ஓடிப் போ Worry Monster! – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“Reading for pleasure is more important to children’s successes than education or social class.”

குழந்தைகள் தங்களது அக மகிழ்ச்சிக்காக வாசிப்பது மிகவும் முக்கியமானது என்ற கருத்தியலை முன்நிறுத்துகிறது இங்கிலாந்தின் நூலகங்கள். பெரியவர்கள்-குழந்தைகள் என அனைவரது வாசிப்பு பழக்கத்தையும் வளர்க்கும் நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்படுகின்றனர். “Summer Reading Challenge”, “Reading Well”, “World Book Night”, “Reading Group for Every one” “Quick Reads” என நூலகங்களில் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றனர். வெவ்வேறு தலைப்புகளில் புத்தகப் பட்டியல்கள்-பரிந்துரைகள் தனியே காட்சிப்படுத்தப்படுகின்றன.

“இங்கிலாந்தில், 11 வயது நிரம்பிய குழந்தைகளில் நான்கு பேரில் ஒருவர் வாசிக்க இயலாதவராய் இருக்கின்றனர், பெரியவர்களில் ஆறு பேரில் ஒருவருக்கு வாசிப்பதில் சிக்கல் இருக்கிறது. வாசிக்க இயலாதவர்களுக்கு வாழ்வில் குறைவான வாய்ப்புகளே கிடைக்கின்றன. தங்களுக்குக் கிடைக்கும் சில முக்கிய வாய்ப்பினைக்கூட இவர்கள் இழக்கின்றனர். அக மகிழ்விற்காகவும், மேம்படுதலுக்காகவும் வாசிப்பது நம்மை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்கிறது. நமது சிந்தனைகளை, கற்பனைகளை வளர்க்க உதவுகிறது. சக மனிதனைப் புரிந்துகொள்ளவும், நமது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் உறுதுணையாகவும் இருக்கிறது. நமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது. அதன் வழியே நம் கருத்துகளை, சிந்தனைகளை மற்றவர்களுக்கு மிகவும் திறம்பட வெளிப்படுத்த முடியும். அது வாழ்க்கை நமக்குத் தரும் பல்வேறு வாய்ப்புகளுக்கான புதிய கதவுகளைத் திறந்திடச் செய்யும்.

ஒருவரின் வாசிப்புத் திறனை வளர்ப்பதே எங்களின் நோக்கம். வாசிப்பு மூலம் ஒருவரின் உடல் நலத்தையும் மன நலத்தையும் சரிவர கவனித்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம். நூலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் போன்ற பல்வேறு அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். நாங்கள் பலரையும் வாசிக்க வைக்கிறோம், ஏனென்றால் ஒருவர் வாசிக்கும் போதே பல மாற்றங்கள் ஏற்படும்.” – என்கின்றனர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள்.

கடந்த மூன்று வருடங்களாக நூலகங்களில் நான் எடுக்கும் சிறார் புத்தகங்களில் இவர்களது பரிந்துரைகளும் உண்டு. அதிலும் குறிப்பாக பெரியவர்களுக்கான “Quick Reads” பரிந்துரைகளும், குழந்தைகளுக்கான “Reading Well” என்ற தலைப்பில் குழைந்தைகளின் மனநலம் சார்ந்த பரிந்துரைகளும் எனக்குப் பிடித்தமானது. “Reading Well” தலைப்பில் பல முக்கியமான புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. Healthy Minds, Worries, Feelings, The World around you, Dealing with tough times, When You have a condition – ADHD, Autism, Dyslexia, Obsessive Compulsive Disorder, Having Disability என இதன் உபத்தலைப்புகளைப் பார்க்கும் போதே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட முடிகிறது. “குழந்தைகளின் கவலைகள்” குறித்து நான் வாசித்த இரண்டு சிறார் புத்தகங்கள் குறித்து இனி பார்ப்போம்.

Book: Go Away Worry Monster, Author: Brooke Graham, Illustrator: Robin Tatlow-Lord.

