பிங்க் நிற முயலை ஹிட்லர் திருடியபோது – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

போரின் எச்சங்களை லண்டன் இன்னும் சுமந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் அதிலும் பள்ளிக்கூடங்களும் நூலகங்களும், போர் பற்றின வரலாற்றுச் செய்தியினை தாங்கிய வண்ணம் நிற்கின்றன. பள்ளிக்கூடப் பாடங்களும் இலக்கியங்களும்    சிறுவர்களுடன் உலக யுத்த வரலாற்றை உரையாடிபடியே இருக்கின்றன. போரின் வீரதீர சாகசங்களைக் கடந்து போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், போரின் இழப்புகள், போரினால் புலம்பெயர்ந்த வரலாறுகள்,  போரிலிருந்து மீண்ட கதைகள் என மக்களின் அவலங்களை எடுத்துரைக்கும் இலக்கியங்களே வாசகர்களிடம் பெரிதும் சென்றடைந்துள்ளன என்பது எனது அவதானிப்பு.

1991 ஆம் ஆண்டு, பிரித்தானிய உயர்நிலைப் பாடங்களில் “Holocaust Education” கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட்டு இன்று வரை தொடர்கின்றது. யூத இன மக்களை ஹிட்லரின் நாஜி(Nazi) படைகள் படுகொலை செய்தன. அதனை “Holocaust” என்று அழைக்கிறோம். அந்தக் கொடிய வரலாற்றை எதிர்வரும் தலைமுறை அறிந்துகொள்வது மிக முக்கியமென பிரித்தானிய அரசு கருதுகிறது. வரலாற்றின் துயரங்களை-அவலங்களை-கொடூரங்களை அறிந்துகொள்வது மூலம், மீண்டும் அந்தத் தவறு நடக்காமல் தடுக்க முடியும் என்பதே அதன் நோக்கம்.

Book: When Hitler stole pink Rabbit | Author & Illustrator: Judith Kerr | First Edition: 1971

உலகப் புகழ்பெற்ற “அன்னி ஃப்ராங்கின் டைரி” புத்தகம் இந்த வகைமையைச் சேர்ந்ததுதான். இது உலகெங்கும் பல லட்சம் மாணவர்களால் வாசிக்கப்பட்டப் புத்தகம். அன்னி ஃப்ராங்கின் டைரி போலவே ஜூடித் கெர்ரின் When Hitler Stole Pink Rabbit புத்தகமும் “Holocaust” வரலாற்றைப் பேசும் வகைமையில் முக்கியமான புத்தகம். ஜூடித் கெர்ரின் “Semi-Autobiography”, When Hitler Stole Pink Rabbit, Bombs on Aunt Dainty, A Small Person Faraway என மூன்று நெடுங்கதைத் தொகுதிகளாக (trilogy) வந்துள்ளன.

Judith Kerr Collection 3 Books Set - When Hitler Stole Pink Rabbit, Bo

ஜூடித் கெர் தனது 42வது வயதிலே  முதல் புத்தகத்தினை(The Tiger Who Came to Tea) எழுதினார், அதுவும் அவர் ஓவியர் என்பதால் படக் கதை புத்தகமாகவே அதனைக் கொண்டுவந்தார். ஆனால், ஆங்கில மொழி அவருக்கு அந்நியமாக இருந்த போதும் தனது இரண்டாவது புத்தகத்தினை (When Hitler stole pink Rabbit) ஒரு முழு நீள சிறார் நாவலாக (280 பக்கங்கள்) எழுதினார்.

அன்னா எனும் 12 வயது சிறுமிதான் நாவலின் நாயகி. அன்னா தனது தோழி எலிசபெத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்புகிறாள். பெர்லின் நகரத் தெருக்கள் கடும் பனிப் பொழிவால் சேரும் சகதியுமாய் கோரமாகக் காட்சியளிக்கின்றன. சாலையோரங்கள் பனியால் கெட்டிப்பிடித்துக் கிடக்கின்றன. அந்தச் சாலைகள் வழியே தோழிகள் இருவரும் செல்லும் போது, ஒரு சிவப்பு நிற சுவரொட்டியைப் பார்க்கின்றனர். ஹிட்லர் எனும் பெயரை வாசித்துவிட்டு, யார் இவர்? சார்லி சாப்ளின் போல இருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். எதிர்வரும் தேர்தலில் ஹிட்லர் வெற்றி பெற்றால் யூதர்களையெல்லாம் விரட்டுவிடுவானாம். அவனுக்கு யூதர்கள் என்றால் பிடிக்காதாம். அது இருக்கட்டும், தாங்கள் யூதர்களா? இல்லையா?…என்று அந்த இரண்டு சிறுமிகளும் உரையாடுமாறு தொடங்குகிறது  இந்த நாவல்.

