சிறார் இலக்கியத்தின் பொற்காலங்கள் – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வாசிக்கும் ஆர்வமிருந்தால் போதும், நமக்கான புத்தகங்கள் எப்படியோ நம்மைத் தேடிப்பிடித்து வந்துவிடுகின்றன. சமீபத்தில் நண்பர் யமுனா ராஜேந்திரன் வழியே எனக்குக் கிடைத்த புத்தகம்தான் “Children’s Literature” (Lucy Pearson with Peter Hunt). இந்தப் புத்தகம், மேற்குலக சிறார் இலக்கியத்தின் வரலாறு மற்றும் போக்குகள் குறித்து சில புகழ்பெற்ற புத்தகங்களின் உதவியோடு பேசுகிறது. இந்தப் புத்தக்கத்தில் ஒரு தலைப்பாக இடம்பெற்ற “சிறார் இலக்கியத்தின் பொற்காலங்கள்” குறித்து மட்டும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் மேற்கத்திய கலாச்சாரத்தின் கவனம், குழந்தைகள் மீதும் குழந்தைமை மீதும் குவித்திருந்தது. அதுவரை, குழந்தைகள் என்பவர்கள் பெரியர்வர்களின் சிறிய மாதிரிகள் என்ற எண்ணமே நிலவியது. 1840களுக்குப் பிறகுதான் குழந்தைகளின் வெகுளித்தனம்-எதார்த்த இயல்பு போன்ற கருத்துகள் குழந்தைமையின் மையப்புள்ளியாக மாறியது. இந்தக் கருத்தியல்கள் இலக்கியத்திலும் பிரதிபலித்தன. பெரியோர் இலக்கியத்தில் கூட குழந்தைகளுக்கு முக்கியமான இடம் தரப்பட்டது என்கின்றனர்.

குழந்தைக் கதாபாத்திரங்கள் வழியே, எழுத்தாளர்கள் தங்களது கருத்துகளை உணர்வுபூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் வெளிப்படுத்தினர். 1840களில் சார்லஸ் டிக்கன்ஸ்(Charles Dickens) அவர்கள் எழுதி வெளியான Oliver Twist, Old Curiosity Shop நாவல்களில் ஏழை சிறுவர்கள்தான் நாயகர்கள். ஏழ்மையிலும், குற்றங்களுக்கு ஆட்படும் சூழலிலும் தவறான வழியில் செல்லாதவர்களாகவே அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார். ஏழை சிறுவர்களை நாயகன்களாகக் கொண்டு எழுதப்படும் இலக்கியம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை கேள்வி கேட்கும் இடத்திற்கும் சென்றது. இலக்கியத் தளத்திலிருந்து குழந்தைகளுக்கான உரிமைகள் சார்ந்த அரசியல் சட்டங்களை இயற்றும் இடத்திற்கும் அதனால் செல்ல முடிந்தது. குழந்தைத் தொழிலாளர்களுக்கான நெறிமுறைகள், குழந்தைகள் மீதான வன்முறை எதிர்ப்புச் சட்டம், புகைபோக்கிகளைச் சுத்தம் செய்யும் சிறுவர்களை பாதுகாக்கும் சட்டம்(Charles Kingsley’s Water Bodies என்ற புத்தகம் இதற்கு காரணமாக அமைந்தது) எனக் கல்வி, குழந்தைகள் உரிமை போன்ற துறைகளில் புதிய சட்டங்களை இயற்றுவதற்குத் துணையாக இந்தப் படைப்புகள் இருந்தன.

இவ்வாறாக இங்கிலாந்து அரசு, சிறார்கள் மீதும் சிறார்களை மையப்படுத்தும் கலை-இலக்கியங்கள்  மீதும் தனது கவனத்தைச் செலுத்தியது. அதுவே சிறார் இலக்கியத்தின் பொற்காலம் நோக்கி முதல் படியை எடுத்து வைக்க அடிகோலியது. மேற்கு உலக சிறார் இலக்கியத்தில்(இங்கிலாந்து) மூன்று பொற்காலங்கள் உள்ளதாக இலக்கிய விமர்சர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  1. 1860-1910(முதல் உலக யுத்தம் துவங்குவதற்கு முன்பான காலம்)
  2. 1950-1970 (இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பான காலத்திலிருந்து 1970 வரை)
  3. 1995-தற்போது வரை

1860-1910 முதல் பொற்காலம்:

 1860கள் வரை, குழந்தைகளுக்குப் பிடித்தமான மாயாஜாலக் கதைகளில்(Fantasy) நீதி போதனைகளும், மத போதனைகளும் மட்டுமே இருந்தன. அது பழமைவாதத்தின் இரகசிய உறைவிடமாக இருந்தது. இந்தப் போக்கினை முதன் முதலாக மாற்றியவர்தான் லீவிஸ் கரோல்(Lewis Carroll). சிறார் இலக்கியத்தின் மாயாஜால உலகில் நிறைந்திருந்த பழமைவாதத்தை விரட்டி அடித்துவிட்டு ஓர் புதிய வடிவத்தை உருவாக்கினார்.  இவர் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் (“Alice’s Adventures in Wonderland”) 1865இல் வெளியாகி சிறார் இலக்கியத்தை புதிய உலகிற்கு அழைத்துச் சென்றது. பழமைவாதத்தை எதிர்த்தது மட்டுமல்லாமல், அதனைத் தனது எழுத்துகளில் எள்ளி நகையாடினார் கரோல். குழந்தையை மையமாகக் கொண்டு எழுதுதல் என்பது மட்டுமல்லாமல், குழந்தையின் பார்வையிலிருந்து கதை சொல்லும் யுக்தியையும் புதிதாக அவர் அறிமுகப்படுத்தினார்.

குழந்தையை மையப்படுத்தி எழுதுதல் என்பது – எளிமையாக எழுதுதல் என்பதல்ல. மாறாக எளிமைக்கு நேர்மாறான யுக்தி. ஒரு தத்துவத்தை விளக்குவது போன்ற யுக்தியை லீவிஸ் கரோல்  பயன்படுத்தினார். இது சிறார் இலக்கியத்தில் நடந்த மிகப் பெரிய புரட்சி. கரோல் உண்மையில் எளிமையிலிருந்து குழந்தைகளை விடுவித்தார் என்கின்றனர் இலக்கிய ஆர்வலர்கள்.

ஆலிஸின் அற்புத உலகம் முன்மாதிரியாகக் கொண்டு “Peter Pan, The Wind in the Willows, Five Children and it, The story of the Treasure Seekers” போன்ற பல முக்கியப் படைப்புகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், உலக யுத்தத்தின் தொடக்கம் அனைத்தையும் புரட்டிப் போட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று அறியாத நிலை பலரது வாழ்வையும் கேள்விகுறியாக்கியது. இதுவே சிறார் இலக்கியத்தின் முதல் பொற்காலத்திற்கு முற்றுபுள்ளியை வைத்தது.

 1950-1970 இரண்டாம் பொற்காலம்:

 “சிறார் இலக்கியம் நமக்குப் புதிய வாய்ப்பினைத் தந்துள்ளது. அடுத்து வரும் தலைமுறையினரை நல்முறைப்படுத்தி, அவர்களது பெற்றோர்கள் செய்த தவறுகளையெல்லாம் திருத்தி உலக அமைதியை உருவாக்க அவர்களுக்கு நல் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே எங்களது நோக்கம்” என்று 1952இல் ஜெர்மெனியில் தோன்றிய “International Board on Books for Young People – IBBY” என்ற அமைப்பு தனது தொடக்க விழாவில் அறிவித்தது. IBBY என்ற அமைப்பு இன்று வரை “international understanding through children’s books” என்ற நோக்கத்தினை முதன்மையாக கொண்டு இயங்கி வருகிறது.

இரண்டு உலக யுத்தங்களைச் சந்தித்து இருபதாம் நூற்றாண்டு தள்ளாடிக் கொண்டிருந்தது. 1950களுக்கு பிறகு மெல்ல மெல்ல தன்னை மீட்டுக்கொண்டிருந்தது. போர்களின் பின்விளைவுகள் குழந்தைகள் மீதும் குழந்தைமை மீதும் உலகளாவிய அக்கறையையும் கவனத்தையும் கொண்டு வந்தன. குழந்தை வளர்ப்பு, கல்வி உரிமை, குழந்தைகள் மீதான சமூக அரசியல் பார்வைகள் எனப் பல்வேறு தளங்களில் மாற்றங்கள் நடக்கத் தொடங்கின. இங்கிலாந்து அரசு  பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் அதிகம் நிதி ஒதுக்கின. இதுவே, பொற்காலத்தின் இரண்டாம் வாசலைத் திறந்தது.

நார்நியா (Narnia Series – The Lion, the Witch and the Wardrobe) புத்தகத்தின் முதல் பாகம் 1950இல் வெளியானது. ஆலிஸின் அற்புத உலகம் போன்றே நார்நியாவும் மாயஜால உலகை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும். போரின் தாக்கங்களைப் புனைவாகப் பேசும் புத்தகம் இது. நல்லது-கெட்டது என இரண்டு நிலைக்கும் நடக்கும் போராட்டமே நார்நியாவின் கரு. நார்நியாவில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முடியும் வரையில் – உலக யுத்த அனுபவங்களை நேரடியாகவும் புனைவாகவும் தாங்கிய படைப்புகளே சிறார் இலக்கியத்தை நிரப்பியிருந்தன.