ஆர்கி என்றொரு சிறுவன் இருக்கிறான். அவனது அறையின் படுக்கையில் உறங்குவதற்காகத் தனது பொம்மைகளுடன் இருக்கிறான். மறுநாள் அவன் புதிய பள்ளிக்குச் செல்லயிருக்கிறான். அப்பொழுது, “கவலைகளின் பூதம்”(Worry Monster) அவன் மீது ஏறி நின்று “பெரிய பெரிய கட்டிடங்கள் வழியே புதுப் பள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பாய்?” என்று பயமூட்டுகிறது. அதைக் கேட்டதும் ஆர்கிக்கு மனதில், “பள்ளியினுள் பல வகுப்பறைகள் இருக்குமே, எனது அறையை எப்படிக் கண்டுபிடிப்பேன்” என்ற புதிய அச்சம் முளைக்கிறது. ஆர்கி தனக்குத் துணையாக அருகிலுள்ள கரடி பொம்மையை அணைத்துக்கொள்கிறான். அடுத்து, கவலைகளின் பூதம் “உனக்குப் புதிய நண்பர்கள் கிடைக்காமல் போனால் என்ன செய்வாய்?“ என்கிறது. அதன் பிறகு “புதிய பள்ளியில் உனக்குப் பிடித்த விளையாட்டு வகுப்பே கிடையாதாம்” என்று மேலும் மேலும் பூதம் அச்சமூட்டுகிறது. ஆரம்பத்தில் சிறியதாக இருந்த பூதம், ஆர்கிக்கு அச்சம் ஏற்படும் ஒவ்வொரு கட்டத்திலும் பெரிதாக வளர்கிறது. ஆர்கிக்கு தலை வலிப்பது போல் இருக்கிறது, அவன் இதயம் படபடக்கிறது, வயிறு கலக்குவது போல் தோன்றுகிறது. ஆர்கி ஒரு நிமிடம் தன் கண்களை மூடி யோசிக்கிறான், கவலைகளின் பூதம் அவனை மிரட்டும் போதெல்லாம், அம்மாவைக் கட்டிக்கொள்வான். அம்மா ஆறுதல் சொன்னதும் கவலைகளின் பூதம் ஓடிவிடும். இம்முறை அம்மாவை அழைப்பதற்கு முன்பு தானே பூதத்தை விரட்ட முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறான். பூதம் எழுப்பிய கேள்விகளுக்கு அவனே சிந்தித்து உண்மையை அறிகிறான். பள்ளியின் வரைப்படம் அவனுக்கு ஏற்கனவே தெரியும், பள்ளியில் அவனுக்கு பழக்கமான நண்பர்கள் சிலர் இருக்கின்றனர், பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும் விளையாட்டு வகுப்புகள் உண்டு. ஆகையால் தான் பயப்படத் தேவையில்லை என்று உண்மையை அறிந்துகொள்கிறான். கண்களைத் திறந்து, நிமிர்ந்து நின்று, பூதத்தினைப் பார்த்து “ஓடிப் போ! பூதமே” என்கிறான். பூதமும் அவனிடமிருந்து விலகி ஓரமாய் நிற்கிறது. பூதத்தைக் கவனிக்காமல் நம் மனதிற்குப் பிடித்த வேலையைப் பார்த்தாலே அது போய்விடும் என்பதை உணர்ந்து ஆர்கி தனக்குப் பிடித்த புத்தகம் ஒன்றை வாசிக்கிறான். அவனது அறையிலிருந்து அந்தப் பூதம் காணாமல் போகிறது.

வீட்டில் குழந்தைகள் நிறைய நேரங்களில் தங்களது மனதிலுள்ள சிறுசிறு அச்சங்கள் காரணமாக தேவையில்லாமல் கவலை அடைவார்கள். புதிய இடம், புதிய சூழல், தனிமை, நண்பர்களின் கிண்டல், பெரியவர்களின் கண்டிப்பு, போட்டியில் அடையும் தோல்வி போன்ற சின்ன சின்ன விசயங்கள் கூட இதில் உண்டு. இவை சின்னதாக இருக்கும் போதே அதிலிருந்து அவர்களாகவே மீண்டு வருவது மிகவும் முக்கியமானது. அதைத்தான் இந்தப் புத்தகங்கள் பேசிட முயற்சிக்கின்றன. குழந்தைகளின் கவலைகளை ஒரு பூதமாக மாற்றும் யுக்தியை நிறைய புத்தகங்களில் காண முடிகிறது.

