஒரு நாள் தந்தி வந்தது அதில் அவரது குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது. ம்மா அழுது உடைந்து போனாள். அவளது அழுகைக்கு யார் காரணம்? நான் என் பெற்றோருடன் இருக்கும் போது, ஏன் அந்தக் குழந்தைகளால் மட்டும் அவர்களது பெற்றோர்களுடன் வாழ முடியாத சூழல். இதற்கெல்லாம் யார் காரணம்? இந்தக் கேள்விகளே என்னை போராட்ட வாழ்வில் ஈடுப்படுத்தின.” என்று பெவ்ரெலி தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். புலம் பெயர்ந்த பிறகு, தன் நாட்டின் உண்மை நிலையை எழுத்து வழியாகவும் உலகிற்கு வெளிப்படுத்தினார்.

இந்தப் புத்தகத்தில் அழகான முன்னுரை, தென்னாபிரிக்காவில் பெற்றோரைத் தேடி தொலைந்து போன குழந்தைகள் குறித்த செய்தி குறிப்புகள், பின் இணைப்பாக தென்னாபிரிக்காவின் இனவெறி வரலாறு குறித்து சுருக்கமான விளக்கம், எழுத்தாளர் பெர்வெலியின் அனுபவம், ஆபிரிக்க மொழியிலுள்ள பெயர்களின் விளக்கம், ஒரு வரைபடம், நாவல் தடைசெய்யப்பட்ட அறவிப்பு என இணைப்புகள் இருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த நாவலின் இறுதிப்பக்கத்தில் ஓர் அழகிய கவிதை இடம்பெற்றுள்ளது. அது இந்தப் புத்தகத்தின் வரலாற்றைச் சொல்கிறது. இந்தப் புத்தகம் சுவாசித்த சுதந்திரக் காற்றின் வரலாற்றைச் சொல்கிறது.

They Tried To Lock Up Freedom

They seized the book
Ripped out its spine
Flung it in the fire
Pages fluttered through smoke
They grabbed the pages
Scratched out lines
Crushed them in their fists
Words squeezed through knuckles
They twisted the words
Tore out sound
Swallowed them in their silence
The heart of the book cried out
The pages grew wings
The words breathed Freedom

 

References:

https://beverleynaidoo.com/

Leave a comment