புத்தகக் கடையைப் பார்த்தால் போதும், உடனே உள்நுழைந்து ஒரு முறை அங்குள்ள புத்தகங்களைச் சுற்றிப்பார்த்தால்தான் மனநிறைவு அடைகிறது. இலண்டனில் உள்ள புத்தகக் கடையின் சிறப்பு அம்சமே, சிறிய கடையானாலும் படக்கதைகள், டீன் புத்தகங்கள், பதின் பருவ புத்தகங்கள் என வயதுவாரியாகவும் புகழ்பெற்ற க்ளாசிக் புத்தகங்கள், தொகுப்புகள், புது வரவுகள் எனவும் தனித்தனியே அடுக்கி வைத்திருப்பார்கள்.
அப்படி ஒரு முறை தேம்ஸ் நதியின் கரையிலிருந்த ஒரு புத்தகக் கடையில் சுற்றிக் கொண்டிருந்த போது, எங்கள் வீட்டுச் சுட்டி(4 வயது) ஏதோ ஒரு புத்தகத்தைக் கையை நீட்டி ரகசியமாகச் செய்கை செய்தான். என்னவென்று விசாரித்தால் “டைகர்-டீ-ஸ்கூல்” என்ற சொற்களை மட்டும் மீண்டும் மீண்டும் கூறினான். அவனது பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு புத்தக அட்டையைப் பார்த்த மகிழ்வின் வெளிப்பாடே அவனது “டைகர்-டீ” சொற்கள். அவனது மகிழ்வின் வழியே எனக்கும் அறிமுகமானதுதான் ஜூடித் கெர்ரின் “The Tiger Who Came to Tea”. இந்தப் புத்தகம் இங்குள்ள ஆரம்பநிலைப் பள்ளிகளில் மிகவும் பிரபலம். குழந்தைகளை மகிழ்விக்கும் மேடை நாடகங்களில் இன்றும் இந்தக் கதைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அதுமட்டுமல்ல, இந்தப் புத்தகத்தின் ஓவியரும் ஆசிரியருமான ஜூடித் கெர்ரின்(1923-2019) நூற்றாண்டையும் இந்த வருடம்(2023) இங்கிலாந்து நினைவு கூறுகிறது. ஒரு பள்ளிக்கு ஜூடித் கெர்ரின் பெயரைச் சூட்டியுள்ளது இங்கிலாந்து அரசு.
ஜூடித் கெர் ஜெர்மெனி நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை கெர் பத்திரிகையில் தொடர்ந்து அரசியல் பகுதிகளை எழுதி வந்தவர். ஹிட்லரின் அரசியலை தீவிரமாக விமர்சித்ததால், அவரது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அதனால், குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து, ப்ரான்ஸ் என ஒவ்வொரு நாடாக மாறி இறுதியாக லண்டனில் அகதியாகத் தஞ்சம் அடைந்தார். அப்பொழுது ஜூடித் கெர்ருக்கு, 16-17 வயது இருக்கும். அதன் பிறகு ஜூடித் கெர் லண்டனிலேயே படித்து, திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்ந்து, ஒரு கட்டத்தில் எழுத்தாளராகி மகிழ்வுடன் தன் வாழ்வை 95 வயதில் நிறைவு செய்தார். தனது 45 வயதிலேயே அவர் எழுதத் தொடங்கியிருந்தாலும், இறக்கும் வரை சிறார் இலக்கியத்திற்க்குப் பெரும் பங்காற்றியுள்ளார். முப்பதுக்கும் மேலான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார், 1968இல் அவரது முதல் புத்தகமான “The Tiger Who Came to Tea” வெளியானது, அவரது கடைசி புத்தகமான “The Curse of the School Rabbit” 2019ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வெளியானது.
சிறார் இலக்கியத்தைப் பொதுவாக வயதின் அடிப்படையில் மழலையர், சிறுவர்கள், பதின் பருவத்தினர் என மூன்று வகைகளாகப் பிரிப்பது வழக்கம். ஜூடித் கெர் இந்த மூன்று வகைமையிலும் சிறந்த புத்தகங்களைப் படைத்துள்ளார் இவர். சரி! இந்தக் கட்டுரையில் அவரது மழலையருக்கான வெளியீடுகள் குறித்துப் பார்ப்போம்.