அன்னாவின் பார்வையிலே இந்த நாவல் முழுவதும் நகர்கிறது. அன்னாவின் தந்தை, ஹிட்லரை விமர்சித்து பத்திரிகையில் எழுதுபவர். அவரது உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழல். அதனால் அன்னாவின் தந்தை, திடீரென ஊரைவிட்டு வெளியேறுகிறார். அந்தச் செய்தியை அன்னாவிடம் அவளது அம்மா மெல்ல மெல்ல புரியவைக்கிறார். “யார் கேட்டாலும் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, அவர் வீட்டில்தான் இருக்கிறார்.” என்று கூறும்படி சொல்கிறார் அம்மா. ஆனால், தெருவில் ஒருவர் அன்னாவிடம் அவளது தந்தை பற்றி துருவித் துருவி விசாரிக்கிறார். அன்னாவால் பதில் சொல்ல முடியாமல் எப்படியோ சமாளிக்கிறாள். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் “என்னால் அப்பா பற்றி பொய் சொல்ல முடியவில்லை” என்று அழுகிறாள். இதுபோன்று நாவலில் பல காட்சிகள், நம்மை நெருக்கமாக உணர வைக்கும்.

அன்னாவும் ஜெர்மனியைவிட்டு கிளம்பும் நாள் வரும். வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று அம்மா சொல்லியிருப்பார். பள்ளியில் அவள் நாடகத்திற்காகத் தயாராகிக் கொண்டிருப்பாள். தான் இல்லாமல் நண்பர்கள் நாடகத்தினை எப்படி நடத்துவார்கள்? அவர்களிடம் சொல்லாமல் செல்வது தப்பல்லவா? என்றெல்லாம் அன்னா தனது மனதினுள் நினைப்பாள். அன்னா ஒரே ஒரு பொம்மையை மட்டும் எடுத்துகொள்ள அம்மா அனுமதிப்பார். தனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற முயல் பொம்மையா? அல்லது புதிய நாய் பொம்மையா? என முடிவெடுக்க முடியாமல் அவள் தடுமாறுகிறாள். நீண்ட நேரம் யோசித்த பிறகு பிங்க் முயல் பொம்மையை விடுத்து நாய் பொம்மையை எடுத்துக்கொள்வாள். நாவலில் பல இடங்களில் தனது பிங்க் நிற முயல் பொம்மையை அவள் நினைத்துக்கொள்வாள். ஜெர்மனியில் அவளிருந்த கடைசி நாட்களில் கலவரங்களை நாஜி படைகள் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருந்தன. அதன் வழியே தேர்தலில் ஹிட்லர் வெற்றி பெருகிறான்.Reseña: Cuando Hitler robó el conejo rosa

தேர்தல் முடிவு அறிவிப்பு நாளிலே, அன்னாவின் குடும்பம் ஜெர்மனியிலிருந்து  சுவிட்சர்லாந்து செல்கின்றது. இந்தக் காட்சிகள் அனைத்துமே படபடக்கும் காட்சிகள், ஆனால் அன்னாவின் பார்வையில் அதனை மிகவும் நம்பிகையூட்டும் விதமாக காட்சிப்படுத்தியிருப்பார் ஆசிரியர் ஜூடித் கெர். அப்பா குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் இணைகிறார்.

அதன் பிறகு, சுவிட்சர்லாந்து வாழ்வு, அக்கம் பக்கத்தினர் அவர்களைப் பார்க்கும் விதம், பெற்றோரிடம் குறையும் கையிருப்பு, தங்களுக்குப் புரியாத மொழியில் பள்ளியில் பயில்வது என நாவல் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது. அடுத்து, நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் வேறு வேலை தேடி பேரிஸ் செல்கின்றனர். இந்தக் காலத்தில் அன்னாவும் அவளது அண்ணனும் தனியே அனைத்தையும் சமாளிக்கின்றனர். பின்னர் பேரிஸில் அவர்களது வாழ்வு தொடர்கிறது. இங்கேயும் அவர்களது பொருளாதாரம் சரியில்லாத நிலையில் உள்ளது.

