மாணவர்களிடம் பாகுபாட்டைக் களைய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் – தசிஎகச பரிந்துரைகள்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வணக்கம்,

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம் சாதி, மதப் பாகுபாடுகள் சார்ந்த நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. மாணவப் பருவத்திலேயே இதுபோன்ற பாகுபாடுகளைக் களைய அரசு ஏற்கெனவே முயற்சிகளை எடுத்துவருவதை அறிந்திருக்கிறோம். அதே நேரம் சிறார் எழுத்து, கலைகள் சார்ந்து செயல்பட்டுவரும் எங்கள் இயக்கம், இந்தப் பிரச்சினைகளை சீர்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறோம். இவற்றை விரைவாகப் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களிடம் பாகுபாட்டைக் களைய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் பரிந்துரைகள்:

பள்ளிக்கூடம் என்பது கல்வியைப் போதிப்பதற்கான இடம் மட்டுமல்ல. பல்வேறு வாழும் நிலைகளில் இருந்து வரும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் இடமும்கூட. குழந்தைகள் ஒன்றுகூடி உறவாட, உரையாட, புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்ள என கூடிவாழ்வதற்கு ஏதுவான இடம் அது.

அதுவும் வர்க்கமும் சாதியமும் இரண்டறக் கலந்துள்ள இந்தியாவில் சமூகத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்கள் இணைந்து வாழும் வாய்ப்பை உருவாக்குமிடம். இப்பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கவேண்டிய இடம் கல்வித் துறை. சாதி, வர்க்கம், நிறம், பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகளைக் களையும் மாபெரும் பணி பள்ளிக்கூடத்தினுடையது.

நாங்குநேரியில் சின்னத்துரை எனும் மாணவனும் அவனின் தங்கை சந்திராசெல்வியும் சக மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். சக மாணவர்களால் நடத்தப்பட்டிருக்கும் இந்த வன்முறை தமிழ்ச் சமூகத்தைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய வன்மத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. நமது பாடநூல்களைத் திறந்தவுடனே தென்படும் ’தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ எனும் வரியைக் கல்வி கற்ற ஒவ்வொருவருவரும் உணர்ந்துள்ளோமா  என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இனியும் இதுபோன்ற கொடுமை நடந்துவிடக் கூடாது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. சமூகத்தில் பாகுபாடு நிலவும்பொழுது, இந்த சமூகத்தின் அங்கமாகிய மாணவர்களையும் அது பாதிக்கும் என்பது இயல்பு.

கல்வியில் புதுமையான பல முயற்சிகளை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை எடுத்துவருவதைக் காண்கிறோம். தமிழகத்தின் தனித்துவமான கல்விக் கொள்கையில் சாதி, மத, பாலின வேறுப்படுகளைக் களைதலை முக்கியமானதாக முன்னெடுக்க வேண்டிய உள்ளது. அத்துடன் சமகாலத்தில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், போதைப்பழக்கங்கள், வன்முறை  போன்ற தாக்கத்தால் சாதிய, மத ரீதியான பிரிவினைகள் எளிதில் பரப்பப்படுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, நாம் இன்னும் கூடுதல் வேகத்தோடு அவற்றை எதிர்த்தாக வேண்டியுள்ளது. அதற்காகக் கீழ்க்காணும் கோரிக்கைகளை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாகவும் அரசியல் ஆளுமைகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சார்பாகவும் முன்வைக்கிறோம்.

கோரிக்கைகள்:

  • சமூகநீதியை மையப்படுத்திய பாடங்கள்: சமூகநீதியை மையப்படுத்தி தனிப் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும். கூடுதலாக, சமூகநீதியை வலியுறுத்தும் பாடங்கள் வெவ்வேறு பாடங்களின் கீழ் அதிகமாக இணைக்கப்பட வேண்டும். அறிவியல் பாடங்கள் என்பது அறிவியல் செயல்பாடாக மட்டும் இல்லாமல் அறிவியல் மனப்பான்மையை இணைத்து வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மூடநம்பிக்கைகளை அகற்றும் நோக்கமும் அதற்கு இருப்பது அவசியம். அதேபோல் வரலாற்றில் சமூகநீதிக்கான முன்னெடுப்புகள் குறித்து பாடங்களில் தனிப்பகுதியாக அமைக்கப்பட வேண்டும். மொழிப் பாடத்தில் நவீன பெண்ணிய, தலித்திய, குழந்தை மொழி, வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். துணைப்பாடம் முழுக்க முழுக்க சமூகநீதி பற்றிய கதைகள் மட்டுமே இருக்கும்படி அமைப்பது சரியாக இருக்கும். அதுவும் சமகாலத்தை பிரதிபலிக்கும் வகையான படைப்புகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
  • மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்துதல்: வாசிப்புப் பழக்கமே மனிதநேயத்தை வளர்க்கும் சக்தி. தற்போது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துவரும் வாசிப்பு சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள் மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் மூலமாக நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் அடுத்த கட்டமாக நூற்றுக்கணக்கான சமூக நீதிக் கதைகளை வெளியிடப்பட வேண்டும். சமூக நீதி என்பது கூடிவாழுதல், வன்முறையைக் கைவிடுதல், சாதி, மத, இன, பாலினப் பாகுபாடுகளைக் கடத்துதல் என்பதை கதை, பாடல், நாடகம் என பல்வேறு வடிவங்களில் இருப்பதும் அவற்றை பள்ளி மாணவர்களின் வாசிப்பிற்கு எடுத்துச் செல்லுதலும் அமைய வேண்டும்.
  • கூடிவாழுமிடமாக பள்ளிக்கூடங்களை மேம்படுத்துதல்: பள்ளிகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தென்படும் சாதி, மதப் பிரிவினைவாத அடையாளங்களைக் களைதல். கைகளில் சாதிக் கயிறு கட்டுதல், சாதி ரீதியான நட்புக் குழு; விளையாட்டுக் குழு அமைத்தல்; மாணவிகளைக் கண்காணிக்க அமைத்திருக்கும் ஆண் குழுக்கள் போன்றவற்றைக் கண்காணித்து படிப்படியாக அவற்றைக் களைய வேண்டும். எல்லோரும் சமம் என்பதை வலியுத்தும் அரசமைப்பின் பகுதிகளை மாணவர்களுக்கு வாசிக்க அளித்தல் அவசியம். மாணவர்களை ஒருங்கிணைக்கும் கலை நிகழ்வு, விளையாட்டுகள், சகோதரத்துவ செயல்பாடுகள், சமத்துவச் சங்க செயல்பாடுகளைத் திட்டமிடுதல் வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மேம்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது போல் ஆண் குழந்தைகளின் பழக்க வழக்க மேம்பாட்டிற்கான சிறப்பு செயல்பாடுகளை கல்வியின் ஒரு பகுதியாக ஆக்க வேண்டியுள்ளது.
  • ஆசிரியப் பண்புகளை வலுப்படுத்துதல்: மாணவர்களோடு நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்கள். எனவே, அவர்களை சாதி, மத, பாலின பாகுபாடற்ற உரையாடலுக்குத் தயார்ப்படுத்த வேண்டும். ஆசிரியர்களில் சிலர் சாதி, மத மனநிலையோடு இருப்பது, குழு மனப்பான்மையோடு செயல்படுவது, வல்லுறவில் ஈடுபடுபவர்களாக இருப்பது, போதைப்பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களாக இருப்பது, பள்ளிச் செயல்பாடுகளில் மாணவர்களின்மீது அக்கறையற்று இருப்பது ஆகியவற்றை அறவே ஒழிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆசிரியப் பண்புகளை உறுதிசெய்வதன் மூலமும் கல்வியின் இலக்கை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. கூடுதலாக, மாணவர்களிடம் சமூகநீதியையும் சமத்துவத்தையும் தோல்வியில் இருந்து மீள்வதையும் பழக வைக்கும் வேலையை ஆசிரியர் செய்ய முடியும்.
  • பள்ளி – சமூக இணைப்பு: மாணவர்களின் எதிர்காலத்தை வன்முறையற்றதாக மாற்ற, கூடிவாழ்வதற்கான முன்னெடுப்புகளை பெற்றோர்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். பெற்றோர்களுக்கு தீண்டாமை, பாலியல் சீண்டல்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு வழங்குதல். ஊருக்குள் மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப்பழக்கங்கள், சீட்டாடுதல், சீரழிக்கும் இணையக் காட்சிகள் போன்றவற்றிலிருந்து விடுபட மாற்றுவழிகளை முன்வப்பதற்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முன்னெடுக்க வேண்டும். எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், குழந்தை நல செயல்பாட்டாளர்களைப் பள்ளியின் சிறப்பு விருந்தினர்களாக அடிக்கடி அழைத்து மாணவர்களோடும் பெற்றோர்களோடும் உரையாடச் செய்வதை முன்னெடுக்க வேண்டும்.

மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும் என தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் நம்புகிறது.

நன்றி!

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்

குறிப்பு:

இந்த அறிக்கை கல்விதுறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடமும், மேனாள் நீதிபதி சந்துருவிடமும் சங்கத்தின் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் கீழேயுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பரிந்துரைகளை அனுப்பலாம்.

Leave a comment