ஜூடித் கெர் தனது குழந்தைகளுக்குத் தினமும் கூறிய கதைதான் “The Tiger Who Came to Tea”. எந்தக் கதையை கூறினாலும் தினமும் அவரது இளைய மகள் டைகர் கதையை கேட்காமல் உறங்க மாட்டாளாம். அந்தக் கதையை பலமுறை கேட்டிருந்தாலும், மகளுக்கு இந்தக் கதைதான் மிகவும் நெருக்கமானது என்று தனது நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற காலத்திலே, இந்தக் கதையைப் புத்தகமாக எழுதியுள்ளார். ஜூடித் அடிப்படையில் ஓவியர் என்பதால் படக்கதை புத்தகமாகவே இதனைக் கொண்டு வந்தார். அதற்காகத் தினமும் மிருகக்காட்சி சாலைக்குச் சென்று புலி கதாபாத்திரத்தை வரைந்ததாக நினைவுகூறுகிறார்.
ஒரு நாள் சோஃபி என்ற சிறுமியும் அவளது அம்மாவும் வீட்டில் இருக்கிறார்கள். அது மதிய நேர தேநீர் வேளை. அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, யாராக இருக்கும் என்கிறாள் சோஃபி. பால்காரரா? அவர்தான் காலையிலே வந்துவிட்டாரே. காய்கறிக்காரரா? இல்லை அப்பாவா? என்று ஒவ்வொரு ஆளுக்கும் அவரில்லை என்ற பதில் கிடைக்கிறது. பின்னர், அவளே சென்று கதவைத் திறக்கிறாள். பார்த்தால் பெரிய புலி. மனிதனைப் போல் இரண்டு கால்களில் நிற்கிறது. “எனக்கு மிகவும் பசிக்கிறது, தேநீர் அருந்த வரலாமா?” என்று கேட்க அவளும் புலியை விருந்தாளியாக அழைக்கிறாள். புலிக்குக் கடுமையான பசி என்தால், தேநீர்-காய்கள்-பழங்கள் என அனைத்தையும் தின்றுவிடுகிறது. புலிக்குக் கடுமையான தாகம் என்பதால், தண்ணீர்-பால்-பழச்சாறு என அனைத்தையும் குடித்துவிடுகிறது. சோஃபி குளிக்கக்கூட வீட்டில் தண்ணீர் இல்லை. அதன் பிறகு மாலை அப்பா வீடு வந்ததும், வீட்டில் உணவு ஏதுமில்லாததால் அவர்கள் கடைக்குச் செல்கிறார்கள். வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்குகிறார்கள். அப்போது சோஃபி “புலி உணவு” டப்பாவையும் சேர்த்து வாங்குகிறாள். நாளையும் புலி வந்தால் கொடுக்கலாம் அம்மா! என்கிறாள் சோஃபி. அத்துடன் கதை முடிகிறது.
அழகிய ஓவியங்கள், எளிமையான வரி அமைப்பு, துள்ளலான கதை எனக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் புத்தகம். இது ஜூடித்தின் முதல் புத்தகம், பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து எழுதினார்.
