பன்முகத்தன்மையின் அடையாளம் எல்மர் யானை – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“நான் எப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ, அப்போதெல்லாம் எல்மரைத் துணைக்கு அழைப்பேன். எல்மர் என்னை கட்டாயம் காப்பாற்றிவிடும்”.

“எல்மர் குறித்து 14வயது சிறுமி சமீபத்தில் எனக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தாள். நான்கு வயதாக இருக்கும் போது அவளுக்கு எல்மர் புத்தகம் கிடைத்துள்ளது. அவள் உயரமானவளாம். அவளது வயதைவிட அதிக உயரம் என்பதால் அவள் எப்போதும் கிண்டல் கேளிக்கு ஆளாகிவிடுவாளாம். அப்படி அவள் சோர்வடையும் போதெல்லாம் அவளை மீட்டெடுப்பது எல்மர் என்று அவள் எழுதியிருந்தாள். இதுபோன்ற கடிதங்களை வாசிக்கும் போது நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. உண்மையில் இந்தப் பாராட்டுகள் அனைத்தும் எல்மர் யானைக்கே சொந்தமானது”, என்கிறார் புகழ்பெற்ற எல்மர் கதையின் ஆசிரியரும் ஓவியருமான டேவிட் மெக்கீ.

எல்மர் யானை – ஒரு வழக்கமான சாம்பல் நிற யானை அல்ல. அது சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள், பச்சை, கருப்பு என பல வண்ணங்களில் சின்ன சின்ன கட்டங்களைக் கொண்ட யானை. அதனை “Patchwork Elephant” என்றே டேவிட் குறிப்பிடுகிறார். சாம்பல் நிற யானைகள் மத்தியில் வாழும் எல்மர் யானை தனது நிறம் மற்றவர்கள் போல் இல்லாததை நினைத்து வருந்துகிறது. மற்ற யானைகள் தன்னைக் கிண்டலும் கேலியும் செய்வதிலிருந்து தப்பிக்கத் தனது உடல் முழுதும் சாம்பல் நிற சாயத்தைப் பூசிக் கொள்கிறது. ஆனால், அதன் பிறகுத் தனது இயல்பை அது தொலைத்துவிட்டதாக எண்ணுகிறது. அதுமட்டுமல்ல, மற்ற யானைகளும் எல்மர் இல்லாததை நினைத்து வருந்துகின்றன. பின்னர், மழை பெய்ய எல்மரின் சாம்பல் நிறம் மறைந்து இயல்புக்குத் திரும்புகிறது. எல்மர் திரும்பக் கிடைத்ததை நினைத்து மொத்த யானைக் கூட்டமும் மகிழ்ச்சியடைகிறது. இதுதான் எல்மர் யானை கதைவரிசையின் முதல் கதை.

Book: Elmer the Patchwork Elephant , Author & Illustrator: David McKee , First Edition: 1968

ஒருமுறை டேவிட் தனது மகளுடன் தெருவில் நடந்து சென்றிருந்தார். டேவிட்டின் மனைவி ஆங்கிலோ-இந்தியன் என்பதால் தனது மகள் மாநிறமாக இருப்பார். இங்கிலாந்தில் அப்போது நிற பாகுபாடுகள் அதிகம் உண்டு. அன்று அவர்கள் நடந்துகொண்டிருந்த போது எதிர்த் திசையிலிருந்து வந்த சிறுவன் ஒருவன் ‘Look, there’s a nigger!’ என்று கத்தினான். அந்த நிறவெறி கூச்சல் அவர் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. தன் வாழ்வில் நடந்த இந்த உண்மைச் சம்பவத்தின்(நிற வெறி தாக்குதல்) அடிப்படையில்தான் எல்மர் கதையை உருவாக்கியதாகக் கூறுகிறார்.

சமூகம் என்பது ஒற்றைத் தன்மையானதல்ல, அது பன்முகத்தன்மை கொண்டது. சமூகத்திலுள்ள பன்முகத்தன்மையின் குறியீடாகவே எல்மர் இருக்கிறது. அதனால்தான் சமூகத்தில் நிறத்தால், இனத்தால், உடல் ஊனத்தால் அல்லது வேறு எந்த காரணத்தினாலோ ஒதுக்கப்படும் குழந்தைகள் எல்மரை துணைக்கு அழைக்கிறார்கள். எல்மர் சிறுவர்களுக்கு மட்டும் துணையாக நிற்கவில்லை பெரியவர்களுக்கும் துணையாகவே நிற்கிறது. ஆம்! 2014 ஆண்டு கார்டியன் செய்தி நிறுவனம் எல்மர் யானையை LGBTQ+ icon ஆக அறிவித்தது. ஒருவரின் இயல்பைச் சமரசமின்றி ஏற்றுக்கொள்வது, சமூகம் என்பது அனைத்துவிதமான மக்களையும் உள்ளடக்கியது ஆகியவற்றை இந்தப் புத்தகம் பேசுவதாகக் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து ஆசிரியர் டேவிட் இவ்வாறு கூறுகிறார், “எல்மர் அனைவருக்குமானது, அதன் சிறப்பு அம்சமே ஒவ்வொருவரையும் அவரது இயல்பிலே ஏற்றுக்கொள்வதுதான்”.