Book: Ruby’s Worry Author & Illustrator Tom Percival

Go Away Worry Monster போன்றே ரூபியின் கவலை, Me & My fear என்ற புத்தகமும் மிகவும் அருமையான புத்தகம். சிறுவர்கள் தங்கள் மனதிலுள்ள கவலைகளை வாய்விட்டுப் பேசிட வேண்டும் என்பதையை அழகிய கதையாகக் கூறும் புத்தகங்கள்.

ரூபி என்றொரு சிறுமி இருப்பாள். உயரமாக ஊஞ்சல் ஆடுவது, ஊர் சுற்றுவது  என ரூபிக்கு ரூபியாக இருப்பது மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அவள் “கவலை”யை – மஞ்சள் நிற சிறிய உருவமாகச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அது மிகவும் சிறியதாக இருந்தாலும் அது மெல்ல மெல்ல பெரிதாக வளர்கிறது. ரூபி எங்குச் சென்றாலும் கவலை உருவமும் கூடவே வருகிறது. அவளது உணவு வேளையில், இரவு பல் துலக்கும் போது, பள்ளி வகுப்பில் என அது முழுநேரமும் ரூபியுடனே இருக்கிறது. ஆனால், அவளைத் தவிர வேறு யாருக்கும் அந்த “கவலை” உருவம் தெரிவதில்லை. ரூபியும் முடிந்தவரை அதனைத் தவிர்த்து வந்தாள், ஆனால் ஒரு கட்டத்தில் “கவலை” அவளைவிட பெரிதாக வளர்ந்து, அவள் மீது ஏறிக் கொண்டது. ரூபியின் பார்வையில் “கவலை”யைத் தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை. அவளுக்கான உணவையெல்லாம் “கவலை” எடுத்துகொண்டது, “கவலை” விடும் குறட்டைச் சத்தத்தில் ரூபியால் ஒழுங்காக உறங்ககூட முடியவில்லை. ரூபியால் ரூபியாக இருக்க முடியவில்லை. அப்பொழுதுதான் அவள் நண்பன் ஒருவன் பூங்காவில் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். ரூபியின் “கவலை” போலவே ஒரு உருவம் அவன் பின்னாலும் நின்று கொண்டிருந்தது. தன்னைப் போலவே, தன் நண்பனும் கவலைகளுடன் இருக்கிறான் என்பதை ரூபி அப்பொழுதுதான் புரிந்துகொண்டாள். நண்பனிடம் அன்புடன் பேசினாள். அவனது “கவலை” தானாகவே சிறியதாக மாறியது. கவலையை எப்படிக் கையாள்வது என்பதை அவள் அறிந்துகொண்டாள். அவளும் தன் மனதில் உள்ளதை நண்பனுடன் பகிர்ந்தாள். இருவரது “கவலை” உருவமும் மெல்ல மெல்ல மறைந்து போயின. ரூபி மீண்டும் ரூபியாக மாறினாள்.

அறிவுரை வழங்குதல் என்ற பாணியை விடுத்து வாழ்வின் தருணங்களை முன்வைத்து புனையப்பட்ட கதைகள் இவை. நேரடியாகவும் அதே நேரம் மிகவும் நேர்மையுடன் குழந்தைகளுடன் உரையாடும் புத்தகங்கள் இவை. இந்தப் புத்தகப் பரிந்துரைகள் முழுவதும் மருத்துவம், மனநல ஆலோசனை என அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு உருவாக்கப்பட்டவை என்கின்றனர். புத்தக உருவாக்கம் பெரும் வேலை என்றால், அதனைக் கொண்டு சேர்ப்பதும் மிகப் பெரிய வேலை. வெளியான புத்தகங்களிலிருந்து வெவ்வேறு தலைப்புகளில் பட்டியல்-பரிந்துரைகள் தயாரிப்பது மிகப் பெரிய பணி. பள்ளிகளும், நூலகங்களும், தொண்டு நிறுவனங்களும் இதனை மிகவும் அக்கறையுடன் செய்துவருவதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை வெவ்வேறு வடிவில் தமிழ்ச் சூழலில் எடுக்க வேண்டிய அவசியத்தையுமே இது உணர்த்துகிறது.

References:

https://reading-well.org.uk/books/books-on-prescription/children

https://readingagency.org.uk/

https://tra-resources.s3.amazonaws.com/uploads/entries/document/4821/RW_Children_-_booklist_interactive.pdf

Youtube links : Read Aloud books

Leave a comment