மாக் பூனை – அவர் உருவாக்கிய “மாக்” பூனை கதாபாத்திரமும் மாபெரும் வெற்றியடைந்தது. ஒரு குடும்பம், அதில் அம்மா-அப்பா(Mr & Ms. Thomas)-அக்கா(Debbie)-தம்பி(Nicky) கூடவே வளர்ப்புப் பிராணியாக மாக் பூனை. “மாக்” கதைவரிசையில் மட்டும் 17 புத்தகங்களை வெளியிட்டார் ஜூடித். இவர் வளர்ப்புப் பிராணிகளைக் கதாபாத்திரமாக மாற்றுவதில் வல்லவர். அவர் தனது வாழ்நாளில் 15க்கும் மேற்பட்ட பூனைகளை விரும்பி வளர்த்தார். அதனையே தன் புத்தகத்தில் மாக் என்ற கதாபாத்திரமாக மாற்றினார். பூனை, முயல், முதலை, வாத்து, நாய், குதிரை என அவரது கதைகளில் ஏதோ ஒரு விலங்கு இடம்பெறும். அவை மனிதர்களுடன் நேரடியாகப் பேசுவதாக அல்லாமல், தன்னுள் பேசுவதாகவே காட்சிகள் அமைந்திருக்கும். முக்கியமாக விலங்குகளின் சின்ன சின்ன மனப்போக்குகளைக் காட்சியாக அமைத்திருப்பார்.
மாக் கதைவரிசையில் பூனையின் பார்வையிலிருந்து கதை நகர்வதாகவே அதிகம் அமைத்திருப்பார். Mog’s Birthday – என்ற புத்தகத்தில் மாக் பூனையிடம் “உனக்கு இன்று பிறந்தநாள், அதனால் மாலை பிறந்தநாளை கொண்டாடப் போகிறோம்” என்கிறார்கள் டெப்பியும் நிக்கியும். ஆனால், பூனையோ தனக்கு party என்றாலே பயம், பிடிக்கவே பிடிக்காது என்று நினைக்கிறது. நிறையப் புதிய மனிதர்கள் வருவார்கள், வீடு கூச்சலாக இருக்கும். சிறு குழந்தைகள் தன்னை வம்பிழுப்பார்கள் என்று ஒவ்வொரு காட்சியாக மனதினுள் நினைத்து பயப்படுகிறது. பயந்துபோய், வீட்டின் அருகிலுள்ள மரத்தில் ஏறி அமர்ந்துவிடுகிறது. அப்படியே உறங்கிவிடுகிறது. சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்க்கிறது, டெப்பியும் நிக்கியும் மரத்தின் கீழே மாக் பூனையை காணாது சோகமாக அமர்த்திருக்கின்றனர். “மாக் எங்கதான் போச்சுன்னு தெரியலையே” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்க, மாக் மரத்திலிருந்து கத்திக்கொண்டே அவர்கள் மடியில் பாய்கிறது. மாக் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் வீட்டிற்குச் செல்கின்றனர். வீட்டில் அப்பாவும் அம்மாவும் மட்டுமே இருக்கின்றனர். மாக்கிற்கு அழகான கேக் கிடைப்பதாகக் கதை முடிகிறது.
இன்னொரு கதையில், பக்கத்து வீட்டு நாய் வருகிறது. நாயைக் கண்டு பூனை அஞ்சுகிறது. பிறகு என்ன ஆனது என்பதே கதை. மற்றொரு கதையான “Mog the Forgetful Cat” இல் மாக் பூனை ஞாபக மறதியில் அனைத்தையும் அடிக்கடி மறந்துவிடுகிறது. தான் சாப்பிட்ட காலை உணவை மறந்துவிடும், பாதி குளியலில் எழுந்துவிடும், தனக்கான கதவை அடிக்கடி மறந்துவிட்டு ஜன்னல் பக்கம் வந்து நிற்கும், தனக்குப் பறக்க தெரியாது என்பதைக்கூட அது மறந்துவிடும். அதனால் அம்மாவும்-அப்பாவும் அடிக்கடி மாக் பூனையைக் கடிந்துகொள்கின்றனர். அதனை நினைத்து டெப்பி மிகவும் வருந்துகிறாள், மாக்கும் வருந்துகிறது. இறுதியாக அதன் மறதியின் வழியாகவே வீட்டினுள் நுழைந்த திருடனைக் கண்டுபிடிப்பதாகக் கதை நகர்கிறது. இப்படிப் பூனையை வைத்து மட்டும் பல்வேறு கதையை எழுதிய ஜூடித் கெர் – திடீரென “Goodbye Mog” புத்தகத்தில் மாக் பூனை