டேவிட் மெக்கீ (David McKee 1935-2022 இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். Elmer, King Rollo, Mr Benn போன்ற புகழ்பெற்ற படக்கதை கதாபாத்திரங்களை உருவாக்கியவர். அடிப்படையில் இவர் ஓவியர். சுமார் 50க்கும் மேற்பட்ட படக்கதைப் புத்தகங்களைப் படைத்தவர். இவரது புகழ்பெற்ற எல்மர் புத்தகம் 50க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சுமார் 10மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. இவரது மாணவ பருவம் உலக யுத்தங்கள் நடந்த காலம் என்பதால், பொம்மைகள், நண்பர்கள் இல்லாமல் அதிகமாகத் தனிமையிலே வளர்ந்ததாகவும், கதைகள் மட்டுமே அவரது துணையாக இருந்ததாகவும் கூறுகிறார். Winnie-the-Pooh, Treasure Island போன்ற புத்தகங்களை விரும்பி படித்ததாகவும், அதனுடன் தந்தையின் போர் அனுபவக் கதைகள், அம்மா, ஆசிரியர், கதைசொல்லிகள் என எப்போதும் கதைகளுடனே வளர்ந்ததாக கூறுகிறார். அதுவே அவரை சிறுவயது முதலே கதைகளைப் படைக்க தூண்டியுள்ளது. கல்லூரி காலங்களில், வகுப்பில் கதைகள் சொல்ல வேண்டுமென்றால் முதல் ஆளாக அவர் சென்றுவிடுவாராம். அதுவே பின்னாளில் எழுத்தாளராகும் உந்துதலைத் தந்ததாக கூறுகிறார்.

கல்லூரி முடித்ததும் – செய்திதாள்களுக்கும், இதழ்களுக்கும் கார்டூன் வரைபவராக இருந்துள்ளார். 1964இல் இவரது முதல்ப் புத்தகம் Two Can Toucan வெளியானது. 1968இல் எல்மர் புத்தகம் வெளியானது. அதன் பிறகு எல்மர் யானை கதாபாத்திரத்தினை கொண்டு 20க்கும் மேலான படக்கதைகளை உருவாக்கியுள்ளார்.

“நம்மைச் சுற்றி கதைகள் நிறைந்துள்ளன. எழுத்தாளனாய், கதைசொல்லியாய் நான் அதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கடத்துகிறேன். அவ்வளவே!“

“Drawing is taking a line for a walk – Paul Klee” – ஓவியங்கள் பற்றி கூறுகையில் தனக்கு மிகவும் பிடித்த வரி இதுவெனக் குறிப்பிடுகிறார் டேவிட்.

“ஒரு கோட்டை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது என்பது ஒரு மகிழ்வான தருணம். அப்படி அழைத்துச் செல்லும் போது உங்கள் பேனா தாள்களைக் கடிப்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் கழுத்திற்குப் பின்பு மெல்லிய தென்றலை உணர்வீர்கள். ஒரு துளி வியர்வை உங்கள் கண் இமைகளுக்குக் கீழே வழிவதை நீங்கள் உணர்வீர்கள். அது ஒரு அழகியல்.” என்கிறார் டேவிட் மெக்கீ.

டேவிட் மெக்கீ 2022இல் தனது 87ஆம் வயதில் மறைந்தார். அவர் மறையும் போது எல்மர் யானை 55 வருடங்களைக் கடந்திருந்தது. எல்மர் இன்னும் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையென எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. எல்மர் முதன் முதலாக வெளியான 27 மே தினத்தை எல்மர் தினமாக இங்கிலாந்து நூலகங்கள் கொண்டாடுகின்றன. ஒரு சிறார் இலக்கிய கதாபாத்திரம் சிறு குழந்தையை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் மீதே தனது தாக்கத்தைச் செலுத்தும் வல்லமை கொண்டது என்பதற்கு எல்மர் ஒரு சிறந்த உதாரணம்.

குறிப்பு:

https://www.elmer.co.uk/about-elmer/

https://www.booktrust.org.uk/

https://www.theguardian.com/

Leave a comment