அன்னாவின் அம்மாவிற்கு துணி துவைத்தல், சமையல் என எந்தவித வீட்டு வேலையும் தெரியாது. அவர் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்வதற்காகத் தவிக்கும் காட்சிகளாகட்டும், அன்னாவிற்கும் அவளது அண்ணனுக்கும் நடக்கும் சிறுசிறு சண்டைகள்-சமாதானங்களாகட்டும், அங்கே அவர்களுக்குக் கிடைக்கும் நண்பர்களின் உதவிகளாகட்டும், உதவிகளைப் பெறுவதில் இருக்கும் தயக்கங்களாகட்டும், கிழிந்த உடையைத் தைக்க முடியாமல் அன்னா சமாளிப்பதாகட்டும், புதிய மொழியைக் கற்றுக்கொள்வதாகட்டும், ஏமாற்றங்கள், தோல்விகள், முயற்சிகள் என ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசனையுடன் வாசகர்களுக்குக் கடத்திச் செல்கிறது இந்நாவல். இறுதியாக புதிய வாழ்வைத் தேடி பேரிஸிலிருந்து லண்டன் வந்திருங்குவதாக இந்நாவல் முடிகிறது. இந்நாவல் உலக யுத்தத்தின் கோர முகத்தைச் சொல்லும் அதே வேளையில் வாழ்வின் சுவாரஸ்யத்தையும் வாழ்வியலின் அழகியலையும் பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது. அன்னா அவளது அண்ணன், அவர்களது நண்பர்கள் கூட்டம் – என யுத்த காலத்தினை குழந்தைகளின் பார்வையில் ஆவணப்படுத்துவதாக இந்நாவல் உள்ளது.

ஜீடித் கெர்ரின் வாழ்வில் நடந்த உணமை சம்பவமே இந்தப் புத்தகம். இதனை எழுதுவதற்கான தனது நோக்கம் குறித்து ஜீடித் கெர் இவ்வாறு கூறுகிறார்,

“எனது வாழ்வு எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம், பேரழிவு தொடங்குவதற்கு முன்பே நாங்கள் ஜெர்மனியிலிருந்து எப்படியோ நகர்ந்துவிட்டோம். ஆனால், எண்ணற்ற மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர், உறவுகளை இழந்தனர், பலர் மடிந்து போயினர். ஹோலோகாஸ்டின் முந்தைய காலமே என்னுடையது.

என் வாழ்வின் பெரும் பகுதியை நான் இங்கிலாந்தில்தான் வாழ்ந்துள்ளேன். ஆனால், நான் ஒன்பது வயது வரை ஜெர்மானியியராக இருந்தேன். எனது பெற்றோர்கள் ஜெர்மானியர்கள். நாங்கள் ஜெர்மனீய மொழியில் மட்டுமே பேசுவோம், நானும் அண்ணனும் ஜெர்மனீய பள்ளிகளுக்குச் சென்றோம். ஜெர்மனியில் எங்களுக்கு அழகிய வீடு, நண்பர்கள், கடற்கரை விடுமுறை நாட்கள்(beach holidays), ஏன் நாய்கூட இருந்தது. இப்படி எங்களது அழகிய வாழ்வு தலைகீழாக மாறும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

தப்பிப் பிழைத்து லண்டன் வந்த பிறகு திருமணம், பிள்ளைகள் என்று ஆனது. ஜெர்மனியிலிருந்து தப்பியக் கதைகளை என் பிள்ளைகளுக்குச் சொல்ல முயற்சித்தேன். என் கதையினைக் கேட்ட பிறகு “மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றனர். ஆனால் அவர்கள் வருந்துவதற்காக என் கதையை ஒருபோதும் சொல்ல நினைக்கவில்லை. நான் இந்தப் புத்தகத்தினை எழுதிய நோக்கமே வேறு.

நம் வாழ்வில் சற்றும் எதிர்பாராமல், திடிரென ஒரு நாள் ஏழையானால்? தெரியாத நாட்டில், தெரியாத மொழியில், துளியும் தொடர்பேயில்லாத பள்ளிக்குச் செல்வது என்பது எவ்வளவு கொடுமையானது? ஆனால், அந்த நாட்களைக் நானும் என் அண்ணனும் கொடுமையாக உணரவேயில்லை. மாறாக, அந்தச் சிறுவயதிலும் ஒவ்வொரு கட்டத்தையும் எங்கள் முன் நிற்கும் சவாலாகப் பார்த்தோம். அதனைச் சுவாரஸ்யமாகக் கையாண்டோம்.  அதற்கு முக்கியக் காரணம் எங்கள் பெற்றோர்களே. அவ்வளவு கடினமான சூழலிலும் என் பெற்றோர்கள் அச்சத்திலிருந்து எங்களைக் காப்பாற்றி, வாழ்வு தரும் சவால்களைச் சந்திக்கும் துணிச்சலைக் கொடுத்தனர். அதைத்தான் நான் நாவலாக எழுதினேன்” என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்த நாவலை வாசிக்கும்போது ஜூடித் கெர்ரின் நோக்கம் முழுதும் நிறைவேறியிருப்பதை உணர முடியும்.

Leave a comment