இறப்பதாகக் கதை ஒன்றை எழுதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மாக் பூனை வயது முதிர்ந்து இறக்கிறது, அதனால் குழந்தைகள் வாடி வருந்துகின்றனர். அவர்களது நினைவில் பூனை செய்த ஒவ்வொரு சேட்டையும், அன்பார்ந்த தருணங்கள் என அனைத்தும் வந்து போகின்றன. அப்போது வீட்டிற்குக் காடின்னா என்ற புதிய பூனை வருகிறது. மாக்கின் இடத்தை அது மெல்ல மெல்ல நிறைவு செய்கிறது. இதனை மாக் பூனையின் ஆத்மாவும் அருகிலிருந்து கவனித்துவிட்டு நிம்மதியுடன் சொர்க்கம் செல்வதாகக் கதை முடிகிறது. இறப்பைப் பற்றி குழந்தைகளுடன் படக்கதையின் வழியே பேசுவது மிகவும் சவாலான விசயம். அந்த வலியை, சோகத்தை ஜூடித் கெர் மென்மையாகவும் எடுத்துச் சென்றுள்ளார். இது ஒரு நல்ல முன்னுதாரணப் புத்தகம் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஜூடித் கெர் அவர்களில் நேர்காணல்களை வாசிக்கும் போது, அவரது நகைச்சுவைத் தன்மையும் எளிமையும் மிகவும் ரசிக்க வைக்கிறது.
“உங்கள் வாழ்வின் மிகப் பெரிய சாதனையாக எதனை நினைக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு,
“96 வயது வரை வாழ்வதே மிகப் பெரிய சாதனைதானே.” என்கிறார்.
வயதான பிறகும் நிறைய எழுதுகிறீர்களே? என்ற கேள்விக்கு.
“என் கணவன் இறந்த பிறகு எனக்குச் சமைக்கும் வேலைகூட இல்லை. தனியாக இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. அதனால்தான் நிறைய வரைகிறேன்-எழுதுகிறேன்” என்று சற்றே நகைச்சுவையாகச் சொல்லிவிட்டு, “சிறு வயது முதலே ஓவியங்களைக் காதலிப்பவள், தினமும் ஓவியம் வரைவேன். மனிதர்கள் அசைவை ஓவியங்களாக வரைவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் முதலில் கால்களை வரைந்துவிட்டு பின்னர் மெல்ல மெல்ல உடலை வரைவது என் சிறுவயது வழக்கம். நான் காணும் காட்சிகளை நினைவுயிலிருந்து வரைவேன், தெருக்கலில் மனிதர்கள் நடப்பது, நடக்கும் போது ஆடைகள் அசையும் விதம், கைகள் எப்படி நகரும் என அனைத்தையும் நினைவுகளிலிருந்து வரைவேன்.” என்கிறார்.
சிறார் இலக்கியத்தில் ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், “ஒரு கதையில், சொற்களால் சொல்ல முடியாதவற்றை கூறுவதே ஓவியத்தின் முக்கியமான வேலை” என்கிறார்.
ஜூடித் கெர் எப்போதுமே அடுத்தத் தலைமுறையின் மீது பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தொழில்நுட்பச் சாதனங்களில் இளைய சமூகம் மூழ்கிக் கிடக்கிறதா? என்ற கேள்விக்கு,
“தொழில்நுட்பச் சாதனங்களில், இளைஞர்களை விடப் பெரியவர்களே அதிகம் மூழ்கியுள்ளனர். என் கதைகளில் வந்தது போல, இதோ இப்போது இந்தத் தெருவில் ஒரு புலியோ நரியோ வருகிறது என்று வைத்துக்கொள்வோம். பெரியவர்கள் ஒருவர்கூட பார்க்க மாட்டார்கள். குழந்தைகள் மட்டுமே அதனைக் கவனிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் மிகவும் அன்பானவர்களாவும் இலட்சியவாதிகளாவும் இருக்கின்றனர்” என்று பெரும் நம்பிகையுடன் பதிலளிக்கிறார்.

நன்றி,
https://www.theguardian.com/
https://www.countrylife.co.uk/
https://www.twinkl.co.uk/