1960கள் வரை நடுத்தர வெள்ளையினரின் கதைகளே அதிகம் பேசப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகான காலத்தில் வெவ்வேறு இன மக்களின் கதைகள், கலாச்சாரங்கள், அவர்களின் வாழ்வியல், அவர்களின் பேச்சு வழக்குகள் எனச் சிறார் இலக்கியத்தில் புதிய விசயங்கள் இடம்பெற்றன. இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்த மக்களின் கதைகளில் இனவெறி பிரச்சனைகள் தீவிரமாகப் பேசப்பட்டன. பெண்களின் ஓட்டுரிமைப் போராட்டங்கள், அடிமைத்தன வரலாறுகள், நாடற்ற அகதிகளாக வாழும் நிலை, இன வெறி, புல்லியிங் (bullying), பாலுணர்வு சார்ந்த புரிதல்கள்  என வளரிளம் பருவத்தில் சிறுவர்கள் உணரக்கூடிய விசயங்கள் நேரடியாக இடம் பெற்றன.  1950-1970 காலங்களில் புனைவு வகைமையே சிறார் இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், 1980-1990 களில் சமூக எதார்த்தப் படைப்புகள் சிறார் இலக்கியத்தில் அதிகம் இடம்பெற்றன. “Young Adult Literature” என தனியே ஒரு வகைமை உருவாகியது.

பாலியல் குற்றங்கள், தற்கொலைகள், போதை பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற 1990களில் ஏற்பட்ட பிரச்சனைகள் அந்தக் காலத்திலே பேசப்பட்டன. 18வயதுக்குள் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள். குழந்தைகள் என்றாலே அப்பாவிகள் அவர்கள் நல்லவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றிருந்த கருத்தியலும் மாறத் தொடங்கின. குழந்தைகளிலும், குறிப்பாகப் பதின்ம பருவத்தில் தீங்கிழைக்க்க கூடிய குழந்தைகள் உள்ளனர் என்ற கருத்தியலும் உருவாகின. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் 1990களில் சிறார் இலக்கியம் பெரும் சந்தையாக மாறியிருந்தது. அதனால், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டும் நிறைய பதிப்பாளர்கள் இயங்கினர். அதுவே இரண்டாவது பொற்காலத்தின் முடிவிற்கு காரணமாக அமைந்தது.

1995-தற்காலம் வரை மூன்றாம் பொற்காலம்:

1980-90களில் எதார்த்தவாதம் பேசும் படைப்புகள் மேலோங்கி இருந்தன, அதே நேரம் தனது வளர்ச்சியில் சிறார் இலக்கியம் சரிவைக் கண்டது. அப்பொழுதுதான் Philip Pullman’s North Light புத்தகமும் ஜே.கே ரோலிங்கின் “ஹாரிபாட்டர்” முதல் புத்தகமும் வெளியானது. சிறார் இலக்கியத்தில் மாயாஜால படைப்புகள் மீண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தயாராயின. இந்த இரண்டு புத்தகங்களுமே பெரியவர்களுக்காக எழுதப்பட்டவை, ஆனால் சிறார் இலக்கியம் தனது எல்லைகளை இந்தப் படைப்புகள் மூலம் உடைத்தது என்கின்றனர் இலக்கிய ஆர்வலர்கள். இதே காலத்தில், இங்கிலாந்து அரசும் தொண்டு நிறுவங்கள் மூலம் பெரும் முதலீட்டைச் சிறார் இலக்கியத்தில் செய்தது.

சிறார் இலக்கியத்தின் மூன்றாவது பொற்காலம் தொடங்கி 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. டிஜிட்டல் உலகம், சிறார் இலக்கியத்திற்கும் பல்வேறு வாசல்களை திறந்துள்ளது. ஆனால் இன்னொரு பக்கத்தில், எப்போதுமில்லாத அளவிற்குச் சமகால தலைமுறை குழந்தைகள் சுலபத்தில் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களாக மாறியுள்ளனர். நிஜ உலகில் கிடைக்காத  வயதிற்கு ஏற்பில்லாத விசயங்கள் அனைத்தும் சுலபமாய் இணைய உலகில் கிடைக்கின்றன. எந்த ஒரு தீங்கிற்கும் பலியாக்க கூடிய சுலபமான இரையாகத் தற்காலக் குழந்தைகள் இருக்கின்றனர்.

மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட கலை-இலக்கியம் மக்களைத் தீமையிலிருந்து காக்கும் அரணாகவே எப்போதும் இருந்துள்ளது. சமகால படைப்புகளைக் கவனிக்கும் போது புதிய சவால்களுக்குத் தற்கால சிறார் இலக்கியமும் தன்னை நவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

